உத்தமபாளையம் சின்ன சையது லெவை ராவுத்தர் - பாத்திமா தம்பதியரின் மகன் முகமது இஸ்மாயில் 1903 ஆம் ஆண்டு பிறந்தார். உத்தமபாளையத்தில் ஆரம்பக்கல்வியும், மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் இண்டர் மீடியட்டும் படித்தார். கம்பம் பீர்முகமது பாவலரால் பாடப்பட்ட "உபகாரம் செய்ய என்றே நூல் கற்றோம். அபகாரம் செய்ய அல்ல" என்ற பாடல் மூலம் சுதந்திரப் போராட்ட தியாகியாக தன்னை இணைத்துக் கொண்டார். படிக்கும் காலத்தில் கதர் தொப்பியினை அணிந்து கொண்டுதான் செல்வார். அப்போது கல்லூரி முதல்வர் "தலையில் உள்ள குல்லாவை கழற்றிவிட்டு வா" என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்டார். அதன் பின்னர் அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தின்போது காவலர்களால் கடும்  சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.

1923 ஆம் ஆண்டு பி.வரதராஜூலு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கதராடை அணிந்து முதன் முதலாக மேடை ஏறி பேசும் வாய்ப்பு கிடைத்தது. 1932 ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக 6 மாத சிறைத் தண்டனை பெற்றார். 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாநாடுகளுக்கும்-கூட்டுறவு மாநாடுகளுக்கும் பிரதிநிதியாக இருந்து மாநாட்டிற்கான அனைத்து வேலைகளையும் மும்முரமாக செய்தார். 1940 ஆம் ஆண்டு திண்டுக்கல் ஜில்லா, மதுரை ஜில்லாவும் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டியில் ஏ.வைத்தியநாதய்யர் தலைமையில் உபதலைவரானார். 

1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக ஆங்கில அரசு இவருக்கு 500 ரூபாய் அபராதமும் ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கியதால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜப்பானுக்கு எதிராக நடந்த போருக்காக இந்தியர்களிடம் நிதி திரட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டறிக்கை விநியோகம் செய்தார். இதற்காக 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் பெற்று பெல்லாரி மாவட்டம் அலிப்பூர் சிறையில் வாடினார்.  சுதந்திரத்திற்குப் பின்னர், 1958 ஆம் ஆண்டு முதல் 1970 வரை உத்தமபாளையம் பேரூராட்சித் தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர் மறைந்தார்.

- வைகை அனிஷ்

Pin It