இன்றைய இணைய உலகில் எல்லாம் டிஜிட்டல் மயம் எனும் பிரம்மை நம்மை மயக்க நிலையில் வைத்திருக்கிறது. இதற்கு புத்தகங்களும் விதிவிலக்கல்ல. இணையவழியில் புத்தகங்களும், பத்திரிக்கைகளும் வாசிக்க கிடைக்கின்றன. இத்தகைய அம்சங்கள் மேலோங்கும் இக்காலத்திலும் எக்காலத்திலும் கடைகளுக்கு சென்று விரும்பிய புத்தகத்தை வாங்கி வாசிப்பது என்பது சுவாரசியமான அனுபவம். வாசிப்பு என்பது ஒரு கல்வி முறையும் கூட. வாசிப்பு மனித வாழ்வை வளமாக்கும் என்பது அனுபவ மொழி.

               akilathirattu ammanaiஎந்த விதமான புத்தகங்களாக இருந்தாலும் வாசித்து விபரங்களை தெரிந்து கொண்டு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் அதனைத் தவிர்த்து விடலாம். எதிர்க்கருத்து இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிப்பது மனிதப்பாங்கு.

               உலக மக்கள் இன்றளவும் நிறைய வாசிக்கின்றனர். புத்தக திருவிழாக்களுக்கு செல்கின்றனர். போட்டித்தேர்வு நூல்கள், அறிவியல், கல்வி, சமூகம், பண்பாடு, வரலாறு, ஆன்மீகம், புரட்சிகள், மன்னர்களின் கதைகள், மக்களின் நிலை குறித்த புத்தகங்கள் என பலதரப்பட்ட படைப்புகள் படிக்க படிக்க பல வரலாற்றுண்மைகளை நம்முன் கொண்டு சேர்த்து விடுகின்றன. நம் செயல்பாடுகளுக்கும் ஊக்கம் தருவதாக உள்ளன.

               இஸ்லாமிய சகோதரர்கள் குரான் வாசிக்கின்றனர். கிறிஸ்தவ தோழர்கள் பைபிள் வாசிக்கின்றனர். அன்புக்கொடி மக்கள் அய்யா முத்துக்குட்டி அவர்கள் வழங்கிய அகிலத்திரட்டு அம்மானையை வாசித்து, சகமனிதர்களை நேசிக்கும் வாழ்க்கை முறையை கைக்கொண்டுள்ளனர்.

               சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு உலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நூல் அகிலத்திரட்டு.

               தாழக் கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்பதே அகிலத்திரட்டின் கருப்பொருள்.

               சாதி வர்ணம் பேசுவோரின் சாயத்தை வெளுக்க வைத்து, சாதிசமய வேறுபாட்டை நிராகரித்து, மனித மனத்தில் தர்மத்தை வளர்க்கும் வாசிப்பு அகிலத்திரட்டு வாசிப்பு.

               மனிதன் எந்த குலத்தில் பிறந்தாலும், எவ்விடத்தில் வாழ்ந்தாலும், எல்லா மக்களும் அன்புக்கொடி மக்களே.

               கடவுளின் பெயரால், வயிற்றை வளர்க்கும் அற்பர்கள் கூட்டம், (இக்காலத்தில் கடவுளின் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் ஆளும் வர்க்கம் உள்ளதே) சாதிய முறையில் மனிதர்களை பிரித்து, பகைவளர்த்து, சகமனிதர்களை அடிமைப்படுத்தி இழிவாக நடத்தி வந்த காலத்தில், ஒவ்வொரு மனிதனையும் தன்மானத்தோடு வாழ வழிகாட்டியது அகிலத்திரட்டு அம்மானை.

               மதங்கள் அனைத்தும் நிறுவன மயமாக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் ஏழைகளின் துயர்துடைத்து தர்மயுகம் படைக்க அன்புக்கொடி மக்கள் அயராது உழைக்க வேண்டும் என அறிவுறுத்தும் நூல் இது.

               சாதியமைப்பால் நிகழ்ந்த சமூக பொருளாதாரக் கொடுமைகளை மக்களுக்கு தெளிவாக உணர்த்தி, எல்லோரும் சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது சாமிதோப்பு எனும் வாழ்விடம். அங்கே உள்ள முந்திரிக்கிணறும், திருமண்ணால் நாமமிடும் முறையும் தீண்டாமைக் கொடுமையை துரத்தியடிக்கும் ஆற்றல் படைத்த செயல்பாட்டு வடிவம் கொண்டது.

               அச்சமும், கோழைத்தனமும், அறியாமையும் மக்களை அடிமைகளாக்கி, அச்சத்தினால் இறைவழிபாடு நடத்தி, பலிகொடுத்து அசுரத் தன்மையாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்களை சான்றோர்களாய் வாழ வழிகாட்டியது அகிலத்திரட்டு வாசிப்பு.

               வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு அதை எதிர்த்து போராடுவதே ஒரே வழி, ஒரே தீர்வு என்பதை சுட்டிக்காட்டும் நூலாகவும், சமூக சீர்திருத்த நூலாகவும் மனிதநேயம் வளரச் செய்யவும், அகிலத்திரட்டு நல்ல கருத்துக்களை வழங்குகிறது.

               மனிதனின் மனதில் உள்ளருக்கும் ‘கலி’ என்னும் கெட்ட எண்ணங்கள் அகற்றப்பட்டால் ‘தர்மம்’ என்னும் அறவாழ்வு மலரும். இதனையே கலியுகம் மறைந்து தர்மயுகம் பிறக்கும் என அகிலத்திரட்டு அம்மானை உரைக்கிறது.

               படிப்பறிவில்லாத பாமரனும், நாடோடி இசையில் பாடல்களாகப் பாடி இன்பமுற வாசிப்பது போன்ற தன்மை உள்ளதாக அமைந்துள்ளது இந்நூல்.

               பொய் வேஷங்களை எல்லாம் மக்களுக்குப் புரிய வைத்து, உண்மையை புரிய வைத்து தர்மத்தை நிலைநிறுத்தவும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக போராடுவதே உயர்ந்த அறம் என்பதையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது அகிலத்திரட்டு.

               தாய், தந்தை இல்லாத இழிகுல மக்கள் என்று, மாற்றானால் (சாதி ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மன ஊனம் உடையவர்கள்) கொடுமைப்படுத்தப்பட்ட தாழக்கிடந்த (சமூகத்தின் அடிநிலையில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேற்றமும், அங்கீகாரமும் இன்றி வாழ்ந்த மக்கள்) மக்களுக்கு தற்காப்பாக இருப்பது அகிலத்திரட்டு அம்மானை வாசிப்பு.

               அகிலத்திரட்டு வாசிப்பு எல்லோரும் ஓர் இனம் என்னும் தர்மத்தையும், நாம் எல்லோரும் அன்பு என்னும் கொடியால் பிணைக்கப்பட்ட மலர்கள் என்ற நல் சிந்தனையோட்டத்தையும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பொதுவுடைமை சமுதாயத்தையும் வளர்த்தெடுக்கும் மாண்புடையது.

- சுதேசி தோழன்

Pin It