நூலின் முன்னுரையிலிருந்து...
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் இதழாக விளங்கியது ‘சங்கர்ஸ் வீக்லி’. அந்த இதழின் ஆசிரியர் சங்கர் ஓர் அற்புதமான கார்ட்டூன் ஓவியர். அவருடைய தூரிகை தொடாத தலைவர்களோ, முக்கியமான சமூகம் சார்ந்த சம்பவங்களோ அன்றில்லை. தன்னுடைய பெயரில் ஒரு கார்ட்டூன் வார இதழை வெளியிடுவதற்கு முன்பு சங்கர் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் கேலிப் படங்களை வரைந்து கொண்டிருந்தார். எள்ளல் சுவையோடு அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளின் நிஜமான நிறத்தைச் சில கோடுகளில் கொண்டு வந்து காட்டிய சங்கரின் ஆற்றலை ஜவஹர்லால் நேரு கொண்டாடி மகிழ்ந்தார்.
பாரதப் பிரதமர் பதவியில் நேரு அமர்ந்த பின்பு ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழிலிருந்து சங்கர் விலகி 1948-ல் ‘சங்கர்ஸ் வீக்லி’யை வெளியிட்டார். வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் நேரு,‘என்னையும், என் அரசையும் நண்பர் சங்கர் தன் கேலிப் படங்கள் மூலம் எவ்வளவு வேகமாகத் தாக்கினாலும் அவற்றைக் கண்டு நான் மகிழ்வேன். அவர் நட்பு கருதி என்னைத் தாக்காமல் இருந்துவிடலாகாது என்பதே என் வேண்டுகோள்’ என்றார். ஒருமுறை சங்கர் தன் இதழில், ‘நேருவை எவ்வளவு கடுமையாக விமர்சித்தும் எழுதலாம்; கேலிச்சித்திரம் வரையலாம். ‘நமக்கு அதனால் ஒரு தீங்கும் நேராது. எந்த நிலையிலும் நேரு திருப்பித் தாக்கமாட்டார்’ என்று எழுதினார். ஜனநாயக அரசியலில் அது ஒரு பொற்காலம்.
இன்று எந்த அரசியல் தலைவரும், ஆட்சியாளரும் விமர்சனங்களை எந்த வடிவிலும் வரவேற்பதில்லை. ‘King can do no wrong' என்ற தெய்வீகக் கொள்கையில் திளைப்பவர்கள் இவர்கள். ‘வாயைத் திறந்தால் ‘பல்லாண்டு’ பாட வேண்டும். பேனா பிடித்தால் வாழ்த்துப் பா வழங்க வேண்டும்’ என்ற மனப்போக்கில் வளர்ந்து விட்டவர்களுக்கு இடையில் உண்மைகளை வெளிப்படுத்த உள்ளத்தில் நேர்மை ஒளி துலங்க வேண்டும். வணிகமயமாகிவிட்ட நம் வாழ்கால ஊடகங்களில் நெஞ்சத் தெளிவும், நேர்மைத் துணிவும் உள்ளவர்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது. அந்த அரிதான மனிதர்களில் நண்பர் பாலா ஒருவர் என்பதற்காக அவர் என்றும் பெருமைப்படலாம்.
’குமுதம்’ இதழில் பாலா வரையும் கார்ட்டூன்கள் அவருடைய சமூகநலன் சார்ந்த சிந்தனைப் போக்கின் சிறப்பான வெளிப்பாடுகள். கவிதைக்கு மதிப்பு அதிலுள்ள சொற் சிக்கனமும், அர்த்த அடர்த்தியும் போடும் அடித்தளம்தான். ஒன்றே முக்கால் வரியில் ஒரு முழுமையான வாழ்வியல் கருத்தை வலிமையாக வெளிப்படுத்துவதுதான் திருக்குறளின் தனிச் சிறப்பு. வாமன வார்த்தைகளில் விசுவரூபம் காட்டுபவன்தான் கடவுளுக்கு நிகரான படைப்பாளி. ஒரு கார்ட்டூனிஸ்ட் இரண்டு மூன்று கோடுகளில், யாரும் நாள்கணக்கில் முயன்றாலும் விளக்கமுடியாததை, எந்தச் சிரமமும் இன்றி மிக இயல்பாக விளக்கிவிடும் போது, அவனுக்குள் வெளிப்படும் வாமன அவதாரத்தை நம்மால் தரிசிக்க முடிகிறது.
ஈழத்தில் தமிழினம் வீழ்ந்துபட்ட வேதனையை, இலங்கைத் தீவு சிங்களப் பேரினவாத வெறிபிடித்த ஓர் அராஜக ஆட்சியால் கொலைக்களமான கொடுமையை, மனித உரிமைகள் அனைத்தும் மதம் பிடித்த யானையின் காலடிப் பூக்களாய்ச் சிதைந்துபோன சோகத்தை நண்பர் பாலா, இலங்கைத் தீவே ஒரு தூக்குக் கயிறாய்த் தொங்குவதை ஒரு கறுப்புக் கோட்டில் காட்சிப்படுத்தும் நேர்த்தியில், ஓர் இன அழிப்பின் ஆற்ற முடியாத அவலம் முழுமையாக முகம் காட்டுகிறது. கார்ட்டூனை வெறும் ‘கேலிச்சித்திரம்’ என்று பொருள் கொள்வதே பிழையென்று படுகிறது.
மனிதகுல வரலாற்றில் சொல்லில் சிறைப்படுத்த முடியாத சோகங்களை முன்பு அனுபவித்தது யூத இனம்; இன்று அனுபவித்துக் கொண்டிருப்பது ஈழத் தமிழினம். ஈழத் தமிழரின் இன்னல்களை, தாயகத் தமிழரின் சுயநலத்தை, அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதசாகசத்தை, இந்திய அரசின் நம்பிக்கை துரோகத்தை ஒரு தார்மிக ஆவேசத்துடன் தோலுரித்துக் காட்டும் பாலாவின் இந்த அரிய கார்ட்டூன் தொகுப்பு, ‘போலித்தனமில்லாத ஓர் இதயத்தின் மௌன வலியை’ வார்த்தைகளின் உதவியின்றி கறுப்புக் கோடுகளில் அழுத்தமாக ஆவணப்படுத்துவதில் சரித்திரம் படைத்திருக்கிறது என்பது சத்தியம்.
அன்புடன்,
தமிழருவி மணியன்
கொடூரங்களின் சாட்சி
பாலாவின் கோடுகளின் வழியே வழிவது நமது கோபம், குருதி, கொடூரங்களின் சாட்சி. நண்பர்களே.. பழிவெறி, பதவி வெறி, பணவெறி, அதிகார வெறிக்கு இனத்தை தின்னக்கொடுத்த பாவிகள் நாம். வல்லாதிக்க வெறியர்களே.. தான் தவழ்ந்த, நடந்த, அழுத, சிரித்த, உண்ட, பயிரிட்ட.. தாய் மண்ணிலேயே கொடூரமாகக் கொன்று புதைக்கப்பட்ட எம் இன உயிர்கள் வரலாற்றை விடப்போவதில்லை. அவர்களின் சாபத்தில் காலம் தடுமாறும். துயரத்தின் மடியில் தூங்க முடியாத ஈழப்பிள்ளையின் கனவில் கயவர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை அது நினைவாகும்.
ஈழப்போரின் மனசாட்சி அரசியல் நரிகளையெல்லாம் அடையாளப்படுத்தி இருக்கிறது. அவர்களை வனத்தின் சினம், வன்மம், வரலாறு தண்டிக்கும். சிங்கள பேரினவாதத்தின், வல்லாதிக்க பேரினவாதத்தின் கொடூர நீட்சியைத் துண்டிக்கும். உலக மக்களே.. வன்னி நிலப்பரப்பில் எம்மக்கள் கொட்டிய குருதி காலத்திற்கும் காயப்போவதில்லை. அதுதான் பாலாவின் கோடுகளில் வழிந்து தொப்புள் கொடியாய் துடிக்கிறது. மானுடமே.. மனிதமே.. எமை காக்க உனை அழைக்கிறது..
- ராஜூ முருகன்
ஈழம் ஆன்மாவின் மரணம்
பாலா 9840410037
புத்தகத்தின் விலை ரூ-65, பக்கம் 100,
குமுதம் பு(து)த்தகம் வெளீயீடு,
151.புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை-10.
போன் 26422146/45919141
ஈ.மெயில்-
தொடர்புக்கு : சுதாகர், 9962090562