இக்பால் அகமது ஹரித்வார் சென்று அங்குள்ள மிகப் புனிதமான படித்துறை ஒன்றில் இறங்கி கங்கையில் குளிக்கிறார். திடீரென ஒருவர் ஒரு பெரிய மூட்டையைக் கொண்டுவந்து அவிழ்க்கிறார். அது இறந்துபோன அவரது உறவுகளின் சாம்பல். இக்பால் அதிர்ந்து போகிறார். எப்படியோ ஒரு வழியாய் இதையெல்லாம் மீறி கால காலத்துக்கும் காப்பாற்றப் பட்டிருக்கும் கங்கா தேவியின் புனிதத்தை எண்ணியபடியே 178 மீட்டர் உயரத்தில் வீற்றிருக்கும் மானஸ தேவியிடம் மன்றாடி வேண்டிக் கொள்கிறார்: “இந்த தேசம் கொடிய மனநோயாளிகளிடம் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னம் ஆகி வருகின்றது; விடுவிக்க வேண்டும் தாயே” என்று வேண்டிக்கொண்டு மலையை விட்டு இறங்கி வருகிறார். நாம் அவருடைய வேண்டுதலோடு மானஸ தேவியிடமே மலை மேல் தங்கி விடுகிறோம்.

valliappan mess bookஇக்பால் எழுத வில்லை; சித்திரங்கள் தீட்டுகிறார்! பயணக் கட்டுரைகளா? பயணக் கட்டுரைகள்தாம். அனுபவப் பிழிவுகளா? அனுபவப் பிழிவுகள்தாம். முகநூல் பதிவுகளா? முகநூல் பதிவுகள்தாம். இயற்கையின் வர்ணனைகளா? பச்சைப் பசேல் படப்பிடிப்புகள்தாம். அங்கங்கு மனிதர்களின் அங்கங்களில் திட்டுத் திட்டாய்ப் படிந்துவிட்டிருக்கும் அழுக்கு மூட்டைகளா? ஆம். இவை அனைத்தும்தான். பேனாவை எறிந்து விட்டுக் கேமராவைக் கையில் தூக்கி வைத்து அலைகிறவனிடமிருந்து நமக்குக் கிடைப்பது புத்தகம் அல்ல; புத்தக வடிவில் கைகளில் பார்க்கக் கூடிய காட்சிப்படம்!

பயணக் கட்டுரை என்று எடுத்துக் கொண்டால் ஏ.கே.செட்டியாரின் ‘குடகு’ நூலை மறக்க முடியுமா? இக்பால் ஏ.கே. செட்டியாரைப் படித்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. இவரும் அவரைப் போலவே வாசகர்களுக்கு ஓர் வரைபடத்தை வழங்கிவிடுகிறார். சென்ற இடங்களுக்கு நம்மையும் கூடவே அழைத்துச் செல்கிறார். அவர் வேறெங்கோ போய்விடுகிறார். நாம் அங்கங்கே தங்கிவிடுகிறோம். சுவரெழுத்துகள் போல இவரது சொற்கள் மனசில் அப்பிக் கிடக்கின்றன. உடும்புச் சொற்களை உதற முடியவில்லை.

சிரித்தே ஆகவேண்டிய சிந்தனை. சிந்தித்தே ஆகவேண்டிய சிரிப்பு. இரண்டும் கைகோர்த்தால் இக்பால். சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்தும் அலட்டிக் கொள்ளாத அங்கதங்கள். உதாரணத்திற்கு ஒன்று…“வீட்டு உரிமையாளர்கள் பலர் தம் வீடுகளின் முகப்பில் டு லெட் வெஜிடேரியன்ஸ் ஒன்லி என்று பலகை போடுவதைப் பார்த்திருக்கின்றேன். குடியிருக்கும் வீடு மட்டும்தான் வெஜிடேரியனாக இருக்க வேண்டும் என்று அவசியமா என்ன?....வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் உணவு பரிமாறப்படும் ரயில்களில் கூட கழிப்பறை ஒன்றுதான். வெஜிடேரியன்ஸ் ஒன்லி அன்பர்கள் ரயில்வே நிர்வாகத்துக்குப் பிராது எழுதி, வெஜிடேரியன் டாய்லெட் வேண்டும் என்று கேட்கலாமே?”

ரஸ்கின் பாண்ட் என்கிற அற்புத எழுத்தாளனின் அங்கதத்தைச் சுவையாகச் சுட்டிக்காட்டும் ஓர் இடம் மிகவும் சுவாரசியமானது. அணிந்துரை எழுத நேரும் எழுத்தாளனுக்கும் பயங்கரவாதிகளால் ஆபத்து நேரலாம் என்று தனது அனுபவத்தை விவரிக்கிறார் ரஸ்கின். தவிர்க்கப் பார்த்தும் அணிந்துரை தரவேண்டிய ஆபத்தில் சிக்கிக் கொள்கிறாராம் ரஸ்கின். நயமான ஒரே ஒரு சொற்றொடர் கூட இல்லையாம். ஆனால், 26 மனிதர்களை நர வேட்டியாடிய சிறுத்தை ஒன்றினைப் பற்றிச் சங்கிலித் தொடர் போல கதையாக்குவதில் வெற்றி பெற்றிருந்தாராம் நூலாசிரியர். வேறு வழியின்றி இவரிடம் அணிந்துரை வாங்குவதில் வேட்டையாடி வெற்றி பெற்றுவிட்டார் நூலாசிரியர். இறுதியாக ரஸ்கின் அவர்களின் புகைப்படத்தையும் பெற்றுச் சென்றிருக்கிறார். பல மாதங்கள் ஆனபின் நூலாசிரியர் தானே தன் புத்தகத்தை அச்சிட்டுக் கொண்டு வந்திருக்கிறார். புத்தகத்தில் ரஸ்கின் புகைப்படமும் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுத்தையின் படமும் அச்சிடப்பட்டிருந்தனவாம். ஆனால் விசயம் என்னவெனில், செத்துக் கிடந்த சிறுத்தையின் கீழ் “பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்” என்கிற வாசகமும், ரஸ்கின் புகைப்படத்தின் கீழ் “26 பேரைப் பலி வாங்கிய நரவேட்டைச் சிறுத்தை சுட்டு வீழ்த்தப்பட்டபின் எடுத்த படம்” என்கிற வாசகமும் அச்சிடப்பட்டிருந்தன. ரஸ்கின் எழுதுகிறார்: அச்சிட்டவரின் புண்ணியத்தில் நான் ஒரு தொடர் கொலைகாரனாக மாறி இருந்தேன்.”

“நல்ல” பாம்புடன் ஓர் இரவு கட்டுரையை ஒவ்வொரு கண்டக்டரும் படித்துவிட்டால் நல்லது. இல்லையென்றால் பைக்குள் என்ன இருக்கிறது என்று பாம்புப் பைக்குள்ளேயே கையை விட்டுப் பார்க்கச் சொல்வார் இக்பால்… எச்சரிக்கை!

ரங்கணத்திட்டு சரணாலயத்தில் குற்றாலக் குறவஞ்சி நாடகத்தையே நடத்திவிடுவதும், சிரபுஞ்சி மழையில் நம்மை நனைய வைப்பதும், எர்ணாகுளத்தில் கையேந்திய ஒரு தமிழனுக்காக நம்மைக் கண்ணீர் கசிய வைப்பதும், சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தைப் புத்தகத்தின் பக்கங்களில் காட்சிகளாய்க் காட்டுவதும், சார்லி சாப்ளின் கம்யூனிசச் சார்புக்காகப் பட்ட கொடும் அனுபவங்களைப் போலவே, இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், கதை வசனகர்த்தா ஆர்.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ் போன்ற இந்திய சினிமாக்காரர்கள் பட்ட பாடும், பழைய பாடல்களை உண்டியலிலிருந்து எடுக்கப்பட்ட நாணயங்கள் போல ஒவ்வொரு செவிக்கும் உணவாக்குவதும், ரொட்டியின் கதையைச் சொல்கிறபோது ரொட்டியைத் திருடுபவன் கதையையும் சொல்லி வேளாண் போராட்டத்து விவசாயிகளுக்குக் கௌரவம் சேர்த்திருப்பதும் என இக்பாலின் கட்டுரைகள் பல திசைகளில் பயணிக்கின்றன.

இந்தக் கதம்ப மாலையில் வித விதமான வாசனைகளை, மூக்கு விடைத்து விடும் அளவுக்கு முகரலாம். இலக்கணச் சுத்தமாக எழுதியிருப்பது கூடுதல் பலம். அடுத்த தொகுப்பில் இன்னும் கச்சிதமான கட்டுரைகளுடன் சந்திக்க முடியும் என்கிற மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் இந்த மார்க்ரீட்டா பிஸ்ஸா. வள்ளியப்பன் மெஸ் ஞாபகங்களிலேயே சுழன்று கொண்டிருந்த இக்பாலை மார்கரீட்டா பிஸ்ஸா வாங்க வைக்கிற மகன்களின் காலம் இது. அப்பன்களை மிரள வைக்கிற உலகமய அரசியல் காலம். தனது ஞாபகங்களுக்கு மத்தியில் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் நாவலாசிரியனை இப்போதே என்னால் தரிசிக்க முடிகிறது. இக்பால் எப்போது நீங்கள் நாவல் எழுதப் போகிறீர்கள்?

நூல்: “வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா பிஸ்ஸாவும்” கட்டுரைத் தொகுப்பு
பதிப்பகம்: நோஷன் பிரஸ்.காம்
விலை: ரூ.195/-

- நா.வே.அருள்

Pin It