tb patient 600

காச நோய் பரவுதல் பற்றியும், காச நோய் குறித்த தவறான எண்ணங்களை அகற்றுதல், மற்றும் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ம் தேதி, சர்வதேச காச நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ராபர்ட் கொக்

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டை சார்ந்த மருத்துவர் ராபர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus ) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். கொக்கின் இக்கண்டுபிடிப்புக்கு பிறகே காசநோயின் தன்மை குறித்து மருத்துவ உலகம் அறிய முடிந்தது. மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும், இதன் பின்னரே தீவிரமடைந்தது. இன்று காசநோய்க்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் இருப்பதற்கு இந்த கண்டுபிடிப்பே முன்னோடி. இந்த கண்டுபிடிப்புக்காக 1905 ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ராபர்ட் கொக் அவர்களுக்கு கிடைத்தது குறிப்பிடதக்கது.

காச நோய் என்றால் என்ன?

காச நோய் வீரியமாக பரவும் ஒரு தொற்றுநோய். இது மைக்கோ பாக்டிரியம் டியூபர் குளோசிஸ்(TB-TUBERCLOSIS) என்ற கிருமி(பாக்டிரியா) தொற்றால் உண்டாகிறது. இந்த நுண்ணியிர் பிரதானமாக நுரையீரலை தாக்கி நுரையீரல் காச நோயை ஏற்படுத்துகிறது. இருப்பினும் உடலில் பிற பாகங்களையும் இந்த நோய் தாக்கலாம்.

காச நோய் எப்படி பரவுகிறது?

காசநோய் கிருமிகள் பொதுவாக காற்றின் மூலம் பரவுகிறது. காச நோய் உள்ள நபரிடமிருந்து மற்றவர்களுக்கு காற்றின் மூலம் பரவும். ஒருவருக்கு காச நோய் கிருமி பாதிப்பு உள்ளது என்பதால், அவருக்கு காசநோய் ஏற்படும் என்பதில்லை. ஒரு கிருமி பாதிக்கப்பட்ட நபர், அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காச நோய்க்கு ஆளாகிறார். காச நோய் நமது உடலில் நகம், முடியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் பரவ கூடிய தன்மை கொண்டது. ஆனால் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் காசநோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

காச நோய் என்று சந்தேகப்படுவது எப்போது?

1. இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ந்து சளியுடன் இருமல், 2. மாலை நேர காய்ச்சல் 3. எடை குறைதல் 4. பசியின்மை 5. மார்பு வலி 6. சளியில் இரத்தம் வருதல்.

காச நோய் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

1. இருமும்போது வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும் 2. நோய் கண்டவுடன் 6 முதல் 8 மாதகாலம் வரை தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் 3. கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. 4. குழந்தைகளுக்கு BCG தடுப்பு மருந்து போட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கு :-

2015 –ஆம் ஆண்டில் மட்டும் 30 இலட்சம் காச நோயாளிகள் முறையான சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்ப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ( W H O ) இலக்கை நிர்ணயித்து உள்ளது. அதில் 10 இலட்சம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடக்தக்கது. ஏற்கனவே இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேரை காச நோய் தாக்கியுள்ளது. கிருமி சத்தமில்லாமல் உடலுக்குள் உறங்கிகொண்டுள்ளது. ஊட்டசத்துகுறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் எந்த நேரத்திலும் காசநோயின் பாதிப்பு ஏற்படலாம் என்கிற நிலையில்தான் இந்த 40 சதவீதம் மக்கள் உள்ளனர்.

இந்தியாவில் காசநோய் ஒழிப்பு திட்டம் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை

உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்தியாவுக்கான பிரதிநிதி நதா மெனப்தே அண்மையில் இந்தியா வந்தபொழுது கூறியுள்ள கருத்து கவனிக்கதக்கது இந்தியாவில் காச நோய் கட்டுப்பாடு வேகம் போதாது வரும் 2050-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமானல் இந்தியாவில் ஆண்டுக்கு 19 முதல் 20 சதவீத அளவுக்கு காசநோயை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இது இப்போது ஆண்டுக்கு வெறும் 2 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் ஊட்டசத்து குறைபாடு, குடிசை பகுதிகளில் மக்கள் நெருக்கம், காற்றோட்ட வசதி இல்லாதது, புகை பழக்கம், உள்ளிட்ட சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று கவலையுடன் கருத்து தெரிவித்து உள்ளார். இதிலிருந்து காச நோய் ஒழிப்பு திட்டத்தில் நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதை அறிய முடியும்.

காசநோயும் மூன்றாம் உலக நாடுகளும் :-

காச நோயின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்தாலும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாக உள்ளது. காச நோய் இந்தியாவின் மிகப்பெரிய பொதுசுகாதார பிரச்சனையாக உள்ளது. உலகில் காசநோய் பரவலாக உள்ள 22 நாடுகளில் இந்தியாவில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ சுமார் 30 லட்சம் பேர் காச நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதில் தமிழகத்தில் 6 இலட்சம் காச நோயாளிகள் உள்ளனர். ஆண்டு தோறும் சுமார் 22 இலட்சம் காச நோயாளிகள் புதிதாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 10 இலட்சம் பேர்கள் சளியில் கிருமி உள்ளவர்கள். சளியில் கிருமி உள்ள காச நோயாளி ஒருவர் வருடத்திற்கு சுமார் 10 -15 நபர்களுக்கு காச நோய் கிருமியை பரப்புகிறார்.

இவர்களில் நாள்தோறும் 960 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது காசநோயால் 3 நிமிடத்திற்கு 2 பேர் மரணம் அடைகின்றனர். உலக காச நோயாளிகளில் ஜந்து பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். காச நோயை குணமாக்க குறைந்தபட்சம் 6 முதல் 8 மாதம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும் இடையில் சில நாட்களுக்கு மருந்து எடுக்காமல் விட்டு விட்டால் அதன் விளைவுகள் உயிரையே பறித்து விடும் அளவிற்கு எந்த மருந்திற்கும் கட்டுப்படாததாக (MDR-TB)நோய் முற்றிவிடும் இப்படி நோய் முற்றிய நிலையில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இரண்டாம் நிலை காசநோயாளிகள்(MDR-TB) இந்தியாவெங்கும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) சொல்கிறது. இவர்களிடமிருந்து பரவும் காச நோய் கிருமியும் வீரியம் மிக்கதாகவே இருக்கும் அதாவது எந்த மருந்துக்கும் கட்டுபடாது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விசியமாகும். ரசியா போன்ற மேலை நாடுகளில் காச நோய் முற்றி போன நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் என்பதிலிருந்தே இத்தொற்று எவ்வளவு அபாயகரமானது என்பதையும் காச நோய்க்கு ஒருநாள் கூடத் தவறாது மருந்து எடுத்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் கூட காச நோயாளிகளை பரமாரிக்க தனி பிரிவுகள், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் கூட கிடையாது. இதிலிருந்தே அறியலாம் நாம் காச நோயை தடுப்பதில் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தின் செயல்பாடுகள் (RNTCP):

நமது நாட்டில் தேசிய காசநோய் தடுப்பு திட்டம் 1992 ஆம் ஆண்டில் இருந்து மாவட்ட காசநோய் மையங்கள், காச நோய் பிரிவுகள் மற்றும் காச நோய் மருத்துவமனைகள் ஏற்படுத்தி செயல்படுதி வருகிறது. தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தின் பயன்கள் திருப்திகரமாக இல்லாததால் இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்டு முடிவில் ஒரு திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த இந்திய அரசு முடிவு செய்தது.

மதிப்பீடுகளின்படி திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தில் ஒரு வருடத்தில் 100000 மக்கட்தொகையில் சுமார் 135 காச நோயாளிகளை கண்டுபிடித்து சிகிச்சையும் அளிக்க வேண்டும். பதிவு செய்த, சளியில் கிருமி உள்ள நோயாளிகளில் குறைந்தது 85 சதவீத நோயாளிகளை பூரண குணமடைய செய்தல் வேண்டும். அதற்கு நேரடி குறுகிய கால சிகிச்சை முறை DOTS இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் படி நோயாளி குணமடைவது சுகாதார பணியாளரின் பொறுப்பாகும். நோயாளியின் பொறுப்பல்ல என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. இதிலிருந்து காச நோய் தடுப்பில் சுகாதார பணியாளரின் பொறுப்பு முக்கியாமானது என்பதை நாம் அறியலாம்.

உலகமய கொள்கை – வறுமை - ஊட்டசத்து குறைவு = காச நோய் :

உலகமய கொள்கைகளை அமல்படுத்திய கடந்த 20 ஆண்டுகளில்தான் காச நோயின் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்திருக்கிறது, என்பதை நாம் கவனிக்கவேண்டும். வறுமைக்கும் காச நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவில் வறுமையை ஒழிக்காமல் காச நோய் போன்ற தொற்று நோய்களை ஒழிக்கவே முடியாது.

“தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி, ஆனால் இன்று நமது நாட்டில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் என்ன?

tb day 600

வெறும் மருந்து மாத்திரைகளால் மட்டுமே காச நோயை தடுத்துவிட முடியாது, மக்களுக்கு ஊட்டசத்துள்ள உணவும் கிடைக்க வேண்டும். காச நோய் பரவுவதற்கு முக்கிய காரணம் ஊட்டசத்து குறைபாடகும். ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என சமீபத்தில் ஜ. நா அறிக்கை கூறுகிறது. உலகிலுள்ள 120 கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. மேலும் இந்திய அரசாங்கம் செயல்படுத்திவரும் புதியகாலனிய வேளாண்மைக் கொள்கைகள் வேளாண்மைத் துறையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு மாளவும் பட்டினியால் சாகும் நிலைக்கும் தள்ளியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்கும், பட்டினிச் சாவுகளுக்கும் எந்தக் கொள்கைகள் காரணமோ அதே கொள்கைகள்தான் ஏழை, எளிய மக்களின் ஊட்டச்சத்தின்மைக்கும், காச நோய் போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதற்கும் காரணமாக உள்ளன.

மறுபுறம் சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏகாதிபத்தியவாதிகள் உலக அளவில் உணவு, தண்ணீர், எரிபொருட்களின் விலைகளைக் கடுமையாக உயர்த்துகின்றனர். அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து ஏழை எளிய தாய்மார்கள் சத்துள்ள உணவு பெறமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டு, ஊட்டச்சத்தின்மைக்கு ஆளாகிவருகின்றனர். சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை எளிய மக்கள் மீது ஒரு பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்து ஏழைகளையே ஒழித்து வருகிறது. இவ்வாறு சந்தைப் பொருளாதாரம் காச நோய் பரவுதலையும். அது தொடர்பான மரணங்களையும் அதிகரித்துவருகிறது.

குழந்தைகளின் ஊட்டசத்தின்மையும் காச நோயின் பாதிப்பும் :-

உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளதை காட்டிலும் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், உலக அளவில் காசநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுள் 27 சதவீதக் குழந்தைகள் இந்தியாவை சேர்ந்தவர்களென்று லான்செட் என்ற மருத்துவ இதழ் புள்ளி விபரங்களை வெளியிட்டிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 74, 000 தொடங்கி 1, 30, 000 வரையிலான குழந்தைகள் காசநோய்க்குப் பலியாவதாக, குறிப்பிடுகின்றன.. இதற்கு என்ன காரணம்?

ஊட்ட சத்து குறைபாடுள்ள குழந்தைகளை காச நோய் மிக எளிதாக தாக்கும். இந்தியாவில் 42சதவீத குழந்தைகள் ஊட்டசத்து குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகளவில் ஊட்டசத்து குறைபாட்டுடன் இருக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியத் குழந்தையாகும். இந்த நிலைமையில் இந்தாண்டு பட்ஜெட்டில் தேசிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்திற்கு ஒதுக்கீடு ரூ16ஆயிரம் கோடியிலிருந்து சரிபாதியாக வெறும் 8 ஆயிரம் கோடி என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்து குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டமும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமைகள்தான் இந்தியாவில் பல இலட்சம் ஏழை, எளிய குழந்தைகள் மேலும் உட்டசத்தின்மைக்கும், காச நோய் தாக்குதலுக்கும், மரணத்திற்கும் காரணமாக அமைகின்றன.

காசநோய் –எய்ட்ஸ்க்கும் - நோய்க்கும் உள்ள தொடர்பு :-

காசநோய் கிருமி பாதிப்பு, நோய் நிலையாக மாறும் ஆபத்தை ஹெச்ஐவி அதிகப்படுத்துகிறது. ஹெச்ஐவியுடன் வாழும் நபர் காசநோய்க்கு ஆளாக 60 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. 100 நிருபிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளில் 80 நபர்களுக்கு காச நோய் உள்ளது. 100 எய்ட்ஸ் நோயாளிகள் இறப்பார்கள் எனில் அவர்களில் 85 நபர்கள் உயிர் இழப்பதற்கு காரணம் காசநோய் ஆகும்.

. வறுமைகோட்டிற்க்கு கீழே உள்ள காச நோய், ஹெச்ஐவி ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ1000 தமிழக அரசு வழங்கி வந்தது. தற்போது அந்த உதவி தொகையும் நிதி பாற்றாகுறையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி தொகையை வாங்க வேண்டுமென்றாலும் கூட உழவர் அட்டை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் உழவர் அட்டை வாங்க முடியும். உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் காச நோய் வருவதில்லையே ! எனவே காச நோய், மற்றும் ஹெச்ஐவி ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உதவிதொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார்மயமும், வணிகமயமும்- மருத்துவ கட்டமைப்புத் தகர்வும் :-

மத்திய மாநில அரசுகள் நிதிப்பற்றாக்குறையக் காரணம் காட்டி மருத்துவத் துறையில் தனியார்மயம், வணிகமயத்தை ஊக்குவிப்பதால் மருத்துவ கட்டமைப்புத் தகர்கின்றன. மருத்துவமனை பணிகளுக்கு போதுமான பணியாளர்கள் இல்லை. இன்று இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் -076 சதவீதம் செவிலியர்கள் (Nurses), 88 சதவீதம் சிறப்பு மருத்துவர்கள், 85 சதவீத தொழில் நுட்பபணியாளர்கள், பரிசோதனை பிரிவில் 80 சதவீத ஊழியர்கள் பற்றாகுறை என திட்ட கமிசன் அறிக்கையை கூறுகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை எனும் பேரில். அரசு மருத்துவமனைகளிலும்கூட உபயோகிப்பாளர் கட்டணம் எனும் பேரில் அரசாங்க கஜானாவை நிரப்புவதற்கு மக்களின் கோவணத்தையும் பிடுங்குகின்றனர். இன்று மருத்துவத்துறை 85 சதவீதம் தனியார் மயம் ஆக்கப்பட்டிருப்பது உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான். இவ்வாறு மருத்துவத்துறை தனியார் மயம், வணிக மயமாக்கப்படுவது ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவியின்றி நோயினால் மடிவதற்கும் காரணமாக அமைகின்றன.

தேசிய மருத்துவ கொள்கை -2015 வரைவு நகல் : -

பி. ஜே. பி அரசு தற்போது வெளியிட்டுள்ள தேசிய மருத்துவ கொள்கை -2015 வரைவு நகலில் முக்கிய அம்சங்கள் 1. கல்வி உரிமை சட்டம் போல, மருத்துவ உரிமை சட்டம் கொண்டு வருவது 2. கல்வி வரி போன்று, மருத்துவ வரி வசூலிப்பது 3. மருத்துவ காப்பீட்டை அனைவருக்கும் வழங்குதல் 3. அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிப்பது (அதாவது அரசு தனியார் பங்கேற்பு) ஆகியவைதான்…இது பிஜேபி அரசின் நோக்கத்தை தெளிவாக பரைசாற்றிவிட்டது.. அனைவருக்கும் தரமான சிகிச்சை எனும் பேரில் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சேவை செய்வதே தேசிய மருத்துவ கொள்கையின் நோக்கமாகும். இது படிப்படியாக பொது (அரசு)மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தி தனியார் மருத்துவமனைகளுக்கு சேவை செயவதும், மருத்துவதுறையை வணிகமயமாக்குவதும்தான். “ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பது “ அல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் தொப்பைகளை நிரப்பி அவர்களை மணங்குளிர வைப்பதுதான் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ கொள்கையின் நோக்கமாகும். மேலும் தேசிய மருத்துவ கொள்கை வரைவு நகலில் பாரம்பரிய மருத்துவம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

காச நோய் மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்ட பணியாளார்களின் அவல நிலை

இந்தியா முழுவதும் காச நோய் மற்றும் ஹெச்ஐவி தடுப்பு திட்டங்களில் சுமார் 4,0000 பணியாளார்கள் ஒப்பந்த கூலிகளாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச தொகுப்புதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த பணிபாதுகாப்பும் இல்லை, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பேறுக்கால விடுப்பு, ஓய்வூதிய திட்டம் என எதுவும் இல்லை. காச நோயாளிகள் மத்தியில் பணிபுரியும் இவர்கள் எளிதாக காச நோய்க்கு ஆளாகிறார்கள் ஆனால் இவர்களுக்கு குறைந்தபட்சம் மருத்துவ காப்பீடு கூட மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பது அவலமான நிலையாகும். மொத்தத்தில் அரசின் நவீன கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.

'நோய் என்பதை விடவும் இது பெரிய அவமானம்என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது’ இந்த எண்ணங்களை மாற்றி சத்தான உணவும், முறையான சிகிச்சையும் இருந்தால் காச நோயை குணப்படுத்தலாம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் காச நோய் மற்றும் எச்ஜ்வி திட்ட பணியாளர்களின் பங்கு முக்கியானது. குறைந்தபட்சம் 1 இலட்சம் மக்கள் தொகைக்கு ஒர் டாட்ஸ் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஆனால் 3 மக்கள் தொகைக்குதான் ஒரு பணியாளர் நியமனம் செய்து உள்ளார்கள். இதனால் பணியாளார்கள் பணிசுமையால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

மக்கள் நலவாழ்வுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பதே தொற்று நோய்கள் பரவ காரணம் :-

2015-16 க்கான சுகாதாரத் துறை பட்ஜெட்டில் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் லாபம் பெறுவதற்காக மோடி அரசு பொது சுகாதாரத் துறையில் 20 விழுக்காடு வரை நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. ஏற்கனவே உலக அளவில் இந்தியாவில்தான் சுகாதாரத்திற்கு பட் ஜெட்டில் மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சராசரி தேசிய உற்பத்தியில் சுகாதாரத்திற்கு 1 விழுக்காடு மட்டுமே நிதி செலவழிக்கப்படுகிறது. ஆனால் சீனாவில் 3 விழுக்காடும் அமெரிக்காவில் 8.3 விழுக்காடு செலவழிக்கப்படுகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி ஒதுக்கீட்டிலிருந்து (31, 640 கோடி ரூபாய்) 6000 கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.. இவ்வாண்டு பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கை வரிவசூலில் எட்ட முடியாத நிலையில், பெரும் பணக்காரர்களுக்கும், இந்திய பெரு முதலாளிகளுக்கும் சொத்துவரி முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கல்விக்கான ஒதுக்கீட்ட்டில் ரூ11, 000 கோடியும். தேசிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்திற்க்கான ஒதுக்கீட்டில் ரூ8 ஆயிரம் கோடியும்,. வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 9374 கோடியும், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்திற்கான நிதி ஒதுக்கீடு 5510 கோடியும் வெட்டியுள்ளது. மேலும் நேரடி மானிய திட்டம் என்ற பெயரில் பொது விநியோக திட்டமும் சீரழிக்கப்பட்டு வருகிறது. இத்துடன் நிதி அமைச்சகம் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் களுக்கு 30 விழுக் காடு வரை குறைத்துள்ளது. அதாவது 1300 கோடி ரூபாய் குறைத்துள்ளது. உலகிலேயே ஹெச்ஐவி, மற்றும் காச நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது கவனிக்கதக்கது.

மோடி ஆட்சியின் இத்தகைய கொள்கைகள் காச நோய் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை அதிகரிக்கவே உதவும். சந்தை சக்திகளின் நலன்களுக்காக ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் துரோகத்தை மோடி அரசு செய்து வருகிறது.

தாராளமயக் கொள்கைகளும்- மருத்துவதுறையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளையும்

மத்திய அரசு செயல்படுத்திவரும் தாராளமயக் கொள்கையால் இந்தியா பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வேட்டைகாடாக மாறிவருகிறது. இந்திய மருந்து சந்தையின் விற்பனை மதிப்பு ஆண்டிற்கு ரூ 90,000 கோடியாகும். இந்தியாவில் தங்களது மருந்துகளுக்கு காப்புரிமை பெற்றுள்ள ஜப்பானை சார்ந்த ஒட்டுஸ்கா(Otuska), அமெரிக்காவின் பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கியூப்(BMS), மற்றும் ஸ்விஸ் நாட்டின் நோவார்ட்டிஸ்(Novartis) போன்ற பன்னாட்டு கம்பெனிகள் தங்களது மருந்துகளை சந்தைக்கு கொண்டுவராமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றன. இதனால் காசநோய், எச். ஜ. வி, புற்றுநோய், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கான மருந்துகளின் விலையை பன்மடங்கு உயர்ந்துகின்றன. உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலை ஒரே வருடத்தில் 2000 டாலர்கள் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இவ்வாறு தாராளமயக் கொள்கையால் உயிர்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனிகளாக மாறிவிட்டது.

இந்தியாவில் காச நோய், பன்றி காய்ச்சல், எபோலா போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டுமானால் சுகாதார, மருத்துவ மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகபடுத்த வேண்டும். பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளை அரசுடைமையாக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும், உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்ளைகள் மூலம் நாட்டின் மருத்துவம், கல்வி, சுகாதாரம் போன்ற சேவைதுறைகளை தனியார்மயம், வணிகமயம், ஆக்குவதை எதிர்த்து போராடவேண்டும். அப்பொழுதுதான் காச நோய், பன்றி காய்ச்சல், எபோலா போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதை தடுக்க முடியும். நாட்டு மக்களை மரணத்திலிருந்து காப்பற்ற முடியும். அத்தகைய போரட்டத்தை சுகாதார துறையினர் மட்டுமே தனித்து நின்று நடத்திடவிட முடியாது. இதர பகுதி மக்களுடன் இணைந்து சரியான சித்தாந்த வழிநின்றே நடத்திட வேண்டும்.

- மா.சேரலாதன், மாநில செயலாளர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம்.

Pin It