book review copy copyஅட்டைப்படத்தின் அழகை ரசித்துக் கொண்டே உள்நுழைந்தால் ஓவியக் குருநாதருக்கு காணிக்கையாக்கியதில் தெரிகிறது தீன் அண்ணா கவிஞர், கதாசிரியர், வரலாற்றாய்வாளர், நாவலாசிரியர் மட்டுமின்றி ஓவியருமாகிறார். (இந்தக் கொரோனோ காலத்தில் சமையல் கலையும் வேறு கற்றுத் தேர்கிறார்.) இதெல்லாம் நியாயமேயில்லை.

வக்கீல்களெல்லாம் எழுத்தாளராய் இருப்பது பொறாமையாய்க் கூடவே பெருமையாய் இருக்கிறது. "நறுமணம் பரப்பும் தன்னலக்காரராய்" (இப்படித்தான் வண்ணதாசன் சார் குறிப்பிடுகிறார்) இருந்தாலும் நமக்கென்னவோ நுகரக்கிடைத்த மணம் ஆகச்சிறந்த அலாதி வாசனைதான். அவர் கூறியதுபோல் தன்னலக்காரராகவே இருந்துவிட்டுப் போங்கள்.

கதை ஒரே இரவில் நிகழ்வது குறுக்கீடுகள் இல்லையெனில் ஓரிரு மணியில் புத்தகத்தைக் கீழே வைக்காமல் முடித்திடலாம்

இரவு என்றால் முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு, பிரம்ம முகூர்த்தம், விடியல் இப்படித்தான் அநேகம் பேருக்குத் தெரியும். ஆனால் இங்கே கதையில் 21 பொழுதுகளை அத்தியாயங்களாக்கி ஆச்சரிய அதிர்ச்சி தருகிறார்.

அவை

  1. மூஞ்சிக்கருக்கல்
  2. கருக்கல்
  3. முன்னிரவு
  4. இரவொடுங்கும் நேரம்
  5. முதல் ஜாமம்
  6. பேயாடும் நேரம்......

எல்லாவற்றையும் சொன்னால் எப்படி? நீங்களும் வாங்கி வாசிப்பதற்காக சுவாரஸ்யத்தை விட்டுச் செல்கிறேன்.

மனைவி நாச்சியாளை மூஞ்சிக் கருக்கலில் கொலை செய்துவிட்டு கருக்கலில் கதறித்துடிக்கும் மேஸ்த்திரி. எப்போதும் ஒரேபோல மாறாத அன்பைச் சொரிந்த பேரழகுப் பெட்டகத்தோடு கிடைத்த சொர்க்கலோக வாழ்க்கையை நரகமாக்கிய பெருங்குற்றத்தைச் செய்தக் குற்றவுணர்ச்சி அவனை நொடிக்கு நொடி கலங்கடித்துக் கொண்டேயிருந்தது.

நாச்சியாள் அழுத்தமானவள், முன் எடுத்த காலை பின்வைக்க மாட்டாள் என்று எல்லோருக்கும் தெரியும். நாச்சியாள் அவனை நேசிக்கிறாள் என்னும் ஆச்சர்யத்திலிருந்து வெளிவரவே நீண்ட நாட்கள் பிடித்ததாக அவனைப்பார்த்துச்சொல்லிச் சிரித்த வேலாத்தாள் சொன்ன கதையென்ற சந்தனத்தம்மையாகிய பூமுகம் கொண்ட நாச்சியாளை, ஒவ்வொரு நாளும் நாச்சியா பற்றிய கதையும் இவன்மேல் கொண்ட காதலையும் கதைகதையாகச் சொல்லும் வேலாத்தா இவர்களின் காதல் வீட்டுக்குத் தெரிந்த பிறகான களேபரங்களோடு கல்யாணத்தை வேறுவழியின்றி ஏற்றபின், சொன்னதுபோல புதன்கிழமை அண்ணனும் தம்பியும் சூட்டுமலை வேலன் கோவிலில் கொண்டுவந்து விடலண்ணா அடுத்த செவ்வாக்கிழம வரைக்கும் எப்போதும் போல ஏதும்பேசாம இருந்து செவ்வாக்கிழம ராத்திரி யாருக்குந் தெரியாம பொறப்பட்டு வரப்போறதாவும், அதுவரைக்கும் கலங்கவேண்டாம்னு சொல்லச் சொன்ன நாச்சியாளை.

நீ எப்படி பண்ணை வீட்டை சமாளித்து வெளியில் வந்தாய்? எனக்கேட்ட கேள்விக்கு "எங்க குடும்பத்தின் மீதான பற்றுக்கு மேலே உங்கள் மீது நேசம் வைத்தது தான் காரணம் என்று சொன்ன நாச்சியாளை, வூட்டுச்செலவுக்குப் பயன்படும்னு புள்ளைகள் மூலமா பத்திஉருட்டிய நாச்சியா, சங்ககாரியதரிசி சொந்தக்காரராயிருந்தாலும் தானே கொடுக்கறதாச் சொல்லி நேர்ல வந்து பணம்தந்த ஒரே காரணத்தால் பசையும் வேணாம் பத்தி உருட்டலும் வேணாம்னு சொன்ன அப்படிப்பட்ட நாச்சியாளை, கல்யாணமாகி மூணு வருஷமாகியும் பிள்ளையில்லாக்குறை தீர மருத்துவத்தில் குறையில்லைன்னு சொன்னாலும் பழனியென்ன, வேளாங்கன்னியென்ன, காட்டுப்பாளையம் தர்காவென்னன்னு கடுமையான விரதங்களிருந்த நாச்சியாளை, "நாச்சியா என்னப்பா செய்யும்? பண்ணவூட்டு அடக்கமான புள்ள.

மேஸ்திரியால கொடுக்க முடியல. கொத்தனாவது கொடுக்கட்டுமேன்னு போறா" என்று போகிற போக்கில் வெள்ளையனோடு இணைத்துச் சொன்ன சொல் மந்திரச் சொல் இல்லியே மேஸ்திரி... அது மடப்பய மந்திரன் கொத்தனார் சொன்ன சொல்லாச்சேன்னு யோசிக்கலையே மேஸ்திரி...

அவனுக்குள் புகுந்த சந்தேகப்பேய் கொலைகார பூதமாகி வழிநடத்தி எல்லா அன்புசார் எண்ணங்களையும் அழித்துவிட்டு வெற்றிகரமாகத் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு ஓடித்தான் போகும். அடுத்த குடிகெடுக்க அடுத்த ஆள் தேட.... இனி என்ன கதறி என்ன செய்ய?...

நீ மட்டுமல்ல மேஸ்திரி புத்தன் ராமன்னு தொடங்கி இன்றுவரை சொர்க்கம் போன்றதொரு வாழ்க்கையை வீணாக்கியவங்கதானே இப்படியான ஆண்கள்?

நூல் : சந்தனத்தம்மை
ஆசிரியர் : எம். எம். தீன்
சந்தியா பதிப்பகம்
விலை : ரூ.140/-

- செ.விஜயராணி

Pin It