“நீங்கள் சிலபேர் நிலம் படைத்தோர்
நாங்கள் பலபேர் ஏர் உழுவோர்
நீங்கள் சிலபேர் விருந்துண்போர்
நாங்கள் பலபேர் பசித்திருப்போர்
நீங்கள் சிலபேர் மாளிகையில்
நாங்கள் பலபேர் மண்குடிலில் “
- கம்பதாசன்


  சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு சாடிச் சீறியவர்: வயிறு பசித்திருப்போர் பலராகவும், விருந்து புசித்திருப்போர் சிலராகவும் இருக்கும் நிலைக்கு இரங்கியவர்: மாளிகையில் சிலர் வாழவும், மண் குடிசையில் பலர் தாழவும் ஆன நிலைக்கு உருகியவா:; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் ஒரு சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டுமென ஓயாது கவிதை பாடியவா! திரைஉலகில், மொழி மாற்றுப் படங்களுக்குக் கூட முத்தமிழ் உவமைகளோடு பாடல் எழுதிய கவிதைத் தும்பி! அவரே கவிஞர் கம்பதாசன்.

 பாண்டிச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் சுப்பராயர் - பாலம்மாள் மகனாகப் பிறந்தார் கம்பதாசன்! அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் “அப்பாவு”!

 கொலு பொம்மைகள் செய்யும் மரபுக்கலையிலே கைதேர்ந்த சுப்பராயர், தமது குடும்பத்தோடு சென்னை புரசைவாக்கத்தில் குடியேறினார்.

 அங்கு, குயப்பேட்டை அருகே உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கல்வி பயிலத் தொடங்கினார் கம்பதாசன். அவர் எட்டாவது வகுப்பைக் கூடத் தாண்டவில்லை. படிப்பில் மனம் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அப்பகுதியிலிருந்த நாடக சபாக்களுக்கு சென்று வருவதில் விருப்பம் கொண்டார்.

 பம்மல் பி. சம்பந்த முதலியார், சிதம்பரம் பாடகர் சுந்தரம்பிள்ளை, எம்.என். பாவலர், ராய் சௌத்திரி, ஆறுமுக முதலியார், திருக்கழுகுன்றம் துரைசாமி நட்டுவனார் போன்ற உயர்ந்த நாடக ஆசிரியர்கள் - கலைஞர்களின் நட்பினைப் பெற்றார். அவர்களின் மூலம் கலைத்திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் கம்பதாசனுக்கு கிடைத்தது.

 நடிகராகவும், பாடகராகவும், ஆர்மோனியம் இசைப்பவராகவும் விளங்கினார் கம்பதாசன். மிக இளம் வயதினிலேயே பிரபல பாடகர்களுக்கு பாடல்கள் இயற்றிக் கொடுக்கும் திறமை படைத்திருந்தார்.

 திரௌபதி வஸ்திராபரணம், மங்கையர்க்கரசி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். சீனிவாச கல்யாணம் என்ற திரைப்படத்திற்கு முதன் முதலில் பாடல் எழுதினார்.

 வாமன அவதாரம், வேணுகானம், பூம்பாவை, உதயணன், ஞான சௌந்தரி, நாட்டிய ராணி. லைலா மஜ்னு, வனசுந்தரி, பசியின் கொடுமை - போன்ற அய்ம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் கவிஞர் கம்பதாசன் பாடல்களோடு வெளிவந்தன. அவரது திரைப்படப்பாடல்கள் மறுமலர்ச்சி இலக்கிய மணமும், முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டும் விளங்குபவை. பிரபல இந்தித் திரைப்படம் ‘ஆன்’ ‘திலீப்குமார் - நர்கீஸ் ‘ நடித்து, தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. அதில் வந்த எல்லாப் பாடல்களையும் கம்பதாசன் எழுதினார். இவரது பாடலுக்காகவே அப்படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

 கம்பதாசனின் பாடல்களைப் படித்து வியந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், “புதுமையை வரவேற்கும் தன்மையும், அதைப் போற்றும் ஆற்றலையும் காணுகிறேன்” என்று பாராட்டினார். பாரதிதாசன் மீது அன்பும், மதிப்பும் கொண்டு “பேரறிஞன் என்றன் ஆசான்” என்று பாடியுள்ளார் கம்பதாசன். இரு கவிஞர்களின் நட்பு இறுதிவரை நீடித்தது.

 “உழவுத் தொழிலாளி வசூலில்
  உதிர்ந்த வேர்வைத் துளி
  கொழுத்த முதலாளி - அணியினில்
  கொலுவாச்சு வைரமாய் !
  ஆலைத் தொழிலாளி – உடலினிலே
  அள்ளி எடுத்த ரத்தம்
  காலன் முதலாளி - பேலாவில்
  கள்ளாய் கொலுவாச்சு !”

 உழவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் நில முதலாளிகளின் கொடூரத்தையும், ஆலைத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சும் முதலாளிகளின் கொள்ளையையும் கண்டு சீறி எழுந்தார் கவிஞர் கம்பதாசன்: ஏழைகளின் இதய தாகத்தை அழுத்தமான பாடல்களால் எழுத்தோவியமாக்கினார் கவிஞர். ‘தொழிலாளர் கை கட்டி, வாய் பொத்தி, பயந்து பட்ட துயரங்கள் போதும்: மனித குலம் வாழ்வதற்கும், உயர்வதற்கும் நித்தம் பாடுபடும் பாட்டாளிகள் வெகுண்டு எழுந்து போராட வேண்டும்’ - என தனது கவிதைகள் மூலம் அறைகூவல் விடுத்தார் கவிஞர் கம்பதாசன்.

“தாயின் தமிழ் மொழியில் - உயிரில்
  தங்கியுள தமிழகமே !”
  தணியாத பெரும் போதை தமிழ்; போதை போலே”

 என்ற பாடல் வரிகள் மூலம் தமிழ் மொழியின் சிறப்பை, இனிமையை அழகாக எடுத்து இயம்புகிறார். மேலும், தமது தாய்மொழியான தமிழ்மீது கம்பதாசனுக்கு பெரும் போதையே உண்டு!

 தமிழர்கள் சாதி, மத ரீதியாக பிளவுண்டு கிடப்பதைத் தவிர்த்து, தாய்மொழியாம் தமிழின் அடிப்படையில் ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்றார். அதனை,

“ஒற்றுமையே பலமாம் - நம்
 உயிர்தமிழ், முரசறைவீர் !”

என எடுத்துரைக்கிறார்.

 விதியின் வழிப்பு, கனவு, தொழிலாளி, அருணோதயம், முதல் முத்தம், புதுக்குரல், ஆகிய கவிதை நூல்களைப் படைத்து தமிழுக்கு அளித்துள்ளார். மேலும், வேலை வந்தது, புத்தர், புனர் ஜென்மம், கனவு, காணிக்கை, இரத்த ஓவியம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார். அக்காவியங்கள் யாவும் மானுட வாழ்வின் அடிநாதமானவை, “அன்பு” ம், அப்பழுக்கற்ற தியாகமும் தான் என்ற பேருண்மைகளை உணர்த்துவன.

 கம்பதாசன், கவிதைகள் தவிர்த்து கதைகள், நாடகங்கள் பல எழுதி தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்துள்ளார்.

 ‘கவிதா‘ என்ற கவிதை மாத இதழை கம்பதாசன் நடத்தினாh,; தினமணி நாளிதழ், கவிஞர் பொன்னடியானின் ‘முல்லைச்சரம்‘, நாரண துரைக்கண்ணன் நடத்திய ‘பிரசண்ட விகடன்‘, ‘ஆனந்த போதினி‘ ஆகிய இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்து அலங்கரித்துள்ளன.

 சென்னையில் 1946ஆம் ஆண்டு நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில், மகாத்மா காந்தி கலந்து கொண்டார். அம்மாநாட்டில் கம்பதாசன் ஆங்கிலத்தில் பிராத்தனை கீதம் எழுதிப்பாடி, காந்தியின் பாராட்டைப் பெற்றார் என்பது கவிதைத் தமிழுக்குக் கிடைத்த வைர அட்டிகை!

 “பொறி பறக்க தொழிலாளர் தீ மனமே
  புரட்சி செய்ய உரிமை தந்த மே தினமே”
என்ற இசைப்பாடலின் மூலம் ‘மே தினம் உழைப்பவர் உரிமை தினம்’ – என்பதை ஓங்கி ஒலித்தார்! அது, புரட்சி செய்வதற்கு சபதம் ஏற்கும் நாளாகும் என்பதை உலகுக்கு எடுத்துரைத்தார்!

 “நாளுக்கு நூறுமுறை - அஞ்சி
  நாய்போல் வாழ்வதிலும்
  தோளுயர்த்திச் சாவின் - முத்தம்
  ஆடுவோம் ஓர் முறையே”

என்ற இவரது கவிதை சமூக ஏற்றத் தாழ்வுகளையும், கொடுமைகளையும், சுரண்டல்களையும், கண்டு நாய் போல் பயந்து அடிமையாக வாழ்வதைவிட, போராடி வெற்றி பெறுவோம் என்பதை வலியுறுத்தும்!

 சிறந்த சோசலிசவாதியும், அதி உன்னத வங்கக் கவிஞருமான ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயா, கம்பதாசனின் கவிப்புலமையைக் கண்டு வியந்தார். கொள்கைப் பிடிப்பினை வாழ்த்தினார். கம்பதாசனோடு நெருங்கிய நட்பும் கொண்டிருந்தார். அவர் “கம்பதாசன், இக்கால யுவ எழுத்தாளர்; கலை வல்லார்; ஆவேசத் துடிப்புடன் புதுமைகளைத் தேடி புதிய சாதனை படைத்தவர்” என்று பாராட்டினார்.

 “வாழ்வையும், கவிதையையும், காவியக் கனவையும் ஒன்றாக்கிய கவின் அவரது உள்ளத்தின் கனிவு: வறுமையோடும், செல்வத்தோடும் மனங்கலங்காது, குலுங்காது அநாயசமாகப் பறந்து செல்லும் வானம்பாடிக் கவிஞர் கம்பதாசன்” என பெருங்கவி ச.து.சு.யோகியார் பாராட்டியுள்ளார்.

 தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் 1968ஆம் ஆண்டு கம்பதாசனுக்கு “கலைச்சிகாமணி” (இன்றைய கலைமாமணி) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

 கவிஞர் கம்பதாசன், திரைப்படம் மூலம் சம்பாதித்த பணத்தைச் சிறிதும் சேமிக்காமல் தனக்காகவும், நண்பர்களுக்காகவும் செலவு செய்தார். கடைசியில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். “நித்தம் வறுமையில் நெஞ்சழித்து” வாழ நேர்ந்த போதும் கூட தனது இலட்சியங்களைப் போற்றி, கொள்கை பிறழாத பெருந்தகையாய் வாழ்ந்தவர்”.

 கம்பதாசனின் இறுதிக் காலத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இவருக்கு நலிந்த கலைஞர்கள் வரிசையில் மாதா மாதம் நூறு ரூபாய் கிடைக்கவும், சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டுவசதி வாரியத்தில்; குடியிருக்க வீடு வழங்கவும் உத்தரவிட்டார்

 கவிஞர் கம்பதாசன் தமது கடந்த காலக் கலை இலக்கியச் செயற்பாடுகளையும், நிகழ் காலத்துச் சோதனை நிலைமைகளையும் எடுத்தியம்பி, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி அம்மையாருக்கு ஒரு கடிதம் எழுதினார். கம்பதாசனை மதித்து அவருக்கு, பாராட்டுக் கடிதம் எழுதியதோடு, பண உதவியும் புரிந்தார் இந்திராகாந்தி அம்மையார்.

 புதிய சிந்தனைகளை, புதிய கோணத்தில் மொழி விளக்கத்தோடு கவிதைகள் படைத்தவர், நடிப்புக் கலை, நடனக் கலை மட்டுமல்லாது, ஓவியக் கலையிலும் சிறந்து விளங்கியவர். படைப்பாற்றல், கற்பனைத் திறன், இசைப்புலமை, சொல்வளம் நிரம்பப் பெற்றவர். கவிஞர் கம்பதாசன்! சமதர்ம சிந்தனைகளையும், சுய காதல் உணர்வுகளையும், மனித நேயத்தையும், இயற்கையின் எழிலையும் தனது திரைஇசைப் பாடல்கள் மூலமும் தமிழகத்தில் பரப்பினார்.

 சோசலிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். இரங்கூனில் நடைபெற்ற ஆசிய சோசலிஸ்ட் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 கவிஞர் கம்பதாசனை காசநோய் தாக்கியது. ஈரலைப் பாதித்தது கடைசியாய் 23.05.1973 ஆம் நாள் அவர் வாழ்வின் இறுதி நாள் ஆனது.

 நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன் பாரதியின் உடலை எந்தத் திருவல்லிக்கேணி; கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்குக் கொண்டு போனார்களோ அங்கு தான் கம்பதாசன் திருவுடலையும் புதைத்தார்கள்.

 கவிஞர் கம்பதாசன் திரையுலகை வலம் வந்த கவிதைத் தும்பி! இலக்கியங்கள் காலத்தால் அழியாத புகழ் பூத்தவை.

- பி.தயாளன்

Pin It