ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஒர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு பிள்ளை விளைவிக்கும் ஓர் பண்ணை, ஓர் ஆணின் கண் அழகிற்கு ஒரு அழகிய அலங்கரிக்கப் பட்ட பொம்மை என்பதெல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுத்தப் படுகிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். - குடி அரசு 21.7.46

சில நாட்களுக்கு முன்னால் பணம் செலுத்துவதற்காக தேசியமயமாக்கப் பட்ட வங்கி ஒன்றிக்குச் சென்றேன். காலை நேரம் என்பதால் சற்று கூட்டத்துடன் வங்கி பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. நானும் எனக்குரிய வரிசையில் போய் நின்றேன். சற்று நேரம் கழித்து நான் பணம் செலுத்தும் முறை வந்தது எனக்கு முன் ஒரு ஆண் பணத்தை செலுத்தி விட்டு அதை புத்தகத்தில் வரவு செய்வது சம்பந்தமாக வங்கி அதிகாரியிடம் ஏதோ வாக்கு வாதத்தில் இருந்தார். நானும் என்னவென்று சற்று என் காதை தீட்டிக் கொண்டு (நமக்குத்தான் அடுத்தவர் விடயம் என்றால் அலாதிபிரியமாச்சே) கேட்டேன்.

அப்போது அந்த நபர் தன்னுடைய மனைவியின் சேமிப்புப் புத்தகத்தில் மனைவியின் முதல் எழுத்தை அப்பா பெயருக்கு பதிலாக தன்னுடைய பெயரை போட்டிருப்பதாகவும் மாற்றித் தரும்படி கேட்டார். அதற்கு அந்த அலுவலர் (ஒரு பழைய பஞ்சாங்கம்) அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாத்தான் இருக்கிறது. கணவர் பெயரைத் தான் போடவேண்டும் என்றார்.

அதற்கு அந்த நபரும் விடாமல் திருமணத்திற்குப் பின் கணவர் பெயரைத்தான் போடவேண்டும் எந்த ழு.டீ வும் இல்லாதபோது ஏன் என்னுடைய பெயர் முதல் எழுத்தாகப் போட்டீர்கள் என்று வாதிட்டும் மேலும் இது சம்பந்தமாக ஒன்றிரண்டு பேர் சேரவும், அந்த அதிகாரியும் வேறு வழியில்லாமல் ஏதோ அப்பாவின் முதல் எழுத்தைப் போட்டால் அந்த வங்கியே இரண்டாகப் பிளந்து பூமிக்குள் போய்விடுவதைப் போல் அந்த நபரை ஒரு பார்வை பார்த்து, முணங்கிக்கொண்டே மாற்றிக்கொடுத்தார். வந்தவரும் நினைத்தை அடைந்த மகிழ்ச்சியில் கிளம்பிவிட்டார். நமக்குத் தான் ஒரு குழப்பமான மன நிலை.........???

தன் மனைவிக்குத் தன்னுடைய முதல் எழுத்தைப் போடச் சொல்லாமல் அந்தப் பெண்ணின் தகப்பனாரின் முதல் எழுத்தைப் போடச் சொன்னதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த முடிவு அவரின் சிந்தனை மாற்றமா? அல்லது பின்னால் ஏற்படும் நிர்வாக கோளாறு காரணமா? ஏனென்றால் அவரின் மனைவி வேலைக்குச் செல்பவராக இருந்து, அவரின் ஒய்வுக்குப் பிறகு வரும் பலன்களை அனுவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் நினைக்கலாம். பரந்த மனப்பான்மை உள்ளவராக இருந்தால் வங்கிக் கணக்கு துவங்கும் போதே விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்திருக்கலாம். மேலும் இந்த விடயத்தை சம்பந்தபட்ட பெண்ணே வங்கிக்கு வந்து கையாண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

திருமணாகி வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது அப்பாவின் முதல் எழுத்தைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பிரச்சனை திருமணமாகி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் அடிமைகளாக வாழும் பெண்களுக்குத் தான். இவர்கள் தான் காலம் முழுவதும் கணவரின் முதல் எழுத்தைப் போட்டுக் கொள்வதோடு மட்டுமில்லாமல், குடும்பத்தின் ஆயுட்கால அடிமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தப் பெண்களின் அனைத்துவிதமான அடையாளங்களிலும் (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிப் புத்தகம்) கணவரும் அவர்களின் முதல் எழுத்தும் தான் இருக்கும். நூறு நாள் திட்ட வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் முதியோர் உதவித்தொகைப் பெறும் பெண்கள், தவிர வீட்டில் இருக்கும் நிறைய படித்த மனைவிமார்களுக்கு வங்கிக் கணக்குக் கூட இல்லை என்பது தான் வருத்தமான செய்தி.

இந்தச் சமூகத்தில் திருமணமான பெண்கள், ஏன் கணவனை இழந்தப் பெண்களை விட, கணவனை விட்டுப் பிரிந்து குழ்ந்தைகளுடன் தனித்து வாழும் பெண்களின் நிலைமை தான் மிகவும் கொடூரமானது. கணவனே வேண்டாம் என்று வந்தாலும் அந்தப் பெண்ணையும், குழந்தையும் அந்த முதல் எழுத்து எப்போதும் விடுவதாக இல்லை. மாற்றிக் கொள்ள சட்டத்திலும் இடமில்லை. சமூகத்தின் அத்தனை வினாக்களும் அந்த முதல் எழுத்தையே நோக்கியே இருக்கும்.

மறக்க வேண்டும் என்று நினைக்கின்ற வாழ்வின் அந்த மோசமான பகுதியை இவர்களின் கண்முன்னே காட்சியாய் வந்து நிறுத்திக் கொண்டே இருக்கும். இதைத் தான் இந்தச் சமூகமும் விரும்புகிறது. இந்த நடைமுறைக்கு பயந்துதான் சில பெண்கள், கணவன் எவ்வள்வு மோசமானவனாக இருந்தாலும் கூட அவனுடனே சேர்ந்து வாழத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். பெண்ணைப் பெற்ற பெற்றோரும் தங்கள் பெண்களை நிர்பந்திக்கிறார்கள்.

தாயின் பெயருடைய முதல் எழுத்து நமக்கான initial

என்னைப் பொருத்தவரை பெண்களுக்குத் தீர்வாக இருப்பது, தங்களின் முதல் எழுத்து கணவருடையதோ? அல்லது அப்பாவினுடயதோ அல்ல, ஏனென்றால் இருவரும் ஆண்கள் தான். மேலும் அப்பாவின் முந்தைய கதாபாத்திரம் கணவர் தானே!. ஆகையால் பெண்கள் இந்தச் சமூகத்தில் தனித்துவமாக வாழத் தேவையானது அம்மாவின் முதல் எழுத்து தான். அது தான் பாதுக்காப்பாகவும் இருக்கும். அம்மாவின் பெயரை முதல் எழுத்தாக வைத்தால் தான், நம் ‘ஈரோட்டுக் கிழவன்’ சொன்னது போல் இவன் இன்னாருடைய கணவன், இவன் இன்னாருடைய மகன் என்ற நிலைமை மாறும். பெண்களுக்கான் அடிமை விலங்கும் உடைபடும்.

ஆதி காலத்தில் பெண்கள் தான் குடும்பத் தலைவராகவும், குடும்பத்தை வழி நடத்திச் செல்பவராகவும் இருந்திருக்கிறார்கள். தாய் வழிச் சமூகமாக இருந்த காலத்தில், கூட்டமாக ஆண்கள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருக்க, பெண்கள் தான் குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று, குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித் தனி வேலைகளைப் பிரித்துக் கொடுத்து, தலைமைப் பொறுப்பை சிறப்பாக நடத்தி வந்தனர்.

வேட்டையாடும் சமூகமாக இருந்தவர்கள், மெல்ல நதிக்கரை நாகரீத்திற்கு வந்து விவசாயத்தில் ஈடுபட்டு ஒரே இடத்தில் தங்கவும் செய்கிறார்கள். அப்போதும் பெண்கள் தலைமையில் கீழ் தான் ஆண்கள் காவல், மற்றும் கால் நடை பராமரிப்பு பணியைச் செய்து வந்தனர். பெண்கள் பயிர் பராமரிப்பு, விளைந்த பொருட்களை பிரித்துக் கொடுப்பது ஆகிய பொறுப்புகளை வகித்துவந்தனர். மண் பயிரையும் பெண் உயிரையும் விளைவிப்பதால் இரண்டையும் மதிக்கும் இனமாகத் தான் ஆண் சமூகம் இருந்து வந்தது.

நீண்ட காலமாக ஒரே இடத்தில் வசித்ததால் நிலத்தை தன் சொந்த நிலமாக பாவித்தார்கள். அதே போல் பெண்கள் தாய்மையடைந்த காலத்தில் ஓய்வுக்காகவும், பிள்ளை பிறப்புக்காகவும், ஆண்களின் பாதுகாப்பில் வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். நாளடைவில் அந்த பிள்ளைகளை வளர்ப்பதற்கும் பெண்கள் வீட்டில் நிரந்தரமாக அடைத்து வைக்கப்பட்டனர். பெணகளை பாதுகாக்கவும், மற்றும் நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஆண்களின் வசம் மாறியது.

தலைமைப் பொறுப்பின் மூலம், தனக்குக் கிடைத்த சமூக அந்தஸ்து, வசதி, மரியாதை இவையனைத்தும் வாரிசு என்ற அடிப்படையில் ஆண் குழந்தைகளுக்குத் தான் என்று முடிவெடுத்து, தனக்குத் தெரிந்த அனைத்து திறமைகளையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, பெண்களை தனிமைப்படுத்தினார்கள். அதுவரை சமுதாயத்தை உருவாக்கிய பெண்கள் சமுதாயத்திலிருந்து விலகி வீட்டுக்குள் அடங்கும் சூழல் ஏற்பட்டது.

மொழித்திறன், ஆளும் திறன், சூழ் நிலையைக் கையாளுதல் போன்ற பன்முகத் திறமை கொண்ட பெண்களுக்கு மீண்டும் இவை எதுவும் கிடைக்ககாமல் பார்த்துக் கொண்டது. இதனால் வேறு வழியின்றி பெண்களும் ஆண்களையே நம்பியே வாழ்ந்த் வந்தார்கள். பவுத்தம் பரவிய காலத்தில் பெண்களின் நிலை சற்று முன்னேறியது. ஆனால் மீண்டும் வேத காலத்தில் பெண்கள் முழு அடிமையாக மாற்றப்பட்டார்கள். ஆண் சொல்லைக் கேட்காமல் நடக்க மறுப்பவர்கள் அடங்காப் பிடாரிகளாக சித்தரிக்கப்பட்டு ஆணுக்கு அடங்கி நடப்பேதே நல்ல பெண்ணுக்கு அழகு என்று மூளைச் சலவை செய்யப்பட்டது. பெண்கள் விலங்கினும் கீழாய் நடத்தப் பட்டார்கள்.

காலப் போக்கில் உலங்கெங்கும் நடந்த பல போராட்டங்கள் மூலமாகவும், குறிப்பாக பெண்களால் பெண்களுக்கு நடந்த போராட்டங்கள் மூலம், பெண் இனம், சற்று விடுதலையடையத் தொடங்கியது. தமிழகத்தில் பெண் கல்வியும் அறிவும் பெற்று, சுயமரியாதையுள்ளவளாக மாற பெரிதும் காரணமாக இருந்தவர், அந்தப் பெண்களாலேயே பெரியார் என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவர் எங்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார்.

பெண்கள் கல்வி அறிவு பெற்று, சமூகத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து இன்று கால் பதிக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. இவ்வளவு முன்னேறிய காலத்திலும் கூட பெண்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கவைப்பது என்பது மிகவும் மோசாமானது. ஒரு பெண் தான் வேலைபார்க்கும் அலுவலத்தில் பெரிய அதிகாரியாக் இருந்தாலும் கூட (அவருக்கு கீழே பல ஆண்கள் வேலை பார்ப்பார்கள்) வீட்டில் கணவனுக்கு பணிவிடை செய்பவளாகத் தான் இருக்கிறார்கள். தன்னுடைய் பணம் எடுக்கும் அட்டையை கணவனிடம் கொடுத்துவிட்டு தன்னுடைய சின்னச் சின்னத் தேவைகளுக்கூட கணவனிடம் கேட்டுப் பெறுவது என்பது ஆண்களுக்கு அழகாக இருக்கலாம்.

ஆனால் பெண்களுக்கு சுயமரியாதைக் கேடான விடயமாகும். நான் என் துணைவரை ஊருக்கு அனுப்ப பேருந்து நிலையம் சென்றிருந்தேன் (பேருந்து நிலையம் சற்று தூரம் என்பதால் நான் தான் எனது வாகனத்தில் கூட்டிக்கொண்டு செல்வேன்) பேருந்து வர 10 நிமிடமானது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அவரவர் பேருந்தைப் பிடித்துப் பணிக்குச் செல்ல ஒவ்வொருவரும் ஒடிக்கொண்டிருந்தார்கள், அதில் கொடுமை என்னவெனில் ஒரு பத்துப் பெண்களாவது இருக்கும், அனைவரும் தங்கள் கணவரோடு வேகமாக இரு சக்கரத்தில் வந்து பேருந்தைப் பிடிக்கிறார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் செய்வது தங்களின் பேருந்துக்கான் கட்டணத்தை கணவன்மார்களிடம் கேட்டுப் பெறுவது தான். இதில் வயது வித்தியாசமே இல்லை. அது என் மனதை மிகவும் பாதித்தது

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும். முதலில் நமது முதல் எழுத்தை மாற்ற வேண்டும், அது அப்பாவோ, கணவரோ இரண்டும் வேண்டாம். ஒன்றின் தொடர்ச்சி மற்றொன்று. இரண்டுமே ஆணாதிக்கச் சிந்தனை தான். நமக்கான முதல் எழுத்து நம் அம்மாவின் முதல் எழுத்தாக இருக்கட்டும். ஏனென்றால் அம்மா தான் நம் வலியறிந்தவள், நம் இனமானவள். நம்மால் மட்டுமே ஒரு ஆண் மகனை நல்ல மனிதராகவும், அதன் தொடர்ச்சியாக நல்ல கணவராகவும், அதன் மூலம் ஒரு மேம்பட்ட சமுதாயத்தையும் உருவாக்கவும் முடியும்...

“பெண்களே; வீரத்தாய்மார்களாக ஆக விருப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன் மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிக மிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகதீர்கள்; எதிர் காலத்தில் ‘இவள் இன்னாருடைய மனைவி’ என்று அழைக்கப்படாமல் ‘இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப் படவேண்டும்.” - பெரியார் - குடிஅரசு 5.6.1948

Pin It