பலத்த அடியை உடல் வாங்கும்போது உடலை மூடியுள்ள மேல் தோல் கிழியாமல் அல்லது சிதையாமல் இருக்கும் நிலையில் உடலுள்ளிருக்கும் இழைமங்கள் (Tissues) ஊறடைந்து காய மடைவதால் சிராய்ப்பு அல்லது கன்றிய சாயம் (Bruise) ஏற்படுகிறது.

கன்றிய காயம் என்பது ஒரு புண்ணாம். உடலிலுள்ள இழைமங்கள் வெட்டுப்பட்டோ அறுபட்டோ பிளவுபடுவதையே புண் என வரையறுக்கலாம், பல நேரங்களில் தோல் வெட்டுப்பட்டோ கிழிந்தோ போகும். ஆனால் தோலால் மூடப்பட்ட உள்புண்கள் அப்படி அல்ல, அவை உள்ளுறுப்புச் சிதைவினால் ஏற்படுபவை. வெளியில் அதற்குரிய அடையாளம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.

தோலின் கன்றிய அல்லது அடிபட்ட காயம் கீழ்த்தோலிலுள்ள ஆழ் இழைமங்களின் குருதிக் குழாய் சிதைவதாலேயே உண்டாகிறது. உடைப்புக் குழாயிலிருந்த குருதி வெளிப்பட்டு விலகி இழைமங்களின் சுற்றுப்புறத்தில் பரவி தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது முதலில் சிவப்பாக மாறி அதன்பிறகு கறுப்பு நீலமாக மாறும். குருதி வண்ணம் செயலிழக்கும்போது, கன்றிய காயம் மஞ்சள்-பச்சையாக மாறி, இறுதியாக மங்கிவிடும். பொதுவாக அடிவிழுந்த இடத்தில்தான் கன்றுதல் ஏற்படும். ஆனால் சில சமயங்களில் இணைக்கும் இழைமம், தசைகள் ஆகியவற்றின் மீதும் குருதி பரவி அடிபட்ட சற்று தூரத்திற்கு அப்பாலும் கன்றிய காயத்தைக் காணச்செய்யும். இதைச் சிலர் ஊமைக்காயம் என்பர்.

(நன்றி: உடலும் மருந்தும் நூல், என்.சி.பி.எச். வெளியீடு)

Pin It