தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியைக் காரவேலன் உடைத்தான் என அவனது அத்திக்கும்பாக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. உண்மையில் தமிழக அரசுகளின் ஐக்கிய கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அது அப்பொழுது தற்காலிகமாக உடைந்து போயிருக்க வேண்டும். அவன் தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்பம் முதல் தமிழரசுகளை கலிங்கத்தில் இருந்து துரத்தவேண்டும் என முடிவு செய்திருந்தான். அதற்கு அவன் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். தமிழ் அரசுகளின் ஐக்கியக் கூட்டணி உடைந்து போனதை அறிந்து கொண்ட காரவேலன், இதுதான் தக்க தருணம் என்பதை உணர்ந்து தமிழ் அரசுகளின் காவல் அரணாக இருந்த பித்துண்டா நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டான். அன்று தமிழ் அரசுகள் மட்டுமே பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தன. பெரும் கடற்படைகளைக் கொண்டு கடற்கரையோர நகரங்களைக் கைப்பற்றுவது அல்லது அவைகளைக் கொள்ளையடிப்பது என்பது எளிதானதாக இருந்தது. தமிழரசுகள் அதனைத்தான் செய்து கொண்டிருந்தன. மகதம், கலிங்கம் போன்ற அரசுகள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில்தான் கலிங்கம் ஒரு கடற்படை அரசாக ஆகியது.

Kalinga Maritime

(கலிங்கர்களின் கடல் வன்மையைக் காட்டும் சிற்பம்)

கங்கை முகத்துவாரத்தில் இருந்த தாமரலிபத (Tamaralipta) எனப்பட்ட துறைமுக நகரம் கலிங்க அரசில் இருந்தது. அதன் பெயர் தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் பெயரில் இருப்பது போலிருக்கிறது. இந்த ஆற்றின் பெயரில் இலங்கையின் வடமேற்கே(ஈழத்தில்) அமைந்திருந்த தம்பப்பண்ணி எனப்படும் நகரம் கி.மு.500 வாக்கில் புகழ் பெற்றதாக இருந்தது. அதனைப் பாண்டியக் கிளை அரசர்கள் ஆண்டு வந்தனர் என பாலி நூல்கள் குறிப்பிடுகின்றன. (இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, பக்: 126-127). அதே காலகட்டத்தில் இந்தத் தாமிரலிபத(Tamaralipta) நகரமும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மெகத்தனிசு இந்த தாமிரலிபத என்கிற நகரம் குறித்து எழுதியுள்ளார். ‘வங்கம்’ எனப்படும் பெரும் கப்பலில் தமிழர்கள் கங்கை நதியின் முகத்துவாரத்தில் உள்ள தாமிரலிபத எனப்படும் துறைமுகத்தின் வழியாக கங்கைநதியில் நுழைந்து வட இந்தியாவின் நகரங்களில் வணிகம் செய்தனர் என்பதை நற்றினைப் பாடல் ஒன்று, “கங்கை வங்கம் போகுவர் கொல்லோ” எனப்பாடி அவ்வணிகத்தை உறுதி செய்கிறது(நற்றினை-189, வரி-5).

ஒரியா இரிவியு (ORISSA REVIEW) என்கிற மாத இதழில் 2011 நவம்பரில் டாக்டர் பிரபுல்லா சந்திர மொகந்தி (DR.PRAFULLA CHANDRA MOHANTY) என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரிசாவில் உள்ள பாளூர் என்ற பண்டைய துறைமுகத்தின் பெயரானது தந்தபுரா என்ற வடமொழிப்பெயருக்கு இணையான தமிழ் பெயராகும் என பேராசிரியர் எசு. இலெவி (PROF. S. LEVY) என்பவர் கருதுவதாகச் சொல்லியுள்ளார். SOURCE: MARITIME TRADE OF ANCIENT KALINGA –DR.PRAFULLA CHANDRA MOHANTY, ORISSA REVIEW, NOV-2011, PAGE: 41.

அதுபோன்றே அதே மாத இதழில் டாக்டர் கார்த்திக் சந்திரா இரூட் (DR.KARTIK CHANDRA ROUT) என்பவர் எழுதிய கட்டுரையில் பாளூர் என்பது தமிழர்கள் தந்த பெயர் எனச் சில விமர்சகர்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காரவேலன் கைப்பற்றிய பித்துண்டா நகரம் சிறிதுகாலமே காரவேலனுடைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் மீண்டும் அது தமிழர்களின் பொறுப்பில் வந்துவிட்டது எனப் பொருள் கொள்ளலாம். SOURCE: MARITIME HERITAGE OF GANJAM- DR.KARTIK CHANDRA ROUT, ORISSA REVIEW, NOV-2013, PAGE: 42, 43.

மேற்கண்ட இரு தரவுகளின் படி, பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய துறைமுகம் ஆன ‘பாளூர்’ (PALUR) என்பது தமிழ் பெயர்(பல்+ஊர்= பாளூர்) என்பதும், அதன் வடமொழிபெயர் தான் தந்தபுரா என்பதும் இந்தப் பாளூர் என்பது தமிழர்கள் வைத்த பெயர் எனச் சில ஒரியா அறிஞர்கள் கருதுகின்றனர் என்பதும் தெரிய வருகிறது. பாளூர் மட்டுமல்ல கலிங்கத்தில் இருந்த பண்டைய முக்கியத் துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம், மாணிக்பட்டினம், கல்கதா பட்டினம், தாமரலிபத (KALINGA PATANAM, MASULI PATANAM, MANIK PATANA, KHALKATA PATANA, TAMARAL IPTA) ஆகிய அனைத்தும் தமிழ் பெயரோடு தொடர்புடையன ஆகும். MARITIME TRADE OF ANCIENT KALINGA, MARITIME HERITAGE OF GANJAM ஆகிய மேலே தரப்பட்ட இரு கட்டுரைகளில் சொல்லப்பட்ட பண்டைய கலிங்க நகரங்கள் தான் இந்த 5 நகரங்களும் ஆகும். இந்நகரங்களில் ‘தமிரலிபத’ தவிர பிற அனைத்துத் துறைமுக நகரங்களும் இறுதியில் ‘பட்டினம்’ என்கிற தமிழ் பெயரைக் கொண்டுள்ளன.

பொதுவாகத் தமிழில் நெய்தல் நிலத்து ஊர்கள் பட்டினம் என்கிற பெயரைப் பெரும். தமிழில் பட்டினம் என்றால் நெய்தல் நில ஊர் என்பது போக, பட்டினர் என்பது நெய்தல் நிலத்தில் வசிக்கும் மீனவரையும், பட்டினச்சேரி என்பது நெய்தல் நில மீனவர் வசிக்கும் ஊர் அல்லது அவர்களது தெருவையும், பட்டினவாசி என்றால் நகர மக்களையும் குறிக்கும். ஆகப் பட்டினம் என்பது மூலத்தில் ஒரு தமிழ் பெயராகும். ஆகவே கலிங்கத்தில் உள்ள பட்டினம் என்கிற பெயர்கொண்ட பண்டைய பெயர்கள அனைத்தும் தமிழோடும், தமிழர்களோடும் தொடர்புடையன எனலாம். அதுபோன்றே தாமிரலிபத(Tamaralipta) என்பது இலங்கையின் தம்பப்பண்ணி போன்று தாமிரபரணி என்கிற தமிழக ஆற்றின் பெயரில் அமைந்த பெயராகத் தோன்றுகிறது.

கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் 14ஆவது வரியில் குமரி மலை என்கிற மலை குறித்து குறிப்பிட்டுள்ளான். இது கலிங்கத்தில் புவனேசுவரம் நகரத்தின் அருகில் உள்ள உதயகிரி, கந்தகிரி ஆகிய அருகருகே உள்ள இரு மலைகளின் பெயராகும்(விக்கிபீடியா). இதனை குமரி மலை என்றே அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது.a ஆங்கிலத்தில் இதனை kumari hill என குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குமரி மலை என்பது தமிழ் பெயர் ஆகும். பண்டைய தமிழகத்தில் இருந்த குமரி மலை கடல்கோளால் அழிந்துபோனது. அதுகுறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில்,

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல்கொள்ள” என்கிறார். வணிக நோக்கத்துக்காக கலிங்கம் வந்து, அங்கு நகர்களை உருவாக்கி, காவல் அரண்களை கட்டமைத்தத் தமிழர்கள் தங்களது குமரிமலையின் நினைவாகவே, குமரிமலை என்கிற பெயரை வைத்தனர் எனலாம்.

தக்காணத்தில் கொடுந்தமிழ்:

சங்க இலக்கியம் தக்காணத்தை மொழிபெயர் தேயம் என்றுதான் குறிப்பிடுகிறது. தமிழ் மொழி பெயர்ந்து கொடுந்தமிழாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிதான் தக்காணமாக சங்ககாலத்தில் கருதப்பட்டது. விந்திய, சாத்பூரா மலைகளுக்கு வடக்கே உள்ள பகுதிகளை சங்க இலக்கியம் பன்மொழி பேசும் பகுதியாக, அதாவது பல மொழிகள் பேசும் பகுதியாகக் குறிப்பிடுகிறது. இறங்கு குடிக் குன்ற நாடன் என்கிற புலவர், வடநாட்டுக்கு போர்ப்பயணம் மேற்கொண்ட ஒரு படைத்தலைவன் குறித்து,

“விலங்கிருஞ் சிமையக் குன்றத்து, உம்பர்,
வேறுபன் மொழிய தேஎம் முன்னி, -அகம்-215, வரி: 1-6.

எனப் பாடியுள்ளார். அதாவது, ‘உயர்ந்த குறுக்கிடும் இமயம் போன்ற பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள பலமொழி பேசுகிற நாடுகளுக்கு “ பயணம் செய்த தலைவன் குறித்து இப்பாடல் பேசுகிறது. வடநாட்டு மக்கள் பலமொழிகள் பேசினார்கள் என்பதை இப்பாடல் பதிவு செய்கிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ வேந்தன் இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப் பாலை,

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும் -(வரிகள்: 216-217).

என்கிறது. அதாவது, “புகழ் சிறந்த, பல நாடுகளில் இருந்து வந்துள்ள, பல மொழிகள் பேசுகின்ற, பல்வேறு மக்களும் ஒன்றுகூடி, உறவாடி மகிழ்ந்து, இனிதுறையும் பெரும்புகழ்ப் பேரூர் காவேரிப்பூம்பட்டினம்” என்கிறார் புலவர். புகாரில் பலமொழிகள் பேசுகிற வணிகர்கள் தங்கி இருந்தனர் எனவும், வடநாட்டு மக்கள் பலமொழிகள் பேசினர் எனவும் சொல்கிற சங்க இலக்கியம் தக்காணத்தில் இருந்த மக்கள் பலமொழி அல்லது வேறுமொழி பேசியதாகக் குறிப்பிடவில்லை. தக்காணத்தை மொழி பெயர்தேயம் என்று மட்டுமே குறிப்பிடுகிறது.

மேலும், மராட்டியத்தை மையமாகக் கொண்டு தக்காணத்தின் வடபகுதியை ஆண்ட சாதவாகனர்கள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தனர். தாங்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழையும், ஒரு பக்கம் பிராகிருதத்தையும் பயன்படுத்தினர். இத்தரவுகளைக் கொண்டு பார்க்கும்பொழுது தக்காண மக்கள் நிலத்தில் இருந்து கல் பெயர்வது போன்று தமிழில் இருந்து திரிந்த மொழியை அதாவது கொடுந்தமிழைப் பேசினர் எனலாம். இருங்கோவேள் குறித்துக் கபிலர் பாடிய பாடல்களின் மூலம், இருங்கோவேளின் முன்னோர்கள் துங்கபத்திரா நதிக்கரையில் இருந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய ஊர்களை ஆண்டுகொண்டிருந்தனர் எனவும் அவை மௌரியர் படையெடுப்பின்போது அழிந்தன எனவும் அறிய முடிகிறது. அதன் மூலம் அப்பகுதி தமிழ்க் குறுநில அரசர்களால் ஆளப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதுபோன்றே இன்றைய துளு மக்கள் வாழும் கர்நாடகத்தின் மேற்குப் பகுதியை நன்னர்கள் எனப்படுகிற தமிழ்க் குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர் என்பதைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. இந்த நன்னன், இருங்கோவேள் இருவரும் வேளீர்களில் புகழ் பெற்றவர்களாகவும், அவர்களின் தலைவர்களாகவும் இருந்துள்ளனர்.

கன்னட, தெலுங்கு மொழிகளின் கல்வெட்டுகள் முறையே கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும். அவைகளின் முதல் இலக்கிய நூல்கள் என்பன முறையே கி.பி. 9ஆம், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும். அம்மொழிகளின் பொற்காலமோ முறையே கி.பி. 10-12ஆம் நூற்றாண்டுகள், கி.பி. 15-17ஆம் நூற்றாண்டுகள் ஆகும். அம்மொழிகளின் முதல் கல்வெட்டை வெட்டிய முறையே கடம்ப மன்னர்களும், இரேனாதி சோழர்களும் தமிழகத்தோடும், தமிழக அரசவம்சங்களோடும் தொடர்புடையவர்களே ஆவர். இவை குறித்து முன்பே சொல்லப்பட்டுள்ளது. வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழி திரிந்து, தேய்ந்து கொண்டிருந்ததால் அப்பகுதியை மொழி பெயர் தேயம் எனச் சங்க இலக்கியம் கூறுகிறது. சங்க இலக்கியம் உருவாகிப் பல நூற்றாண்டுகள் கழித்து, சமற்கிருத, பிராகிருத, பாலி மொழி கலப்புகளால் தக்காணத்தில் இருந்த கொடுந்தமிழ், கன்னட, தெலுங்கு மொழிகளாக மாற்றம் பெற்றது. அதனால் தான் என்றி ஒய்சிங்டன் 1853 லேயே, “தமிழ் மொழியிலிருந்து உருவான மொழிகளாகவே கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் கருதப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியப்படி கி.மு. 4ஆம் நூற்றாண்டு வாக்கில் தக்காணப்பகுதி மக்கள் கொடுந்தமிழ் பேசினர். அதன்பின் ஆறு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்குள், அதாவது கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளுக்குள் அக்கொடுந்தமிழ் கன்னட, தெலுங்கு மொழிகளாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின் அவைகளுக்கான எழுத்துக்கள் மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கழித்து உருவாகின எனலாம். இவை குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் தேவை.

கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் கலிங்கத்தின் பித்துண்டா நகரம் தமிழரசுகளின் காவல் அரணாக இருந்தது எனக் குறிப்பிட்டதற்கும், தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி 1300 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லியதற்கும், கங்கை நதிவரை இருந்த கலிங்கத்தின் பண்டைய நகரங்கள் தமிழ்ப் பெயர்களோடு இருந்ததற்கும், மராட்டியத்தை மையமாகக் கொண்டு தக்காணத்தின் வடபகுதியை ஆண்ட சாதவாகனர்கள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்ததற்கும் தக்காணப்பகுதி தமிழரசுகளின் பாதுகாப்பின்கீழ் இருந்தது என்கிற மாமூலனார் கூற்றிற்கும், தக்காணத்தில் கொடுந்தமிழ் பேசப்பட்டதற்கும் தொடர்புகள் இருக்கலாம். இவைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் தேவை.

(முற்றும்)

-    கணியன் பாலன், ஈரோடு

Pin It