“எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? – இந்தி
  எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
  மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எம்மை
  மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இப்பாடலைப் பாடிக்கொண்டு, சென்னை பெத்துநாயக்கன்பேட்டை காசி விசுவநாதர் கோயில் முன்பிருந்து பெண்கள் பெரும்படையாக அணி வகுத்தனர். “தமிழ் வாழ்க!”, “இந்தி ஒழிக!” என்ற முழக்கங்களுடன், பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டதை எதிர்த்தனர். ‘இந்து தியாலஜிகல்’ உயர்நிலைப்பள்ளியின் முன்பு 14.11.1938-ல் டாக்டர் தருமாம்பாள் தலைமையில் மறியல் செய்தனர். காவல்துறையினரால் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 Dharmambal_400டாக்டர் தருமாம்பாள் தஞ்சையை அடுத்துள்ள கரந்தையில் 1890-ஆம் ஆண்டு சாமிநாதன் - நாச்சியார் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இளம் வயது முதற்கொண்டே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் சிறந்த நாடக நடிகராக விளங்கிய குடியேற்றம் முனிசாமி நாயுடு என்பவரைக் காதலித்துக் கணவராக ஏற்றுக்கொண்டார்.

 கணவரோடு நாகப்பட்டினத்தில் சிலகாலம் வாழ்ந்தவர், பின்பு சென்னையில் குடியேறினார். சித்த மருத்துவத்தைப் பயின்று, நோயாளிகளின் நோய் தீர்க்கும் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார்.

 தமிழ் மாதர் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று, பெண்களை அணி திரட்டினார்: நாள்தோறும் வகுப்புகள் நடத்தினார். பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பரப்புரையு செய்தார்.

 பெண்ணுரிமை பேணவும், சமூகம் சீர்திருந்தவும், மூடபக்தி-குருட்டு நம்பிக்கை ஆகியவற்றைக் களையவும், அரும்பாடுபட்டார்.

 அன்றைய காலகட்டத்தில், பெரியபாளையத்தில் உள்ள கோயிலில் வேண்டுதல் எனக்கூறிக் கொண்டு ஆணும், பெண்ணுமாக பிறந்தமேனியில் வேப்பந்தழையினை சுற்றிக் கொண்டு வலம் வருவதை அறிந்து வெகுண்டு எழுந்தார். துணிவுடன் அங்கு நேரில் சென்று அம்மக்களிடம் மூட நம்பிக்கையைச் சாடியும் எதிர்த்தும் பரப்புரை செய்தார்.

 நாற்பதுகளில், உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர்களுக்கு, ஏனைய ஆசிரியர்களைவிடக் குறைவான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. இக்குறைபாட்டினை நீக்கிடக் கோரி தமிழாசிரியர்கள் போராடினார்கள். தமிழாசிரியர்களின் அப்போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்துப் பேசினார் டாக்டர். தருமாம்பாள்!. “தமிழாசிரியர்களுக்கு ஊதியத்தினை தமிழக அரசு உயர்த்தவில்லையெனில் பெண்களாகிய நாங்கள் ஒன்று கூடி இழவு வாரம் கொண்டாடுவோம்” என்றும் அறிவித்தார். அப்போது, கல்வியமைச்சராக இருந்த டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், தமிழாசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று, மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்.

 டாக்டர் தருமாம்பாள் முன்னின்று நடத்திய சாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம். விதவை மறுமணங்கள் பல. பெண்கள் கல்வி பெறவும், வேலை வாய்ப்புப் பெறவும் செய்த உதவிகள் எண்ணற்றன. பெண்கள் முன்னேற்றத்திற்கு இவர் ஆற்றிய பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

 தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் மகளான நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் சென்னை ஒற்றைவாடை கொட்டகையில் 1938-ல் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் ‘ஈ.வெ.ரா.’ அவர்களுக்கு “பெரியார்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

 சென்னை சட்டமன்றத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி முயற்சி எடுத்து மசோதா தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சத்தயமூர்த்தி அதைக் கடுமையாக எதிர்த்தார். திரு.வி.க., தந்தை பெரியார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோருடன் இணைந்து டாக்டர் தருமாம்பாள் வீடு வீடாகச் சென்று மக்கள் ஆதரவைத் திரட்டினார்.

 சென்னை மாணவர் மன்றம் 05.01.1952-ல் சென்னை கோகலே மண்டபத்தில், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தலைமையில் டாக்டர் தருமாம்பாளுக்கு மணிவிழா நடத்தியது. அவ்விழாவில், அம்மையாருக்கு “வீரத்தமிழன்னை” என்னும் பட்டம் வழங்கி வாழ்த்திப் பேசினார் திரு.வி.க. அவர் உரையாற்றும்போது . . . . “தருமாம்பாள் மக்களின் உடல் நோய் தீர்க்கும் மருத்துவராக மட்டும் மருவவில்லை என்றும், சமூக நோய் தீர்க்கும் மருத்துவராகவும் மருவுகிறார் என்றும் எண்ணச் செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 இந்தி எதிர்ப்பு – தமிழ் வளர்ச்சி – தமிழ் இசை இயக்கம் - தமிழாசிரியர்களின் உயர்வு – பெண்கள் முன்னேற்றம் - பெண் கல்வி - மூடநம்பிக்கை ஒழிப்பு – பகுத்தறிவுப் பிரச்சாரம் - பெண்ணடிமை நீக்கம் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட அம்மையார். இருபதாம் நூற்றாண்டின் ஒளவையார் ஆவார்! டாக்டர் தருமாம்பாள் 20.05.1959 அன்று காலமானார்.

Pin It