காதல் பற்றி பெரியார்

உணர்ச்சிகளால் உந்தப் படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரித லோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து.
“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண் களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங் களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமை யாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காத லாகும்!” - குடிஅரசு 21.7.45

“திடீரென்று காதல் கொள் வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக் காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல் வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் - காதலும் பொய் கடவுளும் பொய் என்றுதான் அர்த்தம்.” - விடுதலை 24.5.47

“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொரு வர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.”- விடுதலை 24.5.47

“திருமணம் அல்லது கல்யாணம், கன்னிகாதானம் இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மக்களாகிய நமக்குக் கிடையாது. நம்மவர்களுக்கெல்லாம் மண வாழ்க்கை இல்லை; காதல் வாழ்க்கைத்தான் இருந்தது.” - விடுதலை 12.2.68

பிப்.14 - உலகக் காதலர் நாள்! ஜாதி எதிர்ப்பு - பெண்ணுரிமை - பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் புரிதலோடு உருவாகும் காதலைப் பேசும் - சில கவிதைகள்.

ஒரே மதம்; ஒரே ஜாதி
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் -
வாசுதேவ நல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும்கூட...
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்...
மைத்துனன் மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம்கலந் தனவே.

- மீரா

‘சாமி’க்கு மாலை போட...
என்னை விட்டுவிட்டு
சாமிக்கு மாலைபோட
உனக்கு உரிமை
உண்டென்றால்
உன்னை விட்டுவிட்டு
வேறு ஆசாமிக்கு
மாலைபோட
எனக்கும் உரிமை
உண்டுதான்

- அறிவு மதி

இல்லாத போது...
நான் உன்னை நேசிக்கிறேன்
ஏற்றுக் கொள்கிறேன்
நான் உன்னைப் புரிந்து கொள்கிறேன்
நான் உன்னை சுதந்திரம் உள்ளவளாக்குகிறேன்
நீ இங்கே
இல்லாதபோது மட்டும்

- மனுஷ்ய புத்திரன்

அலையும் மீன்
அகப்பட்டுக் கொள்ளத்தான்
இந்த மீன்
அலைகிறது!
தொட மாட்டோம் என்று
தூண்டில்கள்
சொல்லிவிட்ட பிறகும்!

- மு. மேத்தா

ஆண் யாழ் வாசித்து...
“ஆண் ஒருவனுக்கு
துன்பம் வராதா?
தான் யாழ் இசைத்து
இன்பம் சேர்க்க மாட்டோமா” என்று இவளுக்கு
கிறக்கம் ஏற்படும்.
அம்மாவிடம் சொல்வாள்.
அம்மா சிரிப்பாள்.
ஒரு ஆண் யாழ் வாசித்து
அவள் துன்பத்தை போக்கி இன்பம் சேர்ப்பதாக
ஏதாவது கற்பனை
அவளுக்குத் தோன்றுகிறதா என்று கேட்டாள் அம்மா
ஒரு முறை.
இவள் இல்லையென்றாள்.
அவள் யோசிக்க வேண்டும் என்றாள் அம்மா.

- அம்பை எழுதிய பிரசுரிக்கப்படாத கைப்பிரதி என்னும் சிறுகதையில்

உடன்கட்டை ஏற முடியாது...
அருமைக் காதலனே! நட்சத்திரங்களை
எழுத்துக் கூட்டிப் பார்த்தால்
உன் பெயர்தான் வருகிறது.
உனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
ஷெனாய் இசையும்,
பருப்புச் சாதமும்
என் பாசத்துக்குரியவை
ஆகிவிட்டன.
உன் இதயத்து வால்வுகளில்
என் நினைவு துடிப்பது தெரியும். ஆயினும்
எனக்கென்று சில குணங்கள், ஆசாபாசங்கள், லட்சியங்கள் இருப்பதை நீ உணர்வதேயில்லை.
காதலிக்கு மூளை இருக்கிறது என்பதே கசப்பான உண்மையாய் இருக்கிறது உனக்கு.
அந்த மூளை வேலை செய்கிறது என்பது அவமானமாய்த் தோன்றுகிறது உனக்கு.
உனக்கு கீழ்ப்பட்டு
உன்னையே மையமாக வைத்து என் வாழ்க்கை
இருக்க வேண்டும் என விரும்புகிறாய் நீ.
என் மனதை, உணர்ச்சிகளை எரித்து என்னை
இயந்திரமாக்கப் பார்க்கிறாய். அதுவே நல்ல
இல்லறம் என்கிறாய்.
உடலை எரிப்பதற்கு
சதி என்றால்
இதற்குப் பெயர் என்னவோ?
மன்னித்து விடு...
என்னால் உடன்கட்டையேற முடியாது
உடலளவிலும் சரி
மனதளவிலும் சரி.

- நாகராணி

Pin It