சூலை 10, வெள்ளிக்கிழமை முதல் சூலை12 வரை தமிழகமெங்கும் தொடர்வண்டியில் "அணுத்தீமையற்றத் தமிழகம்" பெறுவதற்கான தமிழகப் பிரச்சார பயணம் ஒன்றை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மேற்கொள்ள இருக்கிறோம்.

ஏற்கனவே முதல்கட்டமாக குமரி முதல் காஷ்மீர் வரை நவம்பர்-2014லில் மேற்கொண்டோம் .2015-பிப்ரவரி 19 முதல் 28 வரை குமரி முதல் அஸ்ஸாம் திப்ருகர் வரை இரண்டாம் கட்டமாக இந்தியாவேங்கும் குறுக்கும் நெடுக்குமாக அணுத்தீமையை எதிர்த்து பிரச்சார பயணம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது .

மூன்றாவது கட்டமாக நாகர்கோவில்-கோவை, கோவை-காரைக்கால், நாகூர் -சென்னை என சூலை 10, வெள்ளிக்கிழமை முதல் சூலை12 வரை தமிழகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் .

நாளை காலை (சூலை 10-2015) வெள்ளிக்கிழமை அன்று காலை 6:30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மும்பை விரைவு வண்டி (16340) மூலம் புறப்பட்டு பிற்பகல் 3:30 மணிக்கு ஈரோட்டில் இறங்கி அங்கிருந்து கோவை சென்றடைகிறோம்.

இந்த பிரச்சாரப் பயணத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார், முகிலன், இடிந்தகரை போராட்டக்குழுப் பெண்கள் உட்பட 20 பேர் பங்கேற்கின்றனர் .

koodankulam campaign 600

தமிழகமெங்கும் தொடர்வண்டிப் பயணம், சூலை 10 முதல் சூலை12 வரை, 2015
====================================:

தமிழகத்திலுள்ள ஏழைகள் உள்ளிட்ட அனைத்து மக்களின் வளர்ச்சியையும் நாங்கள் விரும்புவதால் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை வரவேற்கிறோம். நமக்கு வேண்டிய மின்சாரத்தை நமது நிலத்தை, நீரை, காற்றை, கடலை, கடலுணவை, கால்நடைகளை, பயிர்களை அழிக்காத சூரியஒளி, காற்றாலை, கடல் அலை போன்றவை மூலம் பெறுவோம் என்று சொல்கிறோம்.

காரணம் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, தண்ணீர் பாதுகாப்பு, காற்றுப் பாதுகாப்பு போன்றவை எரிசக்தி பாதுகாப்பைவிட முக்கியமானவை.. ஆனால் இந்திய அரசு ஆறு முதல் எட்டு அணுஉலைகள் கொண்ட அணுப்பூங்காக்களை தமிழகத்தில் கூடங்குளம், கல்பாக்கம் எனுமிடங்களில் நிறுவ முயன்று வருகிறது.

கல்பாக்கம் அணுமின் பூங்கா:

கல்பாக்கத்தில் 220 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு அணுஉலைகளும், எரிபொருள் மறுசுழற்சி செய்யும் ஆலை (reprocessing plant) ஒன்றும், அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆலை (waste treatment plant) ஒன்றும் இயங்கி வருகின்றன. இவற்றோடு இரண்டு அதிவேக ஈனுலைகள் (Prototype Fast Breeder Reactor - PFBR) அமைப்பதற்கான வேலைகள் 2௦04-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டன. ஈனுலை என்பது தான் உட்கொள்ளும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உருவாக்குகிற திறன் கொண்டது. இவற்றைத் தவிர, அணுக்கழிவுகளைச் செயலிழக்கச்செய்யும் (Waste Immobilization Plant) ஒன்று 2௦13 நவம்பர் மாதம் இந்திய குடியரசுத் தலைவரால் வீடியோ கான்ஃப்ரன்சிங்க் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்பாக்கத்தில் அணு ஆயுதங்கள் தொடர்பான வேலைகளும் நடக்கின்றன. கல்பாக்கத்துக்கு அருகே கடலில் எரிமலை ஒன்று இருப்பதாகவும் அதனால் அணுஉலைக்கு ஆபத்து வரலாம் என்ற செய்தியை முதலில் மறுத்த அணுசக்தித் துறை தற்போது இதை ஆய்வு செய்வதற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது.

நியூட்ரினோ, அணுக்கழிவு ஆய்வு மையம்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் பொட்டிபுரம் கிராமத்துக்கு அருகேயுள்ள அம்பரப்பர் மலை அல்லது அம்பரசர் கரடு எனப்படுகிற குன்றின் அடிப்பகுதியில் குகைகள் அமைத்து, நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு செய்யும் மையம் ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வளங்களை, வாழ்வுரிமைகளை பாதிக்கும் திட்டமாகும். ஒருசில ஆண்டுகள் நியூட்ரினோ ஆய்வுகள் செய்து முடித்துவிட்டு, இந்தக் குகைகளை இந்தியாவெங்கிலுமிருந்து வந்து குவியும் அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்கும் ஆழ்நிலக் கிடங்காக (Deep Geological Repository) மாற்றுவார்களோ என்று சந்தேகிக்கிறோம்.

இந்த சந்தேகம் எழக் காரணம் மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுக்கா வடபழஞ்சி கிராமத்திலுள்ள “உயராற்றல் இயற்பியல்” வளாகத்தில் அணுக்கழிவு ஆய்வு மையம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளிடமிருந்து அணுஉலைகள் வாங்கத் திட்டமிட்டுள்ளார்கள். அமெரிக்கா அண்மைக் காலங்களில் ஓர் அணுஉலையைக்கூட அவர்கள் நாட்டில் கட்டவில்லை. 2௦11-ஆம் ஆண்டு நடந்த ஃபுகுஷிமா விபத்துக்கு பிறகு, ஜப்பான் தனது 52 அணுஉலைகளையும் மூடிவைத்திருக்கிறது. ஜெர்மனி அனைத்து அணுஉலைகளையும் படிப்படியாக மூடுகிறது. இந்திய அரசு ஆஸ்திரேலியா, கசக்ஸ்தான், நமீபியா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியம் வாங்குகிறது. ஆனால் இதில் எந்த நாடுமே ஓர் அணுமின் நிலையத்தைகூட அவர்கள் நாட்டில் நிறுவவில்லை. இந்த உதவாத தொழிற்நுட்பத்தின் குப்பைக் கிடங்காக தமிழகம் மாற வேண்டுமா?

அணுமின்சாரம் மலிவானது அல்ல:

நிலம் கையகப்படுத்துவது, கட்டுமானத்துக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வது, திட்டமிடாத அதிகப்படியானச் செலவுகள், லஞ்சம், ஊழல், ஊதாரித்தனம், பாதுகாப்புச் செலவினங்கள், அணுஉலையை செயலிழக்கச் செய்வதற்கான செலவு, அணுக்கழிவை அப்புறப்படுத்தி, பாதுகாக்கும் செலவு – இப்படியாக விரயமிக்க அணுமின்சாரத் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் மிக அதிகம் செலவாகிறது.

அணுமின்சாரம் தூய்மையானது அல்ல: அணுமின் நிலையக் கட்டுமானங்களில், அவற்றை இயக்குவதில் பயன்படுத்தப்படும் ஏராளமான இரும்பு, சிமென்ட், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றைப் பாருங்கள். இவையனைத்தும் சூழலை மாசுபடுத்தித்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அணுமின் நிலையக் கழிவுகள் 48,000 ஆண்டுகள் மக்கிப் போகாத மிகவும் ஆபத்தான கதிர்வீச்சை வெளியிடும் தன்மை கொண்டவை.

அணுமின்சாரம் பாதுகாப்பானது அல்ல:

இந்தியா மக்கள் தொகை அதிகமான, அடர்த்தி மிக்க நாடாக இருப்பதால், ஒரு சிறிய விபத்துக்கூட கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும்கேடு விளைவிக்கும்.

அணுமின்சாரம் உடல்நலனுக்கு உகந்தது அல்ல:

அணுமின் நிலையங்கள் மிக அதிக அளவிலான சூடான, கதிர்வீச்சுக் கலந்தத் தண்ணீரை நாள் முழுவதும், ஆண்டுக்கணக்கில் வெளியிடுகின்றன. அணுஉலைகளிலிருந்து அயோடின், சீசியம், ஸ்ட்ராண்டியம், டெலூரியம் போன்ற கதிர்வீச்சுக் கனிமங்கள் வெளியாகின்றன. இவையெல்லாம் பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. ஏராளமானக் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர். கதிர்வீச்சு நோய்கள், புற்றுநோய் என எண்ணற்ற நோய்கள் வருகின்றன.

அணுமின்சாரம் அறநெறிப்பட்டது அல்ல:

நமது தலைமுறைக்கு நாற்பது ஆண்டுகள் மின்சாரம் கிடைக்கிறது என்பதற்காக, அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நிறைய கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக, நமது குழந்தைகளின், வருங்காலத் தலைமுறையினரின் இயற்கையை, எதிர்காலத்தை அழித்தொழிப்பது எந்த வகையில் அறநெறியாகும்?

எரிசக்திப் பிரச்சினைக்கு அணுமின்சாரம் பதிலே அல்ல: மறைமுகமாக கார்பன் மாசு ஏற்படுத்தும் அணுசக்தி புவி வெப்பமாதலுக்கு ஓர் ஏற்ற பதிலே அல்ல. ஆபத்தானக் கழிவுகளை உருவாக்கி அணுசக்தி நமது பூமியை நஞ்சாக்குகிறது.

எரிசக்தி சுதந்திரம் என்ற பெயரில், சமூகப் பொருளாதார, அரசியல் சுதந்திரத்தை இழக்கலாமா? நமது இழப்பீடு சட்டத்தை அவமதித்து அந்நிய நாடுகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கலாமா? அடிமைகள் போல நடந்துகொண்டு, நமது நாட்டை மறுகாலனி ஆதிக்கத்துக்குள் தள்ளலாமா?

சிந்திப்பீர் தோழர்களே!

கூடங்குளம்: தற்போதைய நிலை:

----------------------------------------------------

தரமற்ற உபகரணங்களாலும், உதிரிப் பாகங்களாலும் கட்டப்பட்டிருக்கும், மோசடிகள் நிறைந்த கூடங்குளம் அணுமின் நிலையம் தற்போது இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கிறது. வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே மே மாதத் துவக்கத்தில் முதல் அலகு பழுது ஏற்பட்டு மூடப்பட்டது. ஒன்றரையாண்டு காலத்துக்குள் 24 முறை மூடப்பட்ட உலகின் உன்னதமான அணுஉலை உண்மையில் என்ன செய்கிறது என்று யாருக்கும் தெரியாது. மே 19, 2015 அன்று அணுசக்தித் துறை செயலர் திரு. ரத்தன் குமார் சின்கா சொன்னார்: “கூடங்குளம் அணுஉலை டர்பைனிலிருந்து சில பாகங்களை நீக்கியிருக்கிறோம். முதல் அலகில் பிரச்சினை இருந்ததால் முழுவீச்சில் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. டர்பைன் பாகங்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றன.”

ஒப்பற்ற கூடங்குளம் அணுஉலையின் இரண்டாவது அலகில் 2013 செப்டம்பர் மாதம் 96 விழுக்காடு வேலைகள் முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் அது இயக்கப்படும் என்றும், 2014 யூன் மாதம் வர்த்தக ரீதியிலான மின்சார உற்பத்தி தொடங்கும் என்றும் அறிவித்தார்கள் ஆனால் இன்று வரை இரண்டாவது அலகில் எதுவும் நடந்தபாடில்லை.

கடந்த 2௦13-ஆம் ஆண்டு மட்டும் கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் ரூ. 26.6 கோடிக்கு 48 லட்சம் லிட்டர் டீசல் வாங்கியது. பின்னர் சுமார் 4௦ கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கிய ஆதாரங்களை கண்டுபிடித்து அணுமின் நிலையத்தில் இவ்வளவு டீசலுக்கு என்ன தேவை என்று கேட்டோம். கூடங்குளம் நிர்வாகத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. மே 14, 2014 அன்று “உலகத்தரம் வாய்ந்த” கூடங்குளம் அணுஉலையில் ஒரு விபத்து நடந்து ஆறு ஊழியர்கள் 75 விழுக்காடு தீப்புண்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்டனர். இவர்களின் கதி என்னவாயிற்று என்று இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.

அண்மையில் கேரள அரசியல் தலைவர்கள் பலரை சந்தித்துப் பேசும்போது, கூடங்குளத்திலிருந்து அவர்களுக்கு எவ்வளவு மின்சாரம் போகிறது என்று விசாரித்தோம். “இதுவரை கூடங்குளத்திலிருந்து எதுவும் வரவில்லை” என்பதே பதிலாக இருந்தது.

மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரசு அரசு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது. இந்திய இழப்பீட்டுச் சட்டத்தின் காரணமாக 3 மற்றும் 4 அணுஉலைகளுக்கு சுமார் 45,௦0௦ கோடி ரூபாய் செலவு ஆகுமென்று மோதி அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா 2015 சனவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது, இந்திய இழப்பீட்டுச் சட்டத்தை வளைத்து, நெளித்து அணுஉலைகளில் விபத்து நடந்தால் வெளிநாடுகளுக்குப் பொறுப்பு எதுவுமில்லை என்று மாற்றியமைத்தார்கள். நமது இழப்பீடு சட்டத்தின் அடிப்படையில் அணுஉலை விற்கும் அமெரிக்காவுக்குப் பொறுப்பில்லை என்றால், ரஷ்யாவுக்கும் பொறுப்பில்லைதானே? அப்படியானால் ரஷ்யாவுக்கு ஏன் ரூ. 45,௦0௦ கோடி விலை கொடுக்கவேண்டும்?

கூடங்குளம் போராட்டம் சம்பந்தமாக 2011-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசும்போது, மேற்கு வங்க முதல்வர் தமது மாநிலத்தில் அணுஉலை வேண்டாமென நிலைப்பாடு எடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தாங்களும் அப்படி ஒரு நிலையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அப்போது அவர் “அந்த அணுமின் நிலையம் துவக்க நிலையில் இருப்பதால் மேற்கு வங்க முதல்வரால் அப்படி ஒரு நிலைப்பாடு எடுக்க முடிந்தது, ஆனால் கூடங்குளம் திட்டம் முடிவடையும் தருவாயில் இருப்பதால், என்னால் அந்த மாதிரி முடிவெடுக்க முடியாது” என்று தெரிவித்தார். கூடங்குளத்தில் 3, 4, 5, 6 திட்டங்களெல்லாம் துவக்க நிலையில் இருப்பதால், அ.தி.மு.க. அரசு தமிழ் மக்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இவற்றைத் தடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தின் அடுத்த பெரிய கட்சியான தி.மு.க.வும் இந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்” என்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தற்போதைய நிலை. கூடங்குளம் உலைகள் உண்மையில் ஆரோக்கியமான நிலையில் இல்லை. இந்திய ஆளும்வர்க்கமும், இந்துத்துவ சக்திகளும், உலகளாவிய அணுசக்தி வல்லாதிக்கமும் இந்தியாவில் ஓர் ‘அணுசக்தி தாஜ்மகால்’ கட்ட விரும்புகின்றனர். அதன் அடிக்கல்தான் கூடங்குளம் அணுமின் திட்டம். “அடிக்கல்லே ஆடிக்கொண்டிருக்கிறது” என்பதை ஒத்துக்கொண்டால், ‘தாஜ்மகால் திட்டம்’ தகர்ந்துவிடும். எனவேதான் காங்கிரசுக் கட்சியும், நரேந்திர மோதி அரசும், ரஷ்ய அரசும், ரஷ்ய கம்பெனிகளும், இந்திய அணுசக்தித் துறையும் ஒன்றாக கைகோர்த்து ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.

“எங்கள் மக்களின் உயிர்களோடு விளையாடுகிறீர்களா?” என்று இவர்களைத் தட்டிக்கேட்பதற்கு சொந்தப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தின் பெரிய தலைவர்களும், கட்சிகளும் தயாராக இல்லை. நமக்கு ஆதரவாக இயங்கும் தலைவர்களுக்கு நம் மக்கள் பெரிய அரசியல் வலிமையை அளிக்கவில்லை. எனவே “தன் கையே தனக்கு உதவி” என்கிற அடிப்படையில் தமிழ்க் குடிமைச் சமூகம் தனக்கான உதவிகளை செய்துகொள்வதொன்றே தப்பிக்கும் வழியாக இருக்கிறது.

அணுஉலை எதிர்ப்புப் போராளிகளும், மக்களுக்கான கட்சிகளும், இயக்கங்களும், குடிமைச் சமூகத்தின் அங்கத்தினர் அனைவரும் ஒருங்கே நின்று செயல்பட்டால்தான் விடிவு பிறக்கும். இல்லையேல், நம் குழந்தைகளின், பேரக் குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுபோகும்.

வாருங்கள் தோழர்களே,
அணுத்தீமையற்ற தமிழகம் அனைவருமாய் சேர்ந்து படைப்போம்!

பயணத் திட்டம்:

• சூலை 10, வெள்ளிக்கிழமை அன்று காலை 6:30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மும்பை விரைவு வண்டி (16340) மூலம் புறப்பட்டு பிற்பகல் 3:30 மணிக்கு ஈரோட்டில் இறங்கி அங்கிருந்து கோவை சென்றடைகிறோம்.

நெல்லை மாவட்டத்தில்
வள்ளியூர் காலை 07.05 மணிக்கும்,
நெல்லை காலை 8.30 க்கு வந்து 08.35 க்கு புறப்படும்.
வாஞ்சி மணியாட்சி : 09.09
கோவில்பட்டி : 09.45
சாத்தூர் : 10.10
விருதுநகர் : 10.43-10.45
மதுரை : 11.45-11.5013.10
கோடை ரோட் : 12.25
திண்டுக்கல் : 13.05-13.10 (மதியம் 01.05)
கரூர் : 14.17-14.20 (மதியம் 02.07 -02.10)
ஈரோடு :15.30 ( மதியம் 03.30)

•சூலை 11 அன்று அதிகாலை 3:10 மணிக்கு கோவை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர்-காரைக்கால் விரைவு வண்டி (16188) மூலம் புறப்பட்டு மதியம் 11:50 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறோம்.

திருப்பூர் :03.58-04.00
ஈரோடு :04.40-04.45
கொடுமுடி : 05.20
புகலூர் : 05.35
கரூர் :05.52-05.55
குளித்தலை :06.40
திருச்சி கோட்டை : 07.25
திருச்சி :07.40-07.50
தஞ்சை :08.43-08.45
நீடாமங்கலம் :09.15
திருவாரூர் :09.35-09.40
நாகபட்டினம் :10.10-10.15
நாகூர் :10.32
காரைக்கால் :11.50


• சூலை 12 அன்று காலை 10:20 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து சோழன் விரைவு வண்டி (16854) மூலம் புறப்பட்டு பிற்பகல் 4:30 மணிக்கு செங்கல்பட்டு போய் சேருகிறோம்

தஞ்சை : ; 10.18- 10.20
கும்பகோணம் : 11.00
மயிலாடுதுறை : 11.28-11.30
வைத்தீஸ்வரன்கோவில் : 11.47
சீர்காழி :11.55
சிதம்பரம் :12.12
கடலூர் கோட்டை சந்திப்பு : 12.50
திருப்பாதிரிபுலியூர் :13.00(மதியம் 01.00)
பண்ருட்டி :13.22(மதியம் 01.22)
விழுப்புரம் :14.15-14.25(மதியம் 02.15-02.25)
திண்டிவனம் :15.20(மதியம் 03.020)
மேல்மருவத்தூர் :15.50(மதியம் 03.50)
செங்கல்பட்டு :16.33(மதியம் 04.33)

நாங்கள் போகும் வழியெங்குமுள்ள அணு உலை எதிர்ப்பு போராட்ட ஆதரவுக் குழுக்கள், கட்சிகள், இயக்கங்கள், தோழர்களிடம் ரயில் நிலையங்களில், ஊர்களுக்குள் பத்திரிகையாளர் சந்திப்புக்கள் நடத்தவும், நம்மனைவரின் வருங்காலத்தையும், நல்வாழ்வையும் அழிக்கப் போகும் இந்த முக்கியமானப் பிரச்சினை குறித்துப் பேசவும் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்

- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It