‘தமிழர் தொல்லியல் சிலைகள் மீட்புப்’ பொதுக்கூட்டம். இப்படி ஒரு அறிவிப்பை ஆர்.எஸ்.எஸ்.ஸோ, இந்து முன்னணியோ வெளியிடவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கும், மே 17க்கும் பெயர் மட்டுமே வேறுபாடு என்று பல பெரியாரியத் தோழர்கள் அவ்வப்போது கூறி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது மேற்கண்ட அறிவிப்பு.
“மேற்குலகில் டாவின்சி, மைக்கலேஞ்சலோ போன்ற சிறப்பான ஆளுமைகளின் படைப்புகளுக்கும் மேலான, அவர்களுக்கும் முந்தைய காலத்தில் உலோகத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் களவு போகின்றன.”
இந்தத் தகவல் அந்தப் பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ளது. இதை மேலோட்டமாகப் பார்த்தால் சரியாக இருப்பது போலத் தோன்றும். இவர்கள் எடுத்துக்காட்டியுள்ள டாவின்சி, மைக்கலேஞ்சலோ இருவரது ஓவியங்களையும், இவர்களது வரலாறுகளையும் பார்த்தால், சில உண்மைகள் புரியும்.
லியனார்டோ டாவின்சி இத்தாலியைச் சேர்ந்த மிகச் சிறந்த கிறிஸ்தவர். ஓவியர், பொறியாளர், மருத்துவ அறிவியலிலும் நிபுணர். பொறியியல், மருத்துவம், உடலியல் சார்ந்த ஏராளமான ஓவியங்களை உருவாக்கியுள்ளார். ஆனால், டாவின்சி மிகப்பெரிய ஓவியராகப் புகழ்பெற்றது, இயேசு தனது சீடர்களுடன் உணவருந்தும் காட்சியுள்ள ஓவியத்தால் தான். இந்த ஓவியம் உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நிறுவனங்களிலும் இன்றும் முக்கிய இடத்தில் சிறப்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதுபோல கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்தவ மத நிறுவனங்களிலும் ஏராளமான ஓவியங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார்.
மற்றொருவர் மைக்கலேஞ்சலோ. இவரும் இத்தாலியைச் சேர்ந்தவர், கிறிஸ்தவர். இந்த மிகச்சிறந்த ஓவியர், ‘மிகச்சிறந்த ஓவியர்’ என்ற நிலைக்கு வந்ததற்கு முக்கியக் காரணம் அவர் வரைந்த கன்னிமேரி, இயேசுநாதர் ஓவியங்கள் தான். அவை கனடாவின் க்யுபெக் நகரில் உள்ள தேவாலயத்தில் உள்ளன. இவரது பெயரை வரலாற்றில் நிலைக்கச்செய்த ஓவியம் ‘இறுதித் தீர்ப்பு’ (The Last Judgement) என்ற கிறிஸ்து வரலாற்று ஓவியமாகும். இந்த ஓவியம் ரோமில் உள்ள கிறிஸ்தவர்களின் உலகத் தலைநகரான ‘வாட்டிகன்’ நகரில் இன்றும் பெருமையுடன் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அங்குள்ள சிஸ்டைன் சேப்பல் (Sistine Chapel) என்ற ஆலயத்தின் ஓவியங்கள் அனைத்தும் மைக்கலேஞ்ச லோவால் உருவாக்கப்பட்டவைதான்.
இந்துமதக் கடவுளர்களின் சிலைகள் களவு போனதைக் கண்டித்து நடக்கும் நிகழ்வின் அறிவிப்பில் கிறிஸ்தவ மத ஓவியர்களையும், கிறிஸ்தவ மத ஓவியங்களையும் எதிர்நிலையில் நிறுத்துவது ஏன்? அவர்களது ஓவியங்களைவிட இவை மேலானவை என்ற ஒப்பீடு எதற்காக?
எதையாவது ஒன்றை எதிர்நிலையில் நிறுத்த வேண்டும் அல்லது ஒப்பீடு செய்து காட்ட வேண்டும் என்றால்கூட, இந்து மதத்தில் பார்ப்பனர்களால் புகழப்படும் இரவிவர்மனின் ஓவியங்களை எதிர்நிலையில் நிறுத்தியிருக்க வேண்டும். அந்தப் பார்ப்பன இரவிவர்மன் தான் மகாபாரத, இராமாயணங்களுக்கு ஓவிய வடிவம் கொடுத்தவர். இன்று இந்துக்கள் கடவுளாக வணங்கும் பெரும்பாலான கடவுள்களுக்கு உருவம் கொடுத்தவரும் இரவிவர்மன் தான். இந்திய ஓவியர்களில் உலகப்புகழ் பெற்றவரும் அவர்தான்.
ஒப்பீடு செய்து காட்ட வேண்டுமென்றால், “பார்ப்பன, இந்து மத வெறியர் இரவிவர்மனின் ஓவியங்களைவிட, மேலான உலோகத் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சிலைகள்” என்று அறிவித்திருந்தால், அதை வரவேற்கலாம். ஒரு கருப்புச்சட்டைக்காரன் அப்படித்தான் அறிவிப் பான். அதை மே 17 தோழர்களிடம் எதிர் பார்ப்பது தவறு என்று புரியவைத்துள்ளனர்.
இந்துக்களை விமர்சிக்கும் பகுத்தறிவாளர்கள், கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமையோ விமர்சிப்ப தில்லையே ஏன்? என்ற ஆர்.எஸ்.எஸ். ஸின் கேள்வியின் நோக்கத்திற்கும், இந்த அறிவிப்புக்கும் என்ன வேறுபாடு?
மே 17 ன் துரோகம்
இந்து அமைப்புகள் மிக நேர்மையான எதிரி களாக “இந்துக்களின் பாரம்பரிய அடையாளங் களை மீட்கவேண்டும்” என்று கூறுகின்றன. மே 17 இயக்கமோ, அந்த இந்துக் கடவுள் சிலைகளைத் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களாகவும், தமிழர்களின் கலை, அறிவியல் சொத்தாகவும் வரையறுத்து, தமிழர்களின் கழுத்தை அறுக்கிறது.
“7000 சிலைகள் திருடிய கும்பலை கைது செய்! சிலைகளை மீட்டு எடு! தமிழர்களின் கலை மற்றும் அறிவுச் சொத்தினை காத்திடுவோம்.”
இதுதான் அவர்களின் தமிழினத்துரோக அறிவிப்பு. தமிழர்கள் கலை, அறிவுச் சொத்து இந்து மதக் கோவில்களிலா உள்ளது? தமிழனுக்கும் இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு? தமிழர்கள் மத அடிப்படையில் இந்துக்களே அல்ல. ஏதாவது ஒரு மதம் இருந்திருக்கும் என்றால்கூட, தமிழறிஞர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் கூறுவது போல, ‘ஆசீவகம்’ வேண்டுமானால் நமது வாழ்வியலாக இருந்திருக்க முடியும். இந்து மதம் எப்படி நமக்குரிய மதமாக இருக்க முடியும்? இந்துமதம் நமக்குரிய மதமே அல்ல எனும்போது, இந்து மதக் கலைகள் எந்த வகையில் தமிழர்களின் கலை ஆக முடியும்?
தமிழர்களின் கலை, அறிவுச்சொத்து, தொல்லியல் சொத்து, தமிழர்களின் பாரம்பரியம் என்று ஏதாவது இருக்குமானால், கீழடியில், அரிக்கமேட்டில், ஆதிச்சநல்லூரில் வேண்டு மானால் இருக்கின்றன. அங்கு மட்டுமல்ல சமணம் மற்றும் புத்த மதக் கோவில்களிலும் இருக்கின்றன. மதுரை மாவட்டம் யானைமலை, கீழவளவு, கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை போன்ற ஏராளமான இடங்களில் சங்க காலத்துக்கும் முந்தைய ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன. கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தைய சிற்பங்கள், வரலாற்றுச் சான்றுகள் இங்குள்ளன.
இந்த ஊர்களில் உள்ள பல இடங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, எந்தப் பராமரிப்பும் இன்றி, பாதுகாப்பும் இன்றி, தமிழர்கள் ‘தண்ணி’ அடிக்கும் இடங்களாக மாறிச் சிதைந்து போயுள்ளன. அவைதான் தமிழர்களின் அறிவு, கலை, வரலாற்று, தொல்லியல் அடையாளங்கள். அவற்றை மீட்க இதுவரை மே 17 இயக்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சிக்கு இடமுண்டு.
தமிழர்களைத் தேவடியாள் மகன்களாக, தேவடியாள் மகள்களாக அறிவிக்கும் இந்து மதத்தின் சிலைகளைத் தமிழர்களின் அறிவுச் சொத்தாக ஒரு அமைப்பு அறிவிக்கிறதென்றால், அது நாடி நரம்பெல்லாம் பார்ப்பன ஆதிக்கவெறி பிடித்த அமைப்பாகவோ, அல்லது பார்ப்பனர்களின் பாதந்தாங்கும் அமைப்பாகவோதான் இருக்க முடியும்.
கடத்திப் போகப்பட்ட இந்து மதக் கடவுள்களையும், அந்த இந்து மதக்கடவுள்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் மிகச்சிறந்த அடிமைகளாக வாழ்ந்த தமிழ்நாட்டு மன்னர் சிலைகளையும் மீட்கும் பிரச்சனையில் திராவிடர் இயக்கங்களும் களமிறங்கியுள்ளன. அந்த அமைப்புகளின் நிலையும், மே 17 என்ற பார்ப்பன ஆதரவு அமைப்பின் நிலையும் வெவ்வேறாக இருக்கிறது.
உண்மையான பெரியார் இயக்கங்களின் பார்வை
திராவிடர் கழகம், இந்துச் சிலைகள் மீட்புப் பிரச்சனையின் உள்அரசியலாக, இந்து அறநிலையத் துறையையே ஒழிக்கும் முயற்சி நடப்பதை அம்பலப்படுத்தியது. இதற்குப் பின்னணியில் பார்ப்பன லாபி தீவிரமாக இயங்குவதை வெளிஉலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சேவகராக இயங்கும் பொன்.மாணிக்கவேல் அவர்களை இந்தப் பொறுப்பில் இருந்து நீக்கி, வழக்கை சி.பி.அய் வசம் ஒப்படைக்கக் கோரியுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகமும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஒரு சிறு மாற்றம் என்னவென்றால், தி.க, பொன்.மாணிக்கவேலுக்குப் பதிலாக சி.பி. அய் விசாரணை கோருகிறது. த.பெ.தி.க.வோ பொன். மாணிக்கவேலை மாற்றி விட்டு, அவருக்குப்பதிலாக தமிழ்நாட்டுக் காவல் துறையிலேயே நல்ல அதிகாரிகளை நியமிக்கக் கோருகிறது. நேர்மையான நீதிபதிகளைக் கொண்டு விசாரணைக்குழுவை அமைக்கக்கோருகிறது.
இந்த இரண்டு அமைப்புகளுமே இந்துச் சிலைகள் என்பவைகளை தமிழர்களின் கலை, அறிவுச் சொத்தாகவோ, பாரம்பரியச் சின்னங் களாகவோ, தொல்லியல் அடையாளங்களாகவோ அறிவிக்கவில்லை. ஒருவேளை அவை மீட்கப் பட்டால்கூட பெரியாரிஸ்ட்டுகளைப் பொறுத்த வரை அந்தச் சிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களைப் பணமாக மாற்றி, அதை மக்களுக்குப் பயன்படுத்த முடியுமா என்றுதான் சிந்திப்பார்கள். அவற்றைக் கலை, அறிவுச் சொத்தாக அறிவித்து, மியூசியங்களில் வைத்து அழகு பார்ப்பதற்கு விரும்பமாட்டார்கள். மிக முக்கியமாக, ஒரு பெரியாரியல் அமைப்பு, இந்து மதக் கடவுள்சிலைகளை தமிழர்களின் அடையாளமாக என்றுமே பேசாது.
நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மத அடையாளங்கள்
களவு போன சிலைகள் நமது முன்னோர்கள் வணங்கிய சுடலைமாடன், காத்தவராயன், சாம்பார், வீரமாத்தி, மதுரைவீரன் போன்றவர்களின் சிலைகள் அல்ல. தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களால் திருடப்பட்டவை அனைத்தும் பார்ப்பனக் கடவுள்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்துக் கடவுளர்களின் சிலைகள், அந்த நிறுவன மயப்படுத்தப்பட்ட இந்துமத அடியாள்களின் சிலைகள் தானே ஒழிய, தமிழ்த்தேசியங்கள் உயர்த்திப் பிடிக்கும் குலதெய்வங்களோ, நாட்டார் தெய்வங்களோ அல்ல.
ஒரு பெரியாரிஸ்ட்டுக்கு, நாட்டார் தெய்வமோ, குலதெய்வமோ, பார்ப்பனக் கடவுளோ எல்லாம் ஒன்றுதான். அனைத்துமே ஜாதியைக் காப்பாற்றுபவைதான். அனைத்துமே அழிக்கப்பட வேண்டியவைதான். அவற்றை எவனோ திருடிப் போய்விட்டால் மகிழ்ச்சிதான். ஆனால், அந்தச் சிலைகளுக்கு உரிய தொகை மக்களுக்கு வந்து விட்டால் போதும். அவ்வளவுதான் நமது நிலை.
மே 17 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியும்கூட, இதேபோன்ற நிலையைத் தான் எடுத்துள்ளார். 2018 ஜூலை 3 ஆம் நாள் தனது முகநூல் பதிவில்,
“7000 கடவுள்களை விற்க முடிகிற பாஜக கும்பலால் ஒரு நாட்டை விற்பதா கடினம்? கடவுள், கோவில், பக்தி என எல்லாமே நம்மை ஏமாற்றவும், நம்மை அவமானப் படுத்தி அடிமைப்படுத்தவும், நம் காசுகளை கொள்ளை யடிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகளே அன்றி வேறல்ல.”
என்று தெளிவாகக் கூறியுள்ளார். அவராலேயே ‘அவமானச் சின்னங்கள்’ என்று கூறப்பட்ட கடவுள் சிலைகள் 15 நாட்கள் கழித்து, தமிழர்களின் அறிவு, கலை, தொல்லியல் சொத்துக்களாக மாறியுள்ளன. மாற்றம் இயல்பானதுதான். ஆனால், அதற்கான காரணம் பார்ப்பனக் கருத்தியலுக்கு ஆதரவாக இருக்கும் போது, அதை உறுதியாகக் கண்டிக்க வேண்டியுள்ளது.
இந்த மே 17 இயக்கம் மட்டுமல்ல; அனைத்துத் தமிழ்த்தேசிய இயக்கங்களும்,
“தமிழர்களின் வழிபாட்டுமுறை என்பது, பார்ப்பன நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்து மதத்திற்கு எதிரானவை”
“நடுகல்லும், வீரக்கல்லும் தான் நாம் வழிபடும் கடவுள்கள், மற்றவை நமக்குரியவை அல்ல.. தமிழர்களின் ஆன்மீகம் என்பது ஆரியத்துக்கு எதிரானது”
“பாவாடைராயன், கருப்புச்சாமி, முனியாண்டி, பொன்னர் சங்கர் போன்றவர்கள்தான் நமக்குத் தெய்வங்கள். ஆணவக்கொலையால் படுகொலை செய்யப்பட்டவர்கள் தான் நமது தெய்வங்கள்”
என்றெல்லாம் நீட்டிமுழக்கி வந்தன. வருகின்றன. திருடுபோன 7000 சிலைகளின் பட்டியலில் இந்த நடுகற்களும், வீரக்கற்களும் இருக்கின்றனவா? ஒன்றுகூட இல்லையே? எந்த ஊர் மதுரைவீரனையும் எந்தப் பார்ப்பானும் திருடி விற்கவில்லையே? தமிழ்நாட்டைவிட்டு ஓடிப் போனவைகள் எல்லாம் நிறுவனமயப்படுத்தப்பட்ட பார்ப்பன இந்துக்கடவுள் சிலைகள் என்பவை தான். அவை எப்படி தமிழர்களின் கலை, அறிவுச் சொத்துக்களாக மாறின?
தமிழர்களின் இழிவுச்சின்னங்கள்
இந்தச் சிலைகளைச் செய்த சிற்பிகள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர வேறு எந்தத் தமிழனும் அந்தச் சிலைகளைத் தொடக்கூட முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அவற்றைத் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே உரிமை பெற்றவர்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் அவற்றைப் பார்க்கக்கூட வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள். அவர்களுக்கு கோபுர தரிசனம் தான் கோடிப்புண்ணியம் என்று ஒதுக்கிவிட்டார்கள்.
இப்படி, பெரும்பாலான தமிழர்களால், பார்க்க முடியாத, தொடமுடியாத சிலைகள் எந்த வகையில் தமிழர்களின் கலை, அறிவுச் சொத்தாக, தொல்லியல் அடையாளமாக இருக்கமுடியும்? அவை தமிழர்களின் இழிவின் அடையாளங்கள். தமிழர்களுக்குத் தொடர்பில்லாத, தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பன ஆணவத்தின் அடையாளங்கள். அந்தப் பார்ப்பனர்களுக்கு அடியாட்களாக விளங்கிய தமிழ்மன்னர்களின் அடையாளங்கள்.
அவை பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால், கலை, அறிவுச் சொத்தாக இருக்க முடியும். தமிழர்களைப் பொறுத்தவரை, அந்தச் சிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்களின் எடைக்கு எவ்வளவு மதிப்போ, அவ்வளவுதான் மதிப்பு. இப்படித்தான் நமது தலைவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.
“சிலை வணக்கந்தான் எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது. நாட்டின் மதிப்பைக் காப்பாற்ற எண்ணமுடைய ஒவ்வொருவனும் கற்சிலைகளைத் தகர்த்து சிலைகளையுருக்கி அவ்வுலோகத்தைக் கொண்டு ஆயுதங்களும் இயந்திரங்களும் செய்விக்க வேண்டும். மத சம்பந்தமாக விடப்பட்ட சொத்துக் களெல்லாம் நாட்டின் நலத்திற்கு உபயோகப் படுத்தப்பட வேண்டும். மடங்களைப் பள்ளிக்கூடங் களாகவும் கல்லூரிகளாகவும் மாற்ற வேண்டும். கோவில்கள் ஆஸ்பத்திரிகளாக வேண்டும்.” - தோழர் பெரியார் - குடி அரசு - 17.02.1929
மே 17 இயக்கம், நம்காலத்தில், 2018 இல் பேசும் பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கக் கருத்துக்கள் எல்லாம் இப்போதுதான் புதிதாக முளைத் துள்ளவை என்று கருதவேண்டாம். 1931 லேயே, பெரியார் காலத்திலேயே இவர்களைப் போன்ற இந்துமதக் கலை, பண்பாட்டுக் காவலர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரியார் கூறிய மறுமொழி இவர்களுக்கும் பொருந்தும். “கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக?” என்ற தலைப்பில் பெரியார் பேசியதைப் பாருங்கள்.
“கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு “அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக்கலை அழிந்துவிடும்” என்றும், “சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை, ஓவியக்கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்” என்றும் சொல்லுகின்றார்கள்.
நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.
எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.
சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.
சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.
ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமை களையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமு மான, மிருகப்பிராயமும் கொண்ட தான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, “ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்” என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.” - தோழர் பெரியார், குடி அரசு 26.4.1931
இதைவிடத் தெளிவாக நாம் எதையும் புதிதாகக் கூறமுடியாது. புத்தருக்கும் முந்தைய நூற்றாண்டுகளில் இருந்தே, நமது தலைவர்களைப் புகழ்ந்துகொண்டே, அந்தத் தலைவர்களின் தத்துவங்களை அழிக்கும் போக்கு தொடங்கி விட்டது. “பெரியார் ஒழிக” என்று மட்டுமல்ல, “பெரியார் வாழ்க” என்று வாயளவில் பேசியும்கூட, பெரியாரியலை அழிக்கும் நுட்பமான பார்ப்பனச் சூழ்ச்சிகள் நடக்கும் என வரலாறு நமக்கு அறிவுறுத்தியுள்ளது. மே 17 அப்படிப்பட்ட இயக்கம் இல்லை என்பதை அவர்களது செயல்பாடுகள் தான் நமக்குப் புரிய வைக்க முடியும்.
(09.08.2018 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசின் இந்தப் போக்கு மிகவும் தவறானது. கருத்துரிமைக்கு எதிரானது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.)