'உலகம் சுற்றிய தமிழன்' என அழைக்கப்படும் ஏ.கே. செட்டியாரின் பயணநூல்களால் தூண்டப்பட்டு எழுத்தாளராக மாறியவர் சோமலே!
இராமநாதபுரம் மாவட்டம் 'நெற்குப்பை' என்னும் ஊரில் 11.02.1921 ஆம் நாள் பெரி.சோமசுந்தரம் செட்டியார் - நாச்சம்மை ஆச்சி தம்பதியயினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர் சோம.லெ.இலக்குமணன். பள்ளிப் படிப்பை முடித்ததும் , சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். மும்பை சென்று 1947 ஆம் ஆண்டு ஹாரிமன் இதழியல் கல்லூரியில் பயின்று இதழியில் துறையில் நிறைச்சான்றிதழ் (Diploma) பட்டம் பெற்றார்.
விவசாயத் தொழில் இவருக்கு ஒத்து வராததால், தமது குடும்பத்தினர் செய்து வந்த ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டார். வணிகத் தொழிலில் தேர்ச்சி பெறும் பொருட்டு 1948 ஆகஸ்ட் மாதம் முதல் 1949 பிப்ரவரி வரை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிரிட்டன், சுவீடன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா முதலிய பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்தார். சுமார் நாற்பதாயிரம் மைல்கள் பயணம் செய்தார். மேலும், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் கூற்றுக்கு ஏற்பத் தாம் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் அனைத்தையும் தமது பயண நூல்களின் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
இவர், தமது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது அந்நாடுகளில் உள்ள தொழில்கள், வணிக நிறுவனங்கள், கல்வி, வேளாண்மை, உணவு முறை, பத்திரிக்கைத் துறை, வங்கிகள் என ஒவ்வொரு துறையைப் பற்றிய செய்திகளையும், தகவல்களையும் திரட்டித் தமது பயண நூல்களில் இடம் பெறச் செய்தார் என்பது சிறப்புக்குரியது.
அமெரிக்காவில் பழமைப் பெருமையை உணர்த்தும் இடங்களைப் பேணி பாதுகாத்திட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிடுகின்றது அந்நாட்டு அரசு. ஆனால், இந்தியாவில் பழமைச் சின்னங்களையும், பழங்காலக் கோட்டைகளையும், கோயில்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் போதிய கவனம் செலுத்துவதில்லை; இது வேதனையளிக்கும் செய்தி என்பதை மிகுந்த வருத்தத்துடன் தமது எழுத்துக்களில் பதிவு செய்து உள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பத்து மாவட்டங்கள் பற்றிய நூல்களும் எழுதியுள்ளார். ஓவ்வொரு மாவட்ட நூலிலும் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்ட தலைவர்கள் பற்றிய அரிய தகவல்களைத் தந்துள்ளார். ஓவ்வொரு மாவட்ட நூல்களுக்கும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அறிஞர்களிடம் இருந்தே அணிந்துரை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழில் முதன் முதலாக 'தூதுவர் துறை' பற்றி, பல விளக்கங்களுடன், 'நீங்களும் தூதுவர் ஆகலாம்' என்னும் சிறப்பான நூலை எழுதியுள்ளார்.
செந்தமிழ் நடை, தனித்தமிழ் நடை, மறுமலர்ச்சி நடை முதலிய முன்று வகைகளில் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்றதை 'வளரும் தமிழ்' என்னும் நூலில் ஆய்வு செய்துள்ளார்.
தொழில் நகரமான நெய்வேலியைப் பற்றியும் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்நூலில் நெய்வேலி நகரின் அமைப்பு, பழுப்பு நிலக்கரியின் தோற்றம், அதன் பயன்கள், அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் மற்றும் நிலக்கரியுடன் கிடைக்கும் மற்றப் பொருள்களின் பயன் முதலிய பல விவரங்களை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைப் பற்றி முழு அளவில் ஒரு நூலை எழுதி அளித்துள்ளார்.
செட்டி நாட்டாரின் தமிழ்த்தொண்டினையும், ஆலயப் பணிகளில் செட்டிநாட்டாரின் பங்கு, சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் முதல் கவியரசு கண்ணதாசன் வரை ஆற்றிய தமிழ்த் தொண்டினைப் படிப்பவர் உள்ளம் கவரும் வகையில் 'செட்டிநாடும் செந்தமிழும்' என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
'உலக நாடுகள் வரிசை' 'இமயம் முதல் குமரி வரை' முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 'பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் வரலாறு' என்ற இவரது நூல் மதுரை பல்கலைக் கழக புகுமுக வகுப்புப் பாட நுலாக வைக்கப்பெற்றது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமாந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை 'விவசாய முதலமைச்சர்' என்னும் பெயரில் எழுதி வெளியிட்டார். இதழியல் குறித்து 'தமிழ் இதழ்' என்னும் நூலைத் தந்துள்ளார். 'தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்' என்பது இவரது தனிப்பெரும்நூல் கோயில் குடமுழுக்கு நீராட்டு விழாவினையொட்டி வெளியிடப்படும் மலர்களின் தொகுப்பாலான 'மாலை'யினைத் தமிழன்னைக்கு அளித்தவர் சோமலே. இதனால், 'மலர் மன்னர்' என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் ஆனார்.
இவரது நூல்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையானவை. உவமைகள், மேற்கோள்கள், குட்டிக் கதைகள், பழமொழிகள், நகைச்சுவைகள் முதலியவற்றை உரிய இடங்களில் இடம் பெறச் செய்துள்ளார்.
தமிழில் பயண இலக்கியம் படைத்த சோமலேவின் புகழ் பயண இலக்கிய உலகில் என்றும் அழியாத புகழ் பெற்று விளங்குபவைகளாகும்.
- பி.தயாளன் (