மறுவாசிப்பு, மறுவாசிப்பு அப்படீன்னு சொல்றாங்களே, முயல் ஆமையை ஓட்டப் பந்தயத்திற்கு அழைத்த நம்ம பாட்டி காலத்துக் கதையைக் கொஞ்சம் வேறு மாதிரி வாசிக்கலாம், வருகிறீர்களா?

வாட்ட சாட்டமான, வஸ்தாது உஸ்தாது ‘வேகத் திரு' முயலார் அவர்கள் `சோகத் திரு' ஆமையை "என்னவே, ரன்னிங் ரேஸ் வச்சிக்குருவோம், வர்றீயளா" என்று தெனாவெட்டாகக் கேட்கிறார். அசராத ஆமையார் இப்படி பதில் கொடுக்கிறார்: "என்ன இப்படி கேட்டுப்புட்டியள், இப்பமே `ஸ்டார்ட்' சொல்லிரும், வந்துருதேன்" முயல் வகையறாக்களின் வேக பிரதாபங்களை, இணையதளத்தில் `கூகிள் சர்ச்'சில் பார்த்துப் பார்த்து அந்தப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு தீர்மானமான முடிவோடு `ஸ்போர்ட்ஸ் சர்ட்' மாட்டிக் கொண்டு வந்து நிற்கும் ஆமையார், பந்தயம் தொடங்கிய மாத்திரத்தில் எகிறிக் குதித்துப் பறந்து ஓட மகா முயற்சி எடுக்கலானார். பிறகென்ன, உடலுக்குத் தாங்காத அளவுக்கதிகமான அந்த செய்கையைத் (Exertion) தாள மாட்டாது ரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதற, சோகத்திரு ‘தெய்வத் திரு' ஆகிவிடுகிறார்.

பதட்டம், கலக்கம், ஓயாத மன அழுத்தம் இன்றைய வாழ்க்கையின் இலவச இணைப்பாக வந்து குடியேறி விடுகிறது. ‘ஹைபர் டென்ஷன்' நடுத்தர வர்கத்தின் விவாதப் பொருளாகி இருப்பது, ‘தி ஹிண்டு' நாளேடு அண்மையில் (20.08.2007) தலையங்கம் எழுதி எச்சரிக்கும் அளவிற்குப் போயிருக்கிறது.

சிறுநீரக உதவி அறக்கட்டளை (KHT) என்ற அமைப்பு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளும், மருத்துவப் பணிகளும் உயர் ரத்த அழுத்த கேஸ்களை 10ரூ குறைத்திருப்பதாக டாக்டர் மணி கூறுகிறார். அவரது தலைமையிலான அந்தக் குழு உணவு வகைகள், வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்யாமல் ‘டென்ஷனை'த் தவிர்க்க முடியாதென தெரிவிக்கின்றனர்.

இதைச் சொன்னதற்கே, ‘அதெப்படி சார் முடியும்', என்று டென்ஷனாகி விட்டார் நண்பர் ஒருவர். அவரைச் சொல்லிப் பயனில்லை. நமக்கு வழிகாட்டியாக நாம் புரிந்து வைத்திருக்கிற விவகாரங்கள் அப்படி. தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளின் டிபன்பாக்சையும், வீட்டு ஃப்ரிஜ்களையும் ‘ரொப்புகின்றன'. உயர் வெப்பத் தீயில் வாட்டி எடுத்துத் தயாராகும் உணவின் கொலஸ்ட்ரால் ஒரு பக்கம். சுவையூட்டி அஜினமாட்டோ வகையறாக்களின் கைவரிசை ஒரு பக்கம். எல்லா பிஸ்கட்டுகள், சிப்ஸ் தயாரிப்பிலும் 200ரூக்கு மேல் உப்பு அள்ளிக் கொட்டுகிறார்கள். ஓட்டல் ‘சாம்பார்'களைக் கேட்க வேண்டியதில்லை. மாங்காய்த் துண்டு முதல் வேகவைத்த ‘வேர்க்கடலை மிக்ஸ்' வரை நமக்கு உப்பு ருசி தேவையாய் இருக்கிறது. போதாததற்கு ‘ரொம்ப நாள் வச்சுக்கலாம்' என்று டப்பா டப்பாவாக பதப்படுத்தப்பட்ட (Processed Items) உணவு சமாச்சாரங்கள்-வாங்கினீயா, இல்லையா என்று மிரட்டும் விளம்பரங்கள்.

இந்த விளம்பரங்களை எங்கே நாம் கவனிக்காது விட்டுவிவோமோ என்று, வேண்டுமென்றே அவற்றின் ஒலியின் அளவு கூட்டப்பட்டிருக்கிறது. மெகா சீரியல் நாயகி மிரட்டலை விட, தொடர்ந்து வரும் விளம்பரங்களின் அதட்டல் அதனால்தான் தலையில் இடியாய் வந்து இறங்குகிறது. இந்தப் பேரோசைகள் (Noise Pollution) மன அழுத்தத்தை மேலும் கூட்டுகின்றன.

பதட்டமான வாழ்க்கையை நாம் ‘க்யூ'வில் நின்று ‘ஏடிஎம்' கார்டு போட்டு அல்லவா வாங்கத் துடிக்கிறோம்.

கடந்த மாதம் சென்னை புறநகர் ரயில் பயணத்தில் கோடம்பாக்கத்திலிருந்து, கடற்கரை வரை மாறி மாறி யார் யாரிடமோ ‘செல்'லில் பேசிக்கொண்டே வந்தார் ஒருவர். அவர் திருவண்ணாமலையை அடுத்த சிறு நகரத்திலிருந்து அவசர வேலையாக குடும்பத்தோடு சென்னை வந்திருக்கிறார். அவரது மகன் படிக்கும் பள்ளியில் ஆடி பதினெட்டுக்காக திடீரென்று ஒரு வாரம் லீவு விட்ட செய்தி இங்கே வந்த பிறகுதான் தெரிகிறது. பையன் என்ன ஆவான் என்பதுதான் பதட்டம். முழுமையும் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்?

பையன் படிப்பது திருச்செங்கோட்டில் - போர்டிங் ஸ்கூல்! விடுதிக்கும் விடுப்பு. மூடிவிடுவார்கள். இரண்டு பஸ் மாறி பையன் சொந்த ஊர் வரவேண்டும் - வீட்டிலோ ஆள் யாரும் இல்லை. எல்லாம் சென்னையில்!

"பையன் பிளஸ் டூ வா, சார்," என்று மெதுவாகப் புகுந்தேன் நான்.

"இல்ல சார், ஏழாவது" என்றாரே பார்க்கணும்.

"இந்த வயசுல எதுக்கு சார் ஹாஸ்டல்"- நான் விடுவதாயில்லை.

"பையன் முரடா இருக்கறான் சார், அதான் ‘டிஸிப்ளின்' வேணும்னுட்டு அங்கே சேத்திருக்கோம்..."-அவர்.

"இன்னும் முரடா இல்ல சார் ஆவான். நீங்களும் இல்ல பதட்டப்பட்டுக்கிட்டே பொழுதை ஓட்டணும்", என்று நான் சொல்ல அவர் பதிலேதும் சொல்லவில்லை.

டிஸிப்ளின், போட்டி, முதல் ரேங்க், பெரிய படிப்பு... என லட்சிய மைல்கற்களை நோக்கிய பாதையில் குழந்தைகளைப் பதட்டப்படுத்தி நாமும் அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.

‘ரிலாக்ஸ் பண்ண டி.வி. பார்க்கிறேன் என்று ‘கிரிக்கெட்' பார்க்கிற கூட்டம் எத்தனை பதட்டம் அடைகிறது? ‘உலகக் கோப்பை' பார்த்த ஆசாமி நாற்காலியிலேயே கதை முடித்துக் கொண்டார் அல்லவா? அவ்வளவு ஏன், சேனலை மாற்றப் போனால், ‘ஏய், மாத்தாதே' என்று WWF நமது ஹாலுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்து விடுகிறதே...

வேலை நேரம் அதிகரிப்பதும், பளு கூடுவதும் யோசிக்கக் கூட நேரமின்றிச் செய்கிறது பிறகு உறக்கத்திலிருந்து திருடப்படும் கொஞ்சம் ‘ரிலாக்சேஷன்' எப்படி உண்மையான ‘ஓய்வு' அளிக்கும் நேரமாக இருக்க முடியும்? வங்கி நிர்வாகம் ஒன்று அண்மையில், ஊழியர்கள் டென்ஷன் படக்கூடாது. ‘வாக்கிங்' போக வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேலை நேரத்தை மகிழ்ச்சியாகக் கடக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்களாம். நல்ல விஷயம்! ஆனால், கெடுபிடி நிறைந்த பணிச்சூழல், எப்படி பதட்டமின்றி வாழ அனுமதிக்கும்?

8 மணி நேர வேலை என்பது மட்டுமல்ல 18ம் நூற்றாண்டின் போர்க்குரல்! 8 மணி நேர ஓய்வு, மீதி உறக்கம் என்பதும் சேர்த்தது அது! சிந்தனைக்கு, கேளிக்கைக்கு, உற்சாகத்திற்கு நேரம் வேண்டும் என்ற ஆன்மீக (Spiritual) தளத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை அது, இன்று ஐ.டி. துறையில், உழைப்போரிடையே எத்தனை மன இறுக்கம் வெடிக்கிறது பாருங்கள்! அதுதான் அங்குள்ள புத்திசாலி நிர்வாகங்கள், யோகா- வாழும் கலை-பிறந்தநாள் வாழ்த்து... அது, இது என்று எப்படியாவது ‘கிடா மடக்கப்' பார்க்கிறார்கள்.

சமூகச் சூழலின் பாதிப்பை அவரவர் சொந்த பிரச்சினையாக நோக்கும் கணத்திலேயே மன அழுத்தம் கூடி விடுகிறது. தன் வரைக்கும் பார்த்துக் கொண்டால், தான் மட்டும் எப்படியாவது ஜெயித்து விட்டால் போதும் என்ற சிந்தனை பதட்டங்களை ஈவிரக்கமின்றிக் கூட்டுகிறது. மன அழுத்தம் ஏற்கனவே இருக்கிற நோய்களின் சுருதியை இன்னும் கூட்டவும், இல்லாத நோய்களுக்கு அழைப்பு மணியை இசைக்கவும் செய்கிறது. இதயம், சிறுநீரகம், செரிமான உறுப்புகள் என்று எந்த அறைக்குள்ளேயும் ‘பதட்டம்' நுழைந்தால் சிக்கல் அதிகரிக்கிறது.

திறந்த மனது, பரந்த எண்ணம், விரிந்த உறவுகள், பகிரும் இன்பங்கள், துயரத்தில் தோழமை என்ற வாழ்க்கைமுறை அழுத்த தூசுகளைத் துடைத்து பளுவை இறக்கி வைக்கிறது. அப்போது ஒலிக்கிற பாடல்கள், ‘சும்மா அதிருதில்ல' என்று மிரட்டாமல் மெல்லோசையாய் வருடி விடுகிறது.

-மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், எம்.டி. (ஓமியோபதி) அவர்களது ஆலோசனைக் குறிப்புகளுடன். 

(நன்றி : வங்கி ஊழியர் திங்களிதழ் செப்டம்பர் 2007)

Pin It