ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. பாப்புலர் என்றும் நொட்டோரியஸ் என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்லமுறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள்.

தவறான காரணங்களுக்காக, வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்று சொல்கிறார்கள். அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் கோயபல்ஸ். கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கோயபல்ஸ் என்கிற பெயர் இன்றைக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயராக இருக்கிறது. அவருடைய பெயர் எதற்காக அறியப்பட்டுள்ளது என்றால் உலகத்திலே மிகுதியாகப் பொய் சொன்னவர் என்கிற பொருளிலே கோணிப் புழுகன் கோயபல்ஸ் என்றுதான் நாம் அறிந்துள்ளோம்.

goebbels_400ஆனால் கோயபல்சிடம்கூட ரொம்ப வித்தியாசமான திறமைகள் இருந்தன என்பதை நாம் கணக்கிலே கொள்ள வேண்டும். கோயபல்ஸ் நாம் அறிந்திருக்கிற மாதிரியே ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். 1925-இல்தான் ஹிட்லரும் கோயபல்சும் சந்தித்துக் கொள்கிறார்கள். கோயபல்சினுடைய தோற்றத்தைப் பற்றி எழுதுகிற வரலாற்று ஆசிரியர்கள் அவர் மிகவும் விசித்திரமான தோற்றமுடையவராக இருந்தார் என்று எழுதுகிறார்கள். குறிப்பாக அவருடைய கால்களைப் பற்றி எழுதுகிறபோது அவருடைய கால்கள் ஒரு கழுதையினுடைய கால்களைப்போல் இருந்தன என்று எல்லோருமே குறிப்பிடுகிறார்கள். அது அவருடைய உடல்நலக் குறைபாடாகக்கூட இருக்கலாம். அது அவருக்கான வேடிக்கையான அடையாளமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் அவரைப் பார்த்த உடனே முதலில் கேலியாகச் சிரித்திருக்கிறார்கள். ஆனாலும் கோயபல்ஸ் மேடைகளிலே ஏறி பேசத் தொடங்கியதற்குப் பிறகு, யாரெல்லாம் அந்த கோயபல்சைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்களோ அவர்களே கூட தங்களை மறந்து கோயபல்சினுடைய பேச்சைக் கேட்டதாக அங்கே பல குறிப்புகள் நமக்குச் சொல்கின்றன.

எனவே அப்படிப்பட்ட மிகப்பெரிய பேச்சாளர், அதுவும் ஒரு நாடகத்தன்மை வாய்ந்த பேச்சு என்று அவருடைய பேச்சைப் பற்றி குறிப்படுகிறார்கள். ஹிட்லருடைய பேச்சு உலகத்திலே புகழ் பெற்றது அப்படித்தான். ஹிட்லர்தான் உலகத்திலேயே தன்னுடைய பேச்சை நாடக மயமாக ஆக்கிக் காட்டியவர். விளக்குகளையெல்லாம் பொருத்தி, அதிலே இருக்கிற அந்த ஒளிக் கருவிகளை கையாளுகிறவர்களிடத்திலே சொல்லி, எந்த நேரத்திலே எந்த வண்ண விளக்குகளை நீங்கள் ஒளிர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விடுவார். நான் மிகக் கோபமாகப் பேசுகிறபோது சிவப்பு வண்ணம் மேடையிலே அப்படியே பாய்ந்து வரவேண்டும் என்பதையெல்லாம் சொல்லி வைத்து ஒரு நாடகத் தன்மையோடு பேசுகிற ஆற்றல் ஹிட்லரிடம் இருந்தது. அதைப்போலவே கோயபல்சும் அப்படி உணர்ச்சிகரமாக பேசுகிற, கேட்கிற மக்களையெல்லாம் இவர் எந்த உணர்வில் பேசுகிறாரோ அந்த உணர்வுக்கு இழுத்து வந்துவிடுகிற ஒரு பெரிய ஆற்றல் வாய்ந்தவராக இருந்தார். அந்த ஆற்றல் ஹிட்லரை இவரிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தது.

1928-ஆவது ஆண்டு தன்னுடைய நாசிக் கட்சியினுடைய கொள்கை பரப்புச் செயலாளராக கோயபல்சை ஹிட்லர் நியமிக்கிறார். அதுதான் அவர் அரசியல் வாழ்க்கைக்கு வருகிற முதல் கட்டம். நாசிக்கட்சி ஜெர்மனி மக்களிடத்திலே ‘ஆரியர்கள் நாம்; நாம்தான் ஆளப் பிறந்தவர்கள்’ என முழங்கியது. யூதர்களுக்கு எதிராக அவர் ஒரு மிகப் பெரிய எழுச்சியை அந்த ஜெர்மானிய மக்களிடம் ஏற்படுத்தியிருந்த காலகட்டம் அது. எனவே அந்த நேரத்திலே கோயபல்ஸ் ஜெர்மனியிலே மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு மிகப்பெரிய பேச்சாளனாக, ஹிட்லருடைய வலது கையாக எல்லா இடங்களிலும் அறிமுகமாகிறார்.

1933-ஆவது ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வந்ததற்குப் பிறகு அவருடைய அமைச்சரவையிலேயும் கோயபல்சுக்கு இடம் கிடைத்தது. ஹிட்லருடைய பேச்சுக்கு மயங்கி அந்த ஜெர்மானிய மக்கள் 33-லே அவரை அதிபராக்கினார்கள். அந்தத் தேர்தலிலே அவருக்கு வாக்களித்தார்கள். அதற்குப் பிறகு இரண்டு தலைமுறைகள் அவர்களுக்குத் தேர்தலே வராமல் போயிற்று. அதற்குப் பிறகு தேர்தலில் வாக்களிக்கிற வேலையே இல்லாமல் போயிற்று. 33-லே அவரோடு சேர்ந்து கோயபல்ஸ் அமைச்சராகிறார். கோயபல்ஸ் விதவிதமான பிரச்சாரங்களை அந்த மக்களிடத்திலே கொண்டு செலுத்துகிறார். கோயபல்ஸ் பின்பற்றிய உத்திகள் இன்றைக்கும்கூட உலக வரலாற்று ஆசிரியர்களால் வியப்பாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் இரண்டாவது உலக யுத்தம் நடந்த நேரத்திலே கோயபல்ஸ் எப்படிப்பட்டப் பிரச்சாரங்களையெல்லாம் கட்டவிழ்த்து விட்டார் என்று பார்த்தால் வரலாற்று நூல்களிலே அது வேடிக்கையாகவே இருக்கிறது. முதல் பிரசாரம் முனுமுனுப்புப் பிரசாரம். இரண்டாவது பிரசாரம் ஜோதிடப் பிரசாரம். மூன்றாவது பிரசாரம் திரும்பத் திரும்ப சொல்லுகிற பிரசாரம். இதுதான் கோயபல்சினுடைய உத்தி.

இந்த யுத்திகளை எல்லாம் நாம் தவறான காரியத்திற்காக அல்ல. நல்ல கோட்பாடுகளைப் பரப்புவதற்காகவாவது கற்றுக் கொள்ளலாம் அல்லவா? கோயபல்சினுடைய உத்திகள், வழிமுறைகள் மிகச் சிறந்தவையாகத்தான் இருந்தன. அவர் பரப்பிய கருத்துகள் பொய்யானவையாக இருந்தனவே தவிர அவர் பரப்பிய முறை வலிமையானதாக இருந்தது. எனவே அவர் கைப்பற்றிய அந்த மூன்று முறைகளையும் நாம் பார்க்க வேண்டும். ஒன்று முனுமுனுப்பு பிரசாரம். முனுமுனுப்பபு பிரசாரம் என்றால் என்ன? அரசாங்கத்திலிருந்தே ஆட்களைத் தயார் செய்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது. அவர்கள் இரண்டு இரண்டு பேராக மூன்று மூன்று பேராக நாட்டினுடைய பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து போவார்கள். ஒரு தேநீரகத்தில், பலரும் கூடியிருக்கிற ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு ஒருவருக்கொருவர் அறியாதவர்கள் போல அவர்கள் பேசிக்கொள்வார்கள். அவர்கள் முனுமுனுத்துப் பேசிக்கொண்டிருக்கிற அந்தப் பேச்சு பக்கத்தில் இருக்கிறவர்களிடத்திலே பற்றும். இவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்றால் என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி வராது என்பார் ஒருவர் இன்னொருவர் மறுக்கிற மாதிரி மறுப்பார் மறுக்கிறவருடைய வாதங்கள் எல்லாம் பலவீனமானமாக இருக்கும். அதை ஆதரிக்கிறவன் வாதம் எல்லாம் அழுத்தமாக இருக்கும். முதலில் மறுப்பவனும் அதனைப்பிறகு ஏற்றுக்கொள்வான். அதைப் பார்க்கிறபோது அந்த பேருந்து நிலையத்திலே நிற்கிறவர்கள் அந்த தேநீரகத்திலே இருக்கிறவர்கள் எல்லோரும்கூட அந்த வாதத்தை ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு முனுமுனுப்பு பிரசாரம்.

இன்னொரு பக்கத்திலே பார்த்தால், எங்கே பார்த்தாலும் ஜோதிடப் பிரசாரம். ஜோதிடர்களுக்கு வேண்டிய அளவுக்குப் பணம் கொடுப்பது, ஜோதிடர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக எழுதுவார்கள். இரண்டாவது உலக யுத்தத்திலே ஜெர்மனி மிகப்பெரிய வெற்றியடையப்போகிறது. இரண்டாவது உலக யுத்தத்திலே பிறரின் வீழ்ச்சி முடிவாகி விட்டது. ஜோதிடம் அப்படிச் சொல்கிறது. ராசி இப்படி இருக்கிறது, கிரக நிலைகள் நமக்குச் சாதகமாக இருக்கின்றன என்று ஒரு ஜோதிடப் பிரசாரம். பிறகு கோயபல்ஸ் சொல்கிறார், எந்த ஒரு செய்தியையும், அது சின்ன செய்தியாகக்கூட இருக்கலாம், திரும்பத் திரும்பச் சொல்லுங்கள், அழுத்தமாகச் சொல்லுங்கள். நீங்கள் திரும்பச் திரும்பச் சொல்லுகிறபோது, பொய்கூட உண்மையாகும் என்பதுதான் கோயபல்சினுடைய அடிப்படை. இப்படி மூன்று விதமான பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டதோடு மட்டுமல்லாமல் கலைத்துறையையும் கைப்பற்றி, யூதர்களுக்கு எதிரான படங்களை எல்லாம் கோயபல்ஸ் அவரே தன்னுடைய மேற்பார்வையிலே தயாரித்து வெளியிட ஆரம்பித்தார். எனவே கலைத்துறையை கைப்பற்றிக் கொண்டால் அது மக்களிடத்திலே மிக எளிதாகப் போய்ச்சேரும் என்பதையும் கோயபல்ஸ்தான் முதன் முதலாக அறிந்தார். கலை என்பதைக் கைப்பற்றிக் கொண்டு நாம் எதையும் சொல்ல முடியும். ஊடகம்தான் வலிமையானது. அதையும் கோயபல்ஸ் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். எனவே கோயபல்சினுடைய பிரசார உத்திகள் எல்லாம் மிகச் சிறந்தனவாக இருந்தன.

பிறகு செக்கோஸ்லேவியா நாட்டைச் சேர்ந்த இலிடா கர்வா என்ற நடிகையுடன் அவருக்குத் தொடர்பு இருக்கிறது என்று அவருக்கு எதிரான ஒரு பிரசாரம் வந்து சேர்ந்தது. அது உண்மையும்கூட. அதிலே அவருடைய பெயர் கொஞ்சம் சரிந்தாலும், மறுபடியும் இரண்டாவது உலக யுத்தத்திலே கோயபல்ஸ் உலகத்தினுடைய உச்சத்திலே வந்து நின்றார். உலகம் முழுவதும் வியப்பாகப் பார்க்கிற அளவுக்குக் கோயபல்ஸ் வளர்ந்தார். ஆனால் கடைசியாக என்ன நேர்ந்தது… எந்தத் திறமையும் உண்மையில்லை என்றால் அழிந்துபோகும் என்பதை வரலாறு காட்டுகிறது. எல்லாத் திறமைகளும் ஹிட்லரிடத்திலேயும் இருந்தன. கோயபல்சிடத்திலேயும் இருந்தன. ஆனால் இறுதியாக சோவியத் நாட்டுப் படைகள் ஜெர்மனியை முற்றுகையிட்ட நேரத்தில் 1945, ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நாட்டின் அடுத்த அதிபராக நான் கோயபல்சை நியமிக்கிறேன் என்று நியமித்து விட்டுத்தான் ஹிட்லர் இறந்துபோனார். ஆனால் கோயபல்ஸ் அந்த நாட்டுக்கு எத்தனை நாள் அதிபராக இருந்தார் தெரியுமா? அடுத்த ஒரே ஒரு நாள் அதிபராக இருந்தார். மே மாதம் முதல் தேதி அவர், தன்னுடைய மனைவி, 6 குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனார் என்றுதான் நாம் சரித்திரத்திலே படிக்கிறோம். எனவே எவ்வளவு திறமை இருந்தாலும் அது உண்மையின் அடிப்படையில் நேர்மையின் அடிப்படையில் இருந்தால் தான் நிலைக்கும் என்பதை கோயபல்சின் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

(நன்றி: ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூலிலிருந்து)

Pin It