முன்னுரை:

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி தாலுகாவில் வானமாமலைத் திருக்கோயில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரானது நாங்குநேரி என்றும் வானமாமலை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.மேலும் வடமொழியில் இதனை தோத்தாத்ரி சேத்திரம் என்று கூறப்படுகின்றது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவத் திருப்பதிகள் 108- ல் இதுவும் ஒன்று. பாண்டியநாட்டு 18 திருப்பதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது.

nanguneri templeவைணவத் தலங்களில் சுயமாகத் தோன்றியதாகக் கூறப்படும் திருக்கோயில்கள் 8. அதிலே ஒன்றுதான் இந்த நாங்குநேரி என்று அழைக்கப்படும் வானமாமலை. நம்மாழ்வாரால் பத்து பாடல்கள் பாடப்பட்ட வைணவத் தலம் என்ற பெருமைக்கு உரியது. இந்தக் கோயிலோடு இணைந்து செயல்படும் மடம் வானமாமலை மடம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் தலைவரான ஜீயர் சுவாமிகளின் நேரடி மேற்பார்வையில் இந்த கோயிலும் மடமும் செயல்பட்டு வருகின்றது.

தற்போது 31வது சுவாமிகள் பட்டத்தில் இருக்கிறார். அவர் கோயிலிலுள்ள பல்வேறு விதமான பழமை வாய்ந்த சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓவியங்கள் இன்னும் பல்வேறு விதமான கோயில் தொடர்பான சிலைகளையும் பராமரித்து வருகிறார். ஆன்மீக அருங்காட்சியகம் என்று கூட நாம் இதனை வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு பழமையின் மகத்துவத்தை பறைசாற்றக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

ஊர் பெயர்க் காரணம்:

நாங்குநேரி, வானமாமலை என்றும் அழைக்கப்படும் இவ்வூருக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. நான்கு நேரி என்ற பெயரை நாங்குநேரி, நான்கு ஏரி- என்றெல்லாம் எழுதும் வழக்கம் காணப்படுகிறது. பேச்சுவழக்கில் நாகணைச்சேரி- நான் கூன் ஏரி காலப்போக்கில் நாங்குநேரி என்ற பெயரை பெற்றிருக்கலாம். ஆனால் இன்று அந்த நகரத்தில் வாழும் வைணவர்களால் நாங்குநேரி என்றும் வானமாமலை என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் வாழ்பவர்கள் இதனை தோத்தாத்ரி சேத்திரம் என்றே வழங்கி வருகின்றனர். "பாண்டிய மன்னன் ஒருவன் வானவன்மாதேவி என்ற சேரகுல மங்கையை மணந்து வானவன் என்ற பட்டத்தை பெற்றான் என்றும், அந்த மன்னன் இந்தக் கோயிலை எடுப்பித்தான் அதனால் இத்தலம் வானமாமலை என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்." (ந. சுப்புரெட்டியார், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்,ப. 269)

வானவன் என்ற பாண்டியன் மாமலை போன்ற கோயிலை கட்டியமையால் வானமாமலை என்றும் அழைக்கப்படுகிறது.

கல்வெட்டு:

‘கல்வெட்டு’ என்ற சொல்லானது கல்லிலே செதுக்கப்பட்ட அல்லது கல்லிலே வடிவமைக்கப்பட்ட எழுத்துக்களை சொல்வதாக இருக்கின்றது. இவற்றைத் தாண்டி நாம் சிந்திக்கும் போது அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கம் அனைத்தையும் பறைசாற்றி நிற்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. மேலும் கல்வெட்டு என்பது கோயிலைப் பற்றியும் அந்தக் கோயில் யாருடைய தலைமையின் கீழ் இருந்தது என்பதை பற்றிய விளக்கங்களையும் செய்திகளையும் தருவதாக அமைந்து இருக்கின்றது. அதனடிப்படையில் வானமாமலைக் கோயில் பற்றி கிடைத்த கல்வெட்டு ஆனது கோயிலின் வரலாற்றினையும் தானமாக கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றியும் அங்கு பணிபுரிந்த பணியாளர்களின் கிடைத்த பரிசு பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளது.

வானமாமலைக் கோயில் கல்வெட்டின் அமைவிடம்:

தெற்கு நோக்கிய சுவரில் நான்கு கல்வெட்டுகளும் வடக்குப் பகுதியில் இருந்த சுவரில் 4 கல்வெட்டுகளும் கிழக்கு பகுதியில் இருந்த சுவரில் மூன்று கல்வெட்டுக்களும் துவாரபாலகர் சிலைகளுக்கு எதிரே ஒரு கல்வெட்டும் கோயில் வெளி திருச்சுற்றில் வடக்கு சுவர் ஒன்றிலும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டு எழுத்துக்கள் பல்லவர் காலத்தில் கோயில்களில் தமிழ், வட்டெழுத்து, கிரந்தம், நாகரி ஆகிய நான்கு விதமான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும் தமிழும் வட்டெழுத்தும் மிகுதியாக காணப்படுகின்றன. இது இக்கோயிலில் மட்டுமல்லாது பல்வேறு வகைப்பட்ட கோயில்களிலும் இந்த செய்தி தான் அதிகமாக இடம் பெறுகின்றன.

கல்வெட்டுச் செய்தி :

வானமாமலைக் கோயில் கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்ற செய்தியினை தெளிவாகக் கூறுகின்றன. சுந்தரபாண்டியனின் 20 ஆவது ஆட்சியாண்டில் நிலம் கொடுக்கப்பட்டது.இதனை காமன் என்ற செண்பகப் பேரரையர் தானம் வழங்கினார் என்பதை வானமாமலைக் கோயிலின் தெற்குச் சுவர் கல்வெட்டு கூறுகின்றது. ஆடிப்பூரம் திருநாள் நடத்துவதற்காக பதிமூன்றாம் நூற்றாண்டில் செண்பகப் பேரரையர் தானம் கொடுத்துள்ளார். ‘ (A.R.E. 252 /1927- 28B) இன்றளவும் அபிஷேகம் வழிபாடு படையல் ஆகியவற்றோடு நடைபெறுகின்றது

மாறவர்மன் தனது 13வது ஆட்சி ஆண்டு காலத்தில் வானமாமலைத் திருக்கோயிலின் நந்தவனத்தை பராமரிக்க பூ கட்டுபவன், தோட்டக்காரன் ஆகிய பணியாளர்களுக்கு தானம் வழங்கினான் (A.R.E. 253 /1927- 28B). இதுவே பச்சையாறு போக்கில் அமைந்துள்ள மருவி என்ற ஊராகும்.

வானமாமலை கோயில் பணியாளர்களுக்கு ஒன்றரை அச்சு (ஒன்றரை அச்சு என்பது ஒரு நாழி அரிசியை குறிக்கும். ஒரு நாழி என்பது தற்கால அளவுப்படி ஒரு கிலோவை குறிக்கும்.) கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது மக்கள் பலர் கோயில் பணியாளர்களாக இருந்து பயனடைந்துள்ளனர் என்பதை அறியலாம்.

கல்வெட்டில் காணப்படும் வட்டெழுத்து:

வானமாமலைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் பெரும்பாலும் செதுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பாண்டிய நாட்டில் கிடைத்துள்ள வேள்விக்குடி, சீவரமங்கலம், சின்னமனூர் செப்பேடுகளிலும் பாண்டிய நாட்டில் உள்ள ஆனைமலை அம்பை முதலிய ஊர் கோயில்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. சில கற்பாறைகள் இவ்விடத்தில் வெட்டப்பட்டுள்ளன.’ வட்டெழுத்து எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிவரை காணக் கிடைக்கின்றன’ ( வை.சுந்தரேச வாண்டையார்,கல்வெட்டுக்கள் ப. 279).

ஆனால் 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வானமாமலைக் கோயில் கல்வெட்டுகள் வட்டத்தில் காணப்படுகின்றன.

வானமாமலைக் கோயிலும் செப்பேடுகளும்:

செப்பேடுகள் என்பவை கோயில்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக சான்றுகளோடு தருகின்றன. தென்னிந்தியாவின் பழைய வரலாறு. இந்திய வரலாற்றில் இன்றியமையாத பகுதியாக உள்ளது. கி.பி பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் விஜயநகரப் பேரரசின் முயற்சியோடு பாண்டியர் ஆட்சி முடிவுற்றது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒரு புதிய யுகம் தோன்றிய காலம் எனலாம். 1929 ஆம் ஆண்டு கே. நீலகண்ட சாஸ்திரியார் ஆங்கிலத்தில் பாண்டியன் ராஜ்ஜியம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் ஆராய்ச்சிகளை தூண்டிவிடும் போக்கில் அமைந்துள்ளது. பின்னர் ஆராய்ச்சி அறிஞர் டி.வி சதாசிவப் பண்டாரத்தார்- பாண்டியர் வரலாறு என்ற நூல் தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தக்க ஒரு ஆராய்ச்சி நூலாகும்.

தமிழ் வரலாற்றுக் கழகம் வெளியிட்ட ‘பாண்டியர் செப்பேடுகள் பத்து’ என்ற நூல் பாண்டியர் செப்பேடுகள் பற்றி தெரிந்துகொள்ள ஒரு ஆதார நூலாக விளங்குகின்றது. ஸ்ரீவரமங்கலச் செப்பேடுகள் வேலங்குடிச் செப்பேடுகள் ‘ பராந்தகன் ஜடில பராந்தகன் அவன் ஆட்சியின் 17 ஆம் ஆண்டின்’ ஸ்ரீவரமங்கல நகர்’ என்ற பெயர் மாற்றி தானம் செய்யப்பட்டதை குறிப்பிடுகின்றன. ‘59 ஆண்டு கிபி 784 ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வரகுணமங்கை என்பது வரகுண பாண்டியனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஊராகும் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இக்கருத்தை கிருஷ்ணசாமி அய்யங்கார் மற்றும் ராகவையங்கார் இருவரும் முரண்பட்ட விதத்தில் வாதம் செய்கின்றனர்.

வரகுணமங்கை என்ற பெயர் (S.I.I.Vol.XIII, No 233:S.I.I. Vol.XIII, No,240 & S.I.I. Vol.XIII No. 568) பெண்களில் பலரும் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு பெயராகும். அந்த வகையில் நோக்கினால் வரகுண அரசியால் அல்லது அலர்மேல் மங்காபுரம் என்பது போல அவர் தாயாரின் பெயர் என்பதன் அடிப்படையிலும் இப்பெயர் எழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

செப்பேடு செய்தி:

ஸ்ரீவரமங்கல என்பது தானமாக வழங்கப்பட்ட ஊரின் பெயர். சாசனம் என்ற பெயரும் உண்டு. இந்த சாசனத்தில் இச்செப்பேடு அளிக்கப்பட்ட சக ஆண்டு குறிக்கப் பெறவில்லை. ஆட்சி ஆண்டு 17 என்று குறிக்கப்படுகிறது. களவழி நாட்டைச் சேர்ந்த வேலங்குடி என்னும் ஊரின் பெயரை ஸ்ரீ வர மங்கலம் என மாற்றி அமைத்து அதை தானமாக வழங்கினான் என்று இச்செப்பேடு கூறுகிறது.

ஸ்ரீஈஸ்வரனின் மகனான பட்டன் அமைதியாக இருந்தவன். களக்காடு என்னும் ஊரில் பிறந்தவர். வீரமங்கை பேரரையன் ஆகிய மூர்த்தி எயினன் என்பவன் இச்சாசனத்தை எழுதியவன். பாண்டியனுடைய பெரும் பண்ணைக்காரன் ஆகிய அரிகேசரி என்பவன் ஆவான். இவை அனைத்தும் செப்பேடுகளில் இருந்து எடுக்கப்பட்ட செய்திகளாகும்.

முடிவுரை

கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டு அமைந்திருக்கக் கூடிய ஊர்தான் இந்த வானமாமலை ஆகும். பாண்டிய மன்னன் ஒருவன் மாதேவி என்ற சேரகுல மங்கையை மணந்து வானவன் என்ற பட்டத்தை பெற்றிருந்தான். இந்தப் பாண்டிய மன்னனே முதன்முதலில் இக்கோயிலை கட்டியிருக்க வேண்டும். பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் பின்னர் நாயக்க மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது எனலாம். இன்றும் சுற்றுத் தூண்கள் தாங்கும் நீண்ட சுற்றுகள் உள்ளன.

இக்கோயிலின் பெரும்பகுதி நாயக்கரின் திருப்பணியை நினைவு படுத்துகின்றன.’ கொல்லம் ஆண்டு 622 இல் கி.பி 1447 ஒரு வைணவத் துறவி நாங்குநேரி வந்தபோது இதுவரை கோயிலை நிர்வாகம் செய்த, செய்துவந்த நம்பூதிரி பிராமணர்கள் துறவியிடம் கோயில் பொறுப்பை ஒப்படைத்தனர். அவரே முதல் ஜீயர் ஆவார். ஆனால் அவர்தான் வானமாமலை மடத்தையும் நிறுவினார் எனத் தெளிவாக தெரியவில்லை (H.R. Pate, Tirunelveli Gazetter Documentayion (1916), SERVICE Series, p. 400).

புஷ்பாஞ்சலி என்ற சந்நியாசியும் திருப்பணிகளை செய்திருக்கிறார் என வரலாறு தெரிவிக்கின்றது.

துணைநூல் பட்டியல்

சுப்புரெட்டியார். ந, பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், பாரி நிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1990.

சுந்தரேச வாண்டையார், முப்பது கல்வெட்டுக்கள், சுதா பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை 4 முதற் பதிப்பு 1992.

வேங்கடசாமி ரெட்டியார்.கி, பதிப்பாசிரியர் நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை 8 முதல் பதிப்பு 1973

செப்பேடு நூல்: பாண்டியர் செப்பேடுகள் பத்து , தமிழ் வரலாற்றுக் கழகம், சுதேசமித்திரன் அச்சகம், சென்னை 2, முதற் பதிப்பு 1967

- டாக்டர். லாவண்யா ஜெயராம் M.A.,D.F.L.,(B.Ed.Special), Ph.D