தன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை அமைத்தவர் ஏ.கே.செட்டியார் என்று அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார். அவர் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநாட்டுப் பகுதியான கோட்டையூரில் 03.11.1911 ஆம் நாள் பிறந்தார். திருவண்ணாமலையில் படித்துக் கொண்டிருக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியைத் தமது தலைவராக ஏற்றார்.

ak chettiyarதமது இருபதாவது வயதில் மியான்மரின் (பர்மா) தலைநகரமான ரங்கூனில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் வெளியிடப்பட்ட ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். புகைப்படக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, 1930 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று ‘இம்பீரியல் ஆர்ட்ஸ் கலாசாலையில்’ சேர்ந்து புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றார். அவர் ஜப்பான் நாட்டில் தாம் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் கட்டுரைகளாக வரைந்து ‘தனவணிகன்’ இதழுக்கு அனுப்பினார். இதழில் வெளியிடப்பட்ட அவரது பயணக் கட்டுரைகள் படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அக்கட்டுரைகள் தொகுக்கப் பெற்று ‘ஜப்பானில் சில நாட்கள்’ என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இது தான் அவரது முதல் நூல்.

ஜப்பானில் புகைப்படக் கலையைப் பயின்ற செட்டியார் மேல்பயிற்சிக்காக அமெரிக்கா சென்று நியூயார்க்கிலுள்ள ‘போட்டோகிராபிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில்’ சேர்ந்து பட்டயப் படிப்பில் (டிப்ளமா) தேர்ச்சியடைந்தார். படிப்பு முடிந்து இந்தியா திரும்புகையில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தார். இந்தப் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக வெளியிட்டார். அக்கட்டுரைகள் பின்னர் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்னும் பெயரில் நூலாக 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு ஏ.கே.செட்டியார் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்றே மக்களால் அழைக்கப்பட்டார். பெயருக்கேற்ப, தம் வாழ்நாளில் அவர் சுமார் நான்கு இலட்சம் மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நூல்களிலேயே அதிகமான பதிப்புகள் வெளிவந்த நூல், ‘உலகம் சுற்றும் தமிழன்’ ஆகும். அந்த நூல் மாணவர்களுக்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்டது. பல பதிப்புகள் வெளியிடப்பட்டு பதிப்புத்துறையில் ஒரு சாதனை புரிந்தது எனலாம்.

ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள் எளிமையும், தெளிவும் கொண்டு விளங்குபவை. அவர் தேவைக்கு மேல் எதுவும் எழுதுவதில்லை. மேலும், மனிதப் பண்பு, மனித நேயம் என்பவற்றையே முன்னிறுத்தி அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன.

‘உலகம் சுற்றும் தமிழன்’, ‘மலேசியா முதல் கனடா வரை’, ‘பிரயாண நினைவுகள்’, ‘கயானா முதல் காஸ்டியன் கடல்வரை’, ‘அமெரிக்கா நாட்டிலே’, ‘ஐரோப்பா வழியாக’, ‘குடகு’ முதலிய சிறந்த நூல்களைத் தமிழ் மக்களுக்கு அளித்துள்ளார்.

‘குமரிமலர்’ என்னும் தமது இதழில் 1943 ஆம் ஆண்டு முதல், தமது பயணக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். ‘குமரிமலர்’ இதழில் எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.கே.சி, கி.சந்திரசேகரன் முதலியவர்களின் கட்டுரைகளையும், இராஜாஜி, வ.வே.சு. ஐயர், ஆ.மாதவையா, எஸ்.சத்தியமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியவர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டார். சுமார் நாற்பது ஆண்டுகள் ‘குமரி மலர்’ இதழ் வெளிவந்து மக்களின் சிந்தனையைத் தூண்டியது!

மேலும், ஏ.கே.செட்டியார், தமிழ்த்தாத்தா உ.வே.சா. போலவே பல ஊர்களுக்குப் பயணம் செய்து, பல வீடுகளின் பரண்களின் மீது கிடந்த நூல்களைச் சேகரித்து, அவற்றில் மக்களுக்குத் தேவையானவற்றை ‘குமரி மலர்’ இதழில் வெளியிட்டார்.

அவரது பயண நூல்கள் படிப்போருக்குப் பயண அனுபவத்தைத் தரக்கூடியன. நேராகச் சொல்லும் சொல்லுக்குச் சக்தியும், சொல்லும் முறைக்கு ஓர் ஒழுங்கும் உண்டு என்பதைத் தமது எழுத்தில் சாதித்துக் காட்டியவர் ஏ.கே.செட்டியார். ஆவணத்திரைப்படம் எனும் வகைமையைத் தமிழகத்திற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்திய பெருமை, ஏ.கே.செட்டியாரைச் சாரும்.

மகாத்மா காந்தியைப் பற்றி ஆவணப்படம் எடுக்க விரும்பிய ஏ.கே.செட்டியார், நேடால், டர்பன் முதலிய தென்ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று பல இடங்களில் படம் பிடித்தார்.

போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத அக்காலத்திலேயே, சுமார் பத்தாயிரம் மைல்கள் பயணம் செய்து, இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைத் தேடிப்பிடித்து குறிப்புகள் எடுத்து, ஐம்பது ஆயிரம் அடி நீளம் வரை ஆவணப்படத்தை எடுத்தார். அதன் பின் அப்படத்தை ஹாலிவுட்டில் படத்தொகுப்பு செய்து சுருக்கி அதற்கு ஆங்கில விளக்கவுரையை இணைத்தார்.

அப்படத்தில் மகாத்மாவுடன் பழகிய பலரும் இடம் பெற்றுள்ளனர். அந்த ஆவணப்படத்தைப் பலர் அதிகத் தொகைக்குக் கேட்டும் அவர் தரவில்லை. அப்படத்தை இந்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டார் என்பது வரலாற்றுச் செய்தி ஆகும்.

இதழாளராக, எழுத்தாளராக, புகைப்படக் கலைஞராக, ஆவணப்படத் தயாரிப்பாளராக விளங்கி, தமிழகத்துக்குப் பெருமைச் சேர்த்த ஏ.கே.செட்டியார், தமது எழுபத்திரெண்டாவது வயதில், 10.09.1983 ஆம் நாள் சென்னையில் காலமானார். பயண இலக்கிய வரலாற்றின் முன்னோடியான ஏ.கே.செட்டியாரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It