டாக்டர் கூறியதைக் கேட்ட லூசி அதிர்ச்சியடைந்தாள். 17 வார கர்ப்பிணியாக இருந்த லூசி கர்ப்பத்தைக் கலைக்கவேண்டுமாம்! எந்த ஒரு தாய்க்கும் அதிர்ச்சியான செய்தியல்லவா அது? அவளுடைய வயிற்றில் வளர்ந்துவந்த 17 வாரக்கருவின் முதுகெலும்பு spina bifida என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது முதுகெலும்புத்தண்டில் பின்னிப்பிணைந்திருக்கும் நரம்புத்தொகுதிகள்முழுமையாக மூடப்பட்டிருக்காதாம்.

லூசி அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தால், குழந்தையின் ஆயுள் சக்கரநாற்காலியிலேயே கழியுமாம். குழந்தையின் கற்றல் திறனும் பாதிக்கப்படுமாம். இதைக் கேட்ட லூசியும் அவளது கணவனும் அந்தக்கருவை அழித்துவிட முடிவுசெய்தனர். இதெல்லாம் ஓராண்டிற்கு முன்பு நடந்தது. இப்போதுகூட லூசியைக் கேட்டால் அவர்கள் செய்த முடிவு சரியானது என்றுதான் சொல்லுவாள்.

லூசிக்கு நேர்ந்த துயரம் எந்தவொரு தாய்க்கும் நேரக்கூடாது. கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டிருந்தால் இதுபோன்ற துயரம் ஒருபோதும் நடைபெறாது. ஐரோப்பிய யூனியனில் ஒவ்வொரு ஆண்டும் 4500 கருக்குழந்தைகள் spina bifida நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் 85 சதவீதம் கருக்கலைப்புகள் இந்த நோய் கண்டறியப்பட்டவுடன் செய்யப்படுகின்றன. Spina bidia குறைபாடுடன் சுமார் 150 குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகின்றன.

ஃபோலிக் ஆசிட் என்பது நீரில் கரையக்கூடிய பி வைட்டமின் ஆகும். பி9 என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையில் இது ஃபோலேட் வடிவில் கிடைக்கிறது. குழந்தைகளைப் போன்றே பெரியவர்களுக்கும்  இந்த ஃபோலிக் ஆசிட் தேவைப்படுகிறது. ஃபோலிக் ஆசிட் குறைபாட்டால் இரத்தசோகையும், பிறவிக்குறைபாடுகளும் தோன்றுகின்றன. பழங்கள், இலையுடன் கூடிய காய்கறிகள், கீரைகள்இவற்றிலெல்லாம் ஃபோலிக் ஆசிட், ஃபோலேட்டு வடிவத்தில் நிறைந்துள்ளது.

கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு ஃபோலிக் ஆசிட் குறைபாடு இருக்குமானால் கருவின் நரம்புத்தொகுதி பாதிக்கப்படும். மூளை, மண்டை ஓடு இவற்றின் வளர்ச்சி குறையும். நாளொன்றுக்கு 400 மைக்ரோகிராம் ஃபோலிக் ஆசிட் (1/10,00,000 கிராம்=ஒரு மைக்ரோ கிராம்) உண்ணுவதால் 70 சதவீத கருக்குழந்தைகள் இந்தக் குறைபாடுகளில் இருந்து தப்பிப் பிழைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தந்தையாக வேண்டும் என்று திட்டமிடும் ஒவ்வொரு ஆணும் ஃபோலிக் ஆசிட் தன்னுடைய உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டுமாம். ஆணின் விந்துவில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகள் இதனால் தவிர்க்கப்படுகிறது.

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.scienceinschool.org/2009/issue13/folicacid

Pin It