இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நவீனத்துவத்தின் சிந்தனையும், போக்கும் உறுதியான தடங்களை பதித்து வருகின்றன. தொழில்நுட்பம் மனிதவாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இது மனிதனை இயந்திர வட்டத்தில் சேர்க்குமளவுக்கு ஆதிக்கம் பெற்றுள்ளது. விஷேடத்துவமடைந்த உயிரியாக மனிதன் நோக்கப்படுவதற்கு ஆதாரமாக அமையும் உளம், மனம் சார்ந்த இயல்பு நிலைகளிலிருந்து தூரப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கு தொழில்நுட்பம் இட்டுச்செல்வதை அடுத்தடுத்து உணர முடிகிறது.

 மனிதனின் சமூகவாழ்க்கை மிகவும் முக்கியப்படுத்தப்படும் மைல்கல்லாக நோக்கப்படுகிறது. அரிஸ்டோட்டில் மனிதனை சமூகப்பிராணியாக அடையாளப்படுத்துகிறார். இதே போல சமூகவியல் மனிதனை சமூக உயிரியாகவே கணிக்கிறது. மனித வாழ்க்கை சமூகத்தின் அடித்தளத்தோடு இணைந்த சுழற்சி முறையான அமைப்பாகும். மனித இருப்பின் அனைத்து வரிகளும் சமூகத்தோடு இயைந்த இறுக்கங்களை கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரையான அனைத்து நிகழ்வுகளிலும் சமூகத்தின் உள்வாங்கல்கள் தவிர்க்கமுடியாத வகையில் இடம்பெறுகின்றது.

 இந்த அடிப்படையில் தான் மனித வாழ்வின் நெடுகிலும் சமூகத்துடனான தொடர்பு இருந்து வருகின்றது. ஒரு குழந்தை பிறந்து அவனது சமூகத்தொடர்பு ஆரம்பிக்கப்படும் போது முதன்முதலில் அவன் குடும்பம் சார்ந்த சூழலை கற்கிறான். அதன் பின் சமூக அமைப்பிற்குள்ளாகும் வகையில் பாடசாலை, அயற்சூழல், நண்பர் குழு, சமயம், விளையாட்டு, பொருளாதாரம், திருமணம் என அவனது தொடர்புகள் விரிவடையத் தொடங்குகிறது. இந்த தன்மையானது இடைத்தொடர்புடன் கூடிய சிறந்த தொடர்பாடலை வழிவகுத்து வந்துள்ளது. மனித வாழ்க்கையின் மிக முக்கிய பகுதியாக சிறுவயது, விளையாட்டுப்பருவம் கணிக்கப்படுகின்றது. மூதாதையர் காலம் தொட்டே விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். பாரதியார் “மாலை முழுவதும் விளையாட்டு” என்று உற்சாகமூட்டுகிறார். மாலைவேளைகளை பொறுத்த வரையில் விளையாட்டிற்குரிய பொழுதாகவே பெரும்பான்மையாக கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளையாட்டு என்பது குறிக்கப்பட்ட இடத்தை பெற்றுள்ள போதும் இன்றைய சூழலில் சிறவர் விளையாட்டுக்களை நோக்கும் போது ஆரோக்கியமான கருத்தை கொண்டிருக்கவில்லை.

 இன்றைய சிறுவர்களுக்கு விளையாட்டுக்கள் என்றால் TV Games> Internet> Computer Games இது போன்ற இயக்கு விளையாட்டுக்கள் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமது ஓய்வு நேரத்தை, விளையாட்டுக்குரிய பொழுதை இத்தகைய விளையாட்டுக்கள் ஊடாகவே கழிக்கும் நிலையை காண்கின்றோம். உண்மையில் விளையாட்டு என்பது உடல், உளம், மூளை மூன்றையும் ஒருமுகப்படுத்துவது மட்டுமன்றி, நெருக்கீட்டை தளர்த்துவதாயும் உடல் ஆரோக்கியத்தை தூண்டுவதாயும் அமைய வேண்டும்.

 ஆனால் இன்றைய பொழுதில் விளையாட்டுக்கள் இன்றும் மனித மூளைச்சலவையை மேற்கொள்ளும் ஒரு திணிக்கப்பட்ட நெருக்கீட்டையே அளிக்கிறது என்று கூறலாம். நாம் விளையாடிய விளையாட்டுக்களையும், இன்றைய சிறுவர்களின் விளையாட்டுக்களையும் ஒப்புநோக்கும் போது காலத்தை நொந்துகொள்ளத் தோன்றுகிறது. இயற்கைச்சூழலில், அயலிலுள்ள பெரும் சிறுவர் பட்டாளத்தோடு, மனம் நிறைய மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், குதூகலித்து விளையாடிய அந்தப் பொழுதுகளும் இன்றைய சூழலில் அடைபட்ட அறைக்குள் இயந்திரத்தோடு மட்டுமே பேசிக்கொள்ளும் ஊமை உறவு விளையாட்டுக்களை குறைகூறுவதா, தொழில்நுட்பத்தை திட்டித்தீர்ப்பதா என்று புரியாத தன்மையை உருவாக்கியுள்ளது.

 எந்த வீட்டிற்கு சென்றாலும் சிறுவர் விளையாட்டிற்குரிய உபகரணம், சூழலாக கணினி விளையாட்டுக்களே காண்பிக்கப்படுகின்றன. அண்மையில் முன்பள்ளி ஆய்வை முன்னெடுக்கும் போது சிறார்களின் வீடுகளுக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. வீடுகளில் சிறுவர்களின் விளையாட்டுக்கள் பற்றி அறிய முனைந்த போது 90% ஆன வீடுகளில் சிறுவர் விளையாட்டுக்களாக TV Games ஐயே குறிப்பிட்டனர். உண்மையில் இவை எந்தளவு குழந்தைகளின் உளவிருத்தியில், சமூக விருத்தியில், தொடர்பாடல் அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றன என்பது கேள்விக்குறியான அம்சமாகவே உள்ளது. பல்லாங்குழி, கோலிகுண்டு, தெத்தியாட்டம், மாங்கொட்டை விளையாட்டு, சூழலிலுள்ள பொருட்களை சொல்லி கண்டுபிடித்தல், சூழலில் இருந்து கிடைக்கும் தாவரங்களிலிருந்து நிறம் வடித்தல், எண்ணெய் வடித்தல் இப்படி எவ்வளவோ ஆரோக்கியமான விளையாட்டுக்களை நாம் மறந்துவிட்டோம். மறக்கடிக்கப்பட்டு விட்டோம். விளையாட்டுக்கள் என்பது ஆரோக்கியத்திற்குரிய ஊட்டம். இது போன்ற விளையாட்டுக்கள் உடல், உள ஆரோக்கியத்தை தூண்டக்கூடியன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விளையாட்டுக்கள் வெறும் கிராமிய விளையாட்டுக்களாக அடையாளப்படுத்தப்பட்டு விஷேட தினங்களில் உயிர்கொடுக்கப்படும் நிகழ்வுகளாகவே கணிக்கப்படுகின்றன.

 மேகங்களை கண்டு உருவங்களை வார்ப்பதும், கற்பனைக்காட்சிகளை அடையாளப்படுத்துவதுமாய் கழிந்த எம் சிறுவயது சந்தோஷங்களை இன்றைய சிறுவர்கள் இழந்து விட்டார்கள். உள ரீதியான விருத்திக்குரிய விளையாட்டுக்களும் தற்போதைய வளரிளம் சமுதாயத்திற்கு வழங்கப்படாத ஆதங்கம் ஆங்காங்கே பேசப்பட்டுவருகின்றது.

 ஆரோக்கியம் தேடலில் முழுமூச்சாக இன்றைய சமுதாயம் அதனை ஆரம்பகட்டத்திலிருந்தே பழக்கப்படுத்த மறந்துவிட்டது. ஆரோக்கியம் என்பது வயது முதிர்ந்த நிலைக்கான தேடலல்ல. மாறாக ஒரு குழந்தையை எவ்வாறு ஆரம்ப கட்டத்திலிருந்து தட்டிக்கொடுக்கிறோமோ அந்தக்காலத்திலிருந்தே இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். எனவே, இயந்திரமாகிக் கொண்டுவரும் வாழ்க்கையில் வளர்ந்து வரும் எமது சமுதாயத்தினருக்கு ஆரோக்கியத்திற்கான, இயக்கத்திற்கான எண்ணெயை வாங்கி வைப்பதை விட அவர்களை ஆரம்பத்திலிருந்தே உடல், உள ஆரோக்கியம் கொண்டவர்களாக மாற்றுவதற்கான மாற்றீட்டு முறைகளை கையாள்வோம். விளையாட்டு நேரத்தில் கணினி விளையாட்டுக்களை தவிர்த்து உயிரோட்டமான, இடைத்தொடர்புகளை விருத்திசெய்யக்கூடிய, சமுதாய கூட்டுணர்வை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுக்களுக்கு மீண்டும் ஜனனம் கொடுப்போம். எம் சிறார்களை இயந்திரத்தோடு ஊமை உறவாடுபவர்களாக அன்றி சமூக சிந்தனை உள்ளவர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வோம்.

- மு.யா.மின்னத்துல் முனவ்வறா, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Pin It