இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே மொழிவழியாக மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோரிக்கை தீவிரமடைந்தது. விளைவாக, 1953 ஆம் ஆண்டில் பிரதமர் நேரு "மாநிலங்கள் மறுசீராய்வுக்குழு'' எனும் அமைப்பை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாசல் அலி தலைமையில் அமைத்தார். இக்குழு இந்தியாவின் மாநிலங்களை மொழிவழியில் பிரிப்பது குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து அரசியல் சட்ட ஏற்பிசைவுடன் இந்தியத் துணைக்கண்டம் 1956 நவம்பர் 1 ஆம் நாள் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. "சென்னை மாநிலம்'' என்ற பெயரில் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்ட நம் மாநிலத்தின் பெயரை 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என மாற்றி அமைத்தார். தங்களுக்கு ஒரு மாநிலம் அமைந்ததை கர்நாடகாவில் அரசு சார்பில் மிகப்பெரும் விழாவாகக் கன்னட மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அதே போல் கேரளம் மற்றும் பிற மாநிலங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியமக்கள் தொகையில் 6-ஆவது இடத்திலும், பரப்பளவில் 11-ஆவது இடத்திலுமுள்ள தமிழ்நாட்டில் இவ்விழா அரசு விழாவாகவோ, மக்கள் விழாவாகவோ கொண்டாடப்படுவதில்லை.

"நாடும், மொழியும் நமதிரு கண்கள்'' என வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவிலேயே சமசுகிருதத்திற்கு இணையான சிறப்புமிக்க மொழியாகத் தமிழ் விளங்குகிறது. உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் ஆகிய மொழிகள் வழக்கொழிந்து சமூகத்தில் இறந்த மொழிகளாக ஆகி விட்டன. 2000 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு அழித்தொழிப்புச் சதிகளையும் முறியடித்து, இன்றும் சீரிளமைத் திறத்தோடு நமது தமிழ் மிளிர்கிறது. உலகிலேயே பொருளுக்கு இலக்கணம் கண்ட தமிழனின் ஆகச் சிறந்த படைப்பாகத் தொல்காப்பியம் திகழ்கிறது. உலகில் எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக நமது திருக்குறள் திகழ்கிறது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' எனும் புறநானூற்று வரியும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் '' எனும் திருக்குறளின் வரியும் உலகெங்கும் போற்றத்தக்க பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. மேலும் அளப்பரிய இலக்கியவளம் கொண்டது நமது தமிழ்மொழி. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன. மொழியியல் மேதை நோம்சாம்ஸ்கி, சட்டமேதை அம்பேத்கர் ஆகியோர் தமிழின் தொன்மை மற்றும் சிறப்பு குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தைத் தவிர மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சிமொழியாகத் திகழ்கிறது. இந்தியாவில் வேறு எந்த மொழிக்கும் இத்தகைய சிறப்புக் கிடையாது. மேலும் உலகில் சீனம் மற்றும் ஆங்கிலமொழிக்கு அடுத்தபடியாகக் கணினியில் பயன்படுத்தும் மொழியாகத் தமிழ் விளங்குகிறது.

பண்டைத் தமிழ்நாடு 3000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு கொண்டது என்பதை ஆதிச்சநல்லூர் அகழாய்வு உறுதி செய்துள்ளது. கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலான சங்ககாலத் தமிழ்ச்சமூகம் அரசியல், பொருளாதாரம், வேளாண்மை, வணிகம், தொழில், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய பல துறைகளிலும் ஓர் உயர் வளர்ச்சியடைந்த சமூகமாக இருந்தது என்பதைச் சங்க இலக்கியத்தரவுகளும், அகழாய்வுச் சான்றுகளும், கல்வெட்டு - நாணயம் - வெளிநாட்டுக் குறிப்புகள் போன்ற பல சான்றுகளும் உறுதி செய்கின்றன.பண்டைய தமிழ்நாட்டுமக்கள் பெரும் கடலோடிகளாகவும், உலகளாவிய வணிகமேலாண்மைமிக்க மக்களாகவும் திகழ்ந்தனர்.அதனால் பழந்தமிழகம் செல்வவளம் பொருள்வளம் மிக்க, தனித்துவமான பண்பாடும் நாகரிகமும் கொண்ட சமூகமாக இருந்தது. அன்று மக்கள் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அறிவியல் மனப்பான்மையும், மதச்சார்பின்மையும் கொண்டவர்களாகவும், அறத்தோடு கூடிய இன்ப வாழ்வை வாழ்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.

இவ்வளவு சிறப்புப் பெற்ற நமது நிலை இன்று எவ்வாறு உள்ளது? இந்தியாவிலேயே தனது தாய்மொழியாகிய தமிழை எந்த வகுப்பிலும் படிக்காமல் பட்டதாரியாகவும், முதுநிலைப் பட்டதாரியாகவும் ஆகக்கூடிய மிகமிகக் கேவலமான நிலை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகளவு கல்வி வணிகமயமான முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு மது விற்பனையாகக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே அதிக விபத்துக்கள் நடைபெறும் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவிலேயே அதிக அளவு தற்கொலை செய்து கொள்ளும் இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. தவிரவும் முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு எனத் திரும்பிய பக்கமெல்லாம் தமிழகத்தை அச்சுறுத்தும் நதிநீர்ச் சிக்கல்கள். மீனவர் பிரச்சனை, ஈழப்பிரச்சனை, சாதிய ஏற்றத்தாழ்வுகள், தாது மணல் கொள்ளை, இயற்கை வாழ்வாதார அழிப்பு, டாஸ்மாக் பேரழிவு என எண்ணற்ற பிரச்சினைகளால் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் நம்மிடையே தேவையான ஒற்றுமை இல்லை. ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்களில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், தங்களது மாநிலத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சனை என்றால் அவர்கள் சாதி, மத, கட்சி வேறுபாடின்றி ஒருமித்துக் குரல் கொடுப்பதையும், போராடுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இதிலிருந்து நாம் படிப்பினை ஏதும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் மிகப்பெரும் அவலமாகும்.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு? எப்பொழுதுதான் தீர்வு? யாரால்தான் தீர்வு? என்ற கேள்விகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. தாய்மொழிப்பற்றும், தாய்நாட்டுப்பற்றும், ஒற்றுமையும், சனநாயக விழுமியமும் நம்மிடையே அற்றுப் போனதுதான் இவற்றுக்கெல்லாம் மிகமிக முக்கியமான காரணமாகும். இளைய தலைமுறையினரிடம் நமது கலை -கலாச்சாரம் -தொன்மை -மரபு ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வையும், சாதி மத பேதமற்ற சமத்துவ உணர்வையும் உருவாக்கினாலன்றி நாம் மீள முடியாது. தங்களுக்கான தனித்துவமான மொழி, பண்பாடு, நாகரிகம், வாழ்க்கைத்தத்துவம் முதலியன கொண்டு 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு படைத்த நமது மக்கள் இன்று தங்களது அடையாளத்தை இழந்து நிற்கின்றனர். எனவே, நம் வாழ்வை வளமும் நிறைவும் கொண்டதாக, சமத்துவமும் சமநீதியும் கொண்டதாக ஆக்கத் தமிழகமக்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, அந்தச் சீரிய இலக்கு நோக்கிய பயணத்தின் எளிய தொடக்கமாகத் தமிழ்நாடு உருவான நாளாகிய நவம்பர் 1 ஆம் நாளைத் தாயகத்திருநாளாகக் கொண்டாடும் முயற்சி, தமிழ்நாடு மக்கள் மன்றத்தால் முன்னெடுக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க இவ்விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமெனக் கனிவுடன் வேண்டுகிறோம்.

அக்டோபர் 31, 2015 சனிக்கிழமை மாலை 5.30 மணி

பெரியார் மன்றம் (பன்னீர் செல்வம் பூங்கா அருகில்), ஈரோடு

tamilnadu makkal manram 501

tamilnadu makkal manram 502

ஒருங்கிணைப்பு - தமிழ்நாடு மக்கள் மன்றம்
தொடர்புக்கு --94433 07681, 98427 29157, 94861 27751, 94455 70664, 97886 48605, 96593 67215

Pin It