புவிவெப்பமாவதை எவ்வாறு தடுப்பது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. புவிக்கோளத்தின் பருவநிலை தாறுமாறாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் சார்ந்த எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை உலகத்தலைவர்கள் அனைவரும் கூடிப்பேசிவரும் காலம் இது. கார்பன் டை ஆக்சைடு ஒரு பசுமை இல்ல வாயுவாக இருப்பதால் வளிமண்டலத்தில் இந்த வாயுவின் அளவு அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.

கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சையனோபாக்டீரியத்தின் மரபியல் பண்புகளை மாற்றியமைப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை ஐசோபுயூட்டனால் என்னும் திரவ எரிபொருளாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். இந்த ஐசோபுயூட்டனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிவாயுவிற்கு ஒரு மாற்றாக இருக்குமாம். இந்த வேதியியல் வினையை சூரிய ஒளியின் ஆற்றலைக் கொண்டே நிகழ்த்தமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆய்வறிக்கை டிசம்பர் 9 ஆம் தேதியிட்ட Nature Biotechnology இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு இரண்டு நீண்டகால பயன்களை கொடுக்கவல்லது. முதலாவதாக நம்மை அச்சுறுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவை வளிமண்டலத்தில் இருந்து அகற்றுகிறது. இரண்டாவதாக சூரிய ஆற்றலை எரிபொருளாக மாற்றித் தருகிறது. இந்த எரிபொருளைக்கொண்டு இப்போதைய வாகனங்களைக்கூட இயக்கமுடியுமாம். சாதாரணமாக தாவரங்கள், ஆல்காக்கள் ஆகியவற்றில் இருந்துகூட உயிரி எரிபொருட்களைப்பெற இயலும். ஆனால் இந்த உயிரி எரிபொருட்களைப் பெற பல படிநிலைகளைக் கடந்தாகவேண்டும். தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் அழிக்கப்பட்டபிறகே இந்த உயிரி எரிபொருளை நாம் அடைய முடியும். இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கலில் இருந்து இந்த புதிய கண்டுபிடிப்பு நம்மை விடுவிக்கிறது.

RuBisCO என்னும் என்சைம் காற்றில் உள்ள அனங்கக கார்பனை அங்கக கார்பனாக மாற்றவல்லது. ஒளிச்சேர்க்கையின்போது இந்த என்சைம்தான் காற்றில் உள்ள கரிமத்தை தாவரங்களுக்கும் அதன்மூலம் மனிதர்கள் உட்பட்ட மற்ற உயிர்ப்பொருட்களுக்கும் மாற்றித்தருகிறது. cyanobacterium Synechoccus elongates என்னும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி RuBisCO என்சைமின் அளவு அதிகரிக்கப்படுகிறது. பிற நுண்ணியிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன்களின் உதவியால் cyanobacterium மாற்றமடைகிறது. இதன்விளைவாக கார்பன் டை ஆக்சைடும் சூரிய ஒளியும் உறிஞ்சப்பட்டு isobutyraldehyde வாயு உருவாகிறது. இந்த வாயு குறைந்த கொதிநிலையும், அதிகமான வாயு அழுத்தமும் கொண்டதாக இருப்பதால் இதனை பிரித்தெடுப்பது எளிதானது. இதிலிருந்து ஐசோபியூட்டனால் என்னும் எரிபொருள் பெறப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகாமையில் இந்த சாதனங்களைப் பொருத்துவதன் மூலம், வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு உடனுக்குடன் பிடிக்கப்பட்டு எரிபொருளாக மாற்ற இயலுமாம். இந்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உற்பத்தித்திறன் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். அமெரிக்க அரசின் எரிசக்தி துறையின் நிதி உதவியுடன் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/12/091210162222.htm

Pin It