உலகின் லாபகரமான வர்த்தகங்களில் ஒன்றாக மனித மரபணு வர்த்தகம் உருவாகி வருகிறது. மனித மரபணுக்களில் சுமார் 20 சதவீதம் பல்வேறு வர்த்தக நிறுவனங்களால் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன. மனித உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரபணுக்கள் இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களின் காப்புரிமை பதிவுபெற்ற சொத்தாக உள்ளது. மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பதிவு செய்து இந்த நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வி எழலாம். மிகப்பெரிய வர்த்தக சூழ்ச்சியின் அடித்தளமாக இந்த காப்புரிமை பதிவு அமைகிறது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்.

அமெரிக்காவின் உடா பகுதியில் அமைந்துள்ள உடா பல்கலைக்கழகம் ((UTAH UNIVERSITY), பெண்களின் மார்பகம் மற்றும் கருப்பையில் உருவாகும் புற்று நோய் குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வுக்கான நிதியை மிரியாட் ஜெனடிக்ஸ் (MYRIAD GENETICS) என்ற தனியார் நிறுவனம் வழங்கி வந்தது. இந்த ஆய்வின்போது மார்பு மற்றும் கருப்பையில் புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்கள் கண்டறியப்பட்டன.

இந்த இரு மரபணுக்களுக்கான காப்புரிமையை அமெரிக்க பேடன்ட் மற்றும் டிரேட் மார்க் அலுவலகம், உடா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 1994ம் ஆண்டு வழங்கியது. இதன் பலனாக பெண்களில் உடலில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் இந்த மரபணுக்கள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனை செய்வதற்கான உரிமை, அந்த மரபணுக்களை பயன்படுத்தும் உரிமை, அந்த மரபணுக்களை கொண்டு மார்பக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது உட்பட அனைத்து ஆய்வுகளையும் செய்யும் உரிமை ஆகியவை உடா பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

மனிதகுல வளர்ச்சிக்கு எதிரான இந்த காப்புரிமையை அந்த பல்கலைக்கழகம், ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு மிரியாட் ஜெனடிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. இதன்மூலம், மார்பு மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறியவதற்கான முழு உரிமையும் மிரியாட் ஜெனடிக்ஸ் நிறுவனத்திடமே முழுமையாக சென்று சேர்ந்தது. அமெரிக்காவில் மார்பு புற்று நோய் அல்லது கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மிரியாட் ஜெனடிக்ஸ் அங்கீகாரம் பெற்ற ஆய்வு மையங்களில் மட்டுமே சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வை வேறு நிறுவனங்கள் மேற்கொள்ள இயலாத நிலையில், மிரியாட் ஜெனடிக்ஸ் சொல்லும் தொகையே ஆய்வுக்கட்டணம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் பொருளாதார வசதியில்லாத ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சிவில் உரிமை ஒன்றியம் குறிப்பிடுகிறது. மேலும், இந்த வகை நோய்களை உருவாக்கும் மரபணுக்களை ஆய்வு செய்தால்தான் இந்த நோயை தீர்க்கக்கூடிய மருந்துகளையும், நோயைத் தடுக்கும் மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும். மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்களை அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் உடமையாக்கிக் கொண்ட மிரியாட் ஜெனடிக்ஸ் நிறுவனத்தின் அனுமதியில்லாமல், இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை மற்ற நிறுவனங்கள் கண்டுபிடிக்க முடியாது.

எனவே மார்பக புற்று நோய்க்கு மிரியாட் ஜெனடிக்ஸைத் தவிர வேறு எந்த நிறுவனமும் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளை செய்ய முடியாது. எனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அனைவரும் மிரியாட் ஜெனடிக்ஸ் நிறுவனத்தை மட்டுமே சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும்கூட அந்த நிறுவனம் நிர்ணயம் செய்யும் விலையை கொடுத்து சிகிச்சை பெறும் வசதியுடைய பெண்களுக்குத்தான்.

மனித உடலின் அங்கங்களை காப்புரிமை செய்ய முடியாது என்ற பொதுக் கொள்கைக்கு எதிராக BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்கபட்டதை எதிர்த்து சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். மார்பக புற்றுநோய் மட்டுமல்லாமல், ஆஸ்துமா, அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கிய மனித மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நோய்கள் அனைத்தும் தொழில்மயமாதல், அதன் காரணமாக ஏற்படும் சூழல் பாதிப்புகள் காரணமாக உருவாகி, பரவுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோய்களுக்கான மருந்துகளும் ஒரு சில நிறுவனங்களின் கைகளிலேயே சிக்கி வருகிறது.

இந்தியாவின் காப்புரிமை சட்டங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இந்த சட்டங்களின் கீழ் இந்தியாவிலும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பல மரபணுக்களுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்து வருகின்றன. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பதிவு செய்வது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It