ஈழத்தில் வருகிற இதழ்கள் சனங்களைப்போலவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. துணிச்சலாக கருத்துச் சொல்லும் ஒரு இதழாக வெளிவருவதென்பது சாத்தியமற்றிருக்கறிது. இருப்பினும் ஒரு சில இதழ்கள் அப்படி வருகின்றன. ஆனால் பல இதழ்கள் காலத்தின் நெருக்கடி குறித்து எந்த கருத்துமற்று வருகின்றன. காலத்திற்கும் சமூகத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்ற எழுத்துகளை நிரப்பி தணிக்கைகளை ஏற்று வருகின்றன. வடக்கில் முழுமையான தேக்கத்தினை சிறு பத்திரிகைகள் அடைந்து விட்டன. அவை பெரிய இடைவெளிகளுடனும், காலமாகியும் வந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தலிருந்து வந்த அம்பலம் என்ற இந்த இதழ் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த ‘தெரிதல்’ என்ற பத்திரிகை நின்றுபோனது படைப்பிலக்கிய சூழலில் ஒரு Ampalamகனதியான பத்திரிகையின் இழப்பாக இருக்கிறது. ‘தாயகம்’ என்ற தேசிய கலை இலக்கியப்பேரவையின் இதழ் தொடர்ந்து அதிகாரங்களை எதிர்த்து காலத்துக்காக குரலிட்டுக்கொண்டிருக்கிறது. ‘கலைமுகம்’ என்ற திருமறைக் கலாமன்றம் வெளியிடுகிற இதழ் நிறுவனத்தின் போக்குகளிற்கு உட்பட்டு அமைதியாக தகர்ந்த சூழலை பிரதிபலிக்கிறது. ‘ஜீவநதி’ என்ற சிறுபத்திரிகை கடந்த இரண்டு வருடமாக வந்துகொண்டிருக்கிறது. மோசமான தணிக்கைகளுக்கு உட்படுத்துவதுடன் படைப்பின் பகுதிகளை வெட்டி அவற்றிற்குள் தமது ஆதிக்கத்தை இடைச் செறுகி கட்டமைக்கப்படுகிறது. காலத்தை எந்த வித்திலும் பிரதிபலிக்காது உயிரற்ற இதழாக வருகிறது. கலைமுகம், தாயகம் என்பன வடிவமைப்பில் நேர்த்தியாக இருக்கிறது. ஜீவநதி வடிவமைப்பில் படு மோசமாக இருக்கிறது. தனிநபர் நலன்களுக்காக அது கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழக இதழ்கள் எல்லாம் ஈழத்துப் பிரச்சினைகளை முன்னிருத்தி ஈழத்து சிறப்பிதழ்கள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் தமிழக மக்களோ இந்திய மக்களோ எந்த மன மாற்றத்திற்கும் உள்ளாக இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதனால் எங்களுக்கு எந்த நன்மையும் நிகழப்போவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற மற்றும் ஈழத்து-இலங்கை இதழ்கள் வேறு ஒரு உலகத்து கதைகளை பேசியபடியிருக்கின்றன. அவை தங்களுக்கு அச்சுறுத்துல்கள் ஏற்படலாம் என அப்படி வருகிற நெருக்கடியை நாம் உணருவோம். காலம் குறித்த பதிவுகளின்றி இந்த இதழ்கள் ஈழத்தில் வெளிவந்து கொண்டிருப்பது காலத்தை இருட்டடிப்பு செய்கிற நடவடிக்கைகளுக்கு சாதகமாயிருக்கிறது.

‘மூன்றாவது மனிதன்’ என்று பௌசரால் கொண்டு வரப்பட்ட இதழ் ‘சரிநிகர்’ என்று சிவக்குமாரால் கொண்டு வரப்பட்ட இதழ் என்பன ஈழத்து சமூக அரசியலை எல்லாவிதமான பார்வைகளுடனும் பேச களம் அமைத்திருந்தன. அவை பல்வேறு நெருக்கடிகளால் நின்றுபோய்விட்டது. விடுதலைப்புலிகளின் ‘வெளிச்சம்’ என்ற பத்திரிகை கூடுதலாக வன்னிப் படைப்புக்களுடன் மிகவும் காத்திரமாக வெளிக்கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் கருணாகரனும் பிறகு புதுவைஇரத்தினதுரையும் அதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஷ்ணுவால் கொண்டு வரப்பட்ட ‘தவிர’ செல்வமனோகரனால் கொண்டு வரப்பட்ட ‘தூண்டி’ என்பனவும் தற்பொழுது நின்றுவிட்டன. அனுராதபுரத்தலிருந்து வஸிம்அக்கரம் வெளிக்கொண்டு வரும் ‘படிகள்’ இதழ் ஓரளவு நேர்த்தியாக வருகிறது. எஸ்.போஸ் கவிதை இதழாக வெளியிட்ட ‘நிலம்’ இதழ் அவரது படுகொலையுடன் நின்றுவிட்டது. ‘நடுகை’, ‘ஆற்றுகை’, ‘கூத்தரங்கம்’ என்பன தற்போது வருகின்றன. இவைகளுடன் தி.ஞானசேகரனின் ‘ஞானம்’ டொமினிக்ஜீவாவின் ‘மல்லிகை’ முஸ்லீம்களின் மனவோட்டத்துடன் ‘பெருவெளி’ என்பனவும் ஈழத்து சிறு பத்திரிகைகளாக வருகின்றன.

புலம்பெயர் சூழலில் ‘உயிர்நிழல்’, ‘காலம்’, ‘எதுவரை’, ‘வடு’, ‘கலப்பை’, ‘காற்றுவெளி’ போன்ற பத்திரிகைகள் நுண் அரசியல் மற்றும் சமூக மனப்போராட்டங்களை பேசுவதற்கு திறந்த களம் அமைத்து கொண்டிருக்கிறது.

சிறு பத்திரிகைகள் சமூக அரசியலை மிகவும் நுட்பமாக பேசி அவற்றில் செல்வாக்கு செலுத்தியிருந்தன. பல நல்ல சிறுஇதழ்கள் நின்றுபோனது ஈழத்து படைப்பிலக்கிய சூழலை பாதிக்கிறது. காலம் குறித்த விவாதங்களுடன் நெருக்கடிகளை பதிவு செய்வதில் சிறுபத்திரிகையின் பங்கு முக்கியமானது. படைப்பாளிகளினதும் சிறு பத்திரிகைகளினதும் அரசியல்கூட அவற்றின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகின்றன. வணிக மற்றும் தன்னரசியல் கொண்டு வருகிற சிறுபத்திரிகையினை வெகு சுலபமாக புரிந்துகொள்ள முடியும். பிரக்ஞை பூர்வமான அடிப்படையுடன் திறந்த கருத்துக் களத்துடன் அவை வெளிவர வேண்டியது சமூகத் தேவையாக இருக்கிறது.

அம்பலம் என்ற இதழின் மீள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைப்பில் நேர்த்தியான தன்மையுடன் வந்திருக்கும் இந்த இதழ்கூட ஒடுங்கிய காலத்தில் கொதித்து உட்கொதிக்கிற நகரத்தலிருந்து வந்தமைக்கான பெரிய மௌனம் கொண்டிருக்கிறது. பயங்கரமான மௌனமும் அடிப்படையற்ற காலத்தையும் நிரப்பி வைத்திருக்கிறது. ஈழத்து அருபமான சூழலையும் நுண் படைப்பிலக்கிய போக்கையும் பிரதிபலிக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு இதழை கொண்டு வருவது பெரிய பிரச்சினையாக இருக்க பிரபாகரன் அம்பலம் இதழை வெளிக் கொண்டு வருவது ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய நிலையை தருகிறது.

பா.அகிலனால் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்தின் முகப்பு இருட்டு நகரத்தின் கொதிக்கிற அவலத்தை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக விசாகரூபன் எழுதிய புலம்பெயர் கவிதைகள் உருவம் உள்ளடக்கம் என்ற புத்தகம் பற்றிய சாங்கிருத்தியனின் விமர்சனம் இடம்பெறுகிறது. குறைபாடான, பல ஆய்வுகளிலிருந்து வெட்டி ஒட்டப்பட்ட தொகுப்பை விசாகரூபன் செய்திருப்பதாக சாங்கிருத்தியன் ஆதரா பூர்வமாக காட்டுகிறார். ‘பசுவே பசுவே பசுவய்யா’ என்ற கட்டுரையில் குப்பிளான்.ஐ.சண்முகன் சுந்தரராமசாமி தொடர்பாக தனது நினைவுகளை எழுதியிருக்கிறார். தி.சதிஸ்குமார் யாழ்ப்பாணத்தில் மரணச்சடங்கில் பாடுதல் மரபும் இசையும் என்ற ஆய்வில் யாழ்ப்பாணத்தில் நிலவுகிற மரண சடங்கின் பாடல் இசை மரபுகளை அழகியல்தனத்துடனும் ஆய்வுப்போக்குடனும் செய்திருக்கிறார். நிலான் ஆகிருத்தியனின் ‘ஈழத்துப் பெண்களின் கவிதைப் புலத்தில் அனாரின் கவிதைகள் எனக்கு கவிதை முகம் தொகுப்பை முன்வைத்து’ என்ற கலாபூர்வமான பார்வையை செலுத்தியிருக்கிறார்.

சி.ஜெயசங்கர் கூத்தில் ஊறிய கலைஞன் என்ற கட்டுரையில் கூத்துக் கலைஞன் க.நாகப்பு பற்றி பதிவு செய்திருக்கிறார். பயணியின் ‘ஜொலிக்கும் விருதுகள்: குளறுபடிகளும் இருட்டடிப்பகளும்’ என்ற கட்டுரையில் ஈழத்து விருதுகள் குறித்த அரசியல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.துவாரகன் கலையும் வாழ்வும் என்ற கட்டுரையில் மருத்துவரும் கலைஞருமான சிவதாஸின் கலை மற்றம் வாழ்வு குறித்து எழுதியிருக்கிறார். ஆற்றக்கலையின் அவசியம் பற்றி அருணாசலம் சத்தியானந்தன் ‘ஆற்றலுக்கான ஆற்றுகைக் கலை அல்லது ஆறுதலுக்கான ஆற்றுகை’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.

சிறுகதைகளில் தாட்சாயணியின் ‘கிழக்கின் வெளிச்சம’; யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கிற வாழ்வு நெருக்கடி குறித்து பேசுகிறது. தேஜோமயனின் ‘(130 லட்சம் 25 பவுண் நகை) பெண்ணுடல்- 5 ஆயிரம்’ என்ற சிறுகதை சீதனம் பற்றியும் அதனுடன் பெண்ணுடல் பறறியும் இணைத்துச் சொல்லுகிறது. இவற்றுடன் சத்தியபாலனின் ‘ஈசு’ என்ற கதையும் இடம்பெறுகிறது. கவிதைகளை அனார், மருதம் கேதீஸ், ஸப்தமி, கோகுலராகவன், மாசிதன், கல்லூரான், நிஷா, தேஜஸ்வினி முதலியோர் எழுதியிருக்கிறார்கள். தேஜஸ்வினியின் 'அந்நியமொழியில் பேசுதல்' கவிதை மனமுரண்களை பேசுகிறது. யாழ்ப்பாணத்தில் நம்பிக்கை தரக்கூடிய பெண் கவிஞராக தேஜஸ்வினியயை இனங்காணமுடிகிறது.

கலைமுகம் ஜூலை- செப்ரம்பர் 2008 இதழில் அவர் எழுதிய நான்கு கவிதைளில் சிலவற்றை கொண்டு அதை மேலும் உணர முடிகிறது. “புன்னைச் சருகுகள்/ இரத்தம் தோய்ந்து காய்ந்திருந்தன/ அன்றொருநாள்/ அக்குருதியின் நெடியில்/ எங்கள் கனாக்காலத்தின்/ வசந்தங்கள் கரைந்திருந்தன” (கனாக்காலம்), “ஆந்தைகளின் அலறல்களில்/ புதைந்து கொண்டிருந்த நடுநிசிப் பொழுதில்/ நீ வருவாய்/ சப்த நாடிகளையும் அழுத்திப் பிடித்து/ ஒற்றை முத்தம் தருவாய்” (நானும் நீயும்) பள்ளி உயர்தர மாணவியான தேஜஸ்வினியின் மேற்குறித்த சொற்கள் நம்பிக்கை தரக்கூயடி முன்னீடாக இருக்கின்றன.

இவைகளுடன் பா.துவாரகனின் கடிதம், குறிப்புகள், நூல் அறிமுகங்கள், பதிவுகள் என்பனவும் இடம்பெறுகின்றன. அம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற இதழ் என்ற வகையில் தற்போது அதன் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களும் பேசவேண்டிய சொற்கள் செல்ல வேண்டிய வெளிகள் இன்னும் இருக்கின்றன. மனந்திறந்த உரையாடல்களுக்கும் காலத்தின் சொற்களுக்குமான வெளியுடன் அம்பலம் மிகவும் காத்திரமாக தொடர்ந்து வருகிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It