கிராமப் புறங்களின் அடிப்படை வாழ்வியல் மட்டுமல்ல; நமக்குப் பாரம்பரியமான பண்பாடும் கலைகளும் சக்தி வாய்ந்த ஊடகங்களால் புறந்தள்ளப்பட்டும், அப்படியே அக்கறை கொண்டு சொல்வதுபோல் நாட்டார் கலையின் பன்முக வெளிப்பாட்டை வெளிப்படாமல் அழுத்தி ஒரு சிலருக்குப் பயன்படுமாறு செய்தும் வரும் காலகட்டம் இது. உண்மையான மண்ணின் மைந்தனுக்கு அன்னியமான கலாச்சாரத்தை அவனுடையதேபோல் அவன்மேலேயே திணிக்கும் உலகச்சந்தை, உலகமயமாதலை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் கொண்டு வரும் கலாச்சார வன்முறை, அரசியல் வன்முறையின் உதவிக்கு வர வரிந்துகட்டிக்கொண்டு காத்திருக்கிறது.

வணிகச்சந்தை, அரசுக்கு உதவியாக இருக்கும் பொருட்டாக, பழைய நால்வருணம் அறிவியல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. குடும்ப உறவுகளுக்குள்ளும் அன்பு தொலைந்து ஊடகங்களின் ஆலோசனைகளுக்கேற்ப ஒரு போலியான பேச்சுமுறை - மாயையான அன்றாட வாழ்க்கை முறை, மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் 'நிராயுதபாணி' நாவலை வாசிக்கும் எவரும் தாங்கள் தங்கள் இயல்பு நிலையையும் சுதந்திரத்தையும் இன்னும் நம் மானுடத்துக்கே உரிய பலவற்றையும் தொலைத்திருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர முற்படுவார்கள்.

சாதாரணமான வாசகனுக்கு அதிர்ச்சியூட்டும் காயறுப்பு முதலானவை, அவன் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு வாசிக்க வாசிக்க ஆழ்ந்த புரிதலுக்குள் அமிழ்த்தி விடுகின்றன. அரியநாச்சியின் கதைசொல்லல், ஓவியக்கலையின் நுட்பத்தையும் நாடகக் கலையின் பன்முக, ஒரு குறியை மையபடுத்தியே நிகழும் பல குரலோசைகளையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாடகம்/திரைப் பின்னணியைக் கருவாகக் கொண்டு பிரமாண்டமாக விரியும் ஓவியக்காட்சிகள், கதைசொல்லும் குரலினிடையே தொடர்ந்து பலவிதமாகத் தோற்றம் கொண்டு, தொடர்ந்து வாசிக்கும் வாசகன் மனத்துக்குள் ஊடுருவி அவனது சொந்த வாழ்வை அவன் வாழும் அன்னியப்படுத்தப்பட்ட சூழலில் அலச வைத்து விடுகின்றன. காட்டாக, நாவலின் தொடக்கத்தையே சொல்லலாம்.

"அவசரத்தில் பெய்த மழை நின்றுவிட, தூரத்து மலைகளும் அதன்பின் புகைந்த புகைச்சலும் தெளிவாய்த் தெரிய ஆரம்பித்தது. நீண்டு பரந்து விரிந்து, விளைச்சலுக்கு உடன்படாத நிலப்பரப்பைத் தாண்டி, நீர்வண்ண ஓவியமாய்த் தெரிந்த மலையானது, இதுகாலமும் மறைத்து வைத்த ரகசியத்தை எப்படியாவது இன்று வெளியேற்றியே தீரவேண்டும் என்ற வேட்கையோடு, தூரத்தில் புகைந்து எழும்பும் கரும்புகையின் ஊடாக தன் கதையைச் சொல்ல, மெல்ல வாய் திறந்தது. வார்த்தையின் மணம் காற்றில் கலந்து கதை செல்லும் வழியெங்கும் நகர்ந்தது. காற்றோடு நானும் பயணிக்கத் தொடங்கிவிட்டேன்"

என்று இந்த நாவலைத் தொடங்குகிறார் ஆசிரியர். அதன் பின் நாலு கால் பாய்ச்சலாக, அகல வளைவுத் திரையில் அடுத்தடுத்துப் பாயும் காட்சிகளாகக் கதையின் காட்சிகள் 20 அத்தியாயங்கள், 254 பக்கங்களில் தொடர்கின்றன.

போரில் தோற்ற கூத்தனும் அவனுடைய வீரர்களும் முச்சந்தியில் குறியறுப்புச் சடங்குக்கு ஆளாவது, தனிமொழி கொண்டு நொந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கூத்தன் ராணியிடம் பெண்களால் அழைத்துச் செல்லப்படுவது, மிகவும் இளையவளான ராணி கூத்தனைத் தாய்போல் அணைத்து ஆதரிப்பது என்று கதைசொல்லல் தொடங்குகிறது.

பல களங்கள், காட்சிகள் - பக்கங்கள் பலவற்றில் விரிந்து, கடைசியில் கூத்தன் காயறுப்புப்பாடலைத் தாலாட்டுப் பாடல் வகையொன்றில் பாடிக்கொண்டிருக்க, சொக்கிய ராணி கூத்தன் மடியில் தலைசாய்க்க, அவள் மடியில் ஒரு கூத்தன் தலைசாய்க்க, அவன் மடியில் பெண்ணொருத்தி தலைசாய்க்க என்று இவ்வாறு மண்டபம் முழுவதும் அன்புக் காட்சியை வழங்குகிறது. தொடர்ந்து,

"அப்போது இளைஞன், காட்டில் பழகிய மன்னனும் அவனது ஆதரவாளர்களும் ஒரு முனையிலிருந்து மெல்ல நகர்ந்து வந்து அந்தக் கூட்டு உறக்கத்திற்கு தம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள முயற்சிப்பதைக் காண்கிறான். அவர்கள், அந்த மண்டபத்தில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அங்குமிங்கும் அலைகிறார்கள். மிருகங்களெல்லாம் அவர்களைப்பார்த்து கேலி செய்கின்றன. கூத்தன் பாடிக்கொண்டே இருக்கிறான்.

இளைஞன் மெல்ல சுற்றி ஒரு முறை பார்க்கிறான். எல்லோரும் மாறிவிட்டிருக்கிறார்கள்.

எல்லோரும் அந்த காயறு நிலையின் புனிதத்தை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவனுக்குள் கரடி சொன்ன வார்த்தைகள் மெல்ல மேலெழும்புகிறது. தந்தையின் குரலில் தோன்றிய அதிர்வும் புலப்படலானது.

சட்டென தன் வாளை எடுத்து தன் குறியை அறுத்துக்கொண்டவனின் முன்பாக வெள்ளைவெளேரென ஒரு ஒளி தோன்றி மறைய அதற்குள் அவன் தன் முகத்தின் வசீகரமான தோற்றத்தைக் காண்கிறான். அவனைத் தடுத்த அரண்மனை மாயச்சுவர் தகர்ந்து வழிவிடுகிறது. அந்த நித்திரைக்கூட்டத்தில் அவனுக்கும் ஒரு இடம் கிடைக்கிறது, உறங்க. கூத்தனின் பாடல் வரிகளை இப்போது அவன் புரிந்துகொள்ளும் விதத்தில் மாற்றம் நிகழ்கிறது. அவனுக்கான மறுநாள் பொழுது காத்திருக்கிறது. புதிய உலகினை புதிய கோணத்தில் வாசித்துக் காட்ட." - என்று நாவல் நிறைவு பெறுகிறது.

இந்த நாவலின் கடைசி வரிகளான, "அவனுக்கான மறுநாள் பொழுது காத்திருக்கிறது. புதிய உலகினை புதிய கோணத்தில் வாசித்துக் காட்ட." என்பதில்தான் இந்த 'நிராயுதபாணி' கதை வாசிப்பு எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கான குறிப்பு உள்ளது. வழமையாக நாவல்களை இதுவரை வாசித்து வந்த முறையை மாற்றி, முற்றிலும் புதிய கோணத்தில் வாசித்தால்தான் இதில் குறியீட்டியல் அடிப்படையில் வரும் குறியறுப்பு முதலாயினவும் கூட்டு நனவிலி (collective unconsciousness)யின் உணர்த்தலாக வரும் 'ஆற்றுமணல் சூடு தாங்காததால் பிள்ளையை மணலில் போட்டு அதன் மேல் தாய் நிற்பது' போன்ற உபகதைகளும் விளங்கும். சராசரி வாசகன் என்பவன் யார் என்பதன் இலக்கணமே காலகாலமாக மாறி வருகிறது. அறிவுஜீவியின் வாசிப்புக்கும் சராசரி வாசகன் வாசிப்புக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எப்பொழுதுமே கட்டப்பட்டு வருகிறது.

ஆனால், வயல்வேலை செய்து விட்டுத் திரும்பி, கொஞ்சம் களைப்பாறிவிட்டு, ஊர்மரத்தடியிலோ அம்பலத்திலோ கதைசொல்லும் கதைசொல்லியின் கதைகேட்டு, அவ்வப்பொழுது குறுஞ்சிரிப்புக் கொள்ளும் எளிய சிற்றூர் மனிதன் ஒருவனுக்கு 'நிராயுதபாணி'யின் கதை வாய்மொழி வடிவில்(oral) சொல்லப்பட்டால், இயல்பாகப் புரிந்து கொள்வான். தன்னலம் மறுத்து தம்மைச் சூழ்ந்து வாழும் மற்றவர்களுக்காக, இதர ஜீவன்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நிராயுதபாணியை/நடுக்கூத்தனைஉணர்ந்து கொள்வான். 'வியாபாரி'களின் எழுத்துகளைப் படிப்பதையே வழக்கமாக்கிக் கொண்ட நடுத்தர வர்க்கப் படிப்பாளிதான் மருண்டு போவான்.

"நாவல் என்பது, 'பலவகை ஒலிகள் - ஓர் இலக்கு' என்ற அமைவு கொண்ட 'தொகையிசை' போல, பற்பல ஏலுமானவைகளையும் வேறுபாடுகளையும் வழங்குகின்ற உரைநடைக் கூட்டு" என்றார் மிலன் குந்தேரா.("A novel is a synthetic prose offering many possibilities and variations..... like the voices of a polyphonous music." - Milan Kundera) மர்ஸேல் புரூஸ், ஃப்ரன்ஸ் காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் முதலானவர்கள் "நாவலின் பிரதி என்பது கதை சொல்வதற்கானதொரு சாக்குப்போக்கு"(..The text is a pretext for narration) என்றும்; 'சட்டாம்பிள்ளைத்தனமாக அது இவை இவற்றைத் தெள்ளத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று வரையறுக்காதீர்கள்' என்றும் அறிவுறுத்தினார்கள்.

'ழாக் லெ ஃபத்தாலீஸ்த்"(Jacques le fataliste) என்ற புரட்சிகரமான படைப்பை உருவாக்கிய தெனி திதரோ (Denis Diderot 1713-1784)சொன்னதாவது: "என்னுடைய பிரெஞ்சு முதலான அனைத்து ஐரோப்பிய சமுதாயங்களும் இப்பொழுது பெருமளவு மாற்றங்களை அடைந்துவிட்டன. அதனால், கதைசொல்லி (narrateur/narratrice) என்பவர் தொலைந்து போய்விட்டார். இந்தச் சூழ்நிலையில் எழுத்துகளைக் கொண்டுதான் கதைசொல்லியின் இழப்பை ஈடுகட்ட வேண்டியுள்ளது."

கப்ரியேல் கார்சியா மர்க்வீஸ் இத்தகைய புதுவிதமான புனைகதைகளை எழுதத் தொடங்கியபோது அவரைக் கண்டு கொள்ளாத உலக வாசிப்புச் சமூகம் இப்பொழுது அவரைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.

'நடுக்கூத்தன்' என்ற நாடகப்பிரதியிலிருந்து 'நிராயுதபாணி' என்னும் இந்த நாவல் உருவாக்கப்பெற்றிருப்பதாகத் தோழர் செ.ரவீந்திரனின் அணிந்துரையிலிருந்து தெரியவருவதால் 'பலிம்ப்ஸெஸ்ட் நாவல்'(palimpsest) என்று இதை வகைப்படுத்தலாம்.

ஆயினும் 'நிராயுதபாணி'யில் உணரப்படும் அரியநாச்சியின் தனிச்சிறப்பான கதைசொல்லல் உத்தியை(narrative technique), புதுப்பாணிகளில் கதை சொல்லும் வேறு எழுத்தாளர்களிடம் காண முடியவில்லை.

தனித்தன்மை வாய்ந்த கதைசொல்லலினூடாக அதே வகையிலான கருத்துகள் பலவற்றை 'நிராயுதபாணி' கூறுகிறது. கருத்தும் நடையும் தனித்துவமாக நடக்கும் இரு பகுதிகள்:

"போரின் ஈர்ப்பு ஆண்மையின் அகங்காரத்தின் வெளிப்பாடு........ஆண்மையை வேரறுத்துவிட்டால் போருக்கான சாத்தியமேயில்லை." (ப.114)

"முற்றிலும் சரியாக இருந்தாலும் இதுவும் உன் கருத்தே ஒழிய. இன்னொருவரின் முடிவினைக் கேட்கும் ஒருத்தன், இன்னொருவனின் பார்வையிலேயே அவன் அணுகுமுறையையும் நம்பவேண்டும். உனக்கு அது தெரியாது. தெரிந்ததெல்லாம் நீ. நீ. நீ. அவ்வளவுதான். நான் கொடுத்த அறிவுரைகளால்தான் நீ இந்த தவற்றைச் செய்தாய் என்று என்னிடமே சொல்லும் உன் வாக்கின்படி செயல்படுத்தப்பட்ட அந்தச் செயலை, இப்போது தவறென்று உணர்வதற்கான சாத்தியத்தை யார் செய்தார்கள் என்பதை அறிவாயா? முடியாது. அந்தக் கோணத்தில் உன்னால் சிந்திக்கவே முடியாது. நானே சொல்கிறேன் கேள். நான் உனக்கு அறிவுரை ஏதும் கொடுக்கவில்லை. அப்படி நான் கொடுத்தாலும் நீ ஏற்றிருக்க மாட்டாய். நான் செய்ததெல்லாம் நீ சொன்னதை ஆமோதிக்கும் விதத்தில் சொற்களை மாற்றி ஒரு வாக்கியத்தை அதாவது நீ சொன்ன வாக்கியத்தையே மாற்றி சொற்களைக் கோர்த்துச் சொன்னேன். அவ்வளவுதான்..." (ப.117)

நாட்டார் பாணியில் இடையிடையே கதைசொல்லலை இணைத்துக் கொண்டுபோகும் பாடல்கள் பல, இந்நாவலில் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

'நிராயுதபாணி'யில் ஒரு புதிய உலகம் விரிகிறது. அதைப் புதிய கோணத்தில் வாசித்துக் காட்டுகிறார் அரியநாச்சி. வாசிப்பனுபவத்தில் அதை நீங்களும் உணரலாமே!

******
புத்தகம் பற்றிய விவரம்:

நாவல்: நிராயுதபாணி
ஆசிரியர்: அரியநாச்சி
வெளியீடு: அனன்யா,
8/37, பி.ஏ.ஒய். நகர்,
குழந்தை இயேசு கோவில் அருகில்,
புதுக்கோட்டை சாலை,
தஞ்சாவூர் - 613 005.

பக்கங்கள்: 254+xxx
நூல் அளவு: டெம்மி 1x8
விலை: ரூ.221/-
***
- தேவமைந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It