கவிதை என்பது இதுதான் என்று எப்படி வரையறுக்கப்படவில்லையோ அதுபோலவே காதலும் வரையறுக்கப்படாமலேயே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, காதலும் கவிதையும் பிணைந்தே வெளிவருவது போலத் தோன்றுகிறது.

காதலே கவிதையாகவும், கவிதையே காதலாகவும் இணைந்திருப்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். காதலைப் பற்றி கவிஞர்கள் பேசும்போது மட்டும் காதலுக்கு அலாதியான சுவை கூடிவிடுகிறது. கவிதை எப்படி உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கிறதோ அதுபோலவே காதலும் உணர்வுகளின் வெளிப்பாடாக அமைகிறது. கவிதையில் வெளிப்படும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் காதலிலும் இடமுண்டு என்றாலும் காதலைச் சொல்லும் கவிதைகள் மென்மையான உணர்வுகளுக்கே முதலிடம் தருவதாய் அமைந்திருக்கின்றன.

காதல் - உணர்ச்சிகளின் பெருக்கு என்பவர்கள் இருக்கிறார்கள். காதல் உணர்வுபூர்வமானது என்பவர்கள் இன்னோர் வகை. காதல் பருவம் கொண்டு வந்து சேர்க்கும் நோய் என்பாரும் உண்டு. உடல் கவர்ச்சி என்பதை மறைப்பதற்காக பூசப்படும் முலாம்தான் காதல் என்றும் சொல்கிறார்கள். இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் கதிரவன் அன்றாடம் உதிப்பது போல பருவம் வந்தவர்களுக்கிடையில் மறக்காமல் பூத்து விடுகிறது காதல்.

காதலை நகரத்துப் பாரவையிலேயே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஒருவகை. காதலியை அழகியல் ரீதியாகப் பாராட்டி ‘என் தேவதையே!’ என்று விளித்தே கவிதைத் தொகுப்பை நிரப்பும் காதல் கவிஞர்கள் மற்றொரு வகை. அதீத அழகிய தொகுப்பாக தங்கள் காதல் கவிதைகளைப் படைத்து இளம் காதலர்களைக் கவர்பவர்கள் இன்னொருவகை. இவர்களுக்கிடையில் காதலை மண்சார்ந்து பார்க்கும் கவிஞர்கள் மிக மிகக் குறைவு.

நினைத்த நிமிடத்தில் மனசுக்குள் மகிழ்ச்சியை நிரப்பி நெகிழ்வூட்டுகிற உயிர் உணர்வு காதல். இதே போன்று நினைத்த நிமிடத்தில் மனசுக்குள் மகிழ்வூட்டும் நினைவுகளுக்குரியவர் தோழர் இசாக். மகிழ்வான காதலுணர்வுகளை நெகிழ்வாக கவிதையாக்குகிற உன்னத உள்ளமும் தோழர் இசாக்கிற்கு வாய்த்திருக்கிறது.

‘அழகற்ற பெண்களை அழகாக்குவதற்காகவே வருகிறது காதல்" என்று "காதலாகி" கவிதைத் தொகுப்பில் அழகற்ற பெண்களுக்கு வரும் காதலையும் இனம் காட்டிய அற்புதமான உள்ளத்துக்குச் சொந்தக்காரர் தோழர் இசாக்.

சிகப்பழகு சாதனம் பூசி தோல் வெளுத்த பெண்களிடம் மயங்குவதே காதல் என்று உலகமயமாதல் சிந்தனையை ஊடகங்கள் கூவிக் கொண்டிருக்கும் வேளையில், ‘என் காதலி தேவதை போன்றவள்’ என்று காதலி என்பவள் அழகானவளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், காதலைக் காதலாகவே பார்த்து, காதலின் தன்மையைக் கெடுக்காமல் காதலை அதன் உணர்வுபடவே கவிதையில் பதிவு செய்வதற்கு பாசாங்கற்ற நேர்மை வேண்டும்.

காதலைக் காசாக்கும் மனப்பாங்கற்று, அதன் இயல்பான உணர்விலேயே பார்க்கத் தலைப்படும் மிகச் சிலக் கவிஞர்களில் என் அன்புத்தோழர் இசாக்கையும் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்.

பசி கிள்ள / துடித்தழும் குழந்தையின் / குரல் / பொருள் / எவரெப்படி விளக்கியும் உணர முடியாது / தாயைப் போல / அப்படித்தான் / நம் காதலும்.

இந்தக் கவிதையில் காதலை தாய்க்கும் குழந்தைக்குமான தொப்புள் கொடி உறவோடு சம்பந்தப்படுத்திப் பார்த்திருக்கிறார் இசாக். காதலை தெய்வீக உறவாகப் பார்த்தவர்கள் கூட குழந்தைக்கும் தாய்க்குமான தனிப்பட்ட உறவைப் போலக் கற்பனை செய்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். என்றாலும், காதலை அதனை உணர்ந்தவர்கள் மட்டுமே உணர முடியும் என்பதை மிக அழகாகச் சொல்ல இந்த உதாரணத்தை மிகத் திறமையாகவே கையாண்டிருக்கிறார் இசாக்.

நட்புக்கும் காதலுக்குமான வேறுபாடு என்ன என்ற கேள்வி பெரும்பாலும் கேட்கப்படுவதுண்டு. பால் மறந்து பழகும் ஆண் பெண் நட்பின் உச்சத்தை இலட்சியக்கவி அறிவுமதி "நட்புக்காலமாக"த் தந்திருந்தார். இப்போது அறிவுமதியின் அன்புத் தம்பிகளில் ஒருவரான இசாக் நட்புக்கும் காதலுக்குமான துல்லிய வேறுபாட்டை மிக அழகாகs பால் / மறந்து பழகுதல் / நட்பில் உச்சம் / பாலுணர்ந்து / பழகத் தொடங்கல் / காதலின் / ஆதி..!!.கவிதை வரிகளில் தந்து விடுகிறார்.

காதலைப் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துக்களை முன் வைக்கும் போது காதலை அதன் யதார்த்தத்தோடு பொருத்திப் பார்த்து வரையறுக்கவே தோன்றுகிறது இசாக்கிறகு. காதலைப் பற்றிய தெளிவான வரையறையென்று ஒன்று இல்லாத சூழலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துக்கள் மூலம் ஒருமித்த ஒரு கருத்தை தனது கவிதைகள் மூலமாகத் தருவதில் கவிஞர் தன் பங்குக்கு முயன்றிருக்கிறார் என்பதற்கு இந்தக் கவிதைத் தொகுப்பு சாட்சி.

காதல் என்றால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுப்பது என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் மரபை மிக அலட்சியமாக ஒததுக்கி வைக்கிற துணிச்சல் இசாக்கிறகு இருக்கிறது. எனக்காக நீயும் / உனக்காக நானும் / விட்டுக்கொடுத்துக் கொள்கிறேனென்கிற / போலி செயல்களில் காதலில்லை. என மரபுடைப்பது என்பது சாதாரணமான செயல் இல்லை.

மரபை உடைக்கும் போது அதற்கான மாற்றையும் முன்வைக்கும் துணிவு இருக்க வேண்டும். இசாக்கிறகு அந்தத் துணிவு இயல்பாகவே கை கூடி வருகிறது. அதனாலேயே. வாழ்வை / நம் / இருவருக்குமானதாக மட்டும் / சுருட்டிக் கொள்ளல் / காதல். என்று அவரால் வரையறுத்துச் சொல்ல முடிகிறது.

காதலுள்ளங்களின் எண்ணமும், எதிர்பார்ப்பும் என்னவாக இருந்தாலும், நடப்பு என்பது காதல் மனங்களின் திட்டமிடலுக்கு எதிரானதாகவே நிகழ்ந்து விடுகின்றன. நேசிப்புகளால் வாழ்வை கட்டியெழுப்ப முனைகிறவராக இருந்தாலும் இயல்பில் பிரிவுகளின் சோகத்தை சுமந்தவரென்பதால் புலம்பெயர் உணர்வை தன் காதல் மொழியில். உன்னை / பணம் பூக்கிற செடியாகவும் / என்னை / குழந்தை காய்க்கிற மரமாகவும் / சமைத்துக்கொண்டிருக்கிறது சமுதாயம் / ஆனால் / மனிதர்களாகவே / வாழத்தூண்டுகிறது காதல். என்று இயந்திரவாழ்வை இனிமையாக்கும் சூட்சமம் சொல்கிறார்.

வரம்புகளற்ற உலகில் மொத்தப் பிரபஞ்சமும் தன்னியக்கத்தில் இருக்க, இரண்டு உள்ளங்கள் மட்டும் மொத்த பிரபஞ்சமே தங்களுக்குள் அடங்கி விட்டதாக, அல்லது அந்த பிரபஞ்ச இயக்கத்தையே வென்று விட்டதாய் உணர்வதென்பதுதான் காதலின் இன்னொரு பக்கம். இயல்பிலிருந்து வெகு தூரம் விலகி, ஒரு கற்பனாவாதம் நிறைந்த உலகில் வாழ்வது காதலர்களுக்கு பெருத்த இன்பம் தருவதாக இருந்த போதும், அது போன்ற கற்பனை உலகிலிருந்து விலகி தரையில் காலை ஊன்றி நடக்கும் காதலர்களையும் அவர்களது பாசாங்கற்ற உணர்வு மொழிகளையும் பதிவு செய்யவே இசாக் விரும்பியிருக்கிறார் என்பதை அவரது கவிதைகள் உரக்கவே சொல்கின்றன.

இன்றைக்கு கவிதை என்பது ஏதேனும் இசங்களுக்குள் அடங்கி விட வேண்டுமென்று எழுதப்படாத நியதி இருக்கிறது. இதற்கு இசாக்கின் கவிதைகளும் விதிவிலக்கல்ல. இந்தக் கவிதைத்தொகுப்பிலும் இசமொன்று நிறைந்தேயிருக்கிறது. யதார்த்தம் தழுவிய, இயல்புநிலை மாறாத, பசப்பு மொழிகளற்று காதலைச் சொல்லும் இயல்பிசம், அதுதான் இசாக்கிசம். இசாக்கிசம் வளர வாழ்த்துகள்!

Pin It