“ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியை அழித்துவிடுங்கள் இனம் தானாக அழிந்துவிடும்” என்பார் அறிஞர் இங்கர்சால். தமிழர்கள் தமிழீழத்திலே கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது நாம் அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது அரசியல் இயலாமையால் மட்டுமல்ல, மாறாக தமிழினம் மொழிப்பற்று, தாய்மொழியில் கல்வி பயிலாமல,; தமிழ்மொழியில் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் மறந்துபோனதன் விளைவேயாகும். மொழிப்பற்றும், மொழி உணர்வும் இருக்கும் நாட்டில்தான் அறிஞர்கள் போற்றப்படுவார்கள், மதிக்கப்படுவார்கள். அறிஞர்களும், ஆய்வாளர்களும் மதிப்போடும், மாண்போடும் சுதந்திரத்தோடும் வாழும் நாட்டில்தான் நல்ல பல இலக்கியங்கள் உருவாகும்.

thani_nayagamதமிழர்கள் மறந்துபோன தமிழ் அறிஞர்கள் ஏராளம். தலைமை வழிபாடு என்பது தமிழினத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. திரைப்பட நடிகை நடிகர்களுக்காக கொடிபிடிக்கும் ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு விழுக்காடு தமிழ் அறிஞர்கள் பின் சென்றிருப்பின் தமிழ் இனம், மொழி இன்று உலக அரங்கில் உயர்ந்து நின்றிருக்கும். நாம் மறந்தவைகள் ஏராளம். நமக்கு மறைக்கப்பட்ட வரலாறுகளும் எண்ணிலடங்கா. தமிழர்கள் மறந்துபோன ஒரு தமிழ் அறிஞரின் நூற்றாண்டு நினைவு நாளை நாம் கொண்டாடியாக வேண்டும். தனிநாயகம் அடிகள், தமிழ் மொழியை உலக அரங்கில் உயர்த்தி, பிற மொழிகளுக்கு இணையான இலக்கண இலக்கியங்களை தமிழ் மொழி தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர்.

தனிநாயகம் அடிகளாரின் இயற்பெயர் சேவியர் தனிஸ்லாஸ், தன் பெயரை தமிழ்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனிநாயகம் என்று மாற்றிக் கொண்டவர். 02.08.1913- அன்று ஈழத்தில் யாழ்பாணத்தை அடுத்த நெடுந்தீவில் பிறந்து, கொழும்பில் தத்துவவியல் பயின்று பின்னர் உரோமையில இறையியல் படித்து 1938-ல் கிறித்தவ குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். தன்னுடைய 27-வது வயதில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் புனித தெரசா உயர்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தமிழ் இலக்கியத்தை முழுமையாக கற்க விரும்பிய அவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தன்னுடைய 32-ம் வயதில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்.

 1948-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ‘தமிழ் இலக்கியக் கழகம்’ என்னும் அமைப்பினையும், அத்துடன் எழுத்தாளர் இல்லம் ஒன்றினையும், உயர்நிலை தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஒன்றினையும் நிறுவினார். இவர் ஒரு கிறித்தவ மறைபோதகர் என்றாலும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ் தொண்டாற்றுவதையே பிறவிக்கடனாகக் கொண்டு செயல்பட்டார். அமெரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, செர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஸ்காண்டிநேவியா, போர்ச்சுகல், இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியத்நாம், சப்பான் என்று சுமார் 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தமிழ்மொழி, தமிழர் வரலாறு, தமிழ் பண்பாடு குறித்து ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்தும், உரைகள் ஆற்றியும் நம் மொழியின் பெருமையையும், நமது வரலாற்று, பண்பாட்டு அம்சங்களை உலகெங்கும் பறைசாற்றிய பெருமைக்குரியவர் தனிநாயகம் அடிகளார்.

தாய்லாந்தில் திருவெம்பாவை:

 தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடும் பாடல் திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை உலகுக்கு அறிவித்தார். 1954-ம் ஆண்டு தாய்லாந்து சென்ற போது அங்கு பாடப்பட்ட பாடல் இது.

 “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
 சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாந்தடய்கண்
 மாதே வளருதியோ வன்சேவியோ நின்செவிதான்
 மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
 வீதியாய்க் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்மறந்து...”

இப்பாடல்களை அடிகளார்க்குப் படித்துக் காட்டிய தாய்லாந்து நாட்டு அரச குரு தாய்லாந்து மொழியிலும் கிரந்தந்திலும் எழுதப்பட்டிருந்த சில ஏடுகளையும் காட்டினார். தாய்லாந்தில் பின்பற்றப்பட்ட இந்து சமயமும், புத்த சமயமும் இந்தியாவிலிருந்து சென்றவைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாய்லாந்து நாட்டிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பினை முதன் முதலில் அறிந்து தெரிவித்தவர் தனிநாயகம் அடிகளாரே ஆவார்.

 மலாயாவையும் தாய்லாந்தையும் இணைக்கும் நீண்ட குறுகிய இடப்பரப்பில் அமைந்துள்ள ‘தாக்குவப்பா’ என்னும் இடமே சிலப்பதிகாரம் காட்டும் ‘தக்கோலம்’ என்பது அடிகளாரின் கண்டுபிடிப்பு. மேலும் அம்மாவட்டத்தில் மணிக் கிராமத்தார் பற்றிய கல்வெட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதும், அங்குள்ள இடப்பெயர்களும் சிவபெருமானின் பழைய சிலையும் தமிழ் கலைத் தொடர்பைக் காட்டுவதும் அடிகளாரின் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

 “உலகின் மிகப் பழைய மொழிகளுள் ஒன்றும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றுமாகிய தமிழ் மொழியோடு தொடர்புள்ள செய்திகளும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வெளியிடப்பெற்றால் மட்டுமே உலக அரங்கில் தமிழ் இடம் பெற இயலும்” என்று எண்ணிய தனிநாயகம் அடிகளார் “வுயஅடை ஊரடவரசந” என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். தமிழ், ஆங்கிலம், இலத்தின் என்று 14 மொழிகளிலும் புலமை பெற்றவராக திகழ்ந்த அடிகளார் தமிழ்மொழியே அனைத்திலும் சிறப்பிடம் பெறுகிறது என்கிறார். திருவள்ளுவரை கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோருடன் ஒப்பிட்டுக்காட்டி வள்ளுவம் மேற்கத்திய தத்துவங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்பதை சான்றுகள் மூலம் விளக்கினார். சமஸ்கிருதம், பாலி மொழி இலக்கியங்கள் பெரும்பாலும் சமயப்பின்னணியில் எழுதப்பட்டவைகளே. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே சமய சார்பற்று தனித்து விளங்கியதையும், இதன் மூலமாகவே தமிழ் இலக்கியம் வேறு எந்த மொழிக்கும் கடன்பட்டதில்லை என்பதையும் இந்த உலகிற்கு ஆய்வுகள் மூலம் விளக்கினார்.

தமிழர்களின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர்:

 தமிழராய்ச்சி என்பது ஆங்கிலேயர் காலத்திற்குப் பின்புதான் வந்தது என்ற கருத்து தவறானது என்பதை எடுத்துரைத்து, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களால் எழுதப்பட்ட தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களின் சிறப்புகளை உலகின் பல பகுதிகளுக்கு எடுத்துச் சென்ற மிகச் சிறந்த தமிழறிஞர். ஆசிய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு நூல் வெளியானது தமிழில்தான் என்பதை சான்றுகளோடு உலகுக்கு எடுத்தியம்பியவர். தமிழ் மொழிதான் மூத்த மொழி என்பதை ஆய்வோடு நிரூபிக்க அம்மொழியில் அச்சேறிய நூல்களை தொடுக்க முற்பட்டு, பல நாட்டு நூலகங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

 ஐரோப்பிய தமிழ் அறிஞர் என்றீக்கஸ் அடிகளார் 06-11-1950 எழுதிய தமிழ் மொழி இலக்கணக் கலை, தமிழ் அகராதி என்னும் இரு நூல்களை 1954-ம் ஆண்டு ஸிஸ்பன் தேசிய நூலகத்தில் கண்டுபிடித்தார்.

 தமிழில் முதலில் அச்சேறிய நூல் கார்த்தில்யா. 38 பக்கங்களை மட்டுமே கொண்ட இந்நூல் போர்த்துக்கல் மன்னராகிய மூன்றாம் ஜானின் ஆணைப்படி அச்சிடப்பட்டது. இதில் தமிழ்ச் சொற்கள் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டிருக்கும், இது போர்ச்சுகல் நாட்டின் பெலம் நகரிலுள்ள இனவியல் அருங்காட்சியகத்தில் ஓர் இரும்புப் பெட்டியில் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுவருகிறது. இதனை உலகுக்கு வெளிப்படுத்தியவர் அடிகளார் என்றால் மிகையன்று.

 தமிழ் மண்ணில் 1586-ம் ஆண்டு அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் ‘அடியார் வரலாறு’ என்ற நூலாகும். இது தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயல் என்னுமிடத்தில் அச்சிடப்பட்டது. இதனை வத்திக்கான் நூலகத்தில் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த பெருமை தனிநாயகம் அடிகளாரையேச் சாரும்.

 தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம் இவையிரண்டும் தமிழ் நூல்கள் என்றாலும் இவை கொல்லத்திலும், கொச்சியிலும் அச்சிடப்பட்டவைகள் இவற்றையும் கண்டுபிடித்தவர் அடிகளாரே.

 1679-ஆம் ஆண்டு அச்சிடப்பெற்ற போத்துகீசிய-தமிழ் அகராதியை கண்டுபிடித்து அதனை மறுபதிப்பாக 1966-ம் ஆண்டு கோலம்பூர் உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்டார். இவரின் முயற்சியில்லையென்றால் இவ்வரிய தமிழ்நூல்கள் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிர்ப்பு:

 இலங்கையில் தமிழ் மொழிக்கு சம உரிமை வேண்டும். தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்பதை உரக்க சொன்னவர் தனிநாயகம் அடிகளார். 1952-ம் ஆண்டில் கொழும்பில் தமிழ்ப் பண்பாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் “இலங்கையும் தமிழ் பண்பாடும் நேற்றும் இன்றும் நாறையும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியுள்ளார்.

 “... தமிழ் மக்கள் (தென்னிந்தியாவுடன் இன, பண்பாட்டுத் தொடர்புடைய மக்கள); இலங்கையில் தொன்று தெட்டே வாழந்து வருகின்றனர் என்பதற்கு நிலவியல், மானுடவியல், வரலாற்று, இலக்கிய, மொழியியல் நிரம்ப உள்ளன. சிங்கள நூலாகிய ‘மகாவம்சம்’ இதனை உறுதிபடுத்துகிறது. 1754-ம் ஆண்டில் இலங்கை வந்த டச்சு பாதிரியார் வெளியிட்ட தமிழ் நூலில் இலங்கைத் தீவின் பெரும்பகுதி மக்கள் தமிழ்பேசும் மக்கள் என்னும் குறிப்பு காணப்படுகிறது. ஆலந்து நாட்டுக்கு இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட குறிப்புகள் இதனைத் தெரிவிக்கிறது” என்று பல ஆதாரங்களோடு உரை நிகழ்த்தினார்.

 1956-ஆம் ஆண்டு “சிங்களம் மட்டுமே இயக்கம்” தீவிரமடைந்தது. அந்நாட்டின் பிரதமர் பண்டார நாயக “வாள்முனையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதையே நான் விரும்புகிறேன்” என்றார். 15-06-1956-ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சிமொழி என்ற மசோதா பாராளுமன்றத்தில் நிலைவேற்றப்பட்டது.

 சிங்கள மொழிச்சட்டத்தை எதிர்த்து அடிகளார் மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அ.அமிர்தலிங்கம், எம்.பி. அவர்கள் அடிகளாரின் இரங்கல் கூட்டத்தின் போது நிகழ்த்திய உரை உறுதிப்படுத்துகிறது. “1956-ம் ஆண்டு ஆனி மாதம் 3-ம் தேதி தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் புகுத்தப்பட்டது. அன்று காலிமுகக் கடற்கரையில், மழையிலே ஈரமாக கிடந்த நிலத்திலே நாமெல்லாம் இருந்து சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்தபோது, எம்மை ஆயிரக்கணக்கான காடையர் சுற்றி விளைத்து கல்மாரி பொழிந்து தாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், போலிசார் (காவல்துறை) எமக்கும் அவர்களுக்கும் இடையிலே இடைவெளியை ஏற்படுத்தி, ஓரளவிற்கு அந்த தாக்குதலுக்கூடாக ஒரு உருவம், துறவியின் உடையிலே, எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. எங்கள் மனம் ஒரு நிமிடம் பெருமிதப்பட்டது. இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் நான் மக்களோடு இருப்பேன், காடையர்களுக்கு கூட்டத்தை விலக்கிக் கொண்டு வரக்கூடிய உளம் படைத்தவராக, தமிழுக்காக நடைபெறுகின்ற சத்தியாக்கிரகத்திலே தாமும் பங்குகொள்ள வேண்டுமென்ற அந்தத் தைரியத்தோடு வந்திருந்த தனிநாயகம் அடிகளாரை நாம் மறக்க முடியாது” என்று உணர்ச்சி ததும்ப பேசியுள்ளார்.

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்:

தமிழ்பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பிய அடிகளார்...

 “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
 தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே”

என்னும் திருமூலரின் வரிகளைச் சொல்லித்தான் தம் உரையை முடிப்பார். ஆனால் கோலாம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் முதல் அமர்வுக்கு அவர் தலைமை தாங்கிய போது மேற்கூறிய வரிகளைக் கூறிய பின்னரே ஆங்கிலத்தில் தம் உரையைத் தொடர்ந்தார். 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17-23-ம் தேதிவரை மலேசியாவில் முதல் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடிகளாரின் தலைமையிலேயே நடைபெற்றது. இதில் 132 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1968-ம் ஆண்டு சென்னையில் உலக தமிழ் அராய்ச்சி மாநாடு 1970-ம் ஆண்டு ஜீலை 15-18 நாட்களில் பிரான்சு நாட்டு தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டு சனவரி 3-9 தேதிகளில் யாழ்பாணத்தில் நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இன்று ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே உலக தமிழ் மாநாட்டைக் கூட்டும் அரசியல் கட்சியினருக்கு மத்தியில் அடிகளார் தமிழை வளர்ப்பதற்காக இம்மாநாடுகளை நடத்தினார். மாநாட்டினால் ஏற்பட்ட நன்மைகளில் சில

* தமிழ் இலக்கியம், மொழி பற்றிய ஆய்வு உலக அரங்கில் பெருகியது.

* தமிழ், மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்களின் சமயங்கள், தத்துவங்கள், தமிழ் தொல்பொருளியல், தமிழ் பண்பாடு, தமிழ்கலைகள் என்று ஆராய்ச்சி விரிவடைய வழிவகுத்தார்.

* அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி ஒரு மொழிப்படையாக அமைய வழிவகுத்தார்.

* தமிழ் மொழியின் பெருமைகளை உலகறியச் செய்தவர் அடிகளாரே.

நாம் செய்ய வேண்டியது:

 தமிழன்னைக்கு ரூ 100 கோடியில் சிலை அமைக்க முற்பட்டுள்ள தமிழக அரசு தனிநாயகம் அடிகளாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வலியுறுத்த வேண்டும்.

 தனிநாயகம் அடிகளார் பற்றிய செய்திகளையும், அவரது படைப்புகளையும் அரசுடமையாக்க வேண்டும்.

 தாய்மொழி வழிக் கல்வி முறையை வலியுறுத்துவதன் மூலம் மட்டுமே மாணவர்கள் மொழியியல் அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

 மொழியைக் கொச்சைப்படுத்தும் தமிழகத்து காட்சி ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

 மொழி பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அம்மொழிக்காக அயராது உழைத்த ஆன்றோர்களையும், சான்றோர்களையும் நினைவில் கூற வேண்டும்.

 தமிழகத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது தமிழகம் உணர்வற்று சடலமாக வாழ்ததற்கு காரணம் நம்மிடையே தமிழர் என்ற இன மொழி உணர்வு இல்லாமற்போனதே மொழி உணர்வே இல்லாத போது எப்படி மொழிக்காகப் பாடுபட்ட அறிஞர்களை நாம் நினைவில் கொள்வோம்?

 தனிநாயகம் அடிகளார் தொடங்கிய தமிழ்மொழி ஆய்வை நாம் தொடர்வோம். மொழி பற்றை நம் கண்களாக்கிக் கொண்டு வாழும்போது தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை நாம் நம் பிரச்சனைகளாக்கி போராட முற்படுவோம். தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவை தமிழகத்தின் வீதிதோரும் கொண்டாடுவோம். தமிழர் மொழி, பண்பாட்டு, இன உணர்வை தட்டி எழுப்புவோம்.தமிழராய் நிமிர்ந்து நிற்போம்.

- ரா.பி.சகேஷ் சந்தியா

துணை நின்ற நூல்கள்:

1. அமுதன் அடிகள், தனிநாயகம் அடிகளார், சென்னை: உலக தமிழராய்ச்சி நிறுவனம், 1993.
2. தனிநாயகம் அடிகள். ஒன்றே உலகம்: காட்டாங்குளத்தூர்@ தமிழ் பேராயம், 2012.
3. தனிநாயகம் அடிகளார் நினைவுமலர், திருச்சிராப்பள்ளி, 1992.
4. அமுதன் அடிகள். உலகெல்லாம் தமிழ் முழக்கம், பாளையம், விடியல் பதிப்பகம் 1992.
5. தமிழர் தேசிய தமிழர் கண்ணோட்டம், 2013, சூலை 1-15.

Pin It