உள்ளேயும் வெளியேயும் வளர்ச்சி என்ற பேரில் ஆக்ரமிப்புகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் அடித்து நிறுத்தப் பட்டிருக்கிறோம். தொடைகள் இரண்டையும் இறுக்கப் பிடித்துக்கொண்டு ஆட்டின் மடுவில் பால் கறக்கும் காட்சி வந்து வந்து போகிறது. மலைகள், காடுகள், ஆறுகள், கடல்கள், குளங்கள், விளைநிலங்கள், மணல்வெளிகள் என ஒன்றுவிடாமல் அனைத்தையும் அழித்தொழிக்கும் அட்டூழியங்களை “தேசத்தின் வளர்ச்சி” என்ற ஒற்றைச் சொல்லால் மூடி மறைத்துக்கொண்டு உடைமையாளர்களின் சேவைமையமான அரசு இயந்திரங்கள் வேகமாக அரங்கேற்றுகின்றன. தேசம் என்பது அரசு இயந்திரத்தின் மறைமுக நிகழ்ச்சிநிரலில் தேசத்தில் உள்ள பெரும் முதலாளிகளையே குறிக்கும். வெளியே, மேடையில், ஊடகங்களில் எல்லாம் தேசம் என்பது குடிமக்கள் அனைவரையும் உள்ளடக்கியது போல பாவனை செய்யப்படும். இத்தகைய பாவனைகள் பலவற்றைக் கட்டமைத்துக் கொள்வதுதான் அதிகாரம் செலுத்தும் அரசின் அசைக்க முடியாத பலமாகத் தொடர்கிறது. முந்திரிக் காடுகளாகவும் நிலக் கடலைத் தோட்டங்களாகவும் அவற்றை நம்பி வாழ்ந்த மக்களாகவும் கிடந்த ஒரு பூமியை ஆக்ரமித்து நிலக்கரிக்காகத் தோண்டும் போதும் இந்தப் பாவனைதான் கட்டமைக்கப் பட்டது. ஆனால் ஆண்டாண்டு காலமாக அந்த மண்ணோடும் மரங்களோடும் நீரோடும் காற்றோடும் பிணைக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார இடத்தை ஆக்ரமித்து அவர்களை வெளியேற்றி அதிகாரம் சுட்டும் வெட்டவெளியில் அநாதைகள்போல் அள்ளிக்கொட்டும் போது மனித வாழ்வு, மனித மனம், மனித உறவுகள் எல்லாம் என்னவாகச் சிதைந்து சின்னாபின்னமாகும் என்பதைத்தான் இந்த நாவல் சித்திரிக்கின்றது.

 kanmani gunasekaranகாவிரிப் படுகையில் பெட்ரோல் கிடைக்கிறது என்ற பேச்சு அடிபட்ட எழுபதுகளில் காரைக்காலில் வேலைக்கு வந்து சேர்ந்தேன். இந்தி பேசும் ஆபிசர்களின் குடியிருப்புகளோடு பெரிய பெரிய குழாய்களும் இயந்திரங்களும் வந்து இறங்கிய வண்ணம் இருந்தன. என்னோடு பணியாற்றிய பேராசிரியப் பெருமக்கள் இந்த வளர்ச்சி என்ற முழக்கத்தில் மயங்கி “இனிமே நாம் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் தேவைப்படும் இந்தத் திரவத் தங்கத்திற்காக அந்தக் குல்லாக்காரங்களை அண்டிக் கிடக்கத் தேவை இல்ல; இனிமே பாருங்க இந்தியா வேகமாக முன்னேறும்” என்றனர். “சரி! பெட்ரோல் எடுக்கட்டும்; தேசம் முன்னேறட்டும். ஆனா அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் பிழைப்பு என்னாவது” என்று நான் கேட்டேன். “இப்படியொரு அப்பாவியா, ஒன்னும் தெரியாத கிராமத்தானா இருக்கானே” என்ற ஒரு கேலி முகபாவனையோடு, “நாடு வளர்ச்சி காணனும்னா அவங்க எல்லாம் வேலய மாத்திக்கிட்டு இடத்த காலி பண்ணித்தான் கொடுக்கணும்.” என்று சர்வ சாதாரணமாக மத்தியதர வர்க்கத்திற்குரிய குணமான “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” தோரணையில் பதில் சொல்லியதையும் இந்த நாவலைப் படித்து முடித்த இந்தக் கணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் கையில் இந்த நாவலைக் கொடுத்து வாசித்துப் பார்க்கச் சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. வாழிடத்தை இழப்பது எத்தகைய தீரா வலி தரக் கூடியது என்பதை அழுத்தமான இந்த எழுத்தைப் படித்த பிறகாவது உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

 ஏற்கெனவே அஞ்சலை, கோரை, நெடுஞ்சாலை என்று நாவல்களும் உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு, பூரணி, பொற்கலை என்று சிறுகதைத் தொகுப்புகளும், தலைமுறைக் கோபம், காட்டின் பாடல் முதலிய கவிதைத் தொகுப்புக்களும் வெளியிட்டுள்ள படைப்பாளி என்பதனால் கதை சொல்லலின் நுட்பம் தானாகக் கூடி வந்துள்ளது. கூடவே ஆசிரியர் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றுபவர் என்பதனால் அதிகார வர்க்கம் எப்படித் தந்திரமாகத் தன் அகலக் கால்களை முன்னெடுத்து வைக்கும் என்பதையெல்லாம் மிக நுட்பமாக உணர்ந்து நாவலில் பதிவு செய்துள்ளார். “வேப்பங்குறிச்சி” கிராமத்தை இரண்டாம் சுரங்கம் வெட்டுவதற்காக எடுப்பதென்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்தும் அதிகாரத்தின் நுண்ணரசியலை இப்படி வர்ணிக்கிறார்:

 “நில எடுப்பு விவகாரத்தில் திடீர் திடீர் என வேலை நடப்பதும் கிடப்பில் போடுவதுமான செய்கை, மக்களின் கொந்தளிப்பை, எதிர்ப்பைப் பிசுபிசுக்க வைக்க அரசாங்கத்தால் செய்யப்படுகிற ஒரு உத்தி. முதலில் நிலத்தை எடுக்கிற மாதிரி சேதியை மெல்ல கசிய விடுவார்கள். பகீர் என மக்கள் மனதில் ஒரு பீதி கிளம்பும். பிறகு எந்தவொரு சேதியும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாய்க் கிடக்கும். மக்கள் மனதில் கிளம்பிய திகில் நாளாவட்டத்தில் மறையத் தொடங்கும் போது திடுமென நிலம் அளப்பார்கள். பழைய படி கிடப்பில் போடுவார்கள். ஆரம்பத்தில் கைப்பிடி மண்ணைக் கூடத்தர மாட்டேன் என்ற மக்கள் நாள் ஆக ஆக “சரி போ....” என்கிற மனநிலைக்கு அவர்களாகவே வந்து விடுவார்கள்”(ப.10) இத்தகைய நுட்பம் நாவலுக்குக் கனம் சேர்க்கின்றன.

என் அண்ணனுக்குக் குழந்தை பிறந்தது. நாந்தான் குடும்பத்தில் படித்தவன். பெயர் வைக்கச் சொன்னார்கள். ‘இளங்கோ’ என்று வைத்தேன். ஆனால் சாகின்ற வரை எங்க அம்மா “இலங்க, இலங்க “ என்றுதான் கூப்பிட்டார்கள். கிராம வாயின் பழக்கம் அறிந்த ஆசிரியர் இந்த நாவலில் “நிலத்தை விட்டுக் கொடுப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று பிறந்து வளர்ந்து உழைத்து உழன்று மண்ணின் மேல் பாசம் பிடித்துக் கிடக்கும் “ராஜபாக்கியம்” மக்கள் வாயில் “ராசோக்கியம்” ஆவதைப் பதிவு செய்கிற கூர்மை போலப் பலவற்றை நெடுகக் காணமுடிகிறது. கரி படாச்சியின் ரெட்டைப் பொருள்படும் மொழிவிளையாட்டுக் காட்சி எல்லாம்(ப.31) தமிழ்க்கிராமங்களின் ஆன்மாவை உள் வாங்கியவர்களாலேயே மொழிக்குள் கொண்டு வர முடியும். கொண்டு வரத் தோணும். மற்றொன்றையும் குறிப்பிட்டுக் கூற வேண்டும். நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை தன் மண் சார்ந்த கருப் பொருட்கள் அனைத்திற்கும் உயிர் கொடுத்துத் தன் எழுத்திற்குள் இயங்க வைத்து விடுவதன் மூலம் நிலத்தின் வரைபடத்தையே வாசக மனப்பரப்பில் பதித்து விடுகிறார். “நடுநாட்டுச் சொல்லகராதி” தயாரித்துச் சொல்லின் அழகும் ஆழமும் அறிந்தவராதலால் அவருக்கு இது கைகூடி வந்துள்ளது.

 நிலத்தையும் ஊரையும் எடுப்பதற்கான நோட்டீஸ் கொடுத்தவுடன் மக்கள் அந்த இடியை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைக் குடிகாரன் கணேசன் மூலம் எடுத்துரைக்கிறார். திண்ணையில் சுருண்டு கிடந்த ராசோக்கியத்தை உற்றுப் பார்த்துவிட்டு இப்படிப் பெருங்குரலெடுத்து அழுகிறான்.

 “ஏஞ்சாமி... இந்த மண்ணுல அல்லும்பகலும் அறுபது நாழியும் வுழந்து கெடப்பியே. ஏ…மண்ணு பாலகா…இந்த மண்ணப் புடுங்கப் போறானுவுளாம் சாமீ. இந்த மண்ண வுடறதுக்கு ஓம் மனசு எப்பிடித் தாங்கும். குந்தியிருக்கிற இந்தக் கோட்டைய வுட்டுட்டு, எந்தக் காடு கரம்பு, பொறம்போக்கு புளியமரத்த தேடப் போற சாமீ…ஏம் பெரியாயி பாஞ்சால சாமி…இந்த சேதிய கேட்டதும் ஏஞ் சாமிக்கி நுக்கும் நொரையுமா தள்ளிப்போச்சாமே… ஏ சாமீ…”

     தொடர்ந்து வயசுக்கு வந்து குந்தியிருக்கும் பூமா பக்கம் திரும்பி

 “அய்யய்யோ ஒனக்கு ஒரு நல்லது நடக்கிறப்பையா இந்த ஊரு இப்பிடி கெதிமோசத்துல நிக்கிது. ஒரு நிமிஷம் வூட்ல குந்தமாட்டிய. ஆட்டுக்குட்டிக்கும் மாட்டுக்கும்னு வரப்பு கண்டமட்டும் பில்லுக்கு அலைவிய கம்மங்கொல்லையில ஒரு குருவிய குந்த வுடமாட்டிய. ஓங் கொல்ல போவப்போவுது சாமி. ஓங் குருவி எங்க போவும் சாமீ. நீ துள்ளிக் குதிச்ச இந்தத் தெருவு போவப் போவுது சாமீ….”

என்று நிலம் பறிபோகும்போது உடையும் மனங்களின் அவஸ்தைகளை அவர்களின் மொழியிலேயே எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

ராசோக்கியம், மனைவி பாஞ்சாலை, மகள் பூமா, மகன் சதாசிவம்-இந்தச் சின்னக் குடும்பம், கனகராசு, அம்புசாட்சி, செங்கல்ராவு, அசலாம்பிகை, சிகாமணி, கரிவரத படாச்சி, முத்துக்கண்ணு என விரியும் அந்த்க் குடும்பத்தை ஒட்டிய உறவுகள், வேப்பங்குறிச்சி மக்கள், போராட்டத்தை முன்னெடுக்கும் அறிவழகன், துணை நிற்கும் ஜி.ஆர்.டாக்டர், குறள்மணி, டாக்டர் அய்யா - இன்னும் வட்டாரம் சார்ந்த பெயர்களைத் தாங்கி நெருக்கிக் கொண்டு நகரும் பல்வேறு பாத்திரங்களோடு நாவல் படைக்கப்பட்டுள்ளது.

 நில எடுப்பு, அதனால் வந்தாரங்குடியாய் புதிய இடத்தில் வாழ நேரும் போது எதிர்கொள்ளும் மனநெருக்கடி, மனிதர்கள் தரும் இடர்ப்பாடு போன்றவைதான் நாவலின் மையப் போக்காக அமைந்தாலும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியின் அதுவும் தன் சாதியின் வாழ்க்கை வெளியை ஆவணப்படுத்துவது என்ற நோக்கம் படைப்பாளிக்குள் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது. அதனால்தான் சடங்கிற்குத் தண்ணீர் ஊத்தும் நிகழ்வு, ஏருழுது பயிரிடும் காட்சி, பொங்கல் விழா, எள்ளுக்காய் எடுக்கும் வித்தை, அய்யனார் சாமியாட்டம், சாவுச் சடங்கு ஒப்பாரிப்பாடல், விடுகதை, நாட்டுப்புறப்பாடல், கூத்துக்காரர்கள் என விலாவாரியாகப் பண்பாட்டு நடவடிக்கை பலவும் ஒன்றுவிடாமல் நாவலுக்குள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அந்தச் சாதிக்குள்ளேயே நடக்கும் முட்டல்களும் மோதல்களும் சிறுமைத்தனங்களும் சாதிப் பெருமையில் பதிலுக்குப் பதில் வெட்டிக் கொண்டு சீரழிவதும் பதிவாகியுள்ளன. கைதேர்ந்த கதைசொல்லி என்பதனால் இப்படிப் பன்முகமாக்க கைவீசி நடக்கச் சாத்தியப்பட்டுள்ளது.

வேளாண்மை சார்ந்த ஒரு வாழ்வியலுக்குள் தொழிற்சாலை சார்ந்த ஒரு புதிய வாழ்வியல் அரும்பத் தொடங்கிய உடனேயே ஏற்படும் உடைவுகள், சிதைவுகள், குடும்ப உறவில் ஏற்படும் பிளவுகள் (சதாசிவம் அப்பா அம்மாவிடம் சொல்லாமலேயே திருமணம் முடித்துக் கொள்கிறான்) தனிமனித போக்குகள் அதே நேரத்தில் டாக்டர் ஐயா தலைமையில்கீழ் சாதியரசியலில் ஈடுபடுவதோடு ஈழப் போராட்டம், சகோதர இயக்கங்கள் உடனான மோதலை நிகழ்த்திக்காட்டும் இந்தியாவின் நாட்டாண்மை அணுகுமுறை, இந்தியப் பாதுகாப்புப் படையின் அட்டூழியம் முதலிய உலக அரசியல் குறித்த பிரக்ஞை பெறுவதும் போகிற போக்கில் நாவல் ஆரவாரமில்லாமல் பதிவு செய்துகொண்டு போகிறது. இன்னும் மக்களின் வழிபாட்டுத் தெய்வமான ஐயனார் கோயில் இடிக்கப்பட்டு தோண்டும் காட்சியும் வேளாண் சமூகத்தில் அந்த மக்களையே நம்பி வாழும்படி விதிக்கப்பட்ட முடிவெட்டுவோர், துணி துவைப்போர், சாவுச் சடங்கு செய்வோர் முதலிய ஓரத்து மக்கள் ஊரை இழக்க இருக்கும் நிலையில் அந்த மக்கள் முன்னாள் வந்து “நிலபுலம் இல்லாத எங்கள கைவிட்டிடாதீங்க சாமீ” என்று கெஞ்சி நிற்கும் காட்சியும் நிலையெடுப்பின் வலியை ஆசிரியர் பன்முகமாக உணர்த்தப் பயன்படுகின்றன.

     இவ்வாறு நிலத்தைவிட்டு இறுதிவரை நகரமறுத்து முடியாமற்போகவே வந்தாரங்குடியாக வாழநேரும் ராசோக்கியத்தைச் சுற்றிச் சுழலும் கதையாடல், அவர் மனைவி பாஞ்சாலையை இரவல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் காட்சியோடும் அவள் மகள் பூமா “எம்மா, என்ன வுட்டுட்டுப் போறீயே எம்மா” என்று கைநீட்டிக் கதறுகிற சத்தம் அதலபாதாளமான சுரங்கத்தில் ஓடி அமிழ்ந்து அடையாளமற்றுப் போகும் காட்சியோடும் நாவல் முடிகிறது.

நாவல் வருணிக்கும் காலகட்டமென்பது குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கு மட்டும் தனி ஒதுக்கீடு கேட்டு ஒருவாரச் சாலை மறியல் போராட்டம் நடத்துவது ஏன் என்று விளக்குகிற மாபெரும் பொதுக்கூட்டம் நடந்த 5.10.86 யை ஒட்டித் தொடங்கி சாலை மறியல் போராட்டம் நடத்திய பிறகு அச்சாதிச் சங்கம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியெனப் பொதுவான பெயரில் ஒரு அரசியல் கட்சியாகத் தொடங்கிய 16.7.89 வரையிலான ஒரு மூன்றாண்டுகால அளவுதான். இந்தக் காலகட்டத்திற்குள் நெய்வேலியைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் எவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்பதையும் 21 பேர் பலியான அந்த வீரமிக்கச் சாதிப் போராட்டத்தின் தியாகத்தையும் அதை மிகச் செம்மையாக நடத்திக்காட்டிய தலைமையையும் நாவல் என்ற எழுத்து முறைமையின் மூலம் வரலாறாகப் பதிவு செய்தல் என்ற பின்னணியில் சாதித் தலைமையைக் கொண்டாடுதல் என்பது நாவலின் மறைமுக நிகழ்ச்சி நிரலாக வெளிப்படுகிறது. அதனால்தான் எண்பதுகளில் இம்மாவட்டங்களில் வெடித்தச் சாதிக் கலவரங்கள் குறித்த பதிவுகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல கிராமங்களில் வாழ்ந்த மற்ற சாதியினர் குறிப்பாக தலித்துகள், ரெட்டியார்கள் பற்றிய பதிவுகள் எதையும் நாவல் தவிர்த்திருக்கிறது. தகராறுகளைத் தீர்த்துவைக்கும் ஒருவராக ரெட்டியாராவது ஒரு இடத்தில் பேசப்படுகிறார். தலித்துகளுக்கு நாவலில் இடமில்லை. அந்தப் பகைமுரணுக்குள் எழுத்து நகர்ந்தால் படைப்பாளி என்கிற முறையில் எழுத்தாளர் அறம்சார்ந்த பல சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். அதைத் தவிர்த்துத் தான் சார்ந்த சாதி மக்களின் வாழ்வை நான் பதிவு செய்கிறேன், அந்தச் சாதி எழுத்தாளர் அந்தச் சாதி மக்களின் வாழ்வைப் பதிவு செய்து கொள்ளட்டும் என்று கருதியிருப்பார் போலத் தெரிகிறது.

பொதுவாகவே சாதி இயக்கங்கள் அரசு இயந்திரத்தில் இடம்பெற்று வலுவான ஓர் அதிகார மையமாகத் திரண்டுவிடும்போது அச்சாதியியக்கம் சார்ந்த பல்வேறு கிளையமைப்புகள் அச்சாதி சார்ந்த தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், அரசு ஊழியர் அமைப்புகள் அதற்கு மேலாக அச்சாதி வரலாற்றைக் கட்டமைக்கும் வரலாற்றுப் பேராசிரியர்கள் என பல்வேறு அமைப்புகள் உருவாவது இயல்புதான். ஆனால் எதன்பொருட்டும் தன்னை விற்றுக்கொள்ளாமல் அறம்சார்ந்து நிற்க வேண்டிய எழுத்தாளர்களும் அச்சாதி சார்ந்த இலக்கிய அமைப்புகளைக் கட்டமைக்க முயன்றது; முயல்வது எல்லாம் தமிழினத்தின் சாபக்கேடு என்று சொல்லத் தோன்றுகிறது.

தலித் இயக்கமும் அது சார்ந்த தலித் எழுத்தாளர்களும் மேலெழுந்து வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனமான எழுத்தாளர்கள் தாங்களும் சாதியடையாளத்தின்பின் ஒதுங்கிப் பலத்தைக் கூட்டிக்கொள்ள முயலுகிறார்கள். ஆனால் தலித் இயக்கத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் அடிப்படையில் அங்கே அறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்பொழுதெல்லாம் தலித்துகள் மேலெழத் தொடங்குகிறார்களோ அப்பொழுதெல்லாம் மற்ற சாதியமைப்புகள் மிக வேகமாகத் திரண்டுள்ளன. காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி தலித்துகள் மேலெழ முயலும்போதும் இதுதான் நிகழ்ந்தது. இப்பொழுது உலகமயமாதல், நகரமயமாதல், சந்தைப்பொருளாதாரம் முதலியவற்றைப் பயன்படுத்தித் தலித்துகள் மேலெழ முயலும்போது பிறசாதியினர் அனைவரும் தங்கள் தங்கள் சாதியமைப்புகளை மிகவேகமாகக் கட்டமைக்கின்றனர். தலித் அமைப்புக்கு எதிராக பிற சாதியமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டும் நிகழ்ச்சியும் அரசியல் அதிகார ஆதாயத்திற்காக நிகழ்ந்தேறியது நம் காலகட்டத்தின் மிகப்பெரிய சோகம். எழுத்தாளர்களும் அதில் விழுவது இன்னும் பெரிய சோகம்.

மகாகவி பாரதி பாஞ்சாலி சபதத்திற்குச் சில குறிப்புரை எழுதியுள்ளான். அதில் வெள்ளைக்காரக் கம்பெனியிடம் இந்திய ஆட்சியாளர்கள் வீழ்ச்சியுற்றதற்கு மூலமுதற்காரணம் பார்ப்பனர்களே. ஏனென்றால் அப்பொழுது அவர்கள்தான் அறிவு தளத்தில் பணியாற்றுபவர்களாக வாழ்ந்தார்கள். அந்தத் தீமைக்கு அவர்களே பொறுப்பு என்கிற மாதிரி தாம் சார்ந்த சாதியை விமரிசிக்கும் அழகியல் அறம் அவனுக்குள் எல்லாவற்றிற்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. நம் சமகால இலக்கியவாதிகள் இந்த அறத்தை இழந்து நிற்கிறார்கள்.

எதார்த்த எழுத்து என்பது நிகழ்வை அப்படியே அந்த மண்ணின் மொழியில் மாற்றிக்கொடுத்துவிட்டால் போதாது. ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் இருக்கும் வெளிப்படையாகத் தெரியாத நுண்ணரசியலைப் பிடித்துத் தருவதுதான் எதார்த்த எழுத்தின் அழகியலாகும். டாக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் இந்தச் சாதியரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டிய நெருக்கடியாக என்ன நிகழ்ந்தது? இவருக்கு முன்பு இந்தக் குறிப்பிட்ட சாதியரசியலின் வரலாறு என்னவாக இருந்தது? தெற்கே நாடர்களுடைய சாதியரசியல் தங்களையொடுக்கிய சாதி அரசியலுக்குத் தங்களுக்கு மேலே இருந்த சாதிகளை எதிர்த்தப் போராட்டமாக அமைந்தது. இங்கே அப்படியில்லாமல் தங்களுக்குக் கீழே எல்லாவற்றிலும் தங்களைவிட மோசமாகவிருந்த தலித்துகளுக்கு எதிரான பகைமுரணாக இந்த அரசியல் எப்படி வடிவமைக்கப்பட்டது? இந்தச் சாதியரசியல் பின்னால் பாட்டாளி மக்கள் என்று பொதுப்பெயர் சூட்டிக் கொள்வதற்கான அரசியல் என்ன? என்பதையெல்லாம் ஆசிரியர் தேடிப்போயிருந்தால் பல வெளிச்சங்களை வாசகர்களுக்குக் கொடுத்திருக்க முடியும்.

மற்றொன்று போகிறபோக்கில் விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயிலை முசுலீம்கள் இடித்தாகப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து மதுசூதன் (புத்தம் பேசுது ஜூலை 2014) கேட்ட கேள்விக்கு இப்படித்தான் நிகழ்ந்தென சொல்லக் கேட்டிருக்கிறேன் என்கிறார். மேலும் ‘இப்படி காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் பொதுவாகவே ஏராளமான கோயில்களை முகலாயர்கள் தாக்கியிருப்பதைப் பாடநூல்களில் படித்ததன் பொருட்டும் ஒரு புனைவில் இவைகள் போதுமான காரணங்கள்தான் என அவ்வாறு எழுதினேன்’ என்று பதில் சொல்லி இருக்கிறார். வரலாறு என்பதே ஆதிக்கச் சக்திகளின் புனைவுதான். இந்திய வரலாறு என்பது காலனித்துவவாதிகளாலும் இந்துத்துவவாதிகளாலும் புனையப்பட்ட ஒன்று. கோயிலை இடித்தார்கள் என்பதும் ஆதிக்கச் சக்திகளின் புனைவாக ஏன் இருக்கக்கூடாது என்று ஒரு சந்தேகமே படைப்பாளிக்குள் அரும்பாதது ஆச்சரியமாக இருக்கிறது. கூடவே இந்த இடிப்பைப் பதிவு செய்வதன்மூலம் நமது காலகட்டத்தில் பாபர் மசூதியை இடித்தது நியாயமாகி விடுமே. அப்படியொரு கருத்து உருவாவதற்கு நமது எழுத்துத் துணைபோகிறதே என்கிற பிரக்ஞை எப்படி உருவாகாமற் போயிற்று?

இறுதியாக ஒன்றைச் சொல்லி இந்த மதிப்புரையை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இதே எழுத்தை அறுபதுகளில் எழுதியிருந்தால் ‘தமிழர்களின் உழவு வாழ்க்கையின் படப்பிடிப்பு’ என்று சொல்லியிருப்பார். இன்று சாதியியக்கங்களின் காலம். எனவே தான் சார்ந்த சாதி மக்களின் வாழ்க்கையென்கிறார். ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா? சாதி அடையாளங்களைவிட மத அடையாளங்களைவிட தமிழன் என்கிற அடையாம்தான் மிகமிக அவசரமாக மீண்டும் கட்டமைக்க வேண்டிய ஒரு நெருக்கடியான வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு சமூகத்தின் பொறியியலாளர்களான படைப்பாளிகள் எப்படி உணரத் தவறுகிறார்கள் என்பது எனக்குள் ஒரு ஆச்சரியமாகப் பரவுகிறது.

வந்தாரங்குடி, கண்மணி குணசேகரன், தமிழினி பதிப்பகம், சென்னை 2013, பக். 672. விலை ரூ. 500.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி – 8

Pin It