சமூக வரலாறு மக்களுக்குச் சொந்தமானது; அது அவர்களைச் சென்றடைய வேண்டும். இவ்வுணர்வுடன் தமிழ்நாட்டறிஞர் பெருமக்கள் அன்றும் சரி, இன்றும் சரி, செயல்படவில்லை என்பது வருந்தத்தக்கது. பத்தொன்பதாம் நூறாண்டில் தமிழ்ச் சமுதாய வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்கள் தோன்றின; ஆங்கிலக் கல்வி வாய்ப்புப் பெற்ற சிலர் இம்மாறுதல்களைத் தோற்றுவித்தனர். அன்னியர் பிடியில் நாம் அடிமைகளாக வாழ்கிறோம் என்பதை அவர்கள்தாம் முதலில் தெளிவாக உணர்ந்தனர். இந்த அடிமைத்தனம் நமது சமுதாய அவலங்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதையும் அவர்கள் கண்டனர். சமத்துவம் பற்றி மேலைநாடுகளில் புரட்சிகரமான கருத்துகள் பரவத்தொடங்கிய அக்காலத்தில் இந்தியச்சிந்தனை மரபிலும் அதை ஒத்த கருத்துகளை ஆய்வதில் சிலர் ஆர்வம் காட்டினார். இத்தகைய ஒத்திசைவான கருத்துகளைக்கண்டு அவற்றுக்கு உயிர் பெய்தவர்களில் அ. மாதவையா தலையாய இடத்தினைப் பெறுகிறார். தமிழ்-இந்திய மானுடத்தின் சக்தியை, அதன் பலத்தை அறிந்து வெளிப்படுத்தியவர் அவர். நீண்டகாலமாக வேரூன்றியிந்த சீழ்பிடித்த மரபுகளை அவர் மறுத்து நின்றார், அதில் வெற்றியும் பெற்றார்.

தமிழிலக்கியம் புத்துயிர் பெற அடித்தளம் அமைத்தவர் மாதவையா. சமயம், நம்பிக்கைகள், சாதியமைப்பு பழக்க வழக்கங்கள் ஆகியன தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழித்து வருவதை உணர்ந்த அவர் தனி ஒருவராக மிகுந்த துணிச்சலுடன் கலகக் கொடியினை உயர்த்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் நிறையவே எழுதினார். திருக்குறள் மற்றும் பத்தொன்பதாம் நூறாண்டில் கிளைத்த சமூக சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அவர் ஆதர்சம் பெற்றார். அவர் படைப்புகள்- கட்டுரைகள், புதினங்கள்- அறிவார்ந்த நகைத்திறன் உடையவை.

mathavaiyaஅவருடைய புதினங்களில் முத்துமீனாட்சி குறிப்பிடத்தக்கது. அது விரிவான, புதிய தமிழ் மரபுத்தொடர்களால் ஆன படைப்பு; செல்வாக்குள்ள தமிழ்ப்பார்ப்பனக் குடும்பங்களில் நிலவிய நம்பிக்கைகளை நேரடியாக விமரிசனம் செய்யும் நாவல். ஒரு சிறுமியை மணமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். கல்வி பெற அக்குழந்தை ஏங்குகிறது. பூப்படைவதற்கு முன்னரே அச்சிறுமியை, ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்த வயதான ஒருவருக்கு மணம் செய்விக்கின்றனர். மணவாழ்க்கை சீரழிக்கப்படுகிறது; இளமைப்பருவத்திலேயே அவள் விதவையாகிறாள். அவளுக்கு மீட்சி கிடைக்கிறது! இன்று இக்கதை தரும் செய்தி நம்மைத் திடுக்குறப்பண்ணா திருக்கலாம். ஆனால் 1903-இல் இப்புதினம் வெளியானபோது தமிழ் வாசகர்கள் பேரதிர்ச்சியடைந்தனர்.

பத்தொன்பதாம் நூறாண்டில் அன்றைய மதராஸ் ராஜதானி காலனியப்பிடியில் திக்குமுக்காடியது. பள்ளிகளில் ஆங்கிலமொழியும் இலக்கியமும் நுழைந்தன. அதைக்கற்பிப்போர் பெரும்பாலும் கிறித்தவப் பாதிரிகள். அவர்களில் வெள்ளையர் எண்ணிக்கை கணிசமானது. மதவுணர்வுமிக்க இவர்களுடைய முக்கிய பணி தமிழர்களைக் கிறித்தவராக மாற்றுவதே. அதற்காகவே அந்த வெள்ளைப் பாதிரிகள் தமிழைக்கற்கத் தொடங்கினர்; அப்போது தமிழ்மொழியின் நீண்டவரலாறு பற்றியும் அதன் சிறந்த இலக்கிய மரபுகள் பற்றியும் அறிந்தனர். அந்தக் காலத்தில்தான் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் (1855-1942), சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) போன்றோர் தம் பணியைத் தொடங்கினர். சங்க இலக்கியங்களை (கி.மு.200-கி.பி.400) மீட்டெடுத்து, பாதுகாத்து, விளக்கி, வெளியிடுவதைத் தலையாய பணியாக, கடமையாகக் கொண்டு செயலாற்றினர்.

தமிழ்படைப்பாளிகளுக்கு ஆங்கில இலக்கியக்கூறுகள்- இலக்கியக் கொள்கைகள் - மரபுகள்-வடிவங்கள் பரிச்சயமாயின. அந்த அறிவின் துணை கொண்டு அவர்கள் எழுதத்தொடங்கினர். வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் (தமிழின் முதல் புதினம்) வெளியாயிற்று. அதில் புராணக்கூறுகள் இருந்தன! பள்ளிகளில் பாடநூலாக அது ஏற்கப்பட்டது. ராஜம் ஐயரின் கமலாம்மாள் சரித்திரம் அடுத்து வந்தது. (விவேக சிந்தாமணி எனும் இதழில் தொடராக வெளிவந்தது1896). 1898-ஆம் ஆண்டில் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் வாசகர்களுக்குக் கிடைத்தது. இதைத்தமிழின் மூன்றாவது புதினம் என்பர். ஆனால் 1892-ஆம் ஆண்டிலேயே சாவித்திரி சரித்திரம் எனும் யதார்த்த நாவலின் பெரும்பகுதியை மாதவையா எழுதிமுடித்திருந்தார். பெண்களுக்கு எதிரான அநீதிகளை சித்தரிக்கும் முதல் தமிழ் நாவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவையாவின் உரைநடை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) இலக்கியச்சுவைமிக்கது. கதைப்போக்கில் உரையாடல்களை அழகுற அமைத்துச்செல்வதில் அவர் முன்னோடியாக விளங்கினார். சாவித்திரி சரித்திரம்தான் முழுமை பெற்று முத்துமீனாட்சியாக இலக்கிய உலகினைக் கலக்கியது! முதலாவது உலகப் பெரும் போருக்கு முன்னைய ஆண்டுகளில் விதவை மறுமணம் அல்லது அதற்கு ஆதரவு எனும் கருத்துநிலை கடுமையான சர்ச்சைகளைத் தோற்றுவித்தது. எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத மாதவையா மானுடம் குறித்தும் பகுத்தறிவு குறித்தும் தன்னுடைய கருத்துக்களை

அஞ்சாது வெளிப்படுத்தினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக நாவல்கள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட புதினங்கள், மொழிபெயர்ப்புகள் என 60-க்கு மேற்பட்ட படைப்புகளைத்தந்த மாதவையா, தன் 53-வது வயதில் மறைந்தார்.

மாத¬வாவின் பொதுதர்ம சங்கீத மஞ்சரி (1914), புது மாதிரி கல்யாணப் பாட்டுகள் (1925) மற்றும் விஜய மார்தாண்டம் (1903) எனும் வரலாற்று நாவல், திருமல சேதுபதி (1910) எனும் நாடகம், ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தைத்தழுவி எழுதப்பட்ட உதயாளன் போன்ற படைப்புகள் வெளியான போது மிகுந்த வரவேற்பைப்பெற்றன.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய Thillai Govindan: A Posthumous Autobiography (1903), Satyananda (1909) Clarinda (1915), Lt. Panju போன்றவை அந்த நாட்களில் புகழ்பெற்ற படைப்புகள். Clarinda ஒரு காதல் கதை. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உயர்குடி விதவை, ஏறுமாறான ஒரு வெள்ளை ராணுவ வீரன் மீது காதல் கொள்கிறாள். அவன் சாவுக்குப்பின்பு அவள் கிறித்துவ மார்க்கத்தைத் தழுவுகிறாள். வாழ்க்கையில் கடும் சோதனைகளை எதிர்கொள்கிற மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒரு ஹிந்து விதவை, கிறித்துவத்தை விரும்பி ஏற்கிறாள்! இந்தியாவின் மாண்புமிக்க மரபுகள் எவ்வாறு பெண் வெறுப்பு, மானுட வெறுப்பு எனச்சீரழிந்தன என்பதை மாதவையா தன் படைப்புகளில் நுட்பமாக விளக்குகிறார். வெள்ளையர் நம்பற்குரியவரல்லர் என்பதை உணர்த்தும் அவர், சமூக நீதி பற்றிப் பரங்கியரின் கொள்கைகள் ஓரளவு பாராட்டத்தக்கவை என்கிறார்!

மாதவையாவை இதழாசிரியராகவும் காண்கிறோம். பஞ்சாமிர்தம் என்ற பெயரில் அவர் நடத்திய தமிழிதழ், அந்த நாட்களில் நாட்டுப்பற்றை உள்ளீடாக, மறைபொருளாக வலியுறுத்தியது; சாதி அமைப்பைச் சாடியது, மூட நம்பிக்கைகளைக் கண்டித்தது. மாதவையா போர்ப்பண்புமிக்க சீர்திருத்தவாதி என்பது ஆய்வாளர் கருத்து. நவீன காலத் தமிழ் மானுடம் போற்றியவர் அவர் என Santa Clara Universilty யைச் சேர்ந்த வரலாற்றியல் பேராசிரியர் சீதா அனந்தராமன் மதிப்பிடுகிறார். (Gender and Ethnicity in Early Tamil Novel எனும் அரிய ஆய்வு நூலை எழுதியவர் இவர்.)

தமிழ்மொழி மேன்மை, தேசியவுணர்வு எனும் கருத்தாக்கங்களை உள்ளடக்கமாகக் கொண்டு, பெண் உரிமை, பெண் விடுதலையை வலியுறுத்திய மாதவையா, தூய காதலைக் கொண்டாடியவர்.

மாதவையாவின் வழித்தோன்றல்களும் தமிழ்ப் பணியில் இன்பம் கண்டவர்கள். அவருடைய ஒரு மகன் மா. அனந்தநாராயணன், பெரும் படிப்பாளி. உயர்நீதிமன்ற நடுவராகக் கடமை ஆற்றியவர். சிறைப்பட்டிருந்த தோழர் பாலதண்டாயுதம் மொழிபெயர்த்தளித்த தேனீக்கள் பற்றி அவர் தந்த கருத்துரை இன்னும் நம் நினைவில் நிற்கிறது. மற்றொரு மகன் மா. கிருஷ்ணன் ஒப்பற்ற இயற்கை ஆராய்ச்சியாளர்; கானுயிர்க்காதலர். காடுகளில் வாழும் அற்புத உயிரினங்கள் பற்றி புகழ்பெற்ற கட்டுரைகளையும் புகைப்படங்களையும் உலகுக்கு அளித்தவர். இயற்கை ஆய்வு சார்ந்த அவருடைய தமிழ்க் கட்டுரைகள் மற்றும் தமிழில் எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் எனும் துப்பறியும் நவீனம் குறிப்பிடத்தக்கன. இக்கதைக்கு அவர் வரைந்திருந்த ஓவியங்கள் அந்த நூலுக்கு மேலும் அழகு சேர்த்தன.
 
(புத்தகம் பேசுது மே 2010 இதழில் வெளியானது)
Pin It