கழிவுகள் ஒரு நீர் நிலையின் ஜீவனை நிலைநிறுத்தும் என்று கேட்கும்போது நெற்றி சுளிப்பவர்களுக்கு கென்யா சாவோ (Tsavo) தேசியப் பூங்காவில் உள்ள எம்சிமா அருவி (Mzima Spring) அந்த கருத்து தவறு என்பதற்கு ஒரு வலுவான ஆதாரம். இந்த இடத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களான நீர் யானைகளே இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். பகல் முழுவதும் எம்சிமாவில் தூங்கி, கொண்டாடி, நீந்தி மகிழும் இந்த உயிரினங்களின் கழிவுகள் நீரில் கலக்கும்போதே இந்த அருவி ஜீவனுள்ளதாகிறது!
நீர் யானைகளின் கழிவுகள் எம்சிமாவை (Mzima Springs) கண்ணாடி போல பாதுகாக்கிறது. கழிவில் அடங்கியுள்ள சத்துகளுக்கு அப்பால் எம்சிமாவைத் தவிர அதில் வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் அருகில் உள்ள பரந்து விரிந்த பழக்காடுகள், புல் மேடுகளுக்கு இந்த அருவி ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. நீர் நிலையின் நிலைநிற்பிற்கு இது இன்றியமையாததாக மாறுகிறது. இதுவே இந்தப் பூங்காவின் அற்புதம்.
ஆறு மாத காலம் நீண்டு நிற்கும் கடுமையான வறட்சி. ஒரு துளி நீருக்காக நான்கு பக்கமும் ஓடும் விலங்குகள். வற்றி வறண்ட ஆற்றில் குழி தோண்டி தூய்மையான நீரை சேகரிக்கும் பிரம்மாண்ட யானைகள். நீர் தேடி மைல் கணக்கான தொலைவுகளில் இருந்து பறந்து வரும் பறவைகள். இதற்கு நடுவிலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக வாழ்பவர்கள்! அவர்கள் சாவோவில் உண்டாக்கிய புரட்சிகரமான மாற்றங்களே இந்தக் கதையின் சாராம்சம்.
கென்யாவின் பழமையான தேசியப் பூங்காவான சாவோவில் உள்ள உயிரினங்களின் அசாதாரண வாழ்க்கையே இந்த அழகான கதை! 13,747 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து உள்ள கென்யா தேசியப் பூங்காவே சாவோ பூங்கா. நீர்யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட விலங்குகளும் பல அபூர்வ தாவர வகைகளும் வாழும் இந்தப் பூங்கா வன உயிரினங்களின் தியேட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வாழும் எண்ணற்ற உயிரினங்களுக்கு ஆதாரமாக உள்ள பல நீரருவிகளில் எம்சிமாவும் ஒன்று. நீர் யானைகளின் சத்துகள் நிறைந்த கழிவுகள் இந்த அருவியை வளமாக்குகிறது. இந்த நீர் வளத்தை மட்டுமே நம்பி வாழும் ஏராளமான நுண்ணுயிரிகள், மீன்கள் இங்கு உள்ளன. கழிவுகளை உண்ணும் நுண்ணுயிரிகள் இங்குள்ள நீரை நச்சுத் தன்மையற்றதாக மாற்றுகிறது. இவற்றை உண்டு வாழும் மீன்களும் இங்கு உள்ளன. அருகில் இருக்கும் பழக்காடுகளுக்கும் இந்த நீர்நிலையே ஆதாரமாக உள்ளது.
ஈச்சை, அத்தி, நாவல் போன்றவை நீர்நிலைக்கு அருகில் பழங்களின் சொர்க்கபூமியை உருவாக்குகின்றன. இந்த பழங்களை உண்டு உயிர் வாழும் வெல்வெட் குரங்குகள் போன்ற உயிரினங்களுக்கும் இந்த நீர்நிலை ஆதாரமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் பேருக்கு மட்டுமே வாழ்ந்த நீர் யானைகளின் மீள்வரவு இப்போது இந்த வனப்பகுதி முழுவதையும் செழுமையடையச் செய்துள்ளது. சூலு (hyulu) குன்றுகளுக்குக் கீழ் இயற்கை உண்டாக்கிய நீர்த்தேக்கம் என்று எம்சிமா அழைக்கப்படுகிறது.
தாகம் போக்கும் சிவப்பு யானைகள்
கென்யாவில் எம்டீட்டே ஆண்டேவில் (Mtito Andei) இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் சாவோ பூங்காவின் தெற்குப் பகுதியில் எம்சிமா அருவி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நீர்நிலைகளின் பட்டியலில் இந்த அருவியும் உள்ளது. மலைத்தொடர் பாறைகளில் உண்டாகும் பல துவாரங்கள் வழியாக அருவிக்கு நீர்வரத்து நடைபெறுகிறது. இதனால் கடும் வறட்சியிலும் இங்கு மட்டும் நீர் வற்றுவதில்லை.
தினம் 50 மில்லியன் கேலன் நீர் மலை உச்சியில் இருந்து இங்கு வருகிறது. நீர் யானைகள் தவிர நைல் முதலைகளும் இந்த இடத்தின் நிரந்தர குடியிருப்பாளர்கள். இங்கிருந்து மற்ற நீர்நிலைகள் வெகு தொலைவில் அமைந்திருப்பதால் இந்த உயிரினங்களுக்கு இந்த அருவியே முக்கியமான வாழிடம். அருவியுடன் தொடர்புபடுத்தி நீர் யானைகள் உண்டாக்கிய இயற்கை விதிகள் மற்றும் உணவுச் சங்கிலியின் கதை மகத்தானது.
சாவோ பூங்காவின் மேற்கு எல்லையில் உலகிலேயே மிக உயரத்தில் இருந்து எரிமலைக் குழம்பு ஓடிவரும் யாட்டா (Yatta) பீடபூமி உள்ளது. 290 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஓடிவரும் இந்த குழம்பே கடினமான காலநிலையிலும் இங்கு இயற்கையாக உருவாகியிருக்கும் சில நீர் நிலைகளுக்கு நீரைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ஆறு மாதகாலம் கூட நீண்டு நிற்கும் கடும் வெப்பத்தில் இவை உயிரினங்களுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கிறது.
பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சிவப்பு யானைகளுக்கும் இந்த இடத்தின் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு உள்ளது. யானைகள் கடும் கோடையில் குடிக்க நீர் தேடி அலையும் விலங்குகளின் தாகம் போக்கும் சேவையை செய்கின்றன. வறண்டு போன நதியில் குழி தோண்டி நீரை சுரக்கச் செய்கின்றன. இவை மற்ற யானைகளுக்கு இல்லாத நீண்ட தந்தங்களையும் தும்பிக்கையையும் இதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன.
இவை பல பகுதிகளிலும் குழிகளை உண்டாக்கி நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. நீரைத் தேடி பூங்காவின் எண்ணற்ற சிறு உயிரினங்கள், பறவைகள் வருகின்றன. இந்த யானைகளுக்கு நீர் உள்ள இடத்தை கண்டறியும் திறன் உள்ளது. இரும்பின் அம்சம் அதிகமாக உள்ள பூங்காவின் மண் மற்றும் தூசுக்களே இங்கு வாழும் யானைகளுக்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. வெப்பத்தை சமாளிக்க சேற்றைப் பூசி நீரில் குளிப்பதால் இவற்றின் உடல் சிவப்பாக மாறியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனிதனைக் கொன்று தின்ற இரட்டைச் சிங்கங்கள்
புள்ளிவிவரங்களின்படி 13,000 யானைகள் இங்கு வாழ்கின்றன. சூப்பர் டஸ்க்கர் (Super tusker) என்று அழைக்கப்படும் யானைகள் இதில் வியப்புக்குரிய அம்சம். இந்த இடம் 10 முதல் 13 அடி வரை உயரம் உள்ள இவற்றின் முக்கிய வாழிடம். இவற்றின் உடல் எடை 45 கிலோ. இவற்றின் தந்தங்கள் தரை வரை தொடும். அதனால் இவற்றுக்கு சூப்பர் டஸ்க்கர் என்ற பெயர் ஏற்பட்டது.
உலகில் இன்று மிச்சம் இருக்கும் இத்தகைய 30 யானைகளில் ஒரு சில இப்போது சாவோவில் வாழ்கின்றன. இவை ஆப்பிரிக்க யானைகளில் மரபணு ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களால் தோன்றின. காலநிலை மாற்றம், வேட்டையாடல், மனித வன விலங்கு மோதல் போன்றவை ஆப்பிரிக்க யானைகளின் வாழ்வை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஜிம்பாப்வே, போட்ஸ்வானா போன்ற நாடுகள் இந்த யானைகளை வேட்டையாட அனுமதிக்கின்றன.
ஆனால் கென்யா இதை அனுமதிப்பதில்லை. 2022 நவம்பர் 21 அன்று இங்கு வாழ்ந்த சூப்பர் டஸ்க்கர் யானைகளில் ஒன்றான லுகார்டு (Lugard) யானை பூங்காவின் மேற்குப் பகுதியில் இறந்தது. இது கடும் வறட்சியால் மரணமடைந்தது என்று அதன் உடலைப் பகுப்பாய்வு செய்த நிபுணர்கள் கூறினர்.
உயிரிழந்தபோது இதன் வயது 53. அதே மாதம் தித (Dida) என்ற மற்றொரு சூப்பர் டஸ்க்கர் யானையும் இறந்தது. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று சாவோ சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை கூறுகிறது. இவை இறந்தபோது இவற்றின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. லுகார்டின் இறந்த உடல் அது இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட தந்தமும் எடுப்பான முகமும் லுகார்டின் தனித்துவமான பண்புகள். வருகையாளர்கள் மற்றும் வனட் துறையினரிடமும் அன்பாகப் பழகி வந்த லுகார்டின் உயிரிழப்பு பூங்காவிற்கே பெரிய நஷ்டமாக கருதப்பட்டது.
சாதாரணமாக சிங்கங்கள் மனிதர்களை வேட்டையாடுவதில்லை. ஆனால் இந்தப் பூங்கா இந்தக் கூற்றை மாற்றி எழுதிய ஒரு சரித்திரம் உள்ளது. 1898ல், ஒன்பது மாதங்களில் 135 பேரை இங்கு வாழ்ந்த இரட்டை ஆண் சிங்கங்கள் வேட்டையாடின. பிடரி இல்லாத இந்த ராட்சத சிங்கங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. இது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.
இரயில் பாதை அமைப்பும் சிங்கங்களின் வேட்டையாடலும்
1898ல் கென்யா உகாண்டா இரயில் பாதை அமைக்கும் வேலை தொடங்கியது. இதற்கு ஆசியாவில் இருந்து வந்தவர்களை 1889 மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள காலத்தில் இந்த இரட்டைச் சிங்கங்கள் கொன்று தின்றன. இவை பிறகு சுட்டுக் கொல்லப்பட்டன என்றாலும் பூங்காவின் வரலாற்றில் இந்த நாட்கள் பீதி ஏற்படுத்துபவையாக இருந்தன.
கென்யா 1889 மார்ச்சில் சாவோ நதிக்குக் குறுக்கே இரயில் பாதை அமைக்கும் வேலையை ஆரம்பித்தது. முகாம்கள் 13 கிலோமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டன. பாதை அமைப்பதற்காக இந்தியத் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்தனர். வேலை ஆரம்பித்ததுடன் சிங்கங்களின் தாக்குதலும் தொடங்கியது. இரவில் இவை பல தொழிலாளர்களை இழுத்துச் சென்று உண்டன. வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு பேரை இவை கொன்றன.
சிங்கங்களைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு தலைவராக லெப்டினண்ட் கர்னல் ஜான் ஹென்றி பேட்டர்சன் (John Henry Patterson) இருந்தார். சிங்கங்களைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. ஆனால் பலன் ஏற்படவில்லை. இருபது பேர் அடங்கிய குழு கர்னல் இதற்காக உருவாக்கப்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு டிசம்பர் 9 அன்று இரண்டு சிங்கங்களில் ஒன்று கொல்லப்பட்டது. இருபது நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சிங்கமும் கொல்லப்பட்டது. பிறகு இவற்றின் தோல் 1924ல் சிகாகோவில் ஃபீல்டு அருங்காட்சியகத்தில் 5,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இவையே வரலாற்றில் மிக அதிகமான மனிதர்களைக் கொன்றவை. இவற்றின் மண்டையோடு மற்றும் உடலின் தலைப்பகுதி ஆராயப்பட்டன. பற்கள் சேதமடைந்திருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வேளை இவற்றின் கொலை வெறிக்குக் காரணமாக இருக்கலாம்.
அற்புதங்களின் முடிவில்லாத கதை சொல்லும் தேசியப் பூங்காக்கள்
ஒவ்வொரு தேசியப் பூங்காவிற்கும் சொல்வதற்கு என்று ஏராளமான ஆச்சரியங்கள், அற்புதங்களின் கதைகள் உண்டு. மனிதனைத் தவிர காடும் மலையும் கடலும் இயற்கையின் பங்குதாரர்கள் என்பதை இத்தகைய பூங்காக்கள் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் வெற்றி போராட்டங்களின் அனுபவப் பாடங்கள். அந்தக் கதைகளை இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இயற்கையை காக்க வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு உண்டு என்பதை இவை நினைவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றில் அதிக வெப்பமுடைய ஆண்டாகவே நம்மைக் கடந்து செல்கிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் எல்நினோ போன்ற நிகழ்வுகளும் புவி வெப்ப உயர்வும் மீளமுடியாத பேரிடரை நோக்கியே நம்மை இழுத்துச் செல்கிறது. இந்நிலையில் இத்தகைய இடங்கள் பேரிடர்களின் தீவிரத்தைக் குறைக்க நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
உலகை ஆச்சரியப்படுத்திய சாவோ பூங்காவின் கதையும் இதையே நமக்கு ஞாபகப்படுத்துகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்