ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மனம் திறக்கிறார்
தூக்குத் தண்டனையை நிறுத்துங்கள்!

ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் கே.டி.தாமஸ். அவருடன் நீதிபதிகள் வாத்வா மற்றும் முகம்மது குயாத்ரி ஆகிய மூவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்தனர். இம் மூவர் அடங்கிய அமர்வின் தலைமை நீதிபதியாக கே.டி.தாமஸ் இருந்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கும் உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியது. இதில் கே.டி. தாமஸ் மட்டும் நளினிக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று தீர்ப்பளித்தார். நளினியின் கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுவிட்டதால், முருகனின் மனைவி நளினி வயிற்றில் வளரும் குழந்தை, அநாதையாகிவிடக்கூடிய கட்டாயத்தை உருவாக்கிடக் கூடாது என்று, அதற்கு அவர் காரணம் கூறினார். ஆனாலும், பெரும் பான்மை நீதிபதிகளின் கருத்தே உறுதியாகும் என்ற அடிப்படையில் நளினி தூக்குத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நிலையில் சோனியா, குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தி.மு.க. அமைச்சரவை, நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும், ஆயுள் தண்டனையாக மாற்ற ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அதனடிப் படையில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகியது.  இப்போது நீதிபதி கே.டி.தாமஸ் பதவி ஓய்வு பெற்று விட்டார். புதுடில்லியிலிருந்து வெளிவரும் ‘தி ஏசியன் ஏஜ்’ பத்திரிகைக்கு கடந்த செப்டம்பர் 2, 2011 அன்று தூக்குத் தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவரது பேட்டி கட்டுரை வடிவத்தில் வெளியாகியுள்ளது.  ‘தூக்குத் தண்டனை என்பது அரசே நடத்தும் கொடூரக் கொலை தான்’ என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளி வந்துள்ளது. அவரது கட்டுரையில் அடங்கியுள்ள கருத்துகளின் சுருக்கம்:

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த அமர்வில் தலைமை தாங்கும் கெட்ட வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மிக அதிக எண்ணிக்கையில் இந்த வழக்கில், கீழ் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நான் வழக்கறிஞராக தொழில் செய்து கொண்டிருந்த காலத்தில் தூக்குத் தண்டனைகள் அடிக்கடி வழங்கப்பட்டன.  சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு தூக்குத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வழங்கியாக வேண்டும் என்பது கட்டாயம்; அப்படி வழங்கப்படாவிட்டால், ஏன் வழங்கப்படவில்லை என்ற காரணங்களை விளக்கியாக வேண்டும். பிறகு இந்த நிலை மாறியது; தூக்குத் தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை மாவட்ட நீதிபதி விளக்க வேண்டும் என்று நிலைமை தலைகீழாக மாறியது.

இதனைத் தொடர்ந்து, தூக்குத் தண்டனைகள் விதிப்பதை மேலும், கட்டுக்குள் கொண்டு வந்தது உச்சநீதிமன்றம். அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், ‘அரிதிலும் அரிது’ என்பது வார்த்தைகளோடு நின்று போய்விட்டது. தெளிவான விளக்கம் தரப்பட வில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்கள் முன்னால் வரும் கொலை வழக்குகளில், கொலை கொடூரமாக நடந்திருக்கிறது என்று உணர்வார்களேயானால், அரிதிலும் அரிதான வழக்கு என்று கூறி, மரண தண்டனை வழங்கி விடுவார்கள். உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பல வழக்குகள் அரிதிலும் அரிதான வழக்குகளாக கருதப்படவில்லை. ஆனால், கொல்லப்பட்டவர்கள், பிரபலமானவர்களாக இருந்துவிட்டால் போதும்; உடனே நீதிமன்றம், அதை அரிதிலும் அரிதான வழக்காக கூறி விடும்.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராணுவ தளபதி வைத்யா கொலை வழக்குகள் அரிதினும் அரிதான வழக்குகளாகக் கருதி, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து விட்டனர். ஆனால் 1984 ஆம் ஆண்டு புதுடில்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட தில் தொடரப்பட்ட எந்த ஒரு வழக்கும் அரிதிலும் அரிதான வழக்காகக் கருதப்படவில்லை. உச்சநீதி மன்றத்தில் ‘பச்சன் சிங்’ வழக்கு வந்தபோதுதான் நீதிபதி சர்க்காரியா, தனது தீர்ப்பில் ‘அரிதினும் அரிதான வழக்கு’ என்ற வரையறையை உருவாக் கினார்.

ராஜீவ் கொலை வழக்கில், ‘அரிதினும் அரிதான வழக்கு’ என்ற அடிப்படையிலேயே நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகைய வழக்குகளில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் மறு ஆய்வு மனுக்களை பெரும்பாலும் உச்சநீதிமன்றம் அனுமதிப்பதில்லை. அதுபோலவே இந்த வழக்கிலும், மறு பரிசீலனை மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தபோது, திடீரென்று, ஒரு கருத்து எனக்கு தோன்றியது. தூக்குத் தண்டனையில் ஒரு நீதிபதி மட்டும் ஒருவருக்கான (நளினிக்கு) தண்டனையைக் குறைக்கலாம் என்று தீர்ப்பு எழுதிய நிலையில், ‘அரிதினும் அரிதான வழக்காக’ இதை எப்படி கருத முடியும்? எனவே அந்த அடிப்படையில் மறு விசாரணை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன். மற்ற இரண்டு நீதிபதிகளும் இதை ஏற்கவில்லை. தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்டபோது, எனது நிலையை அவர் ஆதரித்தார். (மறு விசாரணை மனுவை உச்சநீதிமன்றம் அனுமதித்தாலும், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பையே உறுதிப்படுத்தியது)

அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு ஒருவரின் உயிர் வாழும் உரிமையையோ, சுதந்திரத்தையோ பறித்து விடக் கூடாது என்று கூறுகிறது. இதனுடைய அர்த்தம் - நீதியான, நேர்மையான, தகுந்த காரணங்களோடு கூடிய சட்டத்தின் வழியாக ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கலாம். இப்படி சட்டத்தின் வழியில் நின்று ஒரு மனிதனை சாகடிக்கலாமா என்பது தான் கேள்வி!

தூக்குத் தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று விவாதங்கள் நடக்கின்றன. ஒருவரைக் கொலை செய்தவரை தண்டனையிலிருந்து தப்பிக்க விடலாமா என்று கேட்கிறார்கள். தண்டனை என்பது என்ன? தண்டனை வழங்குவதே, ஒருவரை திருத்துவதற்குத்தான்; திருந்தி வாழ்வதற்குத்தான்! தவறு செய்த உங்கள் குழந்தையைத் தண்டிக்கிறீர்கள்; எதற்காக? திருந்துவதற்குத்தானே!

திருந்தி வாழச் செய்வது; பழி வாங்குவது; குற்றங்களை எதிர்காலத்தில் தடுப்பது - என்ற அடிப்படையிலேயே கடந்த காலங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. பழி வாங்குவதற்காகவே தண்டனை என்பது, காலத்துக்கு ஒவ்வாத நாகரிக சமூகத்துக்கு எதிரான சிந்தனை. ‘கண்ணுக்கு கண்; பல்லுக்கு பல்’ என்று தண்டனை வழங்குவதை நவீன கிரிமினல் குற்ற ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. ஒருவருக்கு மரணதண்டனையை தந்து விட்டாலே, அவர் திருந்தி வாழக்கூடிய வாய்ப்பு பறிக்கப்பட்டு விடுகிறது. அடுத்ததாக மரண தண்டனை வழங்கப்படுவதன் மூலம் தான் குற்றங் களைத் தடுக்க முடியும் என்ற வாதம் முன் வைக்கப் படுகிறது. இப்போதும் கூட சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு, மக்கள் முன் தலையை வெட்டும் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்போதும் அது போன்ற தண்டனை வழங்கப்பட்டு வருகிறது என்பது எதை உணர்த்துகிறது? ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் முன் தலையை சீவும் தண்டனை அமுலில் இருந்தும் குற்றங்கள் குறையவில்லை என்பதைத் தானே! குற்றத்திலிருந்து தப்பி விடும் ஒருவர், மற்றொரு குற்றத்தை செய்ய தூண்டப்படுகிறார் என்ற கருத்தில் நான் உடன்பட்டாலும்கூட, தூக்குத் தண்டனை இருந்தால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்ற கருத்து உண்மைதானா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை இரண்டையும் ஒப்பிட்டு, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, ஆய்வுகள் ஏதும் நிகழ்ந்ததாக எனக்குத் தெரிய வில்லை. ஆனால், ஒரு பதிவு இருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், 1940 இல் முதன்முதலாக தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. அதே ஆண்டில் கொச்சின் சமஸ்தானத்திலும் அதன் அரசர் தூக்குத் தண்டனையை ஒழித்தார். 1950 களில் இந்த சமஸ்தானங்கள் இந்தியாவில் இணைக்கப்பட்ட பிறகு, மீண்டும் தூக்குத் தண்டனை அமுலாகி விட்டது. தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்ட 1940-50 ஆண்டு காலத்தையும், பிறகு மீண்டும் தூக்குத் தண்டனை அமுலுக்கு வந்த 1950-1960 என்ற பத்தாண்டு காலத்தையும் ஒப்பிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்தைவிட, அது அமுலில் இருந்த காலத்தில்தான், கொலைக் குற்றங்கள் அதிகமாக நடந்தன என்ற உண்மை கண்டறியப்பட்டது.

சீரிய சிந்தனையாளர் ஆர்தர் கோயிஸ்ட்லர் ஒரு சுவையான சம்பவத்தை கூறுகிறார்: ஒரு காலத்தில் இங்கிலாந்தில் சிறு திருட்டு, பிக்பாக்கெட் குற்றங் களுக்கே மக்கள் கூட்டத்தின் முன் மரணதண்டனை விதிக்கப்பட்டன. பெரும் கூட்டத்தைத் திரட்டி, அவர்கள் கண் முன்னே, ‘பிக்பாக்கெட்’ அடிப்பவர் களுக்கு மரண தண்டனை விதித்தால், அதை நேரில் பார்த்தவர்கள் திருந்துவார்கள் என்று நினைத் தார்கள். அப்படி ஒரு முறை தூக்கிலிட்ட சம்பவம் நடந்தபோது, கூட்டத்தினர், தூக்கு சம்பவத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது,

63 பொது மக்களிடம் ‘பிக்பாக்கெட்’ அடித்து விட்டதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன. தூக்குத் தண்டனை குற்றங்களைத் தடுக்காது என்பதற்கு, இது மற்றொரு சான்று.

தூக்குத் தண்டனை - முதலில் ஒரு மனிதன் திருந்தி வாழும், வாய்ப்பைப் பறித்து விடுகிறது. இரண்டாவதாக - ஒரு முறை குற்றம் செய்தவன், மீண்டும் அந்த குற்றங்களை செய்யாமல், குற்றங்களைக் கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதைக் கட்டாயமாகத் தடுக்கிறது. மூன்றவதாக - குற்றவாளிகளை சட்டத்தின் பாதுகாப்போடு அரசும் கொலைதான் செய்கிறது. நான்காவதாக - சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் ஒருவரைக் கொலை செய்யும்போது, கொலை செய்தவரின் பழி வாங்கும் உணர்வுகளையே நீங்களும் பங்கு போட்டுக் கொள்கிறீர்கள். அய்ந்தாவதாக - ஆன்மிகக் கண்ணோட்டத்தில் கூறுவது என்றால், உங்களால் திருப்பித் தர முடியாத உயிரை பறிக்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது. ஆறாவதாக - நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், மரண தண்டனை வழங்கப்படுவது பற்றி, வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் இருந்து நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், ஒரு கருத்தை கூற விரும்புகிறேன். நேரில் பார்த்த சாட்சியங்கள் சொல்லிக் கொடுத்து, தயார் செய்து பெறப்படும் சாட்சியங்களாகும்.  கொலை செய்யப்பட்டவர்களின் ரத்த உறவுகள், சாட்சிய மளிக்கும்போது, உண்மை நிலையை அப்படியே கூறாமல், மிகைப் படுத்தித்தான் கூறுவார்கள். இவை எல்லாவற்றையும்விட, மரண தண்டனைக்கு உள்ளாவோர்

90 சதவீதத்துக்கும் அதிகமாக, சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து வருவோர்தான். நீங்களும், நானும் கொலை செய்ய மாட்டோம்; அத்தகைய வாழ்க்கைச் சூழலில் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். குடிசைப் பகுதிகளிலும், வீதிகளிலும் வாழும் சமூகத்தின் குழந்தைகளுக்கு, படித்த சூழலில் வாழும் குழந்தைகளைப் போல, உயிரின், வாழ்வின் மதிப்பை எல்லாம் உணர முடியாது. ஆன்மிகக் கண்ணோட்டத்திலும், அவர்களால் சிந்திக்க இயலாது. எனவேதான்,

எந்த தார்மீகத்துக்கும் கட்டுப்படாமல், அவர்கள் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். திகார் சிறையில் - சீர்திருத்தங்களை செய்த சிறை அதிகாரி கிரண்பேடி எழுதிய நூலைப் படித்த பிறகு ஒவ்வொரு குற்றவாளியையும் திருத்திவிட முடியும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அரசாங்கமானாலும், மக்களானா லும், இந்த மனித நேயப் பிரச்சினையில் கவனம் செலுத்தாதது வருத்தத்திற் குரியதாகும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் குறுக்கு வழியில் அதிரடியாக குற்றவாளிகளை ஒழித்துக் கட்டி, ஒழித்துவிட்ட மகிழ்ச்சியில் இன்பம் காண்பதுதான். எனது நீண்டகால அனுபவங்களின் அடிப்படையில், உங்களிடம் எச்சரிக்கையாக, ஒரு கருத்தை முன் வைக்கிறேன். ஒரு குற்றவாளியை நீதிமன்றம் அப்பாவியாகக் கருதக் கூடிய வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. அதே நேரத்தில், சில நேரங்களில் மிகவும் அரிதாக எப்போதாவது ஒருமுறை அப்பாவிகள்கூட குற்றவாளியாக நிறுவப்படுவதும் நிகழ்ந்து விடுகிறது. உணர்ச்சிப்பூர்வமான வழக்குகள் என்று வரும்போது, அதன்விளைவுகளால் இப்படி எல்லாம் நிகழ்ந்து விடுகின்றன. வரலாற்றிலே 2000 ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தும், நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். காரணம், அங்கே கூடியிருந்த கூட்டம், குற்றம்சாட்டப்பட்டவர் மீது பகையும், வெறுப்பும் கொண்டிருந்தது! அந்த நீதிபதியின் பெயரை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், அந்த நீதிபதி - பிலாத்தோஸ்! மரண தண்டனைக் குள்ளாக்கப்பட்ட கைதி - ஏசு.”

- இவ்வாறு கே.டி.தாமஸ் தனது கட்டுரையை முடித்துள்ளார்.

குறிப்பு:   ஏசுவுக்கு எதிராக சதி செய்த யூதர்கள் கூட்டம், அவர் மீது மரணதண்டனையை உறுதி செய்து, அதை அறிவிப்பதற்கு அரச மதகுரு பிலாத்தூசை அழைத்து வந்தனர். அவரோ ஏசு நிரபராதி; விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மக்கள் கூட்டத்தைப் பார்த்து தீர்ப்புக் கேட்டார். ஆனால் சதிகாரர்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டிருந்த அக்கூட்டம், ‘கொலைசெய்’ ‘கொலைசெய்’ என்ற முழக்கமிட்டதால், வேறு வழியின்றி, ‘நீங்களே, முடிவு செய்யுங்கள்’ என்று கூறி வெளியேறிவிட்டார். குற்றமற்றவர் என்று நீதிபதிக்கு தெரிந்தும், எதிர்ப்பு உணர்வுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்டநிலையில், நிரபராதியை தண்டிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. நீதிபதி கே.டி.தாமஸ் தானும் இதுபோன்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளானதாகவே சூசகமாக கூறுகிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

நீதிபதி குறிப்பிடும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1940 இல் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டதற்கு ஒரு பின்னணி உண்டு. திருவாங்கூர் மன்னர் ஆட்சியில் சர். சி.பி. இராமசாமி அய்யர் திவானாக இருந்தார். அந்த சமஸ்தானத்தில் ‘மனுதர்மம்’ ஏற்றுக் கொள்ளப்பட்டு, பார்ப்பான் எந்தக் குற்றம் செய்தாலும், மரண தண்டனை தரக்கூடாது என்ற நடைமுறை அமுலில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனைத்துப் பிரிவினருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும், கிரிமினல் குற்றங்களில் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். திருவாங்கூரில் மன்னர் பதவிக்கு வருவதில் அவரது பரம்பரையினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு பிரிவினர், ஒரு பார்ப்பனரை வைத்து, எதிரியைக் கொலை செய்வது வழக்கம். பார்ப்பனர் கொலை செய்தால், சமஸ்தானத்தில் தண்டனை கிடையாது என்பதற்காகவே கொலைக்கு பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்தனர். எனவே பிரிட்டிஷ் சட்டப்படி தண்டனை வழங்குவதில் அனைவரையும் சமமாகக் கருதிவிட்டால், பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதால், பார்ப்பனக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காகவே தமது சமஸ்தானத்திலேயே மரண தண்டனை முற்றாக ஒழித்து, சர்.சி.பி. ராமசாமி அய்யர் அறிவித்தார்.

Pin It