“பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும் சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டங்களைப்பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லா இலட்சனங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவி வதைக்கும்படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை. உண்மைகளை – மக்களின் நன்மைகளைத் தேடி இலக்கியம் படைப்பதே தமது இலட்சியமாகக் கொண்டவர் விந்தன்” என கல்கியால் பாராட்டப்பட்டவர் மக்கள் எழுத்தாளர் விந்தன்.

              vindhan  ‘விந்தன்’ உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாட்டாளிகள் ஆகியோரின் சுக துக்கங்களை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தினார். கிராமத்தில் தீண்டாமை என்னும் கொடிய நோய் ஏழை எளிய உழைக்கும் மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை தனது சிறுகதைகள் மூலம் சித்தரித்தார்.

                இரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி “கலைஞன் என்பவன் தன்னுடைய சமுதாயத்தின் செவியாக கண்ணாக நெஞ்சமாக விளங்குபவன்; வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்; அவனே மக்கள் கலைஞன்” என மக்கள் எழுத்தாளனுக்கான இலக்கணத்தை வரைந்துள்ளார். அந்த இலக்கணத்தைக் கடைப்பிடித்து மக்களுக்காக எழுதியவர் ‘விந்தன்’.

                “இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை, வாழ்க்கையில் இருந்துதான் பிறக்கிறது” என்பதை உணர்ந்த விந்தன், அவரது படைப்புகளில் மனிதநேயத்தையே இலட்சியமாக கொண்டிருந்தார்.

                செங்கற்பட்டு மாவட்டம், நாவலூர் என்பது விந்தனின் சொந்த ஊர்; பெற்றோர் வேதாசலம்-ஜானகியம்மாள், இவர்களின் மூத்தமகனாக 22.09.1916ல் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். நடுநிலைப்பள்ளி கல்வியைக்கூட முடிக்காமல் தந்தையுடன் கூலி வேலைக்குச் சென்றார். பின்னர் இரவுப் பள்ளியில் சேர்ந்து படித்தார். ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். வறுமையினால் ஓவியத்தையும் பாதியில் விட்டார்.

                இளமையில் வறுமையை வெல்ல நினைத்த விந்தன், தமிழரசு அச்சகத்தில் அச்சு கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். பின்னர், ‘ஆனந்தவிகடன்’ அச்சகத்தில் பணிக்கு மாறினார். அப்பொழுதே ‘சுதேசமித்திரன்’ இதழுக்கும் எழுதினார். எழுத்தாளர் கல்கியின் தொடர்பு கிடைத்தது. அதையொட்டி ‘கல்கி’ இதழின் பாப்பா மலர் பகுதிக்கு குழந்தைகளுக்கான கதைகள் எழுதினார். அப்பொழுது வி.ஜி. என்ற பெயரில் அவரது கதைகள், கட்டுரைகள் வெளிவந்தன. ஆசிரியர் கல்கி இவரது எழுத்தாற்றலைப் பாராட்டி “விந்தன்” என்ற பெயரைச் சூட்டினார். அது முதல் வி.கோவிந்தன் ‘விந்தன்’ என்று நிலைத்தார்.

                “தமிழைச் சரியாகப் படித்து தலைகீழாகப் புரிந்துக் கொண்டவர்கள் மத்தியில், தலைகீழாகப் படித்துச் சரியாகப் புரிந்துக் கொண்டவர் விந்தன்” – என எழுத்தாளர் ஜெயகாந்தன் விந்தனுடைய அச்சுக்கோர்க்கும் பணியைப் பற்றி விதந்து போற்றியுள்ளார்.

                ‘கல்கி’ இதழின் ஆசிரியர் குழுவிலும் விந்தன் சேர்த்துக்கொள்ளப்பட்டார். விந்தன் 30.04.1939ல் நீலாவதியை மணந்தார். நீலாவதியார் இரண்டு குழந்தைகளைப் பெற்றபின் நோயுற்று மறைந்தார். பின்னர் 13.07.1947ல் சரஸ்வதியைத் திருமணம் செய்துகொண்டார்.

                விந்தனுடைய ‘முல்லைக்கொடியாள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு 1946ம் ஆண்டு வெளிவந்தது. தமிழக அரசின் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ அந்த ஆண்டில் தான் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழகம் அளித்த சிறுகதைகளுக்கான பரிசைப் பெற்ற ‘முதல் எழுத்தாளர்’ விந்தன் ஆவார்.

                ‘பொன்னி’ இதழில் ‘கண் திறக்குமா?’ என்ற தொடர்கதை எழுதினார். பின்பு, கல்கி இதழில் ‘பாலும் பாவையும்’ என்ற நாவலை வாரந்தோறும் வடித்தார். அந்த நாவல் விந்தனுக்கு புகழையும், பன்முகப் பாராட்டையும் அள்ளிக் கொடுத்தது. இந்த நாவல் கன்னடம் மற்றும் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. “பொன்னுக்கும் பொருளுக்கும் உள்ள மதிப்புக்கூட இந்த காலத்தில் பெண்ணுக்கு – ஏன் அவள் கற்புக்குக்கூட இல்லை” என தன் படைப்புகளின் மூலம் சமூக அவலங்களைச் சுட்டெரித்தார். மேலும், ‘அன்பு அலறுகிறது’, ‘மனிதன் மாறவில்லை’, ‘காதலும் கல்யாணமும்’, ‘சுயம்வரம்’ போன்ற சமூக பிரச்சனைகளைக் மையமாகக் கொண்ட நாவல்களையும் படைத்து தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

                விந்தனின் நாவல்கள், மனிதர்களின் வாழ்க்கைத் துன்பங்களையும் அத்துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான போராட்டங்களையும் படிப்பவர்கள் மனதில் துடிப்புடன் ஏற்படுத்துவன.

                விந்தன் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். விந்தனின் சிறுகதைகளில் காதலும் மனிதப் பண்பும் பாசமும் பரிவும் பிணைந்திருக்கும். வளரும் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிமத பேதங்கள், வர்க்க உணர்வுகள், இன்னும் பிற தடைக்கற்கள் உள்ளன; அவற்றையெல்லாமல் உடைத்தெறியாமல் உண்மையான காதல் வெற்றிபெற முடியாது என்பதைத் தமது கதைகளில் வெளிப்படுத்தினார்.

                முதல் இல்லாமல் கிடைக்கும் மலிவான பொருளாகப் பணக்காரர்களால் மாற்றப்பட்ட மனிதன், எவ்வளவு மகத்தான சக்திப் படைத்தவன் என்பதை முதலாளித்துவ உலகம் எவ்வாறு மறைத்துவிட்டது? “முதலாளித்துவம் இயந்திரங்களின் மீது காட்டும் அக்கறையை மனிதர்களின் மீது காட்டுவதில்லை” என்பதை, “மனித இயந்திரம்” என்ற சிறுகதையில் சாடினார்.

                சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு மனிதனை கொடியவனாகவும், தான் பெற்ற செல்வத்தை அபின் கொடுத்து கொல்லவும் அவனைத் தூண்டுகிறது, என்பதை அபாரத் துணிச்சலுடன் ‘மவராசாக்கள்’ என்ற கதையில் சித்தரிக்கிறார்.

                அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போன்ற நடுத்தரவர்க்கத்தினரின் நிலமை குறித்து ‘முதல்தேதி’ என்ற சிறு கதையில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

                ஏழை, எளியவர்களின் மூலதனமும், பெருஞ் சொத்தும் மூடப்பழக்கவழக்கங்களே; ‘தலையெழுத்து’ என்னும் எழுதப்படாத தத்துவமே; தலைசாய்ந்து கிடக்கும் மக்கள் எதற்கெடுத்தாலும் அதையே சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் என்று மூடப்பழக்கத்தையும் அதில் மூழ்கிக் கிடக்கும் மக்களையும் சாடுகிறார்.

                விந்தன் ‘மனிதன்’ என்ற புரட்சிகரமான மாத இதழை நடத்தினார். அவ்விதழில் டாக்டர். மு.வ., பன்மொழிப்புலவர். கா.அப்பாதுரையார், கவிஞர் தமிழ் ஒளி, ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்கள் வெளிவந்தன. மனிதன் எதனால் உயர்கிறான்? என்ற கேள்விக்கு மனிதன் உழைப்பால் உயருகிறான்; ஊக்கத்தினால் உயருகிறான்; ஒழுக்கத்தினால் உயருகிறான்; அறிவினால் உயருகிறான்; என்று ‘மனிதன்’ பதில் தந்தது.

                இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்தை’ நையாண்டி செய்து ‘பசிகோவிந்தம்’ என்ற நூலைப் படைத்தார். தினமணிக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைந்து பணிபுரிந்தபோது குழந்தைகளுக்கான கதைகளை நிறைய எழுதியுள்ளார்.

                விந்தன் ‘புத்தக பூங்கா’ என்ற பதிப்பகம் ஆரம்பித்து சாண்டில்யன், இளங்கோவன், க.நா.சுப்ரமணியன், ஜெயகாந்தன் ஆகியோரின் நூல்களை வெளியிட்டு பதிப்பகத் துறையிலும் முத்திரை பதித்தார்.

                விந்தன் ஏழு திரைப்படங்களுக்கு வசனமும், பாடல்களும் எழுதியுள்ளார். திரைப்படங்கள் மூலமாகவும் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை வெளிப்படுத்தினார். ‘அன்பு’ என்ற திரைப்படத்திற்கு அவர் எழுதிய பாடலில் “சோத்துக்கு வழிகாட்ட ஆளில்லே, செத்தப் பின்பு சிவலோகம் செல்ல வழிகாட்டும், பித்தர் ஏன் இந்த நாட்டிலே!” என்ற பாடல் மூலம் மூடநம்பிக்கைகளை ஓட ஓட விரட்டினார்.

                “விந்தன் படைக்கும் பாத்திரங்கள் சாதாரண மக்களே. ஆயினும் அவர்களைப் பற்றி படிக்கும் மனங்கள் புரட்சி மனங்களாகவே மாறுகின்றன”, என தமிழறிஞர் டாக்டர். மு.வ.தனது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

                “எழுத்திற்கு வலிமை வேண்டும். படிப்பவரை உலுக்க வேண்டும். வாசகர்களை சிந்திக்க வைக்க வேண்டும். வாசகர்கள் மனதில் சமூகத்தைப் பற்றிய எண்ணங்களை உருவாக்க வேண்டும்”-என்பதையே முற்போக்கு இலக்கியத்தின் இலக்கணமாக அறிஞர்கள் கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் அமைந்ததே மக்கள் எழுத்தாளர் விந்தனின் படைப்புகள்.

                விந்தன் கையாளும் தமிழ்நடை மிகவும் எளிமையான நடை. ஆனால், பெரிதும் சக்தி வாய்ந்த நடை. பொருள் விளங்காத பழைய சங்கத் தமிழ்ச் சொற்களையோ, புதிய மறுமலர்ச்சிச் சொற்களையோ உபயோகித்து வாசகர்களைத் துன்புறுத்துவதில்லை. வரிக்கு வரி, வாக்கியத்திற்கு வாக்கியம் எதுகை, மோனைகளைப் போட்டு நம்மைத் திணறடிப்பதில்லை. ‘பேச்சுத் தமிழ்’ என்ற பெயரால் படிக்க முடியாத கொச்சைத் தமிழைக் கையாண்டு நம்மைக் கொல்லுவதில்லை. தாம் எழுதுவது படிப்பவர்களுக்கு விளங்க வேண்டும் என்னும் நோக்கத்தையே பிரதானமாகக் கொண்டு நடுநிலையான பேச்சுத் தமிழ் நடையைக் கையாளுகிறார். மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும், கொடுமையையும் எடுத்துக்காட்டும்போது, விந்தனுடைய தமிழ் நடையின் சக்தி உச்ச நிலையை அடைகிறது” என விந்தனின் எழுத்து நடையை எழுத்தாளர் கல்கி போற்றிப் புகழ்ந்துள்ளார்.

                போலிகளைச் சுட்டெரித்து புதுமைகளை படைக்கவும், மனிதாபிமானத்தை தட்டியெழுப்பி மனித நேயம் வளர்க்கவும் மக்கள் நல்வாழ்வுக்கு வழிதேடவும் தாய்மொழியாம் தமிழை-தமிழ்நாட்டை மேம்படுத்தவும் முற்போக்குச் சிந்தனைகளை பரப்பவும் இச் சமூகத்தை எழுத்தால் உழுதவர் ‘விந்தன்’. ‘அனைத்து துறைகளிலும் மாறுதலும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும். மக்கள் சுரண்டலிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ வேண்டும்’. என்ற உயர்ந்த இலட்சியங்களை உள்மனதில் கொண்டு, எழுதிவந்தவர் விந்தன். தனது கருத்துக்களை சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், திரைப்படப் பாடல்கள், மூலம் தமிழ் இலக்கியத்தில் என்றும் அழியாத தடம் பதித்தவர் மக்கள் எழுத்தாளர் ‘விந்தன்’.

                தமிழக அரசு விந்தனுடைய நூல்களை நாட்டுடைமையாக்கி உள்ளது சிறப்புக்குரியது. மேலும், விந்தன் வாழ்ந்த சென்னை சூளை- பட்டாளம் பகுதியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழக இலக்கிய ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

                அவர், இவ்வுலகைவிட்டு 30.05.1975 அன்று மறைந்தாலும் தமிழர்களின் மனதை விட்டு என்றும் மறையாதவர் ‘விந்தன்’.

- பி.தயாளன்

Pin It