“பருத்த உடல் உடைய பெண்கள் கருவுற்றால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உப்பிய கன்னங்களுடன் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கருத்தரிப்பதற்கு முன்பாக இருந்த எடை, கருத்தரித்த பின்னர் இருக்கும் எடை ஆகியவைதான் குழந்தையை எதிர்காலத்தில் பாதிக்கப்போகும் நோய்களை தீர்மானிக்கிறது. கருப்பைக்குள் குழந்தை வளரும் சூழ்நிலையின் பாதிப்புகள் இவை” என்கிறார் பேராசிரியர் மார்கரட் மாரிஸ். இவர் நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையில் பணிபுரிகிறார். 

belly_350தாயின் உடலமைப்பு, உணவுப்பழக்கம் இவற்றை ஆராய்ந்த நாம் இதுவரை தகப்பனின் உணவுப்பழக்கம், உடலமைப்பு இவற்றை ஆராயவில்லை. அந்தக்குறையை அந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Dr Sheau-Fang Ng என்ற ஒரு பி.எச்டி. மாணவர் போக்கியிருக்கிறார். தகப்பனுடைய உணவு, உடல் எடை இவையெல்லாம் அடுத்த தலைமுறை பெறப்போகும் நோய்களை தீர்மானிப்பதாக உள்ளது என்கிறார் இவர். இந்த ஆய்வில் ஆண் எலிகளுக்கு கொழுப்பும் சர்க்கரையும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டு உடல் பருமனாக்கப்பட்டது. இயல்பான எடை கொண்ட பெண் எலிகளுடன் இவை இனப்பெருக்கம் செய்ய வைக்கப்பட்டன. விளைவாகப் பிறந்த பெண் எலிகள் குஞ்சுப்பருவத்திலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகி இருப்பது காணப்பட்டது. 

இன்சுலின் எனும் என்சைம் நாம் உண்ணும் உணவில் உள்ள குளுகோசை சர்க்கரையாக மாற்றி திசுக்களில் சேமித்து வைக்கிறது. இவ்வாறு திசுக்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரைதான் நாம் வேலை செய்வதற்கான ஆற்றலைக்கொடுக்கிறது. இன்சுலின் சுரப்பது பாதிக்கப்பட்டால் திசுக்களில் சர்க்கரை சேமிக்கப்படும் நிகழ்வு தடுக்கப்படும். நமது உடலுக்கு வேண்டிய ஆற்றல் திசுக்களில் இருந்து பெற இயலாமல் உடல் கொழுப்பில் இருந்து பெறப்படும். சர்க்கரை நோய் எனப்படும் இந்த நோய் உடல் பருத்த ஆண் எலிகளுக்கும்-இயல்பான பெண் எலிகளுக்கும் பிறந்த பெண் குஞ்சு எலிகளிடம் காணப்பட்டது. 

அப்பனிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு நோய் கடத்தும் திறன் அடர்கொழுப்பு உணவை உண்பதால் விளைந்த விந்துவினால் ஏற்பட்டவை. பெண் எலிக்குஞ்சுகள் சர்க்கரை நோய்க்கு ஆளாவது மட்டுமே இதுவரை ஆய்விற்கு உட்பட்டிருக்கிறது. ஆண் எலிக்குஞ்சுகளின் கதி என்ன என்பது இப்போது ஆய்வில் உள்ளது. 

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/10/101021103121.htm

Pin It