மனிதர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரத்தில் ஒருவருடன் மற்றொருவர் கைகுலுக்கிக் கொள்வதற்கும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதற்கும் அன்பே அடிப்படையாக அமைகிறது. தன்னைப் போல மற்ற உயிர்களை நினைப்பதற்கு நிறைந்த அனுபவமும் பக்குவமும் அவசியம். செக்குமாடு போல ஒரே இடத்தைச் சுற்றிவரும் வாழ்க்கையில் இருப்பவருக்கு நெகிழ்ச்சியான தருணத்தை உணரும் வாய்ப்பு அரிதாகி விடுகிறது. இந்தச் சூழ்நிலையில், சமூகத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்த மனிதர்களின் வாழ்க்கையை, அவர்கள் வாழ்ந்த காலத்துடன் உணர வைக்கும் ஆற்றல் வாய்ந்தது புத்தகம்.

தனக்குக் கிடைத்த உன்னத வாய்ப்பும் – வாழ்க்கையும் மற்ற மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று காலமெல்லாம் உழைத்தவர்களை வரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டியது இன்றைய கடமை. எதிர்வரும் தலைமுறையினர் தடம் மாறிப் போகாமல் இருக்க முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இல்லையேல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற மனப்பான்மையில் மரபார்ந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் போகும் ஆபத்து நேர்ந்துவிடும்.

rs mani bookஇந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க ‘நெஞ்சிருக்கும் வரை…!’ என்ற எழுத்தாளர் ஆர்.எஸ். மணியின் நூல் மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறது. ‘‘என் வரலாற்றை நானே எழுதுவேன்’’ என்று கவிஞர் இன்குலாப் கவிதைகளில் முழங்குவது போல, தான் பழகிய சமூகச் செயற்பாட்டாளர்களை, அவர்களின் இலக்கிய அடையாளத்துடன் மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தான் கடந்து வந்த பாதையை, படிக்கும் வாசகர் மனக்கண் முன் கொண்டு வந்திருப்பது அவர் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

இந்த நூலுக்கு நல்லதொரு வாழ்த்துரை வழங்கியிருக்கும் முனைவர் மா. வள்ளலார், ‘‘எளிய சிக்கலில்லாத நடையில் எழுதியதை வாசித்து என்னைப் பலமுறை வியக்க வைத்திருக்கிறார்’’ என்று பாராட்டுவதுடன், ‘‘அறியப்பட்ட ஆளுமைகளின் அறியப்படாத தகவல்களைச் சுவைபடப் பதிவு செய்வதில் இவருக்கு நிகர் இவரே!’’ என்று மனதார வாழ்த்தியிருப்பதும் கூடுதல் சிறப்பு. 1975-இல் செம்மலர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘கோவில்மணி’ என்ற புனைபெயரில் எழுதிய இவரின் ‘அடைக்கலம்’ என்ற சிறுகதை மூன்றாம் பரிசு வென்றது குறிப்பிடத்தக்கது. முத்துக்களாக ஒளிவீசக்கூடிய முப்பது ஆளுமைகளை நேர்த்தியாக அறிமுகம் செய்திருக்கிறது நூல். இவர்கள் எல்லோருக்குள்ளும் வங்கிப் பணி என்ற தொடர் இணைப்பு இருப்பதும் மறுப்பதற்கில்லை.

இந்த நூல் வாசகரின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், அவர்களின் கண்ணோட்டத்தையும் புரட்டிவிடக்கூடியதாக அமைவது உறுதி. இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் சுயத்திற்கும், சுயமரியாதைக்கும் பாதிப்பு நேராமல் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற புரிதல் நிகழும் என்பதிலும் ஐயமில்லை. அநீதியைக் கண்டு பொங்குவதற்கு மனிதனுக்குப் போர்க்குணம் தேவை. போர்க்குணத்திலும் வன்முறை இல்லாமல் அறப்போராட்டத்தின் வழியாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை நூல் முழுக்க பரவிக் கிடக்கிறது.

தொழிற்சங்கம் என்பது தொழிலாளிகளை அடிக்கடி வேலை செய்ய விடாமல், போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்துக் கோஷம் போடவைக்கும் அமைப்பு அல்ல. தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டதாக, வேலை மற்றும் சம்பளம் பற்றிய தெளிவான பார்வை கொண்டதாகச் செயல்படுகிறது. சமூகத்தின் மதிப்பை உயர்த்துவதில் அக்கறை கொண்ட அமைப்பில் பொதுவுடைமைக் கொள்கை பூத்துக் குலுங்கும். இங்கே ஓய்வூதியமும் சுயமரியாதையின் அடையாளமாகப் பார்க்கப்படும்.

ஒருவரே அதிக நேரம் உழைப்பதற்கான ஓவர் டைம் என்ற முறையைச் சுயநலம் என்று கண்டிக்கிறது பொதுவுடைமை. அதற்குப் பதிலாக அதிகமான வேலைப்பளுவைக் காரணம் காட்டி, வேலை இல்லாமல் இருப்பவருக்கு அந்த வேலையைக் கொடுத்து உதவலாமே என்று பரிந்துரைக்கிறது. அதே போல வங்கியின் அடாவடித்தனத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைத் தருகிறது புத்தகம். வங்கி ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், எப்போதும் எழுதுகோலில் மையை நிரப்பி எழுதுவதற்கான மைபுட்டி வங்கியில் இருக்கும். ஒருமுறை வங்கி நிர்வாகம் இனி மைபுட்டி வங்கியிலிருந்து தரப்படமாட்டாது என்றும் அவரவர் வரும்போது வீட்டிலிருந்தே எழுதுகோலில் மையை நிரப்பி வர வேண்டும் என்றும் ஆணையைப் பிறப்பித்தது.

என்ன சொல்லியும் நிர்வாகம் காது கொடுக்காமல் போக, எழுதுகோலில் தண்ணீரை ஊற்றி எழுதுவதாக வங்கி ஊழியர்கள் முடிவெடுத்தனர். அதன்படி பணப் பற்றுச்சீட்டு முதலிய எல்லாவற்றிலும் மங்கலான எழுத்துக்கள் இருப்பதைக் கண்டு வங்கி நிர்வாகம் தன் தவறை உணர்ந்து கொண்டது. மீண்டும் எப்போதும் போல மைபுட்டியை வாங்கி வந்து ஊழியர்களின் பயன்பாட்டிற்குக் கொடுக்க முன்வந்தது. இப்படி வன்முறை இல்லாமல் நடந்த மௌனப் போராட்டத்தில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுகிறது நூல்.

பொதுவுடைமையாளர்கள் புத்தக வாசிப்பை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டவர்கள். தொழிற்சங்கத் தலைவர் என்று வர்ணிக்கப்படும் மனிதர்களும் தங்கள் வீட்டில் தங்கள் பெயரன் பெயர்த்திகளைத் தாலாட்டித் தூங்க வைக்கும் குடும்பக் கடமைகளையும் நிறைவேற்றி வருபவர்கள் என்ற நடப்பியலையும் அழுத்தமாக விதைக்கிறது நூல். இக்கொள்கைவாதிகள் பெற்றோரை, குடும்பத்தை மறந்து விடுவார்கள். அதனால் குடும்பம் பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்கும் என்று எத்தனையோ தந்தைமார்கள் பயந்து வருகின்றனர். ஆனால் கட்சி அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் மகனின் வருமானமாகக் குறிப்பிட்ட தொகையை அவரின் பெற்றோருக்குப் பணவிடை மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என்ற கருத்து கட்சியின் மீது பெரிய மதிப்பை ஏற்படுத்துகிறது.

ஊழியர்களின் உழைப்பால் உயரும் முதலாளிகள் ஊழியர்களை மனிதனாக மதிப்பது இல்லை. சம்பளம் கொடுப்பதாலேயே தம்மை ஆண்டவனாக நினைத்துக் கொள்ளும் போக்கைக் கண்டிக்கிறது பொதுவுடைமைச் சித்தாந்தம். உரிமை பற்றிப் பேசும் ஊழியர்களைக் கட்டம் கட்டி வைக்கும் முதலாளித்துவம் குடிதண்ணீர் இருக்கும் மண் பானையைத் தவறுதலாக உடைத்துவிட்டாலும் அதைக் கொலைக் குற்றமாகச் சித்தரித்து ஊழியர்களைப் பழிவாங்கத் துடிக்கிறது. சிறிய தவறுகளை ஊதிப் பெரிதாக்கும் போது அந்நேரத்தில் ஆபத்பாந்தவனாக எஸ்.பி.ஆர். என்று அழைக்கப்படும் எஸ்.பி. ராமன் இருந்தார் என்றும் ஊழியர்களின் அரணாகவும், நிர்வாகத்தின் வஞ்சகத்தை முறியடிப்பவராகவும் இருந்ததைக் குறிப்பிடும் நேரத்தில், ‘ஜெய் பீம்’, ‘விட்னஸ்’ போன்ற படங்களில் தோன்றும் நியாயத்திற்காகப் போராடும் கதைமாந்தர்கள் உண்மை மனிதர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சமூகத்தில் பதற்றம் நிலவுவதற்கான காரணத்தைத் தெளிவாக விளக்கும் அழகே தனியழகு! தவத்திரு குன்றக்குடி அடிகளார் அதற்கான விளக்கத்தைக் கூறியிருப்பது தனித்த சிறப்பு வாய்ந்தது. கோவில்களில் சுண்டல் கொடுக்கும் போது, பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு முயற்சி செய்வதற்கான காரணம் என்ன? எல்லோருக்கும் போதுமான அளவில் சுண்டல் இல்லை என்பதே காரணம். அதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டுச் சுண்டல் சட்டியே பறக்கிறது. நிலமும், உணவும், வேலைவாய்ப்பும் சரியான முறையில் விநியோகம் செய்யப்படாவிட்டால், எல்லோருக்கும் எல்லாம் உறுதி செய்யப்படாவிட்டால் சமூகத்திலும் இப்படிப் பதற்றமும் மோதலும் வெடிக்கத்தானே செய்யும் என்ற உண்மையை உரத்துப் பேசுகிறது நூல். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தைச் சொல்லாமல் சொல்கிறது.

மனிதகுல மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மதங்கள் நிறுவனமயமாக்கப்பட்ட போது யானைக்கு மதம் பிடிப்பது போல மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டது. மனிதனை மனிதன் அடித்துக் கொண்டு சாவதற்கு மதம் காரணமாக இருக்குமானால் அப்படிப்பட்ட மதம் மக்களுக்கு அவசியமில்லை என்பதைத் துணிவுடன் சொன்னவர் அடிகளார். குன்றக்குடியிலுள்ள ஆதீனம் நடத்தும் பள்ளியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நபிகளின் சிந்தனையும், இயேசுவின் தியாகமும், தேவாரமும் கற்றுத் தரப்படுகிறது என்பது புதுமையான பகுதி.

மாலைக் கூட்டங்களுக்குச் செல்ல மிதிவண்டிப் பயணம் மிகவும் ஏற்றது. நள்ளிரவில் திரும்புவதாக இருந்தாலும், முகம் பார்த்து விவாதம் செய்வதானாலும் இதுவே வசதியானது. எளிய வண்டியைப் போராட்டப் பொருளாக மாற்றியது மிகவும் சுவரசியமானது. வேலையின்றி வாடும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்க மிதிவண்டிப் பேரணி சென்னை மாநகரம் நோக்கி மேற்கொள்ளப்பட்டது. இதை மேற்கொண்ட தோழர் நன்மாறன் பற்றிய மதிப்பீடு கவனத்திற்குரியது.

நன்மாறனின் பேச்சாற்றலை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது நூல். அவரின் உரையைக் கேட்க தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றோர் விருப்பப்படுவர் என்று சொல்லி வாசகரை வியக்க வைக்கிறார் எழுத்தாளர். மேலும் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது இவரின் திரைப்பட ரசனையைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார். கிராமத்து வாழ்க்கையின் சூட்சுமங்களைப் பேசும் போது என்னைப் பெத்த அப்பன் நினைவுதான் வருகிறது என்று இயக்குநர் நெகிழ்ந்து போனார்.

பல வரலாற்று நாயகர்களை எளிய நடையில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருமை நன்மாறனுக்கு உண்டு. குழந்தைகளுக்கான பாடல்களை எழுதிப் பாடலாசிரியர் என்ற சிறப்பும், மாநாட்டில் பாடலை இனிமையாகப் பாடிப் பாடகன் என்ற சிறப்பும் பெற்றார். சட்டமன்ற உறுப்பினராக இருந்த நாளிலும் எளிமையைக் கைவிட்டதில்லை. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் வாடகை வீட்டில் வசித்ததைக் குறிப்பிடும் போது இன்றைய அரசியல்வாதிகளின் தரமற்றநிலை ஏனோ கண்முன் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இவருக்கு உடல்நலமில்லாத போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வரிசையில் நின்று மருத்துவம் பார்த்த செய்தியும், தனக்காகவோ அல்லது தன் பிள்ளைகளுக்காகவோ யாரிடமும் உதவி கேட்டதில்லை என்ற செய்தியும், மேடையில் பேசும் வார்த்தைகளுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழும் தோழர் நன்மாறன் இடதுசாரி இயக்கத்தின் உன்னத அடையாளம் என்ற செய்தியும் சிந்தனைக்குரியன.

கரிசல்காட்டுக் கிராம மக்களைத் தவிர வேறு எதையும் விரும்பாதவர் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். இடைசெவலில் இருக்கும் தனது இல்லத்திற்கு ‘ராஜ பவனம்’ என்று பெயர் சூட்டியிருந்தார். அதைப் பற்றி எழுதும் போது நூலாசிரியரின் நுட்பமான பார்வை வெளிப்படும். எழுத்தாளர் கி.ரா. அப்படிப் பெயர் வைப்பதற்குக் காரணம் சொல்லும் இடத்தில், ‘‘கவர்னர், அவரது இல்லம் ராஜ் பவன் என்பன கி.ரா.வை மிகவும் பாதித்தவை என்றே எனக்குப் பட்டது. கவர்னர் என்ன உசத்தியோ, நாங்கன்னா (விவசாயின்னா) இளப்பமோ என்ற நக்கலும் அதற்குள் இருக்கக்கூடும்’’, என்ற வாதம் ரசனைக்குரியது.

கவிதையும் – கதையும் கைவரப்பெற்ற படைப்பாளி வண்ணதாசனை அழகியலுடன் குறிப்பிடுகிறது நூல். மெல்லிய உணர்வுகளை நுட்பமாகப் பதிவு செய்யும் அவரது எழுத்தைப் போலவே அவரும் மென்மையானவர். அவரது எழுத்துக்களைப் போலவே அவரும் ஏனைய எழுத்தாளர்கள் மத்தியில் தனித்து நிற்பவர். அவரது எழுத்துக்களைப் போலவே என்றும் அழகாக இளமையுடன் காணப்படுபவர் என்று சான்றிதழ் கொடுக்கும் இடத்தில் உயர்ந்து நிற்கிறது படைப்பு.

ஓர் அமைப்பைத் தொய்வில்லாமல் நடத்துவதற்கு நிறைய ஆர்வமும், பரந்த மனமும் தேவை. அமைப்பில் உள்ள கடைநிலை உறுப்பினர் வரை எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக் கொள்வது, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் கொண்டிருக்க வேண்டிய முக்கியப் பண்பு. இது தொழிற்சங்கத்தின் நடைமுறையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினை குறித்த வேறு பார்வையும், புரிதலும் இருக்கும். அவற்றைக் காது கொடுத்துக் கேட்டாலே எளிதில் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம்.

அம்மா என்ற சொல் பரவலான கவனத்தைப் பெற்ற உணர்வுப்பூர்வமான சொல். அன்றைய காலத்தில் விடுதலைப் போராட்ட வீரரும், ஜனநாயக மாதர் சங்கத்தினைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்த பெருமைமிக்க தோழர் கே.பி. ஜானகி அம்மாளை ‘அம்மா’ என்று அனைவரும் அன்பு பாராட்டி அழைத்தனர் என்ற விவரம் அழகானது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைமுறையில் ஆன்மிகத்தில் இருந்தாலும் சரி, அரசியலில் இருந்தாலும் சரி தன்னை ‘அம்மா’ என்று அழைக்க விரும்புகின்றனர் என்று தோன்றுகிறது.

இப்படி வாசிக்க வாசிக்க பலரின் வாழ்க்கைப் பாடத்தைக் கற்க முடிகிறது. தமிழரின் ஆதிக் கலை வடிவங்களைக் கையில் எடுக்கச் சொல்லும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தொடர்ச்சியாக மூன்று முறை திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தோழர் பாலபாரதி, விமர்சனத்தைத் திறந்த மனதுடன் உள்வாங்கிக் கொள்ளும் மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் சொத்தான பேரா. அருணன், புத்தகத் திருவிழாவில் எந்தக் கருத்தியல் கொண்ட புத்தகங்கள் விற்பனையாகின்றன என்று கேள்வி எழுப்பும் கல்வியாளர் வசந்திதேவி, எப்படிப்பட்ட அரசியல் கேள்விகளைக் கேட்டாலும் நியாயமான பதில் கூறும் நாட்டுப்புறவியலின் தந்தை வானமாலை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற திண்டுக்கல் லியோனி, மற்ற படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எத்தனையோ படைப்பாளிகளை அறிமுகம் செய்திருக்கிறார் எழுத்தாளர். ஒத்த சிந்தனை கொண்ட குறிப்பட்ட காலகட்டத்தில் ஒன்றாகப் பணியாற்றிய தன்னலமற்ற ஆளுமைகளை மிகுந்த கவனத்துடன் கொடுத்திருப்பதால் இயல்பாகவே வாசகனை ஈர்த்துவிடுகிறது ‘நெஞ்சிருக்கும் வரை…!’

- முனைவர் இரா.மஞ்சுளா

Pin It