உலகின் பிற நாடுகள் போலன்றி இந்தியச் சமூகம் முழுவதும், அக்கம் பக்கத்திலுள்ள பிற ஆசிய நாடுகள் சிலவற்றிலும், குறிப்பாக நாம் வாழும் இத் தமிழ்ச் சமூகம் என்பது ஒரு சாதிய வர்க்கச் சமூகம். இங்கு சாதியும் வர்க்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து அமைந்திருக்கிறது. தத்துவத்தில் சொல்வார்களே "நேர்க் காட்சி வாதம்" என்று. அதுபோல, இங்கு பிரச்சனை என்பது கண்களால் காணும் ஒன்றையே நம்புவது என்பதில் முடிந்துவிடுகிறது. மலையின் ஒரு பக்கத்தை நம்மால் காண முடிகிறது என்கிறபோதே, அதன் மறு பக்கத்தைக் காண இயலுவதில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா?அதுபோலத்தான் நம் தமிழ்ச் சமூகத்திலும். சாதியா? வர்க்கமா? என்கிற இலாவணிச் சண்டையில், இணைந்திருக்க வேண்டிய, இணைந்தெதிர்த்துப் போராட வேண்டிய இரண்டு ஒழிப்புச் சக்திகளும் ஒன்றுக்கொன்று எதிர்நிலையெடுக்கின்றன.

siva vijayabharathi bookஇப்படியானதொரு கவலைக்குரிய நம் தமிழ்ச் சூழலில் விடுதலை பெற வேண்டுமானால், அரசியற்களத்தில், செயல்பாட்டுத் தளத்தில், பண்பாட்டுத் தளத்தில், கருத்தியல் களத்தில், சாதியும் வர்க்கமும் என்கிற இரண்டினோடு, தந்தை பெரியார் நமக்கு வகுத்தளித்த சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு கருத்தியல் பேராயுதங்களை உருவாக்க வேண்டும் நாம்.

அதன்வகையில் இம்மூன்றினையும் ஒருசேரக் கைக்கொண்டு கருத்தியல் பேராயுதங்களை உருவாக்கிவரும் படைப்பாளர்களின் வரிசையில், "வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குது" என்கிற ஒரு திரைப்படப்பாடலின் பல்லவியைத் தலைப்பாகக் கொண்டு, கவிதைகளாகத் தந்திருக்கிறார் தோழர் சிவவிஜயபாரதி அவர்கள்.

கவிதைகளில் சாதிய ஒழிப்புச் சிந்தனைகளும், மூட நம்பிக்கை, பகுத்தறிவுச் சிந்தனைகளும், வர்க்கபேதங்களின் நிதர்சனக் காட்சிகளும், சூழலில் தீவிரமாய்த் தொழிற்பட்டுவரும் சாதியத்தின் மீதான உக்கிரமானகேள்விகளும், அதோடு ஆங்காங்கே சில அழகியற் சித்திரங்களாய் நம் பால்யங்களை மீட்டெடுத்துப் போகும்சித்திரங்களாயும், கவிதைகள் தந்திருக்கிறார் கவிஞர் சிவ விஜயபாரதி அவர்கள்.

கவிதை நூல் வெளியிடுவது குறித்த இன்றைய பதிப்பகங்களின் நிலையை நிர்வாணமாகப் போட்டுடைக்கும் "பதிப்பகத்தில யோசிக்கிறாங்க" என்கிற கவிதையில் தொடங்கி, படிக்காமலேயே பாடம்நடத்தும் "பல்லுயிர் ஓம்பும்" பாட்டியும், "சட்டப் புத்தகம் கிழித்து / நீதியைத் தின்று / ஏப்பம் விட்ட பணத்தின் அதிகாரத்தின்" கோர முகங்களைக் கிழித்துத் தொங்கவிட்ட, சாந்தன் முருகன் பேரறிவாளன் விடுதலைக்கான கவிதையும், "நாகதோஷம் இருக்கு வீட்டை இடிங்க/ வானம் பார்த்து கிடக்கணும்" என்கிற ஜோசியக்காரனின் மூடநம்பிக்கைக் கரையான் அரித்த கவிதையும், "குறும்பு பண்ணாம எழுதனும் / விளையாட்டக் குறைச்சு /நல்லாப் படிக்கணும் / அப்போதான் / பெரிய டாக்டரா ஆகலாம்" என்று சொன்ன அப்பா, பின்பொருநாள்,"தம்பிக்கு / மூணு நாளா / காய்ச்சல் நிக்கல / சாமியார்ட்ட மந்திரிச்சுக் / கயிறு கட்டி வரேன் / சமத்தாபடிச்சிட்டிரு" என்று "சொன்ன அப்பாவிடம் கேட்டான் / கயிறு மந்திரிக்கப் படிக்கட்டா அப்பா" என்கிற கேள்வியில் எழும் குறும்பும், வாசிக்கும் நமக்குள் படக்கென்று எழும் சிறு சிரிப்பும், நல்லதொரு மூடநம்பிக்கை ஒழிப்புக் கவிதை,

நிலவும் கொடூர சாதியச் சமூகத்தின் ரணத்திற்கு வேர்ச் சிகிச்சை செய்யாமல், 'தமிழர்கள்' என்கிற 'தேசிய'ப் பெருங்கதையாடல்களின் புனுகுப் பூச்சுகளைத் தோலுரிக்கும், "கொடுங் கூர்" கவிதையும், 'விதவை' என்று பழகிய சொல்லாடல் களங்களில், 'விதவன்' என்று இவர் முன்வைத்த சொல்லாடலும், "குண்டு மழைதானே /தமிழர்களின் பருவமழை" என்று அழித்தொழிக்கப்பட்ட ஈழம் குறித்த கவிதையும், இதுகாறும் வரையிலான மனித குல வளர்ச்சிக்கு, அதன் முன்னேற்றத்திற்கு, கேள்விகளே அடிப்படை என்றாலும், நமக்கு கல்வி தருங்கலாசாலைகள், எழும் கேள்விகளைக் காயடித்து, மலட்டு மனன மனித உயிரிகளாய் வனையும் இன்றையகல்வியின் நிலையினைச் சொல்லும், "நிலான்னா என்னப்பா" என்கிற கவிதையும், பால்யத்தில் உருவானஅழகான நட்பினை, உப்புக்கும் உதவாத ஊர்ச் சண்டையில், சாதியம் பிரித்துப் போடும் உள் வலிக் காயத்தைத் தரும், "ஊர்ச்சண்டை" என்கிற கவிதையும், "காந்தள் மலரும்.... காட்டில் புலியிருக்கும்" என்கிற நாளை நல்லதொரு விடியல் மலரும் என்கிற நம்பிக்கைத் தெறிப்பான குறியீட்டுச் சொல்லாடல் கவிதையும்,

வியாதிக்கு மருத்துவம் பார்க்க கையில் காசில்லை. வட்டிக்கு வாங்கச் சென்றபோது, "வெள்ளிக்கிழமை பணம் கொடுக்காதே லெட்சுமி போயிடுவா" என்ற மூடநம்பிக்கையில் தட்டிக் கழித்து, மறுநாள் நல்லநேரம் பார்த்துத் தருகையில், அந்தப் பணம் காப்பாற்ற அல்ல. காரியத்துக்கு உதவியது என்கிற துணுக்குறச் செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புக் கவிதையும், மனசை கிழித்த கயர்லாஞ்சிச் சம்பவம் குறித்த கவிதையும், "தண்டவாளத்தில் வீசினாலும் / மண்ணில் புதைத்தாலும் / வீறு கொண்டு முளைத்தெழும்" என்று முழக்கமிடும்சாதி ஆணவக் கொலைகளுக்கெதிரான கவிதையும் என்று நிறைய நிறைய நிறைவான கவிதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் கவிஞர் சிவ விஜயபாரதி.

வசீகரிக்கும் பின்புற அட்டை, ஓவியர் ஜீவாவின் குறியீட்டோவியத்தைக் கொண்ட முகப்பு, நல்லதெளிவான அச்சு, குறிப்பாக ஓரிண்டு அச்சுப்பிழைகளே உள்ள நல்லதொரு நூல் தயாரிப்பில் குயிலி பதிப்பகம்.

குழப்பும் வார்த்தைச் சிக்கலின்றிய தெளிவான கவிதை வார்ப்புகள், எளிமையான சொற் சிக்கனமான, சிலபோழ்து இனிமையான சொற் கோர்வைகள் என கவிஞர் சிவ விஜயபாரதி இயங்கினாலும், இது அவருக்கு முதற் தொகுப்பு. பொதுவாக முதற் தொகுப்பில் பல படித்தான கவிமொழிகளில்தான் கவிதைகள் வாய்க்கும். என்றாலும், அதிலிருந்து தனக்கானதொரு கவி மொழியைக் கண்டறிதல் என்பதுதான் தொடரும் ஒரு படைப்பாளனுக்குப் பலமளிக்கும். அதன் வழி கவிஞர் சிவ விஜயபாரதி அவர்கள் தனக்கானதொரு கவிமொழியைக் கண்டறிதல் மூலம் கவிதைப் படைப்பில் தொடர்ந்து இயங்கிட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

"வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குது"

நூலாசிரியர் : சிவ விஜயபாரதி

முதற் பதிப்பு : மார்ச் 2016

குயிலி பதிப்பகம் 44, உத்தமதானி, கல்லூர் அஞ்சல், கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் - 612 503.

விலை : ரூ. 70/-

- பாட்டாளி

Pin It