வங்க எழுத்தாளர் மகாஸ்வேதாதேவியின் ‘Mother of 1084’ படைப்பை தமிழில் ‘எண் மகன்’ என்ற பெயரில் நாடகமாக்கி அக்டோபர் 12, 2008 ல் சென்னை அலையன்ஸ் ப்ரான்ஸிசில் அரங்கேற்றினர் ஞாநியின் பரீக்ஷா குழுவினர்.

எழுபதுகளில் இயங்கிய நக்சல் குழு ஒன்று அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு அதன் அங்கத்தினர் போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் எண்களிடப்பட்ட சவங்களாக கிடக்கின்றனர். சவம் எண் 1084 விஜயன், தன் மகனின் உடலை அடையாளம் காட்டக்கூட கமிஷனர் அலுவலகம் வர மறுக்கும் ஒரு செல்வ சீமானின் வீட்டுப் பிள்ளை. விஜயனுடன் படுகொலை செய்யப்பட்ட சோமு உள்ளிட்ட அவன் தோழர்கள் சிலர் ஒரே சேரியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். விஜியின் மரணத்திற்குப் பின்னான அவன் தாயின் உளவியலுடன் நாடகம் பயணிக்கிறது.

விஜி யாராக, யாருக்காக வாழ்ந்தான் என்பதை விஜி வாழ்ந்த மனிதர்களினூடே அறிய முற்படும் தாய், விஜியோடு குழுவில் இயங்கிய அவன் காதலி ஆனந்தி, அவனுடன் படுகொலை செய்யப்பட்ட நண்பன் சோமுவின் தாயார் ஆகியோரை சந்திக்கிறார். இவர்களுடனான தொடர்பில் அவள் தெரிந்து கொண்டது விஜியை மட்டுமே அல்ல.

சோமுவின் அம்மாவை சந்திக்கும் அவர், விஜி பெரும்பாலான பொழுதுகளை இந்த வீட்டில்தான் கழித்திருக்கிறான் என்பதை அறிகிறார். ‘விஜி இங்கே அடிக்கடி வருவானா?’ எனும் அவர் கேள்வியிலும், ‘ஆனா, இவங்க யாரும் எங்க வீட்டுக்கு வந்ததே இல்லை’ என்று சொல்லும்போதும், எப்போதும் மனிதர்களோடே இருக்க விரும்பியிருக்கும் விஜியைத் தெரிந்து கொள்கிறார்.

ஒரே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட ஒரு தலித் மற்றும் தலித் அல்லாதவனின் குடும்பங்கள் சந்திக்கும் விளைவுகளை இயக்குநர் தெளிவாக பதிவு செய்திருக்கிறார். விஜியின் அம்மா அடிக்கடி இங்கு வருவதால், தான் மிரட்டப்படுவதாகவும், இனி இங்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தயங்கிக் கோரும் சோமுவின் அம்மாவிடம், ‘யார் மிரட்டுறாங்க? எங்களை யாரும் மிரட்டுவதில்லையே?’ எனும் விஜி அம்மாவின் பதிலும், சோமுவின் தங்கை என்பதால் வேலை கிடைக்காமலும், பரிகசிக்கப்பட்டு துரத்தப்படும் பெண்ணின் நிலையும், ஏன் “சோமுவின் அம்மா”வாக இந்த நாடகம் தயாரிக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஆனந்தி! விஜயனின் காதலி, விஜியோடும் அவன் கொள்கைகளோடும் பயணித்தவள். தனிமைச் சிறையிலும், விசாரணைக் கைதியாக இருந்தபோதும் அவளுக்கு நடந்த வன்கொடுமைகளை தன்னை சந்திக்க வரும் விஜியின் அம்மாவாகிய மற்றொரு பெண்ணோடும் பகிரவியலாததாக இருப்பது, இந்திய சிறைச்சாலைகளில் சிறைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகளின் நிலை குறித்த கேள்விகளை உரக்க எழுப்புகிறது.

துரோகிகளை அடையாளம் காணாததால்தான், தன் தோழர்களை இழந்திருப்பதாகக் கூறும் ஆனந்தி, சுய நன்மைகளுக்காக துரோகங்கள் இப்போதும் தொடர்வதாகச் சுட்டுவது, பேரறிவாளன் மற்றும் நளினியின் விடுதலை குறித்து தொடர்ந்து துரோகம் இழைக்கும் ஆட்சியாளர்களையே என்பது தெளிவு. சமகால சமூகப் பிரச்சனைகளை தன் நாடகங்களில் தொடர்ந்து பேசும் ஞாநிக்கு ஒரு பூச்செண்டு.

விஜியின் அப்பாவின் மொழியிலும், விஜியின் அண்ணி செய்யும் பூஜைகளிலும், விஜி பிறப்பால் ஒரு பார்ப்பனக் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதும், ஆதிக்க ஜாதியில் பிறந்தாலும் சமூக புரட்சியில் பங்கு கொள்ளும் இளைஞனாகவே விஜி சித்தரிக்கப்படுகிறான். ஆனந்தி பாத்திரத்தை ஏற்றிருந்த பெண்ணும் சில வசன உச்சரிப்புகளின் போது ஆதிக்க சாதியின் மொழி உச்சரிப்புகளைத் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தினார். ஆனந்தி பாத்திரம் ஒரு ஆதிக்க சாதிப் பின்னனியில் இல்லாதபோதும், ஒருவேளை அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகர் அப்பின்னணியிலிருந்து வந்திருந்ததால் வசன உச்சரிப்புப் பிழை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இதன் மூலம், விஜயன் சமூகத்தில் வர்க்கப் புரட்சியை ஏற்படுத்த விரும்பினாலும், ஜாதியைத் துறக்கும் திராணியற்று சொந்த ஜாதியிலேயே ஒரு பெண்ணை காதலிக்கத் தேர்ந்தெடுப்பதாக புரிந்துக் கொள்ளக்கூடிய அபாயம் இருக்கிறது. இதில் கவனம் செலுத்தாத இயக்குனருக்கு ஒரு குட்டு.

சோமுவின் தாயாக நடித்த கல்பனாவின் நடிப்பு நாடகத்தின் ஹைலைட். விஜியின் அம்மாவாக நடித்த சாய்கிருபாவும், ஆனந்தியாக நடித்த ஐஸ்வர்யாவும் தங்கள் பாத்திரத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கலாம்.

மனிதனாக வாழ்ந்த தன் மகன் விஜி சவமாகிவிட்டான். தன் வீட்டில் இருக்கும் விஜியின் அப்பா, தம்பி, தங்கை, அவர்களின் நண்பர்கள் உள்ளிட்ட சமூக பிரஞை அற்ற சவங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். விஜயன் சவமாகியது, இவர்கள் நடமாடத்தானா என்ற கேள்வியோடு கீழே விழுகிறார் மதர் of 1084. பார்வையாளர் காதுகளிலும் ஒரு சத்தம் கேட்டது, “சவமாக நடமாடப் போகிறீர்களா? மனிதனாக வாழப்போகிறீர்களா?”
Pin It