முடி - கண் - வயிறு - நரம்பு - மூளை இவற்றிற்கு இன்றியமையாதது கறிவேப்பிலை. கறிவேப்பிலையினை வெயிலில் கருகச் செய்து தேங்காய் எண்ணெயுடன் பொடி செய்து கலந்து தேய்த்து வர இளம் நரை விலகும். கறிவேப்பிலை சாற்றினை பசும் பாலுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலமும் நரை முடி வராமல் தடுக்கலாம்.

கறிவேப்பிலையில் வைட்டமின் அ சத்து மிகுந்து இருப்பதால் இது கண்ணுக்கு உரமாய் விளங்குகின்றது. தினமும் கறிவேப்பிலையினை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது.

பசியினைத் தூண்டி, செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படாது தடுப்பதில் கறிவேப்பிலைக்குத் தனிபங்கு உண்டு. கறிவேப்பிலை பொடியினை நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்றில் வாய்வு சேராது. மலச்சிக்கல் ஏற்படாது. பசியில்லையே என்று அலைமோதுபவர்கள், சாப்பிட்டில் மனம் செல்லாது விளையாடும் பிள்ளைகள் இவர்களுக்கு சிறந்த பசி தூண்டியாக கறிவேப்பிலை பயன்படுகிறது.

வாய்வு, சீதளம் காரணமாக இடுப்பு, கைகால், தொடை பகுதிகளில் பிடிப்பு வலி எற்படின் கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட தொல்லைகள் தீரும்.

உடலுக்கு உற்சாகத்தை ஊட்டி தெம்பூட்டுவதில் கறிவேப்பிலை தன்னிரகரற்றது. மூளையினை முதலீடாகக் கொண்டு செயலாற்றும் ஆபீசர்கள் மூளை திசுக்களின் செயல்திறன் குன்றாமல் இருக்க கறிவேப்பிலையை மறந்து விடக்கூடாது.

சித்தப்பிரமை பிடித்தவர்களுக்கு கறிவேப்பிலையை மஞ்சள். சீரகத்துடன் கலந்து மோருடன் கலந்து 48 நாட்கள் பருகச் செய்தால் கைமேல் பலன் கிட்டும்.

மூலச்சூடு, கருப்பைச்சூடு ஆகியவற்றைப் போக்குவதில் கறிவேப்பிலை வல்லமை பெற்றதாகும் உடல் சூட்டினைத் தணித்து உடல் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றது. இதனால் கண் முதல் கால் நகம் வரை ஊட்டம் பெறும். குடல் சூட்டினால் வயிற்றுப்புண், காலரா, அமீபியாசிஸ், சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன் வெந்தயம்சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நிவராணம் துரிதமாகும்.

பார்லி

பார்லி மாவுத்தன்மை கொண்ட உணவாகும். இது உடலுக்கு உரமளித்து சிறுநீரை வெளியேற்றி செரிமானத்தை உண்டு பண்ணும். இனிப்பு சுவையுள்ள பார்லி கஞ்சி செய்து சாப்பிடுவதால் சிறுநீர் தடையின்றி வெளியேறும். அஜீரணக் கோளாறுகள் வராது.

கருவுற்ற மகளிர் இருதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், இரத்த சோகை நோயாளிகள் ஆகியோருக்கு கால் வீக்கம் காணும். அவர்களுக்கு பார்லி கஞ்சி சிறந்த உணவாகும். பார்லி கஞ்சி சிறுநீரைப் பிரித்து கால்வீக்கத்தை வற்றச் செய்யும்.

உஷ்ணம் காரணமாக வரும் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிறு எரிச்சல், நீரிழிவு நோயில் காணும் நீர் வேட்கை ஆகியவை தணிய பார்லி கஞ்சியுடன் எலுமிச்சம் பழச்சாறும், தேனும் கலந்து பருகலாம்.

தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்குப் பார்லி கஞ்சி சிறந்த டானிக்காகும்.

வாழைத் தண்டு

வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.

வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும்.

வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வû தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.

வாழைப் பூவை வேகவைத்து பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும் வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.

வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.

(இக்கட்டுரை மாற்று மருத்துவம் ஜூலை 2009 இதழில் வெளியானது)

 

Pin It