இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் விட, புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை தான் அதிகமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது என்றுஅறிவியல் அறிஞர்கள் மட்டும் அல்லாது ஐக்கிய நாட்டு அவைத் தலைவர்களும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

global warmingஅண்டார்டிகா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருகிக் கொண்டு இருந்த பனியின் அளவை விட, இவ்வாண்டில் உருகுதல் வேகம் இரு மடங்கு ஆகி இருக்கிறது என்று 2010ஆம் ஆண்டு ஏவப்பட்ட செயற்கைக் கோள் அனுப்பிய தகவல்களை ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இதைப் பற்றி 20.5.2014 அன்று இலண்டனில் கருத்து கூறிய டேவிட் வாகன் (David Vaughan) என்ற அறிவியல் அறிஞர், இப்பனி உருகுதல் கடல் மட்டத்தை உயர்த்தும் என்றும் இதைத் தடுப்பதற்கு மனித குலம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

நேபாளத்தில் உள்ள பனிப் பாளங்கள் கடந்த 30 ஆண்டுகளில் 24% உருகி மறைந்து போய் உள்ளதாக, அந்நாட்டு பனிமலைப் பாளங்கள் பகுதியைப் பற்றி ஆராயும் அறிவியலாளர் சம்ஜ்வால் ரத்ன பஜ்ராச்சார்யா (Samjwal Ratna Bajracharya) 23.5.2014 அன்று காட்மாண்டுவில் கூறினார்.

புவி வெப்ப உயர்வினால் பனி மலைகளும், பனிப் பாளங்களும் உருகி, கடல் மட்டம் உயர்ந்து இருப்பதால், அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (National Aeronautics and Space Administration - NASA), விண் வெளி ஆராய்ச்சிக்காகக் கட்டிய கட்டிடங்கள் நீரில் அமிழ்ந்து கொண்டு இருப்பதாக 24.5.2014 அன்று அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதனால் கோடிக் கணக்கான அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன் படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.

இமயமலைப் பகுதி, புவி வெப்ப உயர்வினால் பாதிக்கப் படுவதைப் பற்றி ஆராயும் ஆர்த்தூர் லட்ஸ் (Arthur Lutz) எனும் அறிவியல் அறிஞரின் ஆய்வு முடிவுகள் 1.6.2014 அன்று திருவனந்தபுரத்தில் வெளியிடப் பட்டு உள்ளது. இமயமலை உருகுவதால் சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, சல்வீன், மெகாஸ் நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி உள்ளதாக அவ் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டு உள்ள, அறிவியல் ஆய்வுகளினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியக் கூடிய, இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன? இதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் தன்னார்வத் தொண்டர்களும் கூறி வருகிறார்கள். அப்படியே ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இது நல்ல பலனையும் அளித்து இருக்கிறது. மக்களிடையே புவி வெப்ப உயர்வு பற்றிய விழிப்புணர்வு பற்றி ஆராய்ந்த ஆற்றல் மற்றும் சாதன நிறுவனம் (The Energy and Resource Institute - TERI) 95%க்கும் அதிகமான மக்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்று இருக்கிறார்கள் என்று 4.6.2014 அன்று புது தில்லியில் தெரிவித்து உள்ளது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் புவி வெப்பத்தினால் உலகம் அழியாமல் பாதுகாப்பதற்கு எடுத்து உள்ள நடவடிக்கைகள் என்ன தெரியுமா?

உலகச் சுற்றுச் சூழல் நாளை 5.6.2014 அன்று கொண்டாடி இருக்கிறார்கள். அன்று சென்னையில் முதலாளியக் குழுமங்களும், அரசு ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்; மரக் கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். (அம்மரக்கன்றுகள் வளர்வதற்கும் நிலைப்பதற்குமான ஏற்பாடுகள் எதுவும் செய்து இருப்பதாக எந்த விமான தகவலும் இல்லை.) அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் 12,000 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் பாட்டு பாடி இருக்கிறார்கள். மும்பையில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புவி வெப்பத்தால் சுற்றுச் சூழல் எவ்வளவு கெடுகிறது என்று கணினிமயப் படுத்திக் கணக்கிடும் முறையை வடிவமைத்து இருக்சிறார்கள்.

யாரும் புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பது எப்படி என்றோ, ஏற்கனவே உயர்ந்து உள்ள வெப்பத்தை எப்படிக் குறைப்பது என்றோ விவாதித்ததாக (நினைத்ததாகக் கூட)த் தெரியவில்லை.

இன்று புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை ஏன் ஏற்பட்டு உள்ளது? கரி வளியை (Carbon di oxide) உமிழ்ந்து, புவி வெப்பத்தை உயர்த்தும் புகையை வெளியிடும் வாகனங்கள், ஆயுதங்கள் போன்ற பண்டங்களை அதிகமாக உற்பத்தி செய்வதாலும், கரி வளியை உள் இழுத்து உயிர் வளியை (Oxigen) வெளியிட்டு, புவி வெப்பத்தைக் குறைக்கும் மரம் வளர்த்தல் வேளாண்மை போன்ற தொழில்கள் நசிந்து வருவதாலும் தான். இந்நிலையை மாற்றி, புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கவும், புவி வெப்பத்தைக் குறைக்கும் பொருட்களின் உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் ஏன் பேச / சிந்திக்க மறுக்கின்றனர்? ஏனெனில் இது அறிவியல் பிரச்சினை அல்ல; அரசியல் பிரச்சினை. அதுவும் ஒரு நாட்டு அரசியல் பிரச்சினை அல்ல. உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான அரசியல் பிரச்சினை.

புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்றால் முதலாளித்துவப் பொருளாதார முறையில் அது முடியவே முடியாது. ஏனெனில் அவை தான் மிகுந்த இலாபத்தை அளிக்கும் பண்டங்களாக உள்ளன. ஏற்கனவே உள்ள பொருளாதார நெருக்கடியால் முதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தும் தொழில்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வாகனங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை உறபத்தி செய்யக் கூடாது என்றால் மூலதனத்தை வைத்துக் கொண்டு முதலாளிகள் என்ன செய்வார்கள்?

அடுத்ததாக மரம் வளர்த்தலிலும் வேளாண்மையிலும் மூலதனத்தை ஈடுபடுத்த முடியுமா? அவற்றில் இலாபம் குறைவு என்பது மட்டும் அல்ல; பல சமயங்களில் அவை இழப்பை அல்லவா ஏற்டுத்தி விடுகிறது? அப்படிப்பட்ட தொழில்களில் மூலதனத்தை ஈடுபடுத்த முடியுமா?

அப்படி என்றால் தீர்வு இல்லவே இல்லையா? நிச்சயமாகத் தீர்வு இருக்கிறது. அது உலக அரசியல் மாற்றத்தில் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பது தீர்வின் முதல் கட்டம். நிகரமை (சோஷலிச) உற்பத்தி முறையை ஏற்பது இரண்டாவது கட்டம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பதன் மூலம் புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் (அதாவது மனித குலத்தின் பெரும்பாமையோருக்குப் பயன்படாத, மிக மிகச் சில மனிதர்களின் அயாக்கியத்தனமான திடீர் ஆசைகளுக்குத் தீனி போடும் பொருட்களின்) உற்பத்தியைத் தடுத்து நிறுத்த முடியும். நிகரமை உற்பத்தி முறையை ஏற்பதன் மூலம் புவி வெப்பத்தைக் குறைக்கும் (மனித குலத்தின் பெரும்பான்மையோர் பசி பட்டினி இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான) பொருட்களை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும்.

இதை அறிவியல் அறிஞர்களால் செய்து முடிக்க முடியாது. மக்களால் தான் செய்து முடிக்க முடியும். இன்றைய முதலாளித்துவ அரசியலை ஒழித்து விட்டு சோஷலிச அமைப்பை உருவாக்குவதால் மட்டுமே அது முடியும். உலக மக்கள் அனைவரும் இத்திசையில் ஒன்றிணைய நாம் அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்கு இதைப் பற்றிய புரிதல் ஒன்றே போதுமானது. புவி வெப்பம் உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது; முதலாளித்துவ அமைப்பைக் காவு கொடுப்பதும் சோஷலிச அமைப்பை ஏற்பதும் தான் இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வு எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அடுத்த பணி ஆகும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.6.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It