கீற்றில் தேட...

மனிதச் செயல்களால் பூமியில் அழிந்த பறவைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 120,000 ஆண்டுகளில் மட்டும் 12% பறவையினங்களை மனிதன் அழித்துள்ளான் என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது. இது முன்பு கணக்கிடப்பட்டதை விட இரு மடங்கு அதிகம். 1,430 பறவையினங்கள் 120,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ப்ளெஸ்ட்டோசின் (Pleistocene) காலத்தில் இருந்து மனிதனின் செயல்களால் இன அழிவை சந்தித்துள்ளன.

இது குறித்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதைபடிவ தரவுகள், இதர ஆவணங்கள் மூலம் அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கை 640 என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் அழிவு பற்றி எந்த விவரமும் பதிவு செய்யப்படாதவையும் அடங்கும். இவற்றை விஞ்ஞானிகள் இருள் இன அழிவு (dark extinction) என்று அழைக்கின்றனர்.

“டோடோ (dodo) போன்ற நன்கறியப்பட்ட பறவையினங்களின் அழிவு பற்றி நமக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பறவையினங்களின் அழிவு பற்றி அறிந்து கொள்ள இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் இங்கிலாந்து சூழல் மற்றும் நீரியல் மையத்தின் (Centre for Ecology&Hydrology) சூழலியல் மாதிரி வடிவமைப்பாளருமான டாக்டர் ராப் குக் (Dr Rob Cooke) கூறுகிறார்

இது வரை அறியப்படாத பறவையினங்களின் அழிவை கணக்கிட குக் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினரும் புள்ளியியல் மாதிரியைப் பயன்படுத்தி, அழிந்தது பற்றி தெரிந்த (known extinct) 640 பறவையினங்களை விரிவுபடுத்தி ஆராய்ந்தனர்.

நமக்குத் தெரியாமல் அழிந்த பறவையினங்களே இல்லாத நியூசிலாந்து நாட்டின் இனங்களை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இது வரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள், பறவை உற்றுநோக்கல்களை அடிப்படையாகக் கொண்டு அழிந்த பறவையினங்கள் பற்றிய முழுமையான விவரங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ள நியூசிலாந்தை சுழிநிலைப்புள்ளியாகக் (zero point) கொண்டு அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. ஆவணப்படுத்தப்படாத, உற்றுநோக்கப்படாத எந்த ஒரு பறவையினமும் அந்நாட்டில் இல்லை.

நியூசிலாந்து தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வுக் குழுவினர் ஒரு தீவில் வாழ்ந்திருக்கக்கூடிய பறவையினங்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டனர். பிறகு ஆய்வுக் குழுவினர் இந்த எண்ணிக்கையில் இருந்து அழிந்தது பற்றி தெரிந்த மற்றும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பறவையினங்களின் எண்ணிக்கையைக் கழித்து அழிந்தவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டனர். இதன் மூலம் இன அழிவிற்கு உள்ளான கண்டுபிடிக்கப்படாத இனங்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

தீவு வாழ் பறவைகள்

தீவுகளில் வாழும் வலசை மேற்கொள்ளாத பறவைகள் சுலபமாக வெளியில் செல்ல முடியாது என்பதால் இந்த ஆய்வுகள் அவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன. இன அழிவைப் பற்றி அறிய தீவுகளே மிகச் சிறந்த இடங்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செல்ல வேறு இடங்கள் இல்லையென்பதால் 90% இன அழிவும் தீவுகளிலேயே நிகழ்ந்துள்ளது. ”வன அழிவு, மிதமிஞ்சிய வேட்டையாடுதல், அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு உயிரினங்களே பறவையினங்கள் அழிய முக்கிய காரணம்.

"இந்த ஆய்வில் அழிந்ததாக கணக்கிடப்பட்டுள்ள 1,430 பறவையினங்கள் மிகக்குறைவான கணிப்பே. இந்த அளவு இரண்டாயிரமாக இருக்கலாம்” என்று குக் கூறுகிறார். இயற்கையான இன அழிவுகளின் வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக மனிதச் செயல்களால் கிழக்கு பசுபிக்கில் முதுகெலும்பி உயிரினங்களின் பேரழிவு அலை வீசிய 14ம் நூற்றாண்டில் முக்கிய முதன்மை இன அழிவு சம்பவங்கள் நடந்தன. இது மனிதக் குடியேற்றங்களால் ஏற்பட்ட காடுகளின் அழிவு, ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அறிமுகம் போன்றவற்றால் உண்டானவை.

அதிக எண்ணிக்கையிலான பறவையினங்களின் அழிவு, அந்த இனங்கள் பற்றிய நமது புரிதல், அவற்றின் உயிர்ப் பன்மயச் செழுமை, சூழல் பன்மயத்தன்மை, பரிணாம வரலாற்றிற்கு பேரிழப்பு என்று ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. “நாம் உணர்வதைக் காட்டிலும் உலகம் இப்போது வெறுமையாக உள்ளது. இழக்கப்பட்ட இவை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது” என்று குக் கூறுகிறார். பரந்து விரிந்த சூழலில் இவை ஆற்றும் முக்கிய பங்கும் இழக்கப்பட்டு விட்டது.

விதை பரவல், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, கழிவுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் எச்சங்கள் மூலம் பவளப்பாறைகளையும் நிலத்தையும் வளப்படுத்துவதில் பறவைகள் முக்கிய பங்காற்றுகின்றன.

தாவரங்களின் அமைப்பு, உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் மண்டல இயக்கம் ஆகியவற்றிற்கு உதவும் பெருமளவில் தாவரங்களை உண்டு வாழும் மடகாஸ்கரைச் சேர்ந்த யானைப் பறவையினத்தைச் (elephant birds) சேர்ந்த ஈபியோனிர்த்திடி (Aepyornithidae) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம், வானில் பறந்து இரை பிடித்து உண்ணும் ஹாஸ்ட் ஈகிள் (Haast eagle) என்ற இனத்தைச் சேர்ந்த ஹயராயெடிஸ்மூரே (Hieraaetus moorei) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம், விதை பரவ உதவும் செஷல்ஸ் பாரகீட் (Seychelles parakeet) என்ற இனத்தைச் சேர்ந்த சிட்டாகுலா வார்டி (Psittacula wardi) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம் போன்றவை அழிந்த இனங்களில் அடங்கும்.

“பெரும்பாலான பறவைகள் மிகச் சிறிய எலும்புகளையே பெற்றுள்ளன. எளிதில் புதைபடிவமாவதில்லை. பல தீவுகளில் புதைபடிவங்கள் உருவாக உகந்த சூழ்நிலை இல்லை. பல இடங்களில் ஆய்வாளர்களில் பலர் பறவைகளின் புதைபடிவங்களைத் தேடுவதில்லை என்பதால் இது வரை ஆய்வாளர்கள் அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கையைத் தவறாக மதிப்பிட்டதில் வியப்பேதுமில்லை” என்று மான்செஸ்ட்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக உயிர்ப் பன்மயத்தன்மை பிரிவின் மூத்த கல்வியாளர் (Reader) டாக்டர் அலெக்சாண்டர் லீஸ் (Dr Alexander Lees) கூறுகிறார்.

மெல்லுடலிகளின் அழிவும் பறவையினங்களின் அழிவும்

அழிந்த பறவையினங்களின் மதிப்பீடுகள் அழிந்த மெல்லுடலி (mollusk) உயிரினங்களின் அழிவு பற்றி சமீபத்தில் கண்டறியப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒத்துள்ளது. “இது அழிந்த இனங்களின் எண்ணிக்கையைப் பற்றி தோராயமாக அறிய, நாம் எவற்றை இழந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்” என்று லீஸ் கூறுகிறார். இப்போது போல மனிதன் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வருங்காலத்தில் இதே போன்ற இனப் பேரழிவுகள் நமக்குத் தெரியாமலேயே தொடரும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

அதிகரிக்கும் காலநிலை மாற்றம் செலுத்தும் அழுத்தம், உணவு வளங்கள் மறைந்து கொண்டிருப்பது, காடுகளின் அழிவால் வரும் ஒரு சில நூறாண்டுகளில் 669 முதல் 739 பறவையினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று இதே ஆய்வுக்குழு முன்பு நடத்திய ஆய்வு முடிவுகள் எச்சரித்தன. உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் பறவைகளின் வாழிட மீட்பு போன்றவற்றின் மூலம் அழியும் இனங்களை நம்மால் காப்பாற்ற முடியும். பறவைகளின் எதிர்காலம் மனிதர்களாகிய நம் கைகளிலேயே உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/dec/19/human-driven-extincition-of-bird-species-twice-as-high-as-thought-study-says-aoe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்