என் நாடு. என் மக்கள். இவர்களின் நலனே எங்களின் உயிர் மூச்சு என்று 63 ஆண்டுகாலமாய் பசப்பு வார்த்தைகளால் வாலிபர்களின் வாழ்க்கையை கானல் நீராய் மாற்றி விட்டார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை ஈடேற்றத்தான் எத்தனை எத்தனை அற¤விப்புக்கள், திட்டங்கள். அவை அனைத்துமே ஏட்டளவிலேயே உள்ளன. தேசத்தின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்கிறார்கள். இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில்?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை நோக்கி செல்கிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் முழங்குகிறார்கள். வேலை எங்கே என்றால் பேச மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் (1)விவசாயத் துறை, (2) தொழில் துறை, (3) சேவைத்துறை ஆகிய மூன்றும் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் நிலை என்ன?

விவசாயத் துறை:

இந்தியாவில் 70% மக்கள் விவசாயத்தையும், அதனை சார்ந்த தொழில்களையும் நம்பியே உள்ளனர். இன்றைய நிலை என்ன? ஆட்சியாளர்களின் விவசாய கொள்கைகளால் அடுத்த தலைமுறைக்கு விவசாயம் இருக்குமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பிரதானமானதாக உள்ளது. உலகில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள இரண்டாவது நாடு இந்தியா. சுமார் 166 லட்சம் மில்லியன் ஹெக்டர் ஏக்கர் விளை நிலங்களாக உள்ளன. ஆண்டிற்கு சராசரியாக 110 செ.மீ. மழை பெய்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் அதிகமான இளைஞர்களை கொண்ட (சுமார் 55 கோடி) நாடாகவும் இந்தியா உள்ளது. இத்தனை வளங்களும். வாய்ப்¢புகளும் இருந்தும் விவசாயத் துறை வளம் கொழிக்கவில்லை?

(அ)   விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை இல்லை.

(ஆ)   விதை உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு.

(இ)    நீராதாரத்தை வளப்படுத்த வேண்டிய அரசுகள் கால்வாய் சீரமைப்பதை கூட கைவிட்டது.

(ஈ)    விவசாயத்திற்கான மானிய வெட்டு

போன்றவற்றால் இன்றைய இந்திய விவசாயத்தின் நிலை என்ன? கடந்த சில ஆண்டுகளில் 2,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்களின் விவசாயக் கொள்கை அல்லவா காரணம்? 70% மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த விவசாயத்துறை நலிந்ததால், அணி அணியாக நகரங்களை நோக்கி நடைபிணங்களாக வருவது நாள்தோறும் காணும் காட்சியாக உள்ளது.

தொழில் துறை:

நவீன உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாக இந்தியாவின் தொழில் துறை வளர்ந்து விட்டது என்றால், சென்னையில் இருந்த அம்பத்தூர் எஸ்டேட், கிண்டி எஸ்டேட், பெருங்குடி எஸ்டேட், கும்மிடிப்பூண்டி எஸ்டேட், தாம்பரம் சிறப்பு பொருளாதார மண்டலம் பெரும் பகுதி அழிந்து போனது எப்படி? இந்தியாவில், தமிழ்நாட்டில் இருந்த ஏராளமான பெரிய, சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டு, பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் நடுத் தெருவிற்கு வந்தது எப்படி?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று வர்ணிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்த 50% தொழிற்சாலைகள் அழிந்துள்ளதும், இங்கு பணிபுரிந்த லட்சகணக்கான தொழிலார்கள் வேலை இழந்து தவிப்பதும், மலிவான விலையில் உழைப்பை வாங்க வட இந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் இறக்குமதி செய்யப்படுவதும்தான் வளர்ச்சியா? இதன் விளைவு அந்தப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு சாகின்றனர். தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதைப்பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படுகின்றார்களா என்றால் இல்லை.

இப்படி விவசாயத் துறையும், தொழில் துறையும் நலிவடைந்து வறுமையும். தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் நாடு முழுவதும் சுமார் 6 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் போது அரசுத் துறைகளில் வேலைக்கு ஆள் எடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது யாரை வாழ வைப்பதற்கு?

தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசு, அரசுத் துறையில் பல லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருக்கிறபோது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 68 லட்சம் இளைஞர்களைப் பற்றி கவலைப்படாமல் ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் அரசு வேலை (அரசானை 170) என்கிறது. லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை புதிய ஆட்களைக் நிரப்ப அரசு ஏன் மறுக்கிறது? மின் வாரியத்தை கூறு போட்டு தனியாருக்கு கொடுக்க முயலுகின்ற அரசு, அதில் உள்ள 55 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. அரசு துறையோ, கழகமோ, வாரியமோ எதுவாக இருந்தாலும் 1972ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டதாகத்தான் உள்ளது. இன்றைய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் கூடுதலாக 50ஆயிரம் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு துறைகளாக கணக்கிட்டால் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பாமல் வைத்திருக்கிறது. தமிழ் படித்தால் முன்னுரிமை என்று கூறுகிற அதேநேரத்தில், 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் இருப்பது ஏன்? இவற்றை நிரப்ப எது தடையாக உள்ளது?

உலகில் இருக்கக்கூடிய கனிம வளங்கள் அனைத்தும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருக்கிறது. இந்த வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்க ஆட்சியாளர்கள் செய்தது என்ன?

ஆசியாவில் முதல் தரமான ரப்பர், கன்னியாகுமரியில் கிடைக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி பகுதியில் டைட்டானியம், தோரியம் போன்ற கனிமங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தரம் வாய்ந்த கிரஃபைட் தொழிற்சாலையை நவீன தொழிற்சாலையாக மாற்றினால் மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய வென் பிளாட்டினம், அரூர் பகுதியில் கிடைக்கக்கூடிய மாலிப்பிளாடினம், நாகை, திருவாரூர் பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயு.... இப்படி எண்ணற்ற கனிம வளங்கள் உள்ள நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்றால் வேடிக்கையாக அல்லவா உள்ளது.

தமிழக அரசே!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு காலிபணியிடங்களையும் உடனடியாக நிரப்பிடு!, சேது கால்வாய் திட்டத்தை கால தாமதமின்றி உடனடியாக நிறைவேற்று!

கிராம புறப் வேலை உறுதியளிப்பு சட்டத்தை போன்று நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை அமலாக்கு!

தமிழகத்தில் கிடைக்ககூடிய கனிம வளத்தை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்கு!

என வலியுறுத்தி வாலிபர் சங்கம் 13வது மாநில மாநாட்டில் கல்வி, வேலை, பொது சுகாதாரம், ஊழல் ஆகிய பிரச்சனைகளுக்காக வருகிற டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. திசையெட்டும் அதிரட்டும், தமிழகம் குலுங்கட்டும். வேலை தேடும் இளைஞர்களின் உயிர் முழக்கம் கோட்டை சுவரை உடைக்கட்டும் நாளைய தேசத்தை நமக்கான தேசமாய் உருவாக்க அணி திரள்வோம், ஆர்ப்பரிப்போம், வெற்றி பெறுவோம்.

Pin It