கழிவுநீர்அகற்றல் சுத்தீகரித்தல் முறை (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து)

கழிவுநீர் என்றால் என்ன?

நகர்ப்புறக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயக்குனரகம் Urban Waste Water Treatment Directive (91/271/EEC) என்பது ஐக்கிய ஐரோப்பிய நாடுகளின் நகர்ப்புறக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயக்குனரங்களில் ஒன்று. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளின் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தேசிய அளவில் சட்டம்இயற்றி இந்த இயக்குனரகத்தின் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த இயக்குனரகம், வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் (சமையலறை, குளியலறை, கழிவறை), வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்துவரும் கழிவுநீர் மற்றும் சாலைகளில் ஓடும் மழைநீர் எனஇவை அனைத்தும் கலந்த நீரினைக் கழிவுநீர் என வரையறுக்கிறது. 

ஏன் கழிவுநீரைச் சுத்திகரிக்க வேண்டும்?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வட-அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளை உள்ளடக்கியது ஐக்கிய ராஜ்ஜியம். இங்கு கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகளின் சதவிகிதம் 0.1ரூ ஆக இருப்பினும், கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஏனெனில் இக்கழிவுநீர், ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளிலோ, விளைநிலங்களிலோ, குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது சுற்றுப்புறங்களிலோ சுத்திகரிக்காமல் கலந்தால் அங்கு வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு அடையும். நோய்நொடிகள் பெருகும். எனவே, கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இங்கு கழிவுநீரிலுள்ள மாசினை (திடக்கழிவுகள், நுண்ணுயிர்க்கிருமிகள், தாதுப்பொருட்கள், நச்சுத்தன்மைகொண்டஇரசாயனங்கள்) அகற்ற பல்வேறு யுக்திகள் கடைபிடிக்கப் படுகின்றன.

பிறகு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மீண்டும் நீர்நிலைகளில் கலக்கப்பட்டு, நீர்நிலைகளின் தன்மை காக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்டபின் எஞ்சும் திடக்கழிவுகள் மீண்டும் விவசாய நிலங்களுக்கு உரமாகவோ, மண்ணில் ஆழ்குழி தோண்டிப் புதைக்கப்பட்டோ அல்லது எரியூட்டியோ அகற்றப்படுகிறது.

கழிவுநீர்சேகரித்தல்:

ஒவ்வொரு வீட்டின் கழிவறைகளும் அந்தந்த வீடுகளின் கழிவுநீக்கக் குழாய்கள் வழியாக, நேரடியாக, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளோடு இணைக்கப் பட்டிருக்கும். வீடுகளையும், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் இணைப்பதற்காக, 6,24,200 கீ.மீ. நீளம்கொண்ட பாதாளக்குழாய்கள் உள்ளன. இவை வழியாக நாள்தோறும் ஏறத்தாழ 100 கோடி (100,00,00,000) லிட்டர் தண்ணீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. இதற்கென 9000 சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன. ஒட்டுமொத்த இங்கிலாந்தின் 96 சதவீத மக்கள் தொகையினர் இவைபோன்ற கழிவுநீக்கும் தனியார் நிறுவனங்களின் சேவையால் பயன்பெறுகின்றனர்.

மீதமுள்ள 4 சதவீத மக்கள் தொகையினர், கழிவுநீர் கொண்டு செல்லும் பாதாளக் குழாய்களின் தடத்தில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதால் அவர்கள் தங்கள் வீட்டருகில் ஒருதொட்டி அமைத்துக்கொள்கின்றனர். அது நிரம்பும்போது, இதெற்கென உள்ள நிறுவனங்கள், இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை உறிஞ்சி எடுத்துச்சென்று சுத்திகரிக்கின்றனர். யாரும் குழிகளில் இறங்கி, கழிவுகளை அள்ளும் பழக்கம் இங்கு இல்லை.

சுத்திகரிக்கப்படும்முறைகள்:

ஆயத்தநிலை: பெரும்கற்கள், குப்பைகள் (நெகிழிப் பைகள், இலைகள், காகிதங்கள்) பிரித்தெடுக்கப்படுகிறது.

முதல்நிலை: கழிவுநீரில் உள்ள கரிம / உயிர்மக் கழிவுகள் படியவைக்கப் படுகின்றன.

இரண்டாம்நிலை: நுண்ணுயிரிகளைக் கொண்டு படியவைக்கப்பட்ட கரிம / உயிர்மக் கழிவுகள் மக்க வைக்கப்படுகின்றன.

மூன்றாம்நிலை: சுத்திகரிப்பு நிலையங்கள் மீதமுள்ள கழிவுநீரில் உள்ள காட்மியம், மெர்குரி, போன்ற கொடிய தாதுப்பொருட்களைப் பிரித்தெடுக்கின்றன.

இறுதியாக, சுத்திகரிக்கப்பட்ட நீரின் தூய்மையை அறிந்தபின் அவை ஆறுகளிலோ, கடலிலோ கலக்கப்படுகின்றன. மக்க வைத்த குப்பைகளில் உள்ள நுண்ணுயிர்கள் புறஊதாக் கதிர்கொண்டு அழிக்கப்படுகின்றன. பின்னர், அவை உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

குப்பைகள் சேகரித்தல்:

ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பைகளுக்கு என ஒரு குப்பைத்தொட்டி, மறுசுழற்சி செய்யத் தகுந்த குப்பைகளுக்கென ஒரு தொட்டி, தோட்டக் கழிவுகளுக்கு என ஒருதொட்டி, கண்ணாடிப் பொருட்களுக்கென ஒருதொட்டி என நான்கு விதமான குப்பைத்தொட்டிகள் தரப்படுகின்றன. இருவாரத்திற்கு ஒருமுறை மக்கும் குப்பைகளும், மறுசுழற்சி செய்யத் தகுந்த குப்பைகளும் சேகரிக்கப்படும். தோட்டக் கழிவுகள் மாதம் ஒருமுறை சேகரிக்கப்படும்.

மக்கள் தங்களது குப்பைத்தொட்டிகளை அதற்குரிய அறிவிக்கப்பட்ட நாட்களில் வீட்டின்முன் வந்து வைத்துவிடுவர். சேகரிக்கவரும் குப்பை லாரியில் பொதுவாக மூவர் இருப்பர். ஒருவர் வாகன ஓட்டுனர். இருவர் குப்பைத்தொட்டிகளை வண்டியின் அருகில் தள்ளிவந்து வைக்கவும், கோப்பைகள் கொட்டியபின் அவற்றை மீண்டும் கொண்டுசெல்லவும் உதவுவர். அந்த உதவியாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு உடைகள் (high visibility Jacket, safety shoes etc.) காலணிகள், கைஉறைகள் வழங்கப்படும்.

சாலைகளைத் துப்புரவு செய்தல்:

சாலைகளைத் துப்புரவு செய்ய, துப்புரவுப் பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்குக் குப்பைகளைக் கையில் தொடாமல் எடுக்கும் வகையில் நீண்டகோளில் இருவிரல் போன்ற அமைப்பு கொண்ட கருவி கொடுக்கப்படுகிறது. சாலைகளைச் சுத்தம்செய்ய, லாரியில் பிளாஸ்டிக்பிரஷ் பொருத்தப்பட்டு, அது சுழன்று சுத்தம் செய்கிறது. தேவைப்படும்போது தண்ணீரை அடித்தும் சுத்தம்செய்கிறது. சாலைப்பணியாளர்களுக்கும் மேற்சொன்னதுபோல் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுகிறது. சாலைப் பணியாளர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனம் மிக அதிக அளவில் காப்பீடு வழங்குகிறது.

பொதுவாகனங்களில் குப்பைகள் அகற்றும்முறை:

பொது வாகனங்களில் குறிப்பாக இரயில் மற்றும் பேருந்துகளில், கழிவுகள் சேகரிக்கப்பட்டு இறுதியாகப் பேருந்து / ரயில்நிலையங்களில் இதெற்கென உள்ள துப்பரவுத் தொழிலாளர்கள் மின்இயந்திரங்களைக் கொண்டு உறிஞ்சி எடுப்பார். திடக்கழிவுகள் காகிதம், உணவுப்பொருட்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு அவை அனைத்தும் அதற்கென ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களால் எடுத்துச் செல்லப்படுகின்றன.

வணிக வளாகங்களில் குப்பைகள் அகற்றும்முறை:

வணிக வளாகங்களில் ஆங்காங்கு குப்பைத்தொட்டிகளும், துப்புரவுத் தொழிலாளர்களும் இருப்பார்கள். திடக்குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களால் எடுத்துச்செல்லப்படும். கழிவறைக் கழிவுகள் மேற்கூறியதுபோல் பாதாளச் சாக்கடைக்கு அனுப்பப்படும்.

குறிப்பாக இங்கிலாந்தில், ஜாதி கிடையாது என்பதால், இந்த ஜாதியினர் தான் இந்த வேலை பார்க்கவேண்டும் என்ற சிந்தனை இங்கு இல்லை. அனைவருக்கும், அவர்கள் செய்யும் தொழிலுக்குரிய மரியாதையை மக்கள் வழங்குவர். தொழில் அடிப்படையில் இழிவாகப் பார்க்கும் பண்பு இங்கு கிடையாது.

இங்கிலாந்தில் உள்ளது போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள், நவீன சுத்திகரிப்புக் கருவிகள், பணியாளர்களுக்குப் பாதுகாப்பு, உயர்ந்த சம்பளம், மருத்துவ உதவி என எல்லாமே இந்தியாவில் வந்துவிடலாம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் கழிவுகளை அகற்றவேண்டும்; அனைத்து ஜாதியினருக்கும் தொண்டு செய்வதற்காகவே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என்பன போன்ற பிறவிச் சிந்தனைகள்தான் இந்தியாவில் இந்து மக்களை ஆட்கொண்டுள்ளன. அந்த ஆதிக்க இந்துப் பண்பாட்டுக் கழிவுகளும், இந்துமதச் சிந்தனைக் கழிவுகளும் அழியாதவரை கருவிகளாலும், நவீனங்களாலும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், இழிவுகளையும் அகற்ற இயலாது. கழிவு அகற்றும் துறையில் மாற்றமும் வராது.

Reference:

https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/69592/pb13811-waste-water-2012.pdf

டாக்டர் ஜெயசீலன், இலண்டன்

Pin It