Aadhavan dheetchanya and Balu mahendra

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழு உறுப்பினரும் இளம் கவிஞருமான சா.இலாகுபாரதியின் `மழை இரவு' கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் ஒரு மழை இரவில் நடைபெற்றது. சென்னை தேவநேயப் பாவாணர் நூலக சொற்பொழிவு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர்களும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், தமுஎச தோழர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Balumahendraஇந்நிகழ்ச்சியின் அறிமுக உரையை கவிஞர் சூரியசந்திரன் நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் நாயகர்களை அறிமுகத்தோடு மேடைக்கு அழைத்தார். திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, தமுஎசவின் மாநிலத் துணைச் செயலாளரும் `புதுவிசை' இதழின் ஆசிரியருமான கவிஞர் ஆதவன் தீட்சண்யா, குறும்பட இயக்குநர் கவிஞர் ஜி.விஜயபத்மா, எழுத்தாளர் தாமிரா, கவிஞர் சைதை ஜெ., எழுத்தாளர் மணிநாத், இயக்குநர் அறின் ஆகியோர் மேடையை அலங்கரித்த பிரபல முகங்கள்.

சூரியசந்திரன் உரையில் `பாரதி ஒரு தீர்க்கதரிசி' என்றால் நமது இளங்கவிஞர் சா.இலாகுபாரதியும் ஒரு தீர்க்கதரிசியே. அதனால் தான் என்னவோ நிகழ்ச்சி நடக்கும் இரவும் `மழை இரவு' ஆகியிருக்கிறது என்றார். உண்மைதான். மழை ஓலமிட்டுக் கொண்டிருந்த சமயம் அது.

`மழை இரவு' நூலை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக் கொண்டார். வாழ்த்துரை வழங்கிய தமுஎச மாநில துணைப் பொதுச் செயலாளர் சைதை ஜெ., ‘தமுஎசவின் குடும்ப விழா’ இது என்றார். மேலும், “நிறைய புதிய கவிஞர்கள் நம்மிடமிருந்து உருவாகியவண்ணம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசு, பாரிகபிலன், நரன் என ஆரம்பித்து சா.இலாகுபாரதி வரை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்" என்றார்.

தலைமை உரையாற்றிய இயக்குநர் பாலுமகேந்திரா, "இக்கவிதைத் தொகுதியில் நகர வாழ்க்கையில் தன்னைப் பிணைத்துக் கொண்ட கிராமத்து இளைஞனின் பால்யம் அதிகம் வெளிப்பட ுகிறது. இது ஒரு கட்டம். இதற்கு அடுத்தபடியாகவும் நிறைய இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கோபம், இத்தொகுப்பில் காணப்படவில்லை; அது முக்கியமானது" என்றார்.

Aadhavan Dheetchanyaஇயக்குநர் பாலுமகேந்திரா மேலும் பேசுகையில், "வாழ்க்கையின் சில நல்ல விஷயங்களை சினிமாவில் செய்ய முடிவதில்லை. கவிதைகளில் மட்டும்தான் அவற்றை பதிவு செய்ய முடிகிறது. இந்த இயலாத நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நொந்துபோய்தான் இதைச் சொல்கிறேன். இளைய படைப்பாளிகள் அவலம், கோபம், ஆவேசத்தை தங்கள் படைப்புகளில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஈழத்துப் படைப்புகளில் இருப்பது போன்ற ஆவேசம் நம் தமிழ்ப் படைப்புகளில் இருப்பதில்லை. இங்கே அழகியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பம்பாய் படத்தில் மும்பைக் கலவரத்தில் இந்து - முஸ்லீம் மோதல் பிரச்சனைகளைச் சொல்லும்போது `ஹம்மா ஹம்மா', `குச்சி குச்சி ரக்கமா' போன்ற பாடல்கள் தேவையில்லை. இதையே நண்பர் மணிரத்தினத்திடமும் சொன்னேன். `என்னை அழைத்து வந்த இளைஞர்களிடமும் நான் இதைச் சொன்னேன்' என்றார். மேலும் அவர், அவலம் பற்றிப் பேசும் போது அழகியல் எதற்கு? " என்றார்.

கவிஞர் ஜி.விஜயபத்மா அவரையடுத்து, இயக்குநர் அறின் ஆகியோர் பேசினர். கவிஞர் தாமிரா பேசும்போது நகைச்சுவை வெடிகளைத் தூவி அரங்கத்தை அதிர வைத்தார். அவரைத் தொடர்ந்து பேசிய கவிஞர் ஆதவன் தீட்சண்யா, "எழுதுவது என்பது மிகச் சிறந்த அரசியல் செயல்பாடு" என்றார். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தை, அதன் விளைவாக உறவுகள் நசுக்கப்படுவதை ஒரு பிடிபிடித்தார்.

இறுதியில் நூலாசிரியர் சா.இலாகுபாரதி ஏற்புரை ஆற்றினார். தனது முதல் படைப்பு வெளிவரக் காரணமாக இருந்த அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார். கவிஞரின் பெற்றோர், உறவினர்கள் என்று குடும்பவிழவுக்கான தன்மைகளோடு விழா நிறைவு பெற்றது.

- கா.சு.துரையரசு 

Pin It