வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்று அழைக்கிறார்கள். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

onion 3வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதிலுள்ள அலைல் புரோப்பைல் டை சல்ஃபைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டைச் செடி இலைச் சாற்றைக் கலந்து காதில் விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத்தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்துச் சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து மீண்டும் இலேசாகச் சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றைப் பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய இரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டுச் சூடுபடுத்திக் குடித்து வர மேகநோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்துச் சாப்பிட மேகநோய் குறையும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது.

வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இழந்த சக்தியை மீட்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காய சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்புக் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றைச் சேர்த்து அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

சிறிது வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கித் தேய்த்து வர முடி வளரும்.

நன்றி : இனிய திசைகள் – மே 2014

Pin It