இன்றைக்குச் சித்தாந்தம், கொள்கை, கோட்டுபாடு, இலக்கு, குறிக்கோள் என்று எதுவும் தனியொரு மனிதனுக்குள் இருந்துவிடக் கூடாது என்பதில் ஆள்வோர்கள் கவனமாக இருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்களுக்கு முன்னால் இருந்த சமுதாயத்தைவிட முற்றிலும் மாறுபட்ட அறிவாளிச் சமுதாயம் இன்றைக்கு உருவாகிவிட்டிருக்கிறது. எல்லோரும் படித்தால் என்ன நடக்கும் என்று மனுவின் காலத்திலிருந்து கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை மனுவாதிகள் நினைத்தார்களோ அது இன்றைக்கு நடந்துவிட்டது. எல்லோரும் படிக்க ஆரம்பித்ததன் விளைவு படித்தவர்கள் சமுதாயத்தின் இயங்குதலிலும் இருத்தலிலும் பங்குகேட்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் காலங்காலமாக உரியவர்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி ஏகபோகத்தையும் அனுபவித்தவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. சொகுசும் சுகமும் போய்விடும் எனப் பயந்து திறமைக்கு புதியபுதிய அளவுகோளை நீட்டுகிறார்கள். அதில் ஒன்றுதான் சமீபத்திய நீட் தேர்வு. ஆட்சிப்பணிக்கான தேர்வெழுதுவோருக்கு அதிகபட்ட வயது வரம்பை 27 ஆகக் குறைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். மாவட்ட நீதிபதிகளின் நியமனங்களும் மத்திய தேர்வணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாகத்தான் கடந்த சில ஆண்டுகளாக பிராந்தியப் பண்பாடுகளில் தலையிடுவது, தனிமனித உரிமைகளை நசுக்குவது, பெண்களின் உடல் மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்துவது, முற்போக்காளர்களைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதற்குத் திராணியற்று சுட்டுக்கொல்வது, திறமை என்கிற பெயரில் பாரபட்சமான தேர்வுகளைப் புகுத்துவது, பெரும்பணக்காரர்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்வது என விரிந்து பரந்து இன்றைக்கு சிலைகளைத் தகர்ப்பது வரை வந்து நிற்கிறது.

iruthayaraj 271இவ்விஷயங்கள் அனைத்தையும் இந்நூல் உள்ளபடியை பதிவு செய்திருக்கிறது. நூலின் சிறப்பம்சம், எடுத்துக்கொண்ட அனைத்து நுவல்பொருளையும் சாமான்ய மக்களின் கண் கொண்டு பதிவு செய்திருப்பது. பட்டினியால் கிடக்கும் மக்கள், மலம் அள்ளும் தொழிலாளர்கள், மின்னணுக் கழிவுகள், கிரானைட் கொள்ளைகள் முதலியன குறித்த புள்ளி விவரங்கள் இந்நூலை ஒரு ஆவணமாக மாற்றியிருக்கின்றன. வரும் காலங்களில் 2010களில் மண் மீதும் மக்கள் மீதும் தொடுக்கப்பட்ட வன்முறைகளைப் பற்றி ஆராய்கிறவர்களுக்கு இது மிகவும் முக்கியமான முதன்மை நூலாக அமையும்.

சமூகப் பிரச்சினைகள், ஊடகம், சுற்றுச்சூழல், ஆளுமைகள், கல்வி, விளையாட்டு என்னும் வகைமைகளில் 41 குறுங்கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. நூலின் பெரும்பாலான கட்டுரைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைச் சொல்லியுள்ளன. இதை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். ஒன்று, நூலாசிரியர் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வைத்திருக்கின்ற அக்கறையிலான பதிவு என்பது. மற்றொன்று நூலை எழுதிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் ஏராளமாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது. ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த பதிவில் இந்த நூல் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் எந்தவித பசப்பும் இல்லாமல் சக மனிதன் மீதும் சமுதாயத்தின் மீதும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை மனச்சாட்சியுள்ள யார் எழுதினாலும் அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலங்கள் தான் அதிகமாக இருக்கும்.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள வடுகம்பட்டியில் நீலமலை என்பவர், அருண்குமார் என்கிற சிறுவனின் தலையில் செருப்பைச் சுமக்க வைத்து சாதிய வன்கொடுமையை நிகழ்த்தியமையைப் பதிவு செய்திருக்கும் நூல், நாகரிகமான மனிதர்கள் செய்யக் கூசுகின்ற இதுமாதிரியான செயல்களைச் செய்வதற்குச் சாதியப் பெருமை பேசும் திரைப்படங்களும் காரணம் எனக் குற்றம் சுமத்தியிருக்கிறது. அதில் இருக்கும் உண்மை குறித்து யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 371 பேர் தற்கொலை செய்வதாகக் கூறும் நூல், தற்கொலை செய்துகொள்வதில் 71.6 விழுக்காட்டினர் திருமணமான ஆண்கள் என்கிற தகவலைத் தருகிறது. ஏழைகளுக்குச் சாத்தியமாகாத ஆடம்பர உலகத்தைக் கட்டமைத்துவிட்டு, அதற்குள் ஏழைகளைப் பலவந்தமாகத் தள்ளுவதன் விளைவாக, சொற்ப வருமானத்தை ஈட்டும் ஆண்கள் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கு அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்கிறது நூல்.

மேற்கு வங்கத்தின் சுபல்பூர் கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சார்ந்த பெண் வேறொரு இனத்தைச் சார்ந்தவனைக் காதலித்தார் என்பதற்காகக் கிராமத் தலைவர் கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டி 50,000/- அபராதத் தொகையை ஒரே இரவுக்குள் கட்டவேண்டும் என்று கெடு விதித்தது, அந்தப் பெணணால் அவ்வளவு தொகையைக் கட்ட முடியாமல் போகவே, அவரோடு யார் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமென அறிவித்ததைப் பேசும் ‘கட்டப்பஞ்சாயத்து’ என்னும் தலைப்பிலான கட்டுரை, சில இடங்களில் மிருகமும் கிராமத்தலைவர் பொறுப்பு வகித்திருப்பதையும் அதற்குக் கட்டுப்பட்டு சில மிருகங்களும் வாழ்ந்திருக்கின்றன என்பதைச் சுட்டுகிறது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கத் துடிக்கும் அவர்களின் கார்ப்பரேட் மனோபாவத்தைக் குறிப்பிட்டுள்ளது ‘தனியார் முதலீடு’ கட்டுரை. சமுதாயத்தின் இயங்கியலில் அக்கறையுள்ள ஆளுமைகளைக் கொண்டாடுவதாக அமைந்திருக்கிறது ‘கோவத்தின் குரல்’ கட்டுரை. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகரான கோவன் மீதான அரசின் அடக்குமுறையையும் அதுகுறித்து வெளியான நீதிமன்றத் தீர்ப்பையும் வைத்துப் பேசும் இக்கட்டுரை, மக்களின் நலன் குறித்த கோவனின் முயற்சிகளுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளது.

‘ஆபாசப் பாடல்’ கட்டுரை நடிகர் சிம்பலரசன், இசைஞர் அனிருத் ஆகியோரின் செயலைச் சுட்டிக் கண்டித்திருக்கிறது. பெண்களை மோசமாகச் சித்திரிக்கும் அப்பாடல் குறித்த சர்ச்சை அதிகரித்த போது சிலம்பரசன் தனக்குத் தெரியாமல் அதை யாரோ பதிவேற்றி விட்டதாகக் கூறினார். இதைக் கண்டிக்கும் நூல் பணக்காரர்கள் இப்படிப் பேசுவதை ‘பணக்காரர்களின் தர்மம்’ எனக் கோபமாகக் குறிப்பிடுகிறது. இந்த ‘பணக்காரர்களின் தர்மம்’ என்கிற சொற்பயன்பாட்டுக்குள் இருக்கும் நுட்பம், கோபம், அரசியல் முதலியன வேறுபல சம்பங்களையும் நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நாளுக்குநாள் மதவாத, சாதிய மோதல்களும் அதன் விளைவாக கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதற்குப் பல நேரங்களில் ஆளும் வர்க்கமே துணையாகவும் இருக்கிறது. சராசரியான வாழ்தலுக்கான நகர்வே ஒரு மோதலாக மாறியிருக்கும் இன்றைய சூழலில், விவசாயம் செய்தாலும் கொல்கிறார்கள். செம்மரம் வெட்டிப் பிழைக்கப் போனாலும் கொல்கிறார்கள். மீன்பிடிக்கப் போனாலும் கொல்கிறார்கள். படிக்கப் போனாலும் கொல்கிறார்கள். கொல்கிறார்களே என்று போராடினாலும் கொல்கிறார்கள் என்பதான கருத்தைக் குறிப்பாய் உணர்த்தும் இந்நூல், இனிவரும் காலங்களில் இந்த தேசம் விதவைகளின் தேசமாக ஆகிப்போனாலும் ஆச்சரியமில்லை என்கிற பதிவையும் காத்திரமாகச் செய்திருக்கிறது.

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய பாலுறுவு குறித்தப் புரிதல், இசை, பாடல் என்கிற பெயரில் சினிமாக்காரர்கள் செய்யும் அசிங்கங்கள், வெற்றிலை விவசாயத்தின் சிதைவு, முற்போக்காளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலை, இந்துப் பாசிசத்திற்கு எதிராகக் கருத்தியல் போர்தொடுத்த ரோகித் வெமுலாவின் மரணம், விளையாட்டுத் துறையில் நடக்கும் முறைகேடுகள், திறமைசாலிகள் அங்கிகரிக்கப்படாமை முதலியனவற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் இந்நூல், சமுதாயத்தை உணர்ந்து எழுதப்பட்டுள்ள நூலாக மட்டுமின்றி. சமுதாயத்தை உணர்த்துவதற்காக எழுதப்பட்ட நூலாகவும் அமைந்திருக்கிறது.

…………………….

வெளியீடு                 : வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல் - 624 001

வெளியான ஆண்டு           : பிப்ரவரி 2018

விலை                                 : ரூ 80

Pin It