நேர்காணல்: பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல்
உங்களை பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
என்னுடைய பெயர் கிருஷ்ணவேணி நான் பிறந்தது திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள கரிகாலி அப்படிங்கிற கிராமம் . நான் வளர்ந்தது படித்தது எல்லாமே திருப்பூர்லதான். எனக்கு இரண்டு அண்ணன்கள்.
உங்களுடைய திருமணத்தைப் பத்தி சொல்லுங்க?
என்னுடைய திருமணம் காதல் திருமணம். நான் +2 படிக்கும் போதே எனக்குத் திருமணம் ஆகிருச்சு நாங்க ஒரு வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தோம். அந்த ஒரு வருடகாலத்துல எங்களுக்கு ஒரு பொண்ணு பெயர் மதுமிதா. இப்ப வந்து 8-ம் வகுப்பு படிச்சுட்டு இருக்கா. எங்களுக்குள் நிறையப் பிரச்சனைகள் கருத்துவேறுபாடு காரணமா நாங்க பிரிஞ்சுட்டோம். அதுக்கு அப்புறம் நான் எங்க அம்மா அப்பா வீட்டுலதான் இருக்கேன்.
நீங்க திருமணத்துக்கு பிறகு தனியா வாழ்ந்துட்டு இருக்கீங்க. வேறு ஒரு திருமணம் பண்ணனும் அப்படின்னு நினைச்சது உண்டா?
அந்த மாதிரி எதுவும் நினைச்சது இல்லை.
தோழர் இராவணனோட அறிமுகம் உங்களுக்கு எப்ப ஏற்பட்டுச்சு?
2005-ல தான் அவரோட அறிமுகம் கிடைச்சது நான் திருப்பூர் பாரதி ஸ்டுடியோவில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தக் கடை உரிமையாளர் பாரதிவாசன். அவரோட நண்பர்தான் அவரைப் பார்க்கறதுக்கு கடைக்கு வருவார். அப்படி அறிமுகம் ஆனவர்தான் தோழர் இராவணன்.
பெரியாரியல் அமைப்புக்கு நீங்க எப்படி வந்தீங்க?
அதுக்குக் காரணம் தோழர் இராவணன்தான் 2013-ல திருப்பூர்ல காவேரி அம்மன் திருமண மண்டபத்துல கருந்திணை வாழ்வியல் விழா நடந்தது அப்பதான் நான் முதல் நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன். அன்று காலையில் இருந்து இரவு வரைக்கும் நடத்தின நிகழ்ச்சிகள், நாடகங்கள், குறும்படங்கள், குழந்தைகளின் திறமைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தினாங்க. அதுக்கு அப்புறம் அடுத்த அடுத்த நிகழ்ச்சிகள்ல நான் கலந்துக்கிட்டேன். பெரியாரின் கொள்கைகளைப் பற்றியும், அமைப்பைப் பற்றியும், பெண்விடுதலை பற்றியும் தெரிந்துகொண்டேன். அதனால் பெரியார் அமைப்பில் இணைந்து செயல்பட்டேன்.
திருமணம் பண்ணாம சேர்ந்து வாழலாம் அப்படின்னு தோழர் இராவணன் வந்து சொல்லும்போது அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?
முதல்ல தோழர் இராவணன் வந்து சொன்னப்ப நான் யோசிச்சேன். பொதுவா சமூகத்துல திருமணம் பண்ணி சேர்ந்து வாழ்ந்தால்தான் மதிப்பு இருக்கும். அப்படி இருக்கும்போது, எப்படித் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்றதுன்னு நினைச்சேன். இராவணன், திராவிடர் பண்பாட்டு மலரில் ‘தனித்து வாழ்தல்’ அப்படின்னு எழுதி இருக்கார். திருமணம் பண்ணாம சேர்ந்து வாழலாம் உனக்குப் பிடிக்கலைனா நீ விலகிப்போயிறு. எனக்குப் பிடிக்கலைனா நான் விலகிப் போயிடுறேன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் நம்ப ஏன் இப்படி வாழக்கூடாதுன்னு முடிவு பண்ணி ‘லிவிங் டுகெதர்’-னு அறிவிச்சோம்.
நீங்க தாலிகட்டி திருமணம் பண்ணி கணவரால் கைவிடப்பட்ட பெண். அப்படி இருக்கும் போது திருமணமே இல்லாம சேர்ந்து வாழும் வாழ்க்கைமுறை உங்களுக்கு ஒத்துவரும்னு நினைச்சீங்களா?
நான் தாலிகட்டித் திருமணம் பண்ணினாலும், எங்களுக்குள்ள இருந்த கருத்து வேறுபாடும் புரிதலும் இல்லாதனால நாங்கள் பிரிந்தோம். ஆனால் இப்பொழுது நானும் தோழர் இராவணனும் தாலி கட்டாமல் இணையர்களாக வாழ்ந்தாலும் எங்களுக்குள் புரிதல், விட்டுக்கொடுக்கும் தன்மையும் அதிகமாக இருக்கிறது. கண்டிப்பாக என்னுடைய வாழ்க்கை முறைக்கு ஒத்து வரும்.
எதனால அப்படி சொல்றேன்னா அவர் பெரியார் கொள்கைகளை வாழ்வியலாகக் கடைபிடிப்பதால் நல்ல புரிதல் உள்ளவர். பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்தமுறை அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும் விளம்பரத்திற்காக சொல்கிறார்கள் என்று கூட நினைக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் தாலி இல்லாமல் இணைந்து வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாகவும்,சுதந்திரமாகவும் இருக்கிறது.
நீங்க எப்போ திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் இணையர்களாக உங்களை அறிவிச்சீங்க?
2015 பிப்ரவரி 14-ல் காதலர்தினம் திண்டுக்கல்லில் நடந்த ‘கருந்திணை ஒன்றுகூடல்’ குடும்ப விழாவில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நாங்க சேர்ந்து வாழ்றதா அறிவிச்சோம்.
திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்ற வாழ்க்கை முறையைப் பற்றி உங்க குடும்பத்துல யாராவதுகிட்ட பகிர்ந்துகிட்டீங்களா?உங்க குடும்பத்துக்குத் தெரியுமா?
நாங்க இணையர்களா அறிவிக்கிறதுக்கு முன்னாடியே எங்க சின்ன அண்ணன், அண்ணிக் கிட்ட சொல்லிட்டேன். அவங்கக்கிட்ட இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அறிவிச்சதுக்கு அப்புறம் நான் முகநூல் பக்கத்தில் நான், தோழர் இராவணன், மதுமிதா நாங்க மூணுபேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ போட்டேன். இதன்மூலம் எங்கள் குடும்பத்துக்குத் தெரியும். ஆனால் யாரும் இதைப் பற்றி என்கிட்டக் கேட்கவில்லை.
நீங்க திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் இணையர்களாக ஆனதுக்கு பிறகு இயக்க நிகழ்ச்சிகளை தவிர உங்க குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கீங்களா?
எங்க உறவினர்களுடைய விசேஷங்களுக்கு நான் அதிகமாக கலந்துக்கிறது இல்லை. ஏன்னா சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்க்கணும் அப்படிங்கிறதனால. நாங்க எந்த நிகழ்ச்சிகளுக்கும் போனது இல்லை. காட்டாறு குடும்ப நிகழ்ச்சிகளுக்குத்தான் அதிகமாக கலந்து இருக்கிறோம்.
தோழர் இராவணனின் முழுநேர சமூகப் பணியை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
தோழர் இராவணன் சமூக வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் தேவைகளை அவரே நிறைவு செய்துகொண்டு சமூக வேலைகளைச் செய்கிறார். நான் என்னுடைய குடும்ப வருமானத்திற்காக வேலைக்குப்போகிறேன். தோழர் இராவணன் முழுநேர சமூகப் பணியாளர் என்று தெரிந்து கொண்டுதான் ஏற்றுக்கொண்டேன். சமூக வேலைகள் எனக்கும் பிடிக்கும். பல்வேறு வேலைகளில் நானும் தோழர் இராவணனுக்கு உறுதுணையாக இருப்பேன்.
உங்களுடைய பழைய திருமண வாழ்விற்க்கும் இப்போதைய லிவிங் டுகெதர் வாழ்விற்க்கும் உள்ள வேறுபாடு என்ன?
பழைய வாழ்க்கையில், நான் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முடிவும் நான் எடுக்க முடியாது. ஆனால் இப்போது உள்ள வாழ்க்கையில் என்னுடைய சுதந்திரம், சுயமரியாதை எதிலும் தோழர் இராவணன் குறுக்கிடமாட்டார். எனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பார். என்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் என் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கமாட்டார். இந்த வாழ்க்கை முறையை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
பெண்களுக்கு வரதட்சணை கொடுப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த திருமண முறையே அடிமைமுறை இதில் பணமும்,நகையும் கொடுத்து மீண்டும் தன்னை அடிமையாக்கி கொள்கிறார்கள்.அதற்கு பதிலாக பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுக்கவேண்டும் பெண்கள் நிர்வாகம் நடத்துகின்ற தொழில்களை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
உங்கள் மகளை எப்படி வளர்க்கிறீர்கள்?
எங்கள் மகளை பெரியார் கொள்கைப்படி வளர்க்கிறோம். எந்தவித மூடநம்பிக்கையையும் கற்றுக்கொடுக்காமல் சுதந்திரப் பெண்ணாக வளர்க்கிறோம். பூப்புனித நீராட்டுவிழா போன்ற எதையும் நடத்தவில்லை. யாருக்கும் சொல்லாமல் எந்தவித சடங்கும் செய்யாமல் அது ஒரு இயற்கையான நிகழ்வு என என் மகளுக்கு புரிய வைத்தேன்.
இந்துமத வாழ்வியலுக்கும்,பெரியாரியல் வாழ்வியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
இந்துமத வாழ்க்கையில் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு தந்தைக்கும், திருமணத்திற்குப் பின் கணவனுக்கும் வயதான பின்பு மகன்களுக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்கிறது. பெரியாரியல் வாழ்வியலோ கட்டுக்கள் தளர்த்தி விடுதலை வெளியில் சிறகடித்து பறக்கச் சொல்கிறது.
தோழர் இராவணனிடம்
உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
என்னுடைய பெயர் இராவணன். காட்டாறு பத்திரிக்கையில் பணி செய்கிறேன். என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அதிகாரிபட்டி என்னும் கிராமம். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அறிவொளி இயக்கத்திற்கு வேலைக்குச் சென்ற போது அங்குள்ள தோழர்கள் மூலமாக பெரியார் கொள்கை அறிமுகமானது.
பெரியார் அமைப்புக்கு எப்பொழுது வந்தீர்கள்?
நான் 1995-ல் திருப்பூருக்கு வந்தேன். திருப்பூரில் வேலை செய்யும் இடத்தில் திராவிடர் கழக நண்பர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் மூலமாகப் பெரியார் கொள்கையைத் தெரிந்துகொண்டேன். தோழர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் இயங்கிய திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டேன்.
எந்த மாதிரியான இயக்க வேலைகளை செய்தீர்கள்?
தோழர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் இயங்கும் வரை பொதுக் கூட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது அது பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டறிக்கை வழங்குதல், நிதி திரட்டல் போன்ற பணிகளில் ஈடுபட்டேன். தோழர் கொளத்தூர்மணி தலைமையில் இயங்கிய தந்தைபெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளில் ஜாதி ஒழிப்பு பணிகளுக்கு தோழர் தாமரைக்கண்ணனுடன் இணைந்து பணி செய்தேன். பரப்புரைப் பயணங்களை ஒருங்கிணைத்தது குடிஅரசு தொகுப்புப் பணியில் ஈடுபட்டது போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய இயக்கப் பணியை உங்கள் வீட்டில் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
எங்கள் வீட்டில் கொள்கைக்கு எதிராக இருப்பார்கள். ஆன்மீகத்திலும் மூடநம்பிக்கையிலும் கெட்டி தட்டிப் போனவர்கள். நான் பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின்பு குடும்ப நிகழ்வுகளில், ஊர் திருவிழாக்களில்,இந்துமதப் பண்டிகைகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டேன். அதனால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும். ஒரு கட்டத்திற்கு மேல் நான் எங்கள் வீட்டிற்கு செல்வதையே தவிர்த்துவிட்டேன்.
உங்களுக்குத் திருமணம் செய்ய உங்கள் வீட்டில் முயற்சி செய்தார்களா?
நான் வீட்டிற்கே போகாமல் இருந்தாலும் எனது அப்பா, அண்ணன், தாய்மாமா ஆகியோர் அடிக்கடி தேடிவந்து திருமணம் பற்றிப் பேசினார்கள். நான் பெரியார் கொள்கைப்படி ஜாதிமறுப்பு, சடங்குமறுப்புத் திருமணம் தான் செய்வேன் என்று உறுதியாகக் கூறிவிட்டேன். அவர்கள் பலமுறை முயற்சிசெய்தும் என்னுடைய கருத்தில் எந்தச் சமரசமும் செய்யவில்லை. நான் திருமணம் கூடச் செய்யாமல் இருந்துகொள்வேன்; ஆனால் ஜாதிக்குள் திருமணம் செய்யமாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டேன். ஒரு கட்டத்தில் சலிப்பாகி அவர்களே விட்டுவிட்டார்கள்.
வேணியை இணையராக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் எதாவது உண்டா?
தோழர் வேணி அவர்களோடு நீண்ட வருடம் நட்பாக இருந்தாலும் அவர் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்படாமல் இருந்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நமது கொள்கையை புரிந்துகொண்டு நமது இயக்க நிகழ்வுகளில் பங்கேற்க ஆரம்பித்தார். கருத்து ரீதியாகவும் ஒத்துபோக ஆரம்பித்தார். அதன்பிறகு தோழர் வேணியோடு இணைந்து வாழலாம் என்று முடிவெடுத்து எனது விருப்பத்தை வெளிப்படுத்தினேன். அவரும் ஏற்றுக்கொண்டார். கொள்கையை ஏற்றுக்கொண்டவரோடு இணைந்து வாழ்வது மகிழ்ச்சியானது.
நீங்க லிவிங் டுகெதரா வாழலாம் என முடிவெடுக்க காரணம் என்ன?
குடும்பம் என்ற அமைப்பே பெண்களை அடிமைப்படுத்துவதுதான். அதில் பெரியார் தொண்டர்களும் விதிவிலக்கல்ல. குடும்பம் என்ற அமைப்புக்குள் சிக்காமல் ஒரு வாழ்க்கை முறை பற்றி யோசித்தபோது ‘லிவிங் டுகெதர்’ சிறந்த வழியாக தெரிந்தது. அதனால் அதை ஏற்றுக்கொண்டேன்.
மேலும் தோழர் பெரியார் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மறுமணம் என பல திருமணங்களைப் பற்றி பேசி, இனி வருங்காலங்களில் திருமணம் என்ற ஏற்பாடே இல்லாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் சூழல் வரும். தேவை என்றால் இணைந்து வாழவும் முரண்பாடு வந்தால் பிரிந்து கொள்ளவும் உரிமை உடைய வாழ்க்கை முறை அமையும் என்றார். அந்த அடிப்படையில் தான் நாங்கள் லிவிங் டுகெதர் முறையை ஏற்றுக்கொண்டோம்.
வெளிநாடுகளில் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கைமுறை நடைமுறையில் உள்ளது இந்தியாவில் அது எப்போது சாத்தியமாகும்?
எதிர்வரும் காலங்களில் அது சாத்தியமாகும். இந்தியாவில் பார்ப்பனியத்தை மையமாக வைத்து மனுசாஸ்திர வாழ்க்கைமுறையைதான் எல்லோரும் கடைபிடிக்கிறார்கள். அது கற்பித்த ஜாதிய ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு என அனைத்துமே நடைமுறையில் உள்ளது. வெளிநாடுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டும்தான் உண்டு. இங்கு ஜாதிதான் திருமணத்தை முடிவு செய்கிறது. குழந்தையை தத்தெடுப்பதுகூட பழக்கத்திற்கு வராமல் இருப்பதற்கு இந்துமதம் கற்பித்த ஜாதி, வாரிசுமுறை காரணமாகும்.
இது தொடர்ந்து பிரச்சாரத்தின் மூலமாகவும் மக்களின் மனமாற்றத்தின் மூலமாகவும் எதிர்காலத்தில் மாறவாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடிய வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. டாக்டர் ராஜாராம் மோகன்ராய் போன்றோர் போராடியதன் விளைவாகவும் ஆங்கிலேயர் அரசின் ஆதரவின் காரணமாகவும் மாறியது. 1980வரை இராஜஸ்தான் மாநிலத்தில் உடன்கட்டை ஏறுதல் இருந்தது தமிழகத்தில் பெரியாரின் பிரச்சாரத்தால் இப்படிப்பட்ட கொடுமைகள் இல்லை. மேலும் ஜாதிமறுப்பு, விதவைமறுப்பு, மறுமணம் போன்றவை நடப்பதற்கு பெரியாரின் பிரச்சாரமே காரணம். எனவே முற்போக்கு இயக்கங்களின் குறிப்பாக பெரியார் இயக்கங்களின் இடைவிடாத பிரச்சாரத்தின் மூலமாக மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.
திருமணம் கிரிமினல் குற்றம் என்று பெரியார் சொல்கிறார் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?
பெரியார் சொன்னது இன்றைய காலத்திற்கும் 100 சதம் பொருந்தி வரக்கூடியதாகும். ஏனென்றால் திருமணம் என்ற ஏற்பாடே ஒரு பெண்ணின் சுதந்திரத்தை முழுமையாக பறிப்பதாகும். திருமண வாழ்க்கையில் பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதில்லை. முதலில் பெண்ணின் சம்மதம் கேட்காமலே பெற்றோர்களே முடிவுசெய்து திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். ஜோதிடம், ஜாதகம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்பி, விருப்பம் இல்லாத வாழ்க்கையை வாழச்சொல்லி நிர்பந்திக்கிறார்கள்.
மனுசாஸ்திரம் சொல்லியபடி பெண்ணுக்கு நகை, பட்டுப்புடவை போன்றவைகளை அணிவித்து அவர்களை ஒரு நகை மாட்டும் ஸ்டேண்டாக மணமேடையில் உட்காரவைக்கிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்த்தனங்கள் மட்டுமில்லாமல் பகலிலேயே அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது, காசிக்கு யாத்திரை போகிறேன் என்று மாப்பிள்ளை கோபித்துகொண்டு போவது, அவரைத் திரும்ப அழைத்துகொண்டு வருவது போன்ற மூடத்தனங்களும் நடைபெறுகின்றன. விருந்து என்ற பெயரில் நிறைய உணவுப் பொருட்களை வீண்செய்வது, புரியாத - பெண்களை இழிவுபடுத்தும் மந்திரங்களை ஓதுவது போன்றவைகள் பெரியார் சொன்னதை நிருபிக்கிறது. திருமணம் என்ற பெயரில் பெண்கள் தங்கள் சம்மதம் இல்லாமலே பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இவற்றால்தான் பெரியார் திருமணத்தை கிரிமினல் குற்றம் என்கிறார்.
திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை என்று விமர்சனம் செய்கிறார்கள் அதைப்பற்றி உங்கள் கருத்து?
இது ஒரு விதமான ஆணாதிக்கச் சிந்தனை ஆகும். முதலில் ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்குக் கட்டுப்பாடு என்பதே தேவைஇல்லை. புரிதல்தான் தேவை. புரிதல் இல்லாமல் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கும் விதமாக கட்டுப்பாடுகள் விதிக்கும்போது, அதை மீறவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. எனவே திருமண வாழ்க்கையிலும் இந்தப் பிரச்சனை வந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்களை நல்லதோழியாக, சகமனுசியாக மதித்தால் போதும். அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். சமூகம் மூளையில் ஏற்றிவைத்துள்ள அழுக்குச் சிந்தனைகளை அகற்றிவிட்டு பெரியாரின் கொள்கைவழி நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.