இன்று மருத்துவத்துறையில் நாம் பயன்படுத்தும் எக்ஸ் கதிர்களாலும், திசுஅடுக்கு கதிர்வீச்சு வரைவிகளாலும் (CTScan) உடல் உறுப்புகளில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காந்த ஒத்ததிர்வு வரைவி(MRI)களைப் பயன்படுத்தும்போது உறழ்சாயங்களை (contrasting agents) உட்கொள்ளுவதோ, ஊசியின் வழியாக செலுத்திக்கொள்ளுவதோ அவசியமாகிறது. இந்த தடைகள் ஏதுமின்றி ஒளிரும் புரதங்களின் உதவியால் உயிரிகளின் உள்ளுறுப்புகளை தெளிவாக பார்க்கமுடியும் என்பதுதான் இன்றைய அறிவியல் தகவல். ஊடுகதிர் படம் எடுப்பதும், உறுப்புகளின் மேற்பகுதியை செதுக்கி எடுத்து ஆராய்வதும் இனிமேல் தேவையில்லை என்கிறார்கள் யெஷிவா பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்.

infra_Red_Fluorescent_Proteinபுதிய முறையினால் உயிரிகளின் உறுப்புகள் கதிர்வீச்சிற்கு ஆளாவதும் அதன் காரணமாக பக்க விளைவுகள் தோன்றுவதும் இல்லாமல் போகும். புற்றுநோய்க்கு எதிரான மருந்துகள் எந்த அளவிற்கு வேலை செய்துள்ளன என்பதை அறியவும் புற்றுநோய்க்கட்டிகளை எளிதில் கண்காணிக்கவும் இயலும்.

ஜெல்லிமீன்கள், பவளங்கள் இவற்றிலிருந்து பெறப்பட்ட பல்வண்ண ஒளிரும் புரதங்களைக் கொண்டுதான் இதுவரை செல்கள், நுண்மங்கள், மூலக்கூறுகள் இவற்றையெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்துவந்தனர். உயிருள்ள பாலூட்டிகளில் காணப்படும் ஹீமோகுளோபின் நீலம், பச்சை, சிகப்பு ஆகிய நிறங்களை உட்கவர்ந்துகொள்ளும் இயல்புடையது. இதனால், உயிருள்ள பாலூட்டிகளின் உட்புறத்தைக் காண்பது எட்டாக்கனியாகவே இருந்துவந்தது.
 
தாவரங்களில் காணப்படும் பைட்டோகுரோம் எனும் நிறமி ஒரு அற்புதமான செயலைச் செய்கிறது. ஒளி இருப்பதையும் இல்லாததையும் தாவரத்திற்கு உணர்த்தும் வேலையை இந்த நிறமிதான் செய்கிறது. இந்த நிறமியின் மூலம் தாவரம் பகலையும் இரவையும் வேறுபடுத்தி உணர்ந்து கொள்கிறது. விதை முளைத்தல், பூத்தல் போன்ற செயல்களை தாவரங்கள் பிழையின்றி செய்ய உதவுவதும் இந்த நிறமிதான். பைட்டோகுரோம் நிறமியை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போதைய ஒளிரும் புரதம் (infra Red Fluorescent Protein) உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்த நிறமாலையின் அகச்சிவப்புக்கதிர் பகுதியில் இந்த புரதங்கள் ஒளியை உமிழவும், உட்கவரவும் வல்லவை. மின்காந்த நிறமாலையின் இதே பகுதியில்தான் பாலூட்டிகளின் திசுக்கள் ஒளிஊடுருவும் தன்மை படைத்தவையாகவும் இருக்கின்றன.

கல்லீரலில் இரத்தம் மிகுதியாக இருப்பதால் இந்த உறுப்பை காட்சிப்படுத்துவது கடினம். சுவாசப்பாதையின் திசுக்கள், குடல், கண், சிறுநீர்பாதை இவற்றின் மீது படர்ந்துள்ள சவ்வுகளை எளிதில் தொற்றி நோயுண்டாக்கும் வல்லமை படைத்த வைரஸ்களின் தொகுப்பு அடினோவைரஸ் எனப்படுபவை. ஒளிரும் புரதங்களுக்கான ஜீன்களுடன் அடினோவைரஸ் கிருமிகளும் எலியின் உடலில் செலுத்தப்படும். இதனால், இரண்டாவது நாளில் இருந்து கல்லீரலில் நோய்க்குறிகள் தோன்றும். கல்லீரலில் நோய்த்தொற்று தோன்றியவுடன் ஒளிரும் புரதங்களும் உருவாக்கப்படுகின்றன. அகச்சிவப்புக்கதிருக்கு எலியின் உடல் உட்படுத்தப்படும்போது உமிழப்படும் ஒளியில் இருந்து பாதிக்கப்பட்ட உறுப்பின் காட்சியைக் காண இயலும். நோய்த்தொற்றுக்கு ஆளான இரண்டாம் நாளில் ஒளி உமிழ்தல் தொடங்கும். ஐந்தாம் நாளன்று காட்சி மிகத்தெளிவாகத் தெரியும். இந்த ஒளிரும் புரதங்கள் நஞ்சற்றவை என்பது வியப்பான செய்தி.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2011/07/110718101208.htm

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It