"2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நமது நிலைப்பாடு" என்பது குறித்து அக்டோபர் 13ஆம் நாள் ஞாயிறன்று சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணிவரை இரு அமர்வுகளாகக் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அரங்க.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்தாய்வில் நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களோடு, பல்வேறு சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். விவாதத்தில் கலந்து கொண்ட எழுபது தோழர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

 ஊழல், கறுப்புப்பணம், பார்ப்பனிய-பனியா சார்பு, சாதி ஆதிக்கம், பதவிவெறி, பன்னாட்டு நிறுவன விசுவாசம், உலகமய ஆதரவு, தமிழீழத்திற்கு எதிரான அணுகுமுறை, போலிமதச்சார்பின்மை போன்றவற்றில் காங்கிரசும்-பாரதிய ஜனதாவும் வேறுபட்டவையல்ல - இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய அழுகிய மட்டைகளே! எனவே இவ்விரண்டு அணிகளையும், அதனோடு கூட்டணி வைத்துள்ள அனைத்துக் கட்சிகளையும் அம்பலப்படுத்திப் பரப்புரை செய்ய வேண்டும்.

 எதிர்வரும் தேர்தலில், விழுமியம் சார்ந்த மாற்றுவழியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அம்மாற்று வழியை மக்கள் ஏற்கத்தக்க வகையில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

 கூட்டுச் சிந்தனை, விவாதம் ஆகியவற்றினூடாகக் கீழ்க்காணும் மாற்றுவழிகள் பரப்புரைக்காக ஏற்கப்பட்டன:-

1. சாதி-மதம் போன்றவற்றை மூலதனமாக வைத்து அரசியல் வணிகம் செய்யும் கட்சிகளைத் தடை செய்யவேண்டும்.

2. வேட்பாளர்களைத் தேர்;வு செய்யும் பொழுது, சாதி, பணம் ஆகிய அளவுகோல்களை வைத்துத் தேர்வு செய்யக் கூடாது. வேட்பாளர்களுக்கெனத் தகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும்.

3. மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.

4. இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள அனைத்துத் தேசிய இனங்களின் இறையாண்மை முழுமையாக ஏற்கப்பட வேண்டும்.

5. நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் சமூக விரோத சக்திகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்குத் துணை நிற்கும் அரசியல்வாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

6. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாபவெறி, மனித உரிமை மீறல் போன்றவற்றை முறியடித்துத் தற்சார்பு மிக்க பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

7. அரசியலில் குற்றவாளிகளின் (கிரிமினல்களின்) ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

8. இலங்கை இனச்சிக்கலைப் பொறுத்தவரை தனித்துவமான பன்னாட்டு விசாரணை உடனடியாகத் தேவை. நீடித்த அமைதியையும், எதிர்காலப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். தமிழீழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் அதில் பங்கேற்க வேண்டும்.

இத்தகைய அடிப்படை சனநாயகக் கோரிக்கைகளை மக்கள் ஏற்கத்தக்க வண்ணம் பரப்புரை செய்ய ‘தமிழக வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டியக்கம்” என்ற பெயரில் செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கென 15 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த விவாதமும் எழுந்தது. இருப்பினும், அடுத்தடுத்து நடைபெறும் விவாதங்களில் இது குறித்து இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

- கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்புக்குழு, தமிழக வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டியக்கம்

Pin It