renal_dialysis_unit_370சிறுநீரகங்கள் சரியான முறையில் செயல்படாத போது உடலிலுள்ள குருதியில் உள்ள நச்சுப் பொருள்களை வடிப்பதற்காகச் சிறுநீரகக் கருவி (Kidney machine Renal Dialyser) உதவுகிறது. மனித னின் இரண்டு சிறுநீரகங்கள், கைமுட்டி அளவு, அவரைவிதை வடிவில், முதுகின் ஒடுக்கமான பகுதியின் கீழ் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மிகச்சிறிய வேதியியல் தொழிற் சாலை போன்றது. அதில் நூறு மைல்கள் நீள முள்ள நுண்ணிய குழாய்கள் வழியாகக் குருதி சுற்றி வருகிறது. சிறுநீரகங்களில் குருதி நச்சுப் பொருள்களைக் கொடுத்து விடுகிறது. அந்நஞ்சுப் பொருள்கள் சிறுநீர் (Urine) வடிவில் வெளித் தள்ளப்படுகின்றன.

1940 ஆம் ஆண்டு வரை சிறுநீரகங்கள் வேலை செய்யா நோயாளிகளுக்கு ஏதும் சிகிச்சை செய்ய முடியாமல் இருந்தது. குருதி ஓட்டத்தில் நச்சுப் பொருள்கள் குவிந்து காய்ச்சலையும் நோயையும் மிகுதிப்படுத்தி இறுதியில் இறப்பில் கொண்டு முடித்தன. நோயாளியின் முடிவு சாவே. ஆனால் ஜெர்மானியரால் பிடிக்கப்பட்டிருந்த ஹாலந்தில் (Holland) 1940 ஆம் ஆண்டு வில்லியம் கோல்வ் (William Kolff) என்னும் இளம் மருத்துவர் ‘குருதி கழுவுதல்’ (haemodialysis) என்பது பற்றிய நீண்ட நாள் மறக்கப்பட்டிருந்த ஆய்வுத்தாளைக் கண்டுபிடித்தார். இரண்டு மிக முக்கிய சிக்கல்கள் இருந்தன. ஒன்று குருதியை வடிப்பதற்குத் தக்க பொருத்தமான பொருள் தேவைப்பட்டமையாம். மற்றொன்று குருதியைக் கட்டியாகாமல் (clothing) வைப்பதற்குத் தேவைப்பட்ட பொருள் வேண்டியிருந்தது.

போருக்குப் பிறகு, கோல்வ் அமெரிக்கா சென்றார். அங்கே செயற்கையான சிறுநீரகக் கருவியை அமைத்தார். அது தேவையான இயந்திரத்தத்துவம் கொண்ட முன்னோடி மாதிரிக் கருவியாய் இருந்தது. குருதி செலோபேன் (Cellphane) குழாயில் (மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வணிகவியல் பெயர்) சுழலுமாறு செய்யப்பட்டது. குருதி கட்டித்தன்மை அடையாமலிருக்கும் பொருட்டு ஹெபாரின் (heparin) என்ற நீர்மப் பொருள் பயன்படுத்தப்பட்டது. சிறிய கட்டிகள் வடிப்பானால் (filter) அகற்றப்பட்டன. திருகு சுருள் குழாயில் கலவைப் பிரிப்புக் (Dialysis—இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து பொருள்களைப் பிரித்தல்) கரைசல் (solution) சுற்றி வருமாறு அமைக்கப்பெற்றது.

குருதியிலுள்ள நச்சுப் பொருள்கள் செலோபேன் வழியான வடிக்கப்பட்டன. அப்போது கரைசல்கள் அடிக்கடி மாற்றப்படுவதற்கேற்ற வசதி உண்டு. நோயாளியின் தீர்வு கட்டமான இடரார்ந்த நிலையைக் கடப்பதற்குச் செயற்கை நீரகங்கள் பயன்படுத்தக்கூடும். நீண்ட நாள் தன்மை கொண்ட நோயாளியின் உறுதி கூற இயலாத காலக்கெடுவு வரை உயிருடன் வைத்துக் கொள்ளவும் இச்செயற்கை நீரகங்கள் பயன்படுத்தப்படலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் சுமாராக வாரத்திற்கு இரண்டு முறை நோயாளியின் குருதி ஓட்டத்தில் குழாய்கள் சொருகப்பட்டு நோயாளி கருவியுடன் இணைக்கப்பட வேண்டும். அவருடைய குருதி, பிறகு இயந்திரக் கருவி வழியாகச் சென்று தூய்மையாக்கப்பட்டு மீளவும் உடலுக்குள் வரும்.

முதலில் செயற்கை நீரகக் கருவிகள் மிகப் பெரியதாய் இருந்தன. ஏனெனில் வடிப்பான்கள் (Filters) உண்மைச் சிறுநீரகங்களிலுள்ளதை விடத் திறமைக் குறைவுடையனவாகவும் சவ்வு அல்லது மெல்லிதோல் (Membrane) மிக அதிக பரப்பு தேவைப்பட்டும் செயற்கை நீரகக் கருவிகள் இருந்தன. மருத்துவப் பொறியாளார்கள் (Medical engineers) எடுத்து செல்லத்தக்க சிறுநீரகக் கருவியைச் செய்ய அதன்பின் முயன்றனர். எடுத்துச் செல் கருவி ஒரு தோல் சிறுபட்டையால் உடம்பில் இணைக்கப்பட்டு உடலின் குருதி ஓட்டத்தில் சேர்ப்பதற்கேற்ப உடலின் ஓர் உறுப்புப்போல் ஒரு வேளை இருப்பதற்கு வடிவமைப்புச் செய்ய முயற்சி நடைபெற்று வெற்றி பெற்ற நிலை வந்துகொண்டிருந்தது. செயற்கைச் சிறுநீரகத்தை உடலில் இயற்கைச் சிறுநீரகத்தை எடுத்துவிட்டு மாற்றிப் பொருத்தவும் முயன்று வருகின்றனர்.

Pin It