உலக வரலாற்றில் அறிவியல் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய முப்பெரும் அறிஞர்கள்
பரிணாம விதியை கண்டளித்த சார்லஸ் டார்வின்,
புவிஈர்ப்பு விதியை கண்டளித்த ஐசக் நியுட்டன்,
சமுகத்தை இயக்குகின்ற விதி, மனிதர்களின் உணர்வுகளைச் சார்ந்திராமல் புறநிலையில் பொருளியல் உற்பத்தியினது வளாச்சியிலும் அதற்கே உரித்தான உற்பத்தி உறவுகளிலும் ஏற்படும் மாற்றத்திலும் உள்ளது என்பதைக் கண்டறிந்து புலப்படுத்திய மார்க்ஸ் ஆகியோராவர்.

a ka eswaranமார்க்சியம் வானத்திலிருந்து திடீரெனத் தோன்றியதல்ல, சூனியத்திலிருந்து பிறந்ததுமல்ல, கோட்பாடுகளிலிருந்து பிறப்பெடுத்ததுமல்ல, உயர் பிறவிகளால் அருளப்பட்டதுமல்ல. மனிதன் எதார்த்தமாகச் செயல்படும்போது சமுதாய வளர்ச்சிக்கான விதிகளைக் கண்டுபிடித்து வளர்த்தெடுக்கிறான். எனவே தான் மார்க்சும் எங்கெல்சும் தங்களது போதனைகளை வறட்டுத் தத்துவங்களாக கருதிவிடக்கூடாது என விவரிக்கின்றனர். ஆம் மார்க்சியம் நடைமுறைக்கான வழிகாட்டி. மார்க்ஸ் வழிபாட்டிற்குரிய தெய்வமல்ல, போற்றிப் புகழத்தக்க மாமனிதன். மார்க்சியம் செயலுக்கு வழிகாட்டுவதற்கான கலங்கரை விளக்கம். மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த காலத்தில் அறிஞர்கள் பலர் இருநதனர். ஆனால் அவர்களால் சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மானுட விடுதலைக்கான தத்துவத்தைப் படைக்க முடியவில்லை. இங்கே தான் தத்துவ இரட்டையர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தனிமனிதர்கள் என்ற வகையிலான பங்களிப்பும் சாதனையும் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.

மார்க்சுக்கு முன்னர் எத்தனையோ தத்துவவாதிகள் உலகில் இருந்தனர். அவர்கள் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவுகளை விளக்க மட்டுமே செய்தனர். ஆனால் இந்த உலகை மனித குலத்தின் நலனுக்கேற்ப மாற்றியமைக்க முடியும் என்பதை நிலைநாட்டியவர் மார்க்ஸ் மட்டுமே. எனவேதான் மார்க்சிய தத்துவத்தை நிறுவுவதில் மார்க்சுடன் கூட்டிணைந்து செயல்பட்ட மேதையான எங்கெல்ஸ், மார்க்ஸ் மறைந்தபோது "மனித சமுதாயத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது. ஆனால் அது நம் காலத்தின் மாபெரும் மேதையின் தலையாகும்" எனக் குறிப்பிட்டார்.

மார்க்சுக்கு முன்னரே புறநிலைக் கருத்துமுதல்வாதம் என்ற கருமேகத்தால் மூடப்பட்ட ஒருவகைப்பட்ட இயங்கியல் இருக்கத்தான் செய்தது. இத்தத்துவம் அக்காலத்தில் ஜெர்மானிய அறிவுத்துறையினரை கவர்ந்திருந்தது. அப்போது ஜெர்மனியில் செல்வாக்கு செலுத்திய "இளம் ஜெர்மனி", "இளம் ஹெகலியவாதிகள்" என்ற இயக்கங்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் மீது பாதிப்பைச் செலுத்தின. ஆனால் இருவருமே படிப்படியாக இடதுசாரி ஹெகலியத்திலிருந்து நகர்ந்து கம்யூனிசத்தை நோக்கி முன்னேறினர். அன்றைய காலத்தில் ஜெர்மனியிலிருந்த நிலைமைகள் குறித்தான அவர்களது அக்கறையின் இயல்பான வளர்ச்சியே இது.

மார்க்ஸ் ஆன்மீகவாத மாயையால் மூடப்பட்டிருந்த இயங்கியலை கருத்துமுதல்வாதத்தில் இருந்து விடுவித்தார். தலைகீழாக இருந்த இயங்கியலை நேராக நிமிர்ந்து நிற்கச் செய்தார். எல்லாப் பொருளும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கின்றன, மாறிக் கொண்டே இருக்கின்றன என்பதை நிறுவினார்.

1845ஆம் ஆண்டில் “ஜெர்மன் சித்தாந்தம்” எனும் நூலில் மார்க்சும் எங்கெல்சும் பின்வருமாறு எழுதினர், "சிறிய தூசியிலிருந்து மாபெரும் பொருள் வரை, நுண்ணிய மணலிலிருந்து மாபெரும் சூரியன் வரை, புரோடிஸ்டாலிருந்து மனிதன் வரை எல்லாமே முடிவில்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது" எனக் குறிப்பிட்டனர்.

மேலும் ஜெர்மன் செவ்வியல் தத்துவம், பிரெஞ்சு சோஷலிசம், பிரிட்டிஷ் பொருளாதார அறிவியல் ஆகியன மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள் என வழக்கமாகக் கூறப்படுகிறது. இது உண்மையாயினும் மார்க்சியம் இந்த மூன்றினது கூட்டிணைவான தத்துவம் என்பதாகக் கருதிவிடக்கூடாது. மார்க்ஸ் இவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து முழுநிறைவாக்கினார். சமூக விஞ்ஞானிகளுக்கு தத்துவக் கோட்பாடுகளை சோதித்துப பார்ப்பதற்கான களம் மானுட சமுதாயம்தான். மார்க்சும் எங்கெல்சும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த மக்கள்திரள் புரட்சிகரப் போராட்டங்களில் பங்கேற்றதினால்தான் மார்க்சியம் எனும் புரட்சிகரத் தத்துவம் தோன்றுவது சாத்தியமாயிற்று.

மார்க்சிய தத்துவம் தன்னுள் இரு உள்ளடங்களைக் கொண்டு திகழ்கிறது. பிரபஞ்சத்தின் இருப்பையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் விளக்கும் இயக்கவியல் பொருள்முதல்வாதமும், இந்த மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் ஒரு அமைப்பு முறையிலிருந்து இன்னொரு அமைப்புமுறைக்கு தவிர்க்க முடியாதபடி மாற்றமடைகிறது என்பதை அறுதியிட்டுக் கூறும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் ஆகியவையே அவை.

நூலாசியர் அ.கா.ஈஸ்வரன் மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்தியக் கருத்துமுதல்வாத சிந்தனைகளை வகைப்படுத்திக் காட்டுகின்ற பாணியானது அலாதியானது. உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் மனித உணர்வின் விளைபொருட்கள் என்ற அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின்பாற்பட்ட சிந்தனையாளர்களாக, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கருத்துமுதல்வாதிகளும் மதநம்பிக்கையாளர்களும் தன்னுணர்வோடே பிற்போக்கைக் கைக்கொள்கின்றனர் என்று சொல்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டப் பார்வைதான் என்றும், இவர்களிடையே சில சமூகக் கருத்தில் முற்போக்குக் கருத்துக்கள் இருக்கும் என்றும், இருந்தாலும் இந்தக் கண்ணோட்ட‌த்தின் உள்ளடக்கம் பிற்போக்கான வர்க்கங்களின் நலன்களுக்கே இறுதியில் சேவை செய்யும் என்றும் தனது கருத்தை எச்சரிக்கையுடன் பதிவு செய்துள்ளார்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விவேகானந்தரின் கூற்று ஒன்று இங்கு கவனிக்கத் தக்கது, "நான் ஒரு சோஷலிஸ்ட். அது ஒரு செழுமையான அமைப்பு என நான் நினைப்பதால் அல்ல. மாறாக ரொட்டியே இல்லாமல் இருப்பதைவிட அரை ரொட்டி இருப்பது நல்லது என்பதாலாகும். அவற்றில் போதாமை உள்ளன. எனவே இந்த அமைப்பு முறையை சோதித்துப் பார்ப்போமாக" என எழுதினார்.

இது ஒரு முற்போக்கான சிந்தனைதான் என்றாலும் விவேகானந்தரின் சோஷலிசம் ஏழைகள்பால் அன்பு செலுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டது. நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தது போன்றதாகும். சுரண்டப்படும் வர்க்கத்தின் போராட்டத்தின் மூலமாக சமூக மாற்றத்தை அது ஒருபோதும் வலியுறுத்தவில்லை. இது சாரத்தில் காந்தியின் தர்மகர்த்தா சோஷலிசத்தின் வகைப்பட்டதே. எனவே இறுதிவகையில் இத்தகைய கருத்துமுதல்வாதச் சிந்தனைகள் ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கானது என்ற நூலாசிரியரின் கருத்து மிகச் சரியானதே.

ஆனால் சமீப ஆண்டுகளில் அத்வைத மார்க்சியம், வைணவ மார்க்சியம் என இன்னபிற கருத்துக்களை தலையில் சுமந்து சில அதிமேதாவிகள் வலம் வருகின்றனர். இவர்கள் கருத்துமுதல்வாதத்தையும் பொருள்முதல்வாதத்தையும் கலப்படம் செய்வதன் மூலம் மார்க்சியத்தின் புரட்சிரகர உள்ளடகத்தை நாசம் செய்ய முயல்கின்றனர். இவர்கள் மார்க்சியத்தில் அன்பு, அறம் போன்றவற்றின் போதாமை இருப்பதாகவும் இந்த இடத்தை இட்டு நிரப்ப அத்வைதம், வைணவம் போன்ற கருத்துமுதல்வாதச் சிந்தனைகளை இணைக்க வேண்டும் எனவும் சிபாரிசு செய்கின்றனர்.

மார்க்சியம் என்பதே மானுடத்தின் பால் கொண்ட மாளாத அன்பினால் அனைத்துவிதச் சுரண்டல்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும், மானுடத்தை விடுவித்து நிரந்தரமான மகிழ்ச்சியை மனிதகுலத்திற்கு ஏற்படுத்த தோன்றியதுதான். மேலும் அறம், அன்பு ஆகியவை சார்புத் தன்மை கொண்டவையே ஆகும். தொழிலாளியை சுரண்டுவதும் ஒடுக்குவதும் முதலாளிகளுக்கு அறம். அவர்கள் துன்பப்படுகிறார்களே என்று முதலாளிகள் தொழிலாளர்கள்பால் அன்பு பாராட்டுவதில்லை. அவர்கள் துன்பத்தில் சுழல்வது அவர்களின் முற்பிறப்பின் வினைப்பயன் என்றே கூறுகின்றனர். அதேபோல சுரண்டல் அமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சமரசம் இன்றி போராடும் தொழிலாளர்களும், இயற்கையாகவே முதலாளிகள்பால் அன்பு பாராட்ட முடியாது. அவர்களைப் பொருத்தமட்டில் புரட்சி செய்வதே அறம், வர்க்கங்க‌ளாகப் பிளவுண்ட சமுதாயத்தின் அறம் என்பதோ அன்பு என்பதோ வர்க்கச் சார்புடையதே. இதை இந்தக் கருத்துமுதல்வாதக் குருடர்கள் காணத் தவறுகின்றனர்.

இந்தக் கருத்துமுதல்வாத பம்மாத்துப் பேர்வழிகள், கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் காரணங்காட்டி தங்கள் வாதத்தை நியாயப்படுத்த முயல்கின்றனர். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? என வினா எழுப்புகின்றனர். பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்குக் காரணம் வேறு. மார்க்சியத்தை ஒரு நாட்டின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதிலும், இடது வலது விலகல்களுமே அதற்கான பௌதீகக் காரணங்களாகும். இது ஒரு தற்காலிக நிகழ்வு. உலகத்தில் சோவியத் நாட்டிலும் கூட கம்யூனிச இயக்கம் ஒரு கட்டத்தில் பல பிரிவுகளாக சிதறிக்கிடந்தது. லெனின் தலைமையில் கறாராக மார்க்சியம் கடைப்பிடிக்கப்பட்டதால் புரட்சி முன்னேறியது. இரும்புக் கோட்டையாக கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெற்றது. அதேபோல இந்தியாவிலும் அதேபோன்ற நிலைமை ஏற்பட்டுத்தான் தீரும். இது வரலாற்றின் விதி.

கம்யூனிச இயக்கத்தின் பிளவுகளைக் கண்டு ஆளும்வர்க்கங்கள்தான் ஆனத்தக் கூத்திடுகின்றன என்றால் அவர்களோடு கூடிக்கொண்டு இந்த ஆன்மீக மார்க்சியவாதிகளும் களிநடனம் புரிகின்றனர். இதையே காரணமாகக் காட்டி சந்தடி சாக்கில் புரட்சிகர மார்க்சியத்தினுள் கருத்துமுதல்வாத விஷத்தைக் கலக்க முயற்சிக்கின்றனர். என்னதான் மார்க்சிய முகமுடி அணிந்திருந்தாலும், அந்த முகமுடியைக் கழட்டினால், காவியின் நெடிதான் வீசும். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் மார்க்சியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தைச் சிதைத்துவிட முடியாது. மார்க்சிய இயக்கத்தில் கள்ளத்தனமாய் ஊடுருவ நினைக்கும் இந்தப் பேர்வழிகளை எதிர்த்து தத்துவப் போராட்டத்தை நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

அதே போல் நூலாசிரியர் பின்நவீனத்துவத்தை பின்வருமாறு வகைப்படுத்துகிறார். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியம், பின்நவீனத்துவம் ஆகியவற்றை ஆசிரியர் வகைப்படுத்துகிறார்.

பின்நவீனத்துவத்தைப் பற்றி தமிழகத்தின் மார்க்சிய அறிஞர்களில் ஒருவரான மறைந்த கோ.கேசவன் அவர்கள் கீழ்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

"ஐரோப்பாவில் இரண்டு சிந்தனைகளின் தொடர்ச்சி உள்ளன. ஒன்று பொருளை முதன்மைப்படுத்திய சிந்தனை, மற்றொன்று கருத்தை முதன்மைப்படுத்திய சிந்தனை. இதில் கருத்தை முதன்மைப்படுத்திய சிந்தனையின் தொடர்க்சியாகவும், அச் சிந்தனையாளர்களின் சமூகக் கோட்பாடுகளின் தொடர்ச்சியாகவும் பின்நவீனத்துவம் உள்ளது."

மேலும், "ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய பல்வேறு கருத்தாக்கங்களின் வளர்ச்சி, அதன் பரிமாணங்கள் தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிற‌தே தவிர ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனப் பொதுவுடைமைக் கட்சியும் மாவோ முன்வைத்த பல கருத்துக்களை கண்டுகொள்வதே இல்லை. இதில் ஒரு பாரப‌ட்ச நிலையைப் பின்நவீனத்துவவாதிகள் கடைப்பிடிக்கின்றனர்" என்கிறார் கேசவன்.

மேலும் பின்நவீனத்துவக் கருத்துக்களை பின்வருமாறு வகைப்படுத்துகிறார் கோ.கேசவன்.

முன்மொழிகின்ற கருத்தாக்கங்கள், சிதறுதல், பன்மைத் தன்மை, மற்றது, கருத்துவிலகல், நிராகரிக்கின்ற கருத்தாக்கங்கள், பொதுமைப்படுத்தல், சாராம்சவாதம், மொத்தத்துவம், அடித்தளவாதம், பகுத்தறிவின் பயங்கரம், தர்க்கத்தின் வன்முறை. (நூல் "கோ.கோசவனின் திறனாய்வாளுமை" ஆசிரியர் முனைவர் கே.கங்காதரன் பக்கம் 53)

முனைவர் கோ.கேசவனின் கருத்துக்கள் இந் நூலாசிரியர் அ.கா.ஈஸ்வரனின் அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்ற நவீன வடிவம் என்ற வகைப்படுத்தலுக்கு வலுச் சேர்ப்பதாகவே உள்ளது.

மார்க்சியத்தைப் பெருங்கதையாடல் என பின்நவீனத்துவம் எள்ளி நகையாடுகிறது. பெருங்கதையாடல்களுக்குப் பதிலாக சிறுகதையாடல்களே இனி சாத்தியம் என வரையறுப்பதன் மூலம் பின்நவீனத்துவம் மார்க்சியத்தை முற்றும் முழுவதுமாக நிராகரிக்கிறது.

பின்நவீனத்துவம் மார்க்சியத்தின் அடிநாதமான அரசு பற்றிய கோட்பாட்டை நிராகரிக்கிறது. அரசு என்பது ஒரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான இன்னொரு வர்க்கத்தின் வன்முறைக் கருவி என்ற மார்க்சிய லெனினியக் கோட்பாட்டை, பின்நவீனத்துவம் நிராகரிக்கிறது. அதே போல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டையும் பின்நவீனத்துவம் நிராகரிக்கிறது. இதன் மூலம் எல்லோருக்கும் பொதுவான அரசு, அனைத்து வர்க்கங்களுக்கான பொது அரசு என்ற கோட்பாடடை முனவைப்பதன் மூலமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுதலிப்பதன் மூலமும், தற்போது நிலவும் அரசு அமைப்பு முறையான பாராளுமன்ற ஜனநாயக அரசு என்ற திரைமறைவிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை பின்நவீனத்துவம் ஆதரிக்கிறது. இதன் மூலம் நிலவும் சுரண்டல் சமூக அமைப்பு அப்படியே நீடிப்பதற்கும் தொடர்வதற்கும் ஒடுக்குமுறை நீடிப்பதற்கும் ஆளும்வர்க்கங்களுக்குத் தொண்டூழியம் புரிகிறது.

பாட்டாளிவர்க்கப் பேராசான் ஸ்டாலினது மறைவிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய குருஷ்சேவ், பிரஷ்னேவ் திருத்தல்வாதக் கும்பல் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்பதை அனைத்து மக்களுக்குமான அரசு என்றும், பாட்டாளி வர்க்கத்தின் இரும்புக் கோட்டையான கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் கட்சி எனவும் மாற்றம‌டையச் செய்து மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளுக்குத் துரோகமிழைத்தது. சமாதானப் பூர்வமான மாற்றம், சமாதானப்பூர்வமான போட்டி, சமாதான சகவாழ்வு என்ற கோரிக்கைகளை முன்வைத்து வர்க்கப்போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கு அடித்தளமிட்டது. அதனால் உலகில் பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகள் வர்க்க அரசியலையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிட்டு, பாராளுமன்றவாத, பொருளாதாரவாத, சீர்திருத்தவாத, திருத்தல்வாதக் கட்சிகளாக தரங்கெட வழியேற்படுத்தி பாட்டாளிவர்க்க சர்வதேசியத்திற்குத் துரோகமிழைத்தது.

இந்த நவீனத் திருத்தல்வாதமும், பின்நவீனத்துவமும் இன்று கரங்கோர்த்து ஊழிக்கூத்தாடுகின்றன.

திருத்தல்வாதிகள் தொளதொளப்பான, போர்க்குணமற்ற, தாராளத்தன்மை கொண்ட ஒரு அமைப்பு வடிவத்தையாவது ஏற்கின்றனர். இந்தப் பின்நவீனத்துவவாதிகள் கட்டுடைப்பது என்ற பெயரால் மையப்படுத்தப்பட் கட்சி அமைப்பே கூடாது என்கின்றனர். கட்சி என்றால் அதிகாரத்துவம் மேலோங்கிவிடும் என்கின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி என்பது அதிகார வர்க்க அமைப்பு அல்ல. ஜனநாயக மத்தியத்துவத்தை கோட்பாடாக‌க் கொண்ட கட்சி. சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் ஆயுதமாகத் தரித்த கட்சி. சமூகத்தின் புறநிலை வளர்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கப் போராட்டத்தை வழிநடத்தும் கட்சி. பரந்துபட்ட மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய கட்சி. இத்தகைய பண்புகள் இல்லாவிட்டால் அதனைக் கம்யூனிஸ்ட் கட்சி எனக் கூறமுடியாது.

ஆனால் தன்னெழுச்சியை வழிபடும் பின்நவீனத்துவவாதிகளோ, தன்னெழுச்சிகளை ஒழுங்குபடுத்தி வர்க்கப்போராட்டத்தை நோக்கி ஒருமுகப்படுத்துகிற கட்சியமைப்பே வேண்டாம் என்கின்றனர்.

அதோடு மட்டுமின்றி "குடு்ம்பம்" என்ற அமைப்பே இருக்கக்கூடாது எனக் கூச்சல் போடுகின்றனர். குடும்பத்தின் தோற்றம் என்பது தனிச்சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. தனிச்சொத்துடமையை அடித்தளமாகக் கொண்டே குடும்பம், அரசு போன்றவை தோற்றமெடுத்தன என மார்க்சியம் நமக்கு போதிக்கிறது. எனவே தனிச்சொத்துடமை இல்லாது ஒழிக்கப்படும் வர்க்கங்களற்ற சமுதாயத்தில் அதாவது கம்யூனிச சமுதாயம் என்ற இலக்கை அடையப் பெறும்போது குடும்பம், அரசு போன்றவை உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதே மார்க்சியம். ஆனால் இன்றைய சுரண்டல் அமைப்பில் குடும்பத்தை ஜனநாயகப்படுத்தவும், ஆணாதிக்கத்திற்கு எதிராக ஆண், பெண் சமத்துவத்தை ஏற்படுத்தவும் போராட வேண்டும். ஆனால் இந்த கடமைகளை மறுக்கின்ற, கட்டுடைக்க வழிகாட்டும் வழிமுறை என்ன தெரியுமா? லெஸ்பியனிசம் உள்ளிட்ட ஒருபால் புணர்ச்சி வரை எல்லாவிதமான சமூக வக்கிரங்களுக்கும் வரவேற்பளிப்பது, ஜனநாயக உரிமை என்ற பெயரால் இந்தச் சீரழிவுகளுக்கு அங்கீகாரம் தேடுவது. இத்தகைய சீழ்பிடித்த கழிசடைத் தத்துவம்தான் பின்நவீனத்துவம்.

மேலும் பின்நவீனத்துவவாதிகள் சமூகத்தினது முழுமையை அல்லது ஒருமையை ஏற்பதே இல்லை. சமூகம் பன்மைத்தன்மை கொண்டிருப்பதை பல பிரிவுகளாக பிளவுண்டிருப்பதை மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றனர். பெண்கள் என்றால் மேட்டுக்குடிப் பெண்கள், மத்தியதர வர்க்கப்பெண்கள், பழங்குடிப் பெண்கள், தலித் பெண்கள், விலை மாதர்கள், திருநங்கைக‌ள் என்று பிரித்துக் கொண்டே போவார்கள். மார்க்சியம் சமூகத்தின் பன்மைத் தன்மையை ஒரு போதும் மறுத்ததில்லை. மார்க்சியம் சமூகம் பல வர்க்கங்களாக பிளவுண்டு இருக்கிறது எனக் கூறுவதன் மூலம் பன்மைத்தன்மையை ஏற்கவே செய்கிறது. ஆனால் விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடலின் மூலம் ஏதோ புதிய ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதைப்போல் ஓயாது ஒலமிடுகின்றனர். மார்க்சியம் பல பிரிவுகளாக உள்ள அனைத்துப் பகுதியினரின் நலன்களுக்காகவும் அதாவது அனைத்து விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும் போர்க்குரல் கொடுக்கிறது.

மார்க்சியம் பன்மைத்தன்மையைக் காணும் அதே நேரத்தில் இவைகளுக்கிடையே உள்ள இயக்கவியல் விதியான உறவையும் அதாவது ஒருமையையும் மார்க்சியம் வலியுறுத்துகிறது. குறிப்பிட்ட கட்டத்தில் வரலாற்று வளர்ச்சி விதி காரணமாக தோற்றமெடுத்த புரட்சிகர வர்க்கமான பாட்டாளிவர்க்கத்தை அனைத்துப் பிரிவினரையும் விடுவிப்பதற்கான தலைமைச் சக்தியாக மார்க்சியம் முன்னிலைப் படுத்துகிறது. எனவேதான் பாட்டாளி வர்க்கத்தை பூர்ஷ்வா சமுதாயத்திலுள்ள வர்க்கமாக மட்டுமல்லாமல் அனைத்துப் பிரிவுகளையும் இல்லாதொழிக்கிற சமூகப் பிரிவாக மார்க்சியம் காண்கிறது. ஏனென்றால் இவ்வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட தீங்கு சமூக முழுமைக்கும் இழைக்கப்பட்ட தீங்காக மார்க்சியம் காண்கிறது. இங்கேதான் முழுமைக்கும் பகுதிக்கும் இடையிலான உறவை மார்க்சியம் தெளிவாக நிலைநாட்டுகிறது.

சமுதாயத்தின் இதர பிரிவுகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாக இதர சமூகப் பிரிவுகள் அனைத்தையும் விடுவிக்கிற ஒரு பகுதியில்தான், சுருங்கக் கூறின் இப்பிரிவில்தான் மானுடம் தன்னை முழுமையாக மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரிவு தன்னை மீட்டுக் கொள்கிறது என்பதை மார்க்சியம் நிலைநாட்டுகிறது.

இவ்வாறாக தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் பின்நவீனத்துவத்தை இந்த நூலின் ஆசிரியரான அ.கா.ஈஸ்வரன் "பின்நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு மூகமுடி" என்ற நூலிற்கு எழுதிய முகவுரையில் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

"பின்நவீனத்துவவாதிகள் சமுகவிரோதிகளாவர் என்று கூறுவதைவிட சமூகத்தைப் பிளவு படுத்துபவர்கள் என்று கூறுவதே சரி. இந்த அடையாள அரசியலின் நோக்கம் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதாக இருப்பதால் பின்நவீனத்துவவாதிகளை பாட்டாளிவர்க்க விரோதிகள் என்று கூறுவது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்."

உலகமயமாதலும், தாராளமயமாதலும், தனியார்மயமாதலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த நேரத்தில், காவி பயங்கரவாதம் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றி நச்சுக் கரங்களை நீட்டிவரும் இந்த நேரத்தில், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இலட்சியத்துடன் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சியாளருக்கு மார்க்சியத்தை மக்கள் மயமாக்குவதற்கு இது போன்ற நூல்கள் பேருதவியாக இருக்கும். இது போன்ற நூல்களின் அவசியத்தைப் புரிந்து வெளியிடும் பொன்னுலகம் பதிப்பகத்தை பாராட்டுகிறேன்.

மார்க்சியம் வெல்லும்! புரட்சியின் வெற்றி நிச்சயம்!

“மார்க்சிய தத்துவம்” நூல் விமர்சனம்
ஆசிரியர்:அ.கா.ஈஸ்வரன்
வெளியீடு: பொன்னுலகம் வெளியீட்டகம்
பக்கங்கள்: 138
விலை: ரூ.100

Pin It